கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டி 2017ல் 3வது பரிசுப் பெற்றக் சிறுகதை
நாளை எல்லோரும் ஒன்று கூடுவதாக பேச்சு. ஞாயிறு அல்லவா. வனமாலாவுக்கு ஞாயிறும் ஒன்றுதான் திங்களும் ஒன்றுதான். மாலைக்கு மேல்தான் நாஷ்டா கடை மளமளப்பாக நகரும். நாஷ்டா கடையே நகரும் கடைதான். தட்டு வண்டி டிபன் கடை.. முன்பெல்லாம் இட்லிக்கான அரிசி.. உளுந்தை கடையில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொள்வாள். வீட்டுக்கு பக்கத்திலேயே அரவை இருந்தது. அதற்கெல்லாம் இங்கு வசதியில்லை. இட்லி மாவாக வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட்டு விட்டு நாளை மீட்டிங் செல்ல வேண்டும். அப்போதுதான் துாங்கி எழுவதற்காவது ஒரு வீடு கிடைக்கலாம்.
“கலக்கி ஒண்ணு..
ஆப்பாயிலு ஒண்ணு.. பெப்பரு கொஞ்சம் துாக்கலா..” பரோட்டாவை திணித்துக் கொண்டே
அடுத்த ஆர்டரை சொன்னான் ஒருவன். கை உதவிக்கு கற்பகத்தை தவிர வேற்று ஆளில்லை.
பரோட்டாவுக்கு மாவு பிசைந்து உருட்டி தருவதோடு மாஸ்டரின் வேலை முடிந்து விடும். அவ்வப்போது அவளை தேடி வரும் விநய்நாத்துக்கும்
இந்த கடைக்கும் சம்மந்தமில்லை.
மனம்
எங்கோ லயித்தாலும் ”ஆறு ப்ரோட்டா.. ரெண்டு ஆம்லெட்டு..” கணக்கு சொல்லி நீட்டிய
காசை வாங்கி பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு விட்டு, முட்டையை உடைத்து கல்லில் ஊற்ற..
சூட்டில் முட்டையின் திரவம் துடித்தது. அடங்கும்முன் அனலை குறைத்து அலுங்காமல்
எடுத்து தட்டில் வைத்து கற்பகத்திடம் நீட்டினாள். மணி பத்தை தாண்டியிருந்தது.
கிட்டத்தட்ட வியாபாரத்தை முடித்திருந்தாள்.
வீடு
இல்லாமல் இல்லை. இருந்தது. எல்லாம் கற்பகாம்பாள் கருணை என்பாள். கற்பகாம்பாளும்
அங்குதான் குடியிருந்தாள். வனமாலாவுக்கு அம்மனை போல பெரிய பொட்டாக நெற்றிக்கு வரைந்துக்
கொள்ள பிடிக்கும். இப்போது அம்மன் இல்லாத விரக்தியில் “இருக்கறதுலயே பெரிய சைசு
பொட்டு குடு..“ என்று ரெடிமேடாக வாங்கி வைத்துக் கொள்கிறாள். அங்கிருக்கும்போது
விநய்நாத் பழக்கமில்லை. கற்பகமும் இவளும்தான். துணை நடிகர் ஏஜெண்ட் எப்போதாவது
வந்து போவான். பேரதிர்ஷ்டம் வாய்த்தவர்களுக்குதான் சினிமாவில் ஒரு ஓரமாகவாவது
நிற்க முடியும். ஆனால் அவளுக்கு ப்ராப்தம் ரொம்பவே குறைவு.
”குருமா
முடிஞ்சு போச்சா..” பரோட்டாவை குருமாவோடு வழித்து அசிங்கமாய் வாய்க்குள் விரலை
விட்டு திணித்தான்.
அதை
காதில் வாங்கிக் கொள்ளாதவளாக காலி பாத்திரங்களை மளமளவென பொறுக்கி ஒன்றோடொன்று
அடுக்கினாள் வனமாலா. “பராக்கு பாக்காம மளமளன்னு துன்னு..” மகளிடம் இரண்டு
பரோட்டாவை வைத்து நீட்டினாள். குடத்தில் மீதமான நீரை காலியான குழம்பு
பாத்திரத்தில் ஊற்றி கசடை வழித்து வெளியே வீசினாள். ஸ்டூல்களை ஒன்றோடொன்று அடுக்கி
தட்டு வண்டிக்குள் போட்டு சுற்றிலும் நீல நிற பாலித்தின் திரைகளை இழுத்து
விட்டாள். ”சீக்ரம்டீ.. மணியாச்சு..” என்றாள் மகளிடம்.
”சீக்ரம்..
மணியாச்சு..” முதுகுக்கு பின்புறமிருந்து அவள் சொன்னதை அப்படியே சொன்னான்
கந்துவட்டிக்காரன். சினிமாவை நம்பி பிரயோஜமில்லை.. குழு நடனத்தில் கூட உயரம் கருதி
கடைசி வரிசைதான். கும்பலான காட்சியில் ஒரு ஓரமாக நிற்கும் இவள் முகத்தருகே கூட
காமிரா வருவதில்லை. கந்துவட்டிக்காரன் தயவில்தான் டிபன்கடை வைக்க முடிந்தது.
ஆனாலும் அநியாய வட்டி. கடை ஓடினாலும் ஓடா விட்டாலும் இவனுக்கு அழுதாக வேண்டும்.
பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து கணிசமான நோட்டுகளை அவனுக்கு கொடுக்க வேண்டியிருந்தது.
வீட்டுக்கு
செல்ல இங்கிருந்து பத்து நிமிடமாவது வண்டியை தள்ள வேண்டும்.
வீடு
என்றால் வீடல்ல. நடைமேடையில் தங்களுக்கென்று ஒதுக்கிக் கொண்ட இடம். தார்பாலின்
கூரை.. அட்டைப் பெட்டி சுவர்.. விறகடுப்பு.. நாலைந்து சமையல் பாத்திரங்கள்..
டிரங்கு பெட்டி.. காம்பவுண்டு சுவரில் மாட்டியிருக்கும் முகம் பார்க்கும்
கண்ணாடி.. அம்மன் படம்.. தண்ணீர் குடம்.. பாய்.. போர்வை.. இரு சிறு துணி மூட்டைகள்...
கூடவே பத்து வயது மகள் கற்பகம். மொத்தமும் இதுதான். சினிமாவில் நடித்த காலத்தில் தகர பீரோவும்
இரும்புக் கட்டிலும் இருந்தது. அதுவே வீட்டை அடைத்துக் கொள்ளும்.. சின்னஞ்சிறு
வீடுதான். எப்போதோ வேய்ந்த ஓடு.. இவளுக்காவது ஓட்டு வீடு.. மீதிக்கு பெரும்பாலும்
குடிசைதான். திறந்தவெளி கழிப்பறை.. அடி பம்பு.. அடிபிடி சண்டைகளுக்கு குறைவில்லை
என்றாலும் வீடு சொந்தமாக இருந்தது. போக்குவரத்துக்கு எளிதான இடத்தில் இருந்தது.
அதுதான் பிரச்சனையே.
வண்டி
போட்டுக் கொண்டு வந்து விட்டார்கள். அரசாங்க வண்டி. ”இந்த இடத்தை காலி பண்ணி கொடுத்தீ்ங்கன்னா
உறுதியான காங்கிரீட் கட்டடம் நாங்களே கட்டித் தர்றோம்..”
“எங்க..?”
அவர்கள்
சொன்ன இடம் இங்கிருந்து முப்பது கிலோ மீட்டராவது தள்ளியிருக்கும்.
அங்கிருக்கும்
நிலைமையை தெரிந்து வைத்திருந்தார்கள். இருநுாறு சதுர அடிக்குள் வீடு..
அடுக்கியடுக்கி வைத்தது மாதிரி வானம் அளவுக்கு கட்டடம்.. ஆயிரங்கணக்கான வீடுகள்.. மூச்சு
முட்டி விடும்.. தெருவையும் சாக்கடையையும் பிரிக்க முடியாது. தண்ணீரை தேடி அலைய
வேண்டும். அருகில் குடியிருப்போ.. மற்றைவைகளோ எதுவுமில்லாததால் வேலை வாய்ப்புக்கு
இடமேயில்லை. வெற்று வீடு. அதுவும் இவர்கள் சொல்வது போல உடனே கிடைத்து விடாது.
நடையாய் நடக்க வேண்டும்.
”வூடு
குடுப்பே.. செரி.. பொயப்பு..? துட்டுக்கு எங்க போறது.. சம்பாதிக்கிற துட்டு மொத்தமும்
சிட்டிக்கு வந்துக்கினு போயிக்கினு கெடக்கவே சரியாப்பூடும்…” ஒரேடியாக மறுத்து
விட்டனர்.
இதே மாதிரியான இரவு நேரந்தான் அன்றும்.. போதையோடு தெருவில் புரண்டு
கிடந்தவர்கள் தவிர மீதமானோர் துாக்கத்திலும் உடல் அலுப்பிலும் அசந்துக் கிடந்தார்கள்.
பனிரெண்டு இருக்கலாம். எங்கிருந்து எப்படி பற்றியது என்றே புரியாமல் திகுதிகுத்த
நெருப்பு அனைவரையும் வாரி சுருட்ட வைத்தது. என்ன நடப்பதென்றே விளங்காமல் பொருளை
எடுப்பதா.. பிள்ளைகளை எடுப்பதா.. என திக்குமுக்காடிய தருணங்கள் அவை. கடைசியாக தீயின்
வேகத்துக்கு போட்டது போட்டபடிதான் ஓடி வர முடிந்தது. தீயணைப்பு வண்டி மெத்தனமாக
வந்து சேர்வதற்குள் அத்தனையும் எரிந்து அடங்கி போயிருந்தது.
”வருத்தந்தான்.. என்ன பண்றது.. இங்க வண்டி நொழையவே இடம் கெடையாது
பாத்துக்கிடுங்க..” என்றனர் தீயணைப்பு துறையினர்.
அன்று தெருவுக்கு வந்ததுதான். இன்னும் வீடு வாய்க்கவில்லை. தீ எரித்த
இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து காவலுக்கு ஆட்கள் நின்ற சமயத்தில் அத்தனை
சந்தேகம் எழவில்லை. ”உள்ளுக்குள்ளயே பொகைஞ்சுட்டு கெடக்கு.. எந்த நேரம் என்னா
வெடிக்கும்னு சொல்றதுக்கில்லே.. கொஞ்சநாளைக்கு இந்த பக்கம் வராதீங்க..”
காவல்துறையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டானர்.
”துக்கிரிப்பயலுங்க..
இன்னா நேரத்தில வந்தானுங்களோ.. அல்லாமே நெருப்புல எரிஞ்சுப்பூடுச்சு..” ஆனாலும் வயிறெரிந்து
கதறினர்.
மின்கசிவுதான்
காரணம் என்றார்கள்.
”மின்கசிவுங்கறதெல்லாம்
சும்மா.. எரிச்சதே அவங்கதான்.. உங்களை காலி பண்ண வைக்கறதுக்கு..” அனுதாபிகளுக்கு
உண்மை தெரிந்திருந்தது. தொலைக்காட்சியில் ஒருமுறை பேட்டி எடுத்து ஒளிப்பரப்பினார்கள்.
அவர்களும் இதே கருத்தையே முடிவாக சொன்னார்கள்.
”இன்னாத்துக்கு
காலி செய்யுணும்..?” எகிறியது ஊர்.
”சிங்கார
சென்னைன்னா அதுக்கு அர்த்தமென்ன..? அசிங்கத்தெல்லாம் துாக்கி ஏறக்கட்டறது.. அவங்கள
பொறுத்தவரைக்கும் நீங்க அசிங்கம்.. கழிவு.. அதை நடுக்கூடத்தில வைக்கறதுக்கு
விருப்பமில்லை.. உலக வங்கி கடன் குடுக்குதுன்னா அதோட சட்டத்திட்டத்துக்கு
கட்டுப்படணும்.. இனிமே நீங்க நெனச்சாலும் இந்த இடத்தை உங்களுக்கு தரப் போறதில்ல..”.
அதையேதான்
சொன்னார்கள் அதிகாரிகளும். ஆனால் வேறு வார்த்தைகளில்.
”இது
ஆக்கிரமிப்பு நிலம்.. கவர்மெண்ட் கேஸ் போட்டுச்சுன்னா உங்களால ஒண்ணும் செய்ய முடியாது..
பேசாம அங்க போயிடுறதுதான் நல்லது..”
”அங்க
போயி.. இன்னா செய்றது.. எங்க பொயப்பு.. சோத்துக்கே பேஜராப்புடும்..”
”சரி..
சென்னை சிட்டிக்குள்ள இடம் இருந்தா சொல்லுங்க.. கட்டித் தர்றோம்..” உதடுகளில்
இளக்காரம் வழிவது போலிருந்தது.
போராட்டத்தை
துவங்கியது அப்போதிலிருந்துதான். இங்கு போலவே அவர்களுக்கு தேவைப்பட்ட இடங்களில் இருந்த
குடிசைப்பகுதிகளும் எரிந்து போயிருந்தன. சங்கம் ஆரம்பித்து ஒருங்கிணைந்த போராட்டம்
தொடர்ந்தது.
”இங்க இருக்கவங்கள்ள நெறைய பேரு எலக்ட்ரிக் போஸ்ட்லேர்ந்து கரண்டை
திருடி உபயோகப்படுத்தியிருக்கீங்க.. அது ஹை வோல்டேஜ் கம்பம்.. அதுலேர்ந்து
மின்சாரம் கசிஞ்சுதான் தீப்பிடிச்சுருக்கு.. இன்வெஸ்டிகேட் ரிப்போர்ட்ட வச்சு
யாராரு வீட்டுல கரண்டு திருடியிருக்காங்கன்னு கண்டுப்புடிச்சுடுவாங்க.. லச்சக்கணக்கில ஃபைன் கட்ட வேண்டியிருக்கும்..
பாத்துக்கிடுங்க..” பயமுறுத்தியது மின்சார
வாரியம்.
”இங்க
சாக்கடை வசதி இல்ல.. வெச காய்ச்சல் வருது.. ரேசன்கார்ட்டு பாதி பேருக்கு
வர்லைங்கிறீங்க.. இங்க இருந்து என்ன சாதிக்க போறீங்க..” என்றார் வருவாய் துறை அதிகாரி.
“எங்களோட தம்மாந்துாண்டு எடத்த புடுங்கிக்கினு நீங்க இன்னாத்த
சாதிக்க போறீங்க..” குரலை உயர்த்தினர்.
“அப்டீன்னா அரசாங்கம் புடுங்கி வச்சுக்குச்சுன்னு சொல்றீங்களா.. அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதான் செய்யும்..”
காவல் துறை “விசாரிக்கிறோம்..“ என்றது.
நடந்து போன சம்பங்களை பெருமூச்சாக கடத்தினாள் வனமாலா. வண்டியை
அருகிலிருந்த சிறிய சந்தில் நிறுத்தி அங்கிருந்த கம்பத்தோடு கட்டினாள். மூத்திர
நாற்றம் சுள்ளென்று அடித்தது. துாக்கக்கலக்கத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள்
கற்பகம். ”இன்னாத்து நின்னுக்கினுக்கற.. மூத்தரம் அடிச்சிட்டு போய் படு..” என்றாள்
மகளிடம்.
அடித்த
வெயிலை நடைமேடை அப்படியே உள்வாங்கியிருந்தது. மேடையின் மேடு பள்ளங்களை சமன் செய்ய
பாயின் மீது புடவையை விரித்து.. அதில் நீரை தெளித்து குளுமையாக்கினாள். ஆனால்
கொசுக்களை சமாளிக்க முடியாது. சுருளை ஏற்றி வைத்து உறங்க தோது உண்டாக்கினாள்.
சாப்பிட தோன்றவில்லை. அவிழ்ந்துக் கிடந்த கூந்தலை துாக்கி உயரே
கட்டிக் கொண்டாள்.
”படுக்குல..?”
அட்டைப்பெட்டி சுவருக்கு அந்த பக்கத்திலிருந்து குரல்.
”ம்க்கும்..”
கணைப்பாகவும் பதிலாகவும் சொன்னாள் வனமாலா. பிறகு ”தர கொதிப்பா கிது...” என்றாள்.
பழைய
இடம் மட்டும் கிடைத்து விட்டால் போதும். கூரையும் வேணாம்.. தரையும் வேணாம்..
அப்படியே தங்கிக் கொள்ளலாம். பிறகு அரசு பொதுக் கழிப்பிட கான்ட்ராக்டர்
சிங்காரத்திடம் சண்டை போடும் அவசியம் இருக்காது. ஒருமுறை கற்பகத்துக்கு
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட போது கழிப்பறை கதவை மூடிக் கொண்டு படுக்க அழைத்தான்.
திருடரை போல ரயில் நிலைய கழிப்பறைக்கு ராவோடுராவாக ஓட வேண்டியதில்லை. ஒரு குடம்
நீருக்காக மேலே வந்து விழும் ரயில் நிலைய சுத்தகரிப்பாளனை பொறுத்துக் கொள்ளும்
அவசியமில்லை. உறங்கும்போது தெருவோடு போகும் குடிமகன்கள் பக்கத்தில் வந்து படுத்து
விடுவார்களோ என அஞ்ச அவசியமில்லை. தெரு விளக்கு வெளிச்சத்தில் கொசுக்கடியோடு உறங்க
வேண்டாம். கழிவும் மழையும் கலந்த குளிரில் உட்கார்ந்தவாறே இரவை கழிக்க தேவையில்லை.
விநய்நாத்துடன் நீட்டி நிமிர்ந்து உறவுக் கொள்ளலாம்.
கற்பகம்
எச்சில் வழிய உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேரம்
கடந்தும் உறக்கம் வரவில்லை நடைமேடையில் அமர்ந்து கால்களை தெருவில் நீட்டிக்
கொண்டாள். .விநய்நாத் வருவதாக சொல்லியிருந்தான். டிபன் கடையில் பழக்கம். அவனும் அவளை
போல சினிமா ஆசை கொண்டவன்தான். இவளாவது திரையில் ஏதோ ஒரு கோடியிலாவது
தெரிந்திருக்கிறாள். பாவம் அவன்.. பெயரையும் ஒப்பனையும் மாற்றிக் கொண்டே இருந்தாலும்
எதுவுமே வாய்க்கவில்லை.
காற்று
மெலிதாக வீசியது இதமாக இருந்தது. நாளைய கூட்டத்திற்கு பெரிய
ஆட்களெல்லாம் வருகிறார்களாம். எப்படியும் வீடு கிடைத்து விடும். இந்த நம்பிக்கை
ஒவ்வொரு முறை சங்கக் கூட்டம் போடும்போதும் எப்படியோ மனதில் வந்து உட்கார்ந்து
விடுகிறது. நம்பிக்கை உற்சாகத்தை கொடுத்தது.
விநய்நாத்
வந்திருந்தான். மேலும் உற்சாகமாக இருந்தது அவளுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள். இப்போதைக்கு
நடமாட்டமில்லை. ஆனால் தெரு விளக்கின் ஒளி அதிகமாக இருந்தது. முன்புற தார்பாலின்
தடுப்பை இறக்கி விட்டாள். வெயிலில் நைந்து பாதிக்கு கூட காணாமல் நடுவாந்திரமாக
தொங்கியது அது. ஓரமாக வைத்திருந்த குழம்புச்சட்டியை ஏந்திக் கொண்டு படுக்கும் இடத்துக்காக
தடுமாறினாள்.. இரவு சாப்பிட்டிருந்தால் சட்டியை கழுவி ஒன்றோடு ஒன்று
அடுக்கியிருக்கலாம். குழம்போடு வெளியே நகர்த்தி வைத்தால் நாய் நக்கி விடும். அட்டைப்
பெட்டியை நகர்த்தி “யக்கோவ்.. கொழம்பு குண்டான அந்தாண்ட வச்சுக்கிறேன்..” என்றாள்.
”ம்ம்ம்..
ம்ம்ம்..” அவள் கண்ணடித்தது மின் விளக்கு ஒளியில் துல்லியமாக தெரிந்தது.
சோற்றுப்பானையை
நகர்த்தி கற்பகத்தின் தலைமாட்டுக்கு மேல் வைத்தாள். நல்லவேளை அவள் இன்னும் உயரமாகவில்லை..
வளர்வதற்குள் வீடு கிடைத்து விடும்.
”ஏய்..
வாடீங்கிறேன்ல்ல..” அவசரப்படுத்தினான்.
ஒருக்களித்தவாறு
படுத்தான் விநய்நாத். ஒருவர் படுக்குமிடத்தில் இருவர் படுக்க வேண்டும். இந்த
நேரத்திற்கு இது வசதிதான்.
”அவுதிதான்
ஒனக்கு..” நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
அவளுக்கும்
ஆர்வமாக இருந்தது. அவன் மீது சரிந்தது போல உராய்ந்துக் கொண்டே படுத்தாள். அதற்கு
மேல் காக்க முடியாதவன் போல பரபரப்பாக அவளை இறுக அணைத்துக் கொண்டான். முத்தமிட்டான்.
பிறகு சற்றே விலகி அவளின் முந்தானையை விலக்கினான்.
கற்பகம்
பார்ப்பது தெரியாதவரைக்கும் நிம்மதிதான். வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை போல.
***
No comments:
Post a Comment