Search This Blog

Wednesday 16 August 2017

கீர்த்தியின் அப்பா

அகநாழிகை ஆகஸ்ட் 2017ல் வெளியான சிறுகதை


அத்தனை சுலபமாக தனக்கு குணமாகி விடும் என்று தோன்றவில்லை அவருக்கு. பாவம் வேலைக்கு செல்லும் மகளின் பாடுதான் திண்டாட்டமாக போய் விட்டது. சதா நச்சரிப்பு இருந்துக் கொண்டே இருக்கும் வேலை அவளுக்கு. வீட்டிற்கு வந்தோம்.. நிம்மதியாக வேறு வேலைகளில் ஈடுபடுவோம் என்றிருக்க முடிவதில்லை. ஒன்றுமில்லாத விஷயத்தை இவள்தான் பெரிதுப்படுத்திக் கொள்கிறாளோ என்று தோன்றியதுண்டு. மனைவி உயிருடன் இருக்கும் வரை அவளிடம் இதை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவர் சொல்வதற்காக ஆமோதிப்பது போல தலையாட்டுவாள் மனைவி. வேறொரு பக்கம் போய் முணுமுணுத்திருக்கலாம். ஒருமுறை ஓயாமல் அடித்த மகளின் கைபேசியை இவர் எடுக்க போக “நேரமாச்சுன்னா பொறுப்பில்லாம அப்டியே ஓடிடுவீங்களா..? பொம்பளங்கன்னா எப்பவும் சலுகைதான்.. அதை வேலையில காட்டணும்..” கோபமாக யாரோ பேசினார்கள். இப்படியான இரண்டொரு சந்தர்ப்பங்களை இப்போதுதான் நினைக்க தோன்றுகிறது.


இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. தனக்கென குடும்பம் இல்லாத மகளை எந்நேரமும் அலுவலக வேலை அமிழ்த்திக் கொண்டே இருப்பதால் தனிமையை உணர நேரமிருப்பதில்லை. அவர், அவள் வயதிலிருக்கும்போது வீடே மனித சந்தடிகளால் நிரம்பியிருந்தது. ஆணில் இரண்டும் பெண்ணில் இரண்டுமாக இவருக்கே நான்கு பிள்ளைகள். மிக வயதான பெற்றவர்கள் வேறு.. இதை தவிர்த்து வெளிநாட்டிலிருக்கும் தம்பியின் மனைவியும் இரு குழந்தைகளும் இங்குதான் இருந்தனர். காலம் ஒவ்வொருவரையாக கிளம்பி விட இறுதியில் அப்பாவும் மகளுமாக மீதப்பட்டு போயினர். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மனைவி உயிரோடிருந்தாள். அதன் பிறகு நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார். உண்ண.. உறங்க.. அவ்வப்போது தொலைக்காட்சி பார்க்க என வீட்டுக்கான தேவை சுருங்கிப் போனாலும், வீடு பழைய நினைவுகளை பசுமை மாறாமல் ஏந்தியிருந்தது. படுக்கையாகி கிடக்கும் இந்நேரத்தில் பழைய நினைவுகளை கிளர்ந்தெழுப்பியும் விடுகிறது.

இதே அறையில் வைத்துதான் தம்பி மனைவி அவரிடம் உறுதி வாங்கிக் கொண்டாள்.. கீர்த்தியை தன் தம்பிக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று. அந்த தம்பியை பற்றி யாருக்குமே நல்ல அபிப்பிராயம் இல்லை.. அவன் அக்கா உட்பட. ஆனால் அவரால் தம்பி மனைவியின் வார்த்தையை மீற முடியாது. கீர்த்தி அப்போதுதான் இளநிலை உதவியாளராக அரசாங்கப் பணியில் சேர்ந்திருந்த நேரம்.

“அவன் பொறுக்கியாட்டம் சுத்தறவன்.. பெத்தவளயே போட்டு அடிக்கிறப் பய..  உங்களுக்கென்ன புத்தியா பெசகிப் போச்சு.. அவனுக்கு கொடுக்கறேன்கிறீங்க..” கணவனின் வாதாடினாள் மனைவி.

”ஒரே பய.. சொத்துசொகமெல்லாம் அவனுக்குதானே..” பலவீனமாக ஒலித்தாலும் அவரின் குரலை யாராலும் மீற முடியாது. மகளின் திருமணத்தன்று கணவனிடம் முகம் கொடுத்துக் கூட பேச பிடிக்கவில்லை அவளுக்கு. தனக்கென்று அபிப்பிராயம் எதுவும் வைத்துக் கொள்ள தெரியவில்லை என்றாலும்  போதையோடு மணவறையில் அமர்ந்திருந்தவனை கீர்த்திக்கும் அத்தனைதுாரம் பிடிக்கவில்லைதான். அவளின் மாத ஊதியம் ஒரு முடிவில்லாத முக்கோணத்துக்குள் அடைப்பட்டது போல கீர்த்தியிடமிருந்து அவள் கணவனிடம் போய், பிறகு தம்பி மனைவியிடம் சேர்ந்து விடுகிறது என்று மனைவி அழுது தீர்ப்பாள்.

அன்று காலையிலிருந்தே உடம்பு கொஞ்சம் அசாதாரணமாகதான் இருந்தது அவருக்கு. கீர்த்தி அலுவலகத்திற்கு கிளம்பி அரைமணி கடந்திருக்கும். அவரேதான் மகளுக்கு தட்டுதடுமாறி தகவல் தெரிவித்தார். ”கீர்த்தீ..“ வார்த்தை குளறலாக தெளிவில்லாமல் ஒலித்தது என்றாலும் அப்பாவின் நிலைமையை ஓரளவுக்கு அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பரபரப்பாக கிளம்பினாள். முக்கால் மணி நேர பேருந்து பயணம். கால் மணி நேர காத்திருப்பு.  இருபது நிமிட ஸ்கூட்டி பயண நேரத்தை பத்து நிமிடமாக குறைப்பது மட்டுமே அவள் கையிலிருந்தது. தடுமாறி தவழ்ந்து எழுந்து எப்படியோ கதவை திறந்து விட்டதுதான் அவர் கடைசியாக சொந்தமாக நடந்தது.

கோல்டன் அவர்  தாண்டியாச்சும்மா.. ரெக்கவரி ஸ்லோவாதான் இருக்கும்..” என்றார் மருத்துவர். ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்திருந்தது. பேச்சு கூழாங்கல்லை குறட்டிலி்ட்டுக் கொண்டது போல தெளிவற்று இருந்தது. கண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீரை சுரந்துக் கொண்டேயிருந்தது. மனைவி சகிதம் தம்பி  மருத்துவமனைக்கு வந்து கண் கலங்கி விட்டு போனார். அடுத்த முறை  அவர் மட்டும் வந்தார். வரும் போது சித்த வைத்தியர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். பொறியாளர்களான அண்ணன் மகன்களுக்கு சித்த வைத்தியத்தில் நாட்டமில்லை என்பதை தெரிந்துக் கொண்டதில், சித்த வைத்தியர் வந்து போன செலவை கீர்த்தியிடம் வாங்கிக் கொண்டார். டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளுக்கு அவரின் பென்ஷன் தொகை நிச்சயம் போதாது. மருத்துவமனையிலிருந்த பத்து நாட்களும் வேதனையுடன்தான் நகர்ந்தது என்றாலும் இத்தனை மனச்சிடுக்கில்லை அப்போது.

வீட்டுக்கு திரும்பியிருந்த முதல் இரண்டு நாட்களும் மகன்களும், மூத்த மகளும் இருந்ததால் இயற்கை உபாதைகளை கழிக்க.. கால்களை திருப்பி விட.. ஒளிக்களித்து படுக்க வைக்க.. உணவு எடுத்து ஊட்டவென பிரச்சனை ஏதுமில்லை. ”யாராவது ஒரு மேல் நர்சை ஏற்பாடு பண்ணிக்கோ கீர்த்தி..” அண்ணன்கள் அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

கீர்த்தி குளிப்பாட்டி விடும் போது கூச்சமாக இருந்தது அவருக்கு. பெற்ற மகளென்றாலும் வளர்ந்த பெண். மனைவி உயிரோடு இருந்திருக்கலாம். தனிமையாவது தொலைந்திருக்கும். கீர்த்தியை போலின்றி சளசளவென்று பேசிக் கொண்டேயிருப்பாள் மனைவி. கீர்த்தியின் திருமணம் குறித்து கடைசி வரை அவள் எழுப்பிய அபிப்பிராய பேதங்களை ”வாய மூடிட்டு போவ மாட்டே..” என்று ஒற்றை வார்த்தையில் அடக்கியிருந்தார் மற்ற விஷயங்களை போல.

ஆணுக்கு இத்தனை மறைவிடங்களும் கூச்சமும் இருப்பதை கீர்த்தி அறிந்திருப்பாளா என்பதே சந்தேகம்தான். திருமணம் முடித்த நாளாக பிரச்சனைதான்.  தனிக்குடித்தனம் வைத்தால் சரியாகி விடும் என்றாள் தம்பியின் மனைவி.. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று முன்னர் கணித்ததை போல. அதற்கான ஏற்பாடுகள் நடக்கும்போது ஏதோ ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று விட்டான்.

“எத்தன வேதனைல கெடந்தாலும் மனுசனுக்கு உசிரு எப்பவும் வெல்லந்தான்..” வெறுப்பாக வந்தது அவருக்கு. தற்கொலை செய்து கொள்வது ஒன்றும் கடினமான விஷயமல்ல. சிறிய ப்ரௌன் கவர்களில் காலை.. மதியம்.. இரவு என தனித்தனியே பெயரிட்டு கைக்கெட்டும் துாரத்தில்தான் வைத்திருந்தாள் கீர்த்தி. தண்ணீர் பாட்டிலும் அருகே இருந்தது. எல்லாவற்றையும் ஒரே வாயில் போட்டுக் கொள்ளலாம். இயங்கும் போது புறந்தள்ளிய நினைவுகள் இயக்கமின்றி படுக்கையில் கிடக்கும்போது இரக்கமேயின்றி ஆக்கிரமித்துக் கொண்டது. ஓயாத அலைகள் போல அதன் ஓட்டம் நிறுத்தவியலாமல் இருந்தது.

திருமண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் கீர்த்திக்கு கல்லுாரி செல்லும் வாரிசுகள் இருந்திருக்கும். கீர்த்தியின் உடன்பிறந்தவள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தகப்பனை பார்க்க வந்ததோடு சரி.. “புள்ளங்கள விட்டுட்டு.. குடும்பத்த போட்டுட்டு அடிக்கடி எப்டி வாரது..?” பிறந்த வீட்டில் இருந்த நேரம் முழுவதும் புகுந்த வீட்டிலேயே மனதை வைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

ஒத்தாசைக்கு இவள்தான் தேடவில்லையோ.. அல்லது ஆள்தான் கிடைக்கவில்லையோ தெரியவில்லை. இரவு வேட்டியில் வழிந்து விடும் மூத்திரத்தின் வாடையை அவராலேயே தாங்க முடியாது. காலையில் எழுந்ததுமே விட்டதிலிருந்து தொடங்குவது போல முதல் வேலையாக அவருக்கு உடம்பு துடைத்து விட்டு, வேட்டி மாற்றி விடுவாள் கீர்த்தி. பிறகு சூடாக காபியோ.. டீயோ.. ஏதோ ஒன்று அவரின் விருப்பப்படி.

அன்று ஏதோ எண்ணத்தில் அவர் விருப்பத்துக்கு மாறாக டீ கொண்டு வந்து விட, இயங்கும் ஒற்றைக் கையால் டம்ளரை பட்டென்று தட்டி விட்டார். நிச்சயம் இது புதிதுதான். கீர்த்திக்கு மட்டுமல்ல.. அவருக்குமே. மீண்டும் காபியுடன் வந்த மகளின் முகத்தை ஆராய்ந்தார். ”சூடா இருக்கா..? ஆத்தி எடுத்துட்டு வரட்டுமாப்பா..? இயல்பு மாறவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டார். அதன் பிறகு மாத்திரைகளை வீசுவதும்.. வாயிலிருக்கும் சாப்பாட்டை துப்புவதும் அவரின் இயல்புகளாக மாறின.

“திடீர்னு ரொட்டீன் அஃபெக்ட் ஆயிருக்கு.. எல்லாத்துக்கும் மத்தவங்கள எதிர்பாக்கறதை சில பேரால ஏத்துக்க முடியறதில்ல.. அதான் இப்டி ரியாக்ட் பண்றாரு.. கவலைப்படாதீங்க.. மாத்திரை மருந்தை ஒழுங்கா குடுக்கணும்.. பிசியோதெரபிய நிறுத்திடாதீங்க.. சரியா போயிடும்..” என்றார் மருத்துவர் மாதாந்திர செக்கப்பின் போது. அவளாலும் அதை புரிந்துக் கொள்ள முடிந்தது. கணவனையும் ஒருவேளை புரிந்து.. மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குள் தம்பி மனைவி அவசரப்பட.. இவரும் அதற்கு ஒத்து ஊத ஏதோ ஒரு ஏழைப் பெண் அவனுக்கு மனைவியாகி போனாள். கீர்த்தியின் மணவாழ்க்கை முற்றிலும் அடைப்பட்டு போனது.

அவர் படுக்கையானதிலிருந்து கீர்த்தி உள்ளறையை உபயோகிப்பதில்லை. முன்னறையிலேயே படுத்துக் கொள்வாள். துாக்க நேரத்தில் இரண்டொரு முறையாவது அவரை கவனித்து கொள்ள வேண்டியிருக்கும். துாக்கம் முழுதாக கலைந்தாலும் வெற்றாக கண்களை மூடிக் கொள்வார். முன்னறையில் விளக்கு எரிந்துக் கொண்டேயிருக்கும். புத்தக வாசிப்பிற்கு இரவில் நிறைய நேரம் ஒதுக்குகிறாள் போல. அளந்தளந்து பேசுவதால் தோழிகள் இல்லாமலிருக்கலாம். மனைவி இருந்தால் கேட்டு தெரிந்துக் கொண்டிருக்கலாம்.

”நைட்டு ரொம்ப நேரம் வௌக்கெறிஞ்சுட்டு இருந்துச்சே…” என்றார். முழுக்க குணமடையவில்லை என்றாலும் அவரின் பேச்சை ஓரளவு புரிந்துக் கொள்ள முடிந்தது.

”உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்ணு அப்பவே நெனச்சேன்.. சரிப்பா.. வேலையானதும் நிறுத்திடுறேன்..” என்றாள் இ்ட்லியை ஊட்டி விட்டுக் கொண்டே.

இளமைக்காலத்தில் இருள், நிறைய விஷயங்களை அவருக்கு சாத்தியப்படுத்தி கொடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. ‘குற்றவாளிய கைது செஞ்சு கடவுள் உங்காலடியில கொண்டாந்து போட்டுருக்கான்.. இப்போ உனக்கான டர்ன்.. சத்தம் போடு.. அழு..’முகத்தை திருப்பிக் கொண்டார். உளுத்தம்மாவ அவசரப்பட்டு வழிச்சு எடுத்து தொலச்சிட்டேன்.. அதான் இட்லி கல்லு மாதிரி இருக்கு.. தனக்குள் சொல்லிக் கொள்வது போல மெதுவாக சொன்னாள். ”தோசைன்னா ஊத்தி எடுத்துட்டு வருட்டுமாப்பா..?” என்றாள் அவரிடன் குனிந்து.

‘எங்க ஆபிஸ்ல ஒருத்தன் அவங்கப்பாவ அடிக்கறதுக்குன்னே குச்சி ஒடைச்சு வச்சிருப்பேன்னு பெருமையா சொல்லுவான்.. நாங்கள்ளாம் அய்யய்யோன்னு மெரளுவோம்.. எல்லாம் தனக்கு வந்தா தெரியும்.. வீட்டுக்கடன்.. கல்யாண கடனுன்னு நானே நாக்கு தள்ளி கெடக்கேன்.. இதுல இந்தாளு வேற படுத்துக்கிட்டு போயி சேரமா உசிர வாங்கறான்.. பொறுமையே போச்சும்பான்.. கடைசீல ஏதோ ஆசிரமத்தில சேர்த்து விட்டுட்டேன்னான்..’  சொல்ல வந்ததை நினைவுகளாக்கிக் கொண்டது மனம்.

மகளை கவனித்துப் பார்த்தார். பிறகு ”ஒண்ணும் வேணாம்.. போ..” என்றார்.  

உள்ளங்கையை குவித்து அதில் ஆறேழு மாத்திரைகளை மிட்டாய் போல வைத்திருந்தாள் கீர்த்தி.

”இதெல்லாம் என்னால குடிக்க முடியாது.. எடுத்துட்டு போயிடு..” கையிலிருந்த டம்ளரை துாக்கி வீச.. டம்ளர் தரையில் உருண்டு ஓரிடமாய் நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தது. நீர் கதவில் தெறித்து வழிந்தது.

”அடுத்த வாட்டி மாத்திரைய குறைச்சுக்கலாம்னு சொல்லியிருக்காருப்பா டாக்டர்..” என்றாள் ஆதரவாக.

”வச்சிட்டு போ.. பாத்துக்கிறேன்னு சொல்றேன்ல்ல..”  

‘பெத்தவன் இருக்கானா செத்தானான்னு தான் கேக்க தோணல.. பணம் வேணுமா.. அனுப்புட்டுமான்னு கூடவா கேக்க கூடாது இந்த பயலுங்க..? நான் ஒருத்தன் இருக்கப்பவே இவள பாத்துக்க மாட்டேங்கிறானுங்க.. அவவனுக்கு அவவன் குடும்பம் பெருசா போச்சு..  தங்கச்சி தனியா கஷ்டப்படுறாளேன்னு இந்த பொம்பளைப் புள்ளையாது ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவுதா..? எல்லாம் சுயநலம்தான்.. நினைவு இழுப்பட்டு கொண்டது. எனக்கில்லாத சுயநலமா..?

”அப்பா.. படுக்க வச்சிடவா..?” தயங்கி தயங்கிதான் கேட்டாள் கீர்த்தி. உணர்ச்சிகளை அதிகம் காட்டாத அவள் முகத்தில் கூட அப்பா கோபஸ்தராக மாறிய பிறகு தயக்கம் தோன்றியிருந்தது.

”வேலய முடிச்சிட்டு கதை பொஸ்தத்தை எடுத்துட்டு ஒக்காந்துடுணும் ஒனக்கு.. அதானே நொய்நொய்யுங்கிறே..” என்றார் கோபமாக. பதிலுக்கு மகள் ஒரு சுடுசொல்லாவது சொன்னால் தேவலை என்றிருந்தது அவருக்கு.

”இடுப்பு புடிச்சுக்குச்சு.. கொஞ்சம் படுக்கலாம்னு பாத்தேன்..” என்றாள்.

”கக்கூஸ்க்கு அழச்சிட்டு போ..” என்றார். கைத்தாங்கலாக நடக்க முடிகிறது. வலதுகை கொஞ்சம் தேவலையானால் கீர்த்தி எடுத்து வைக்கும் சாப்பாட்டை ஸ்பூனால் சாப்பிட்டுக் கொள்ளலாம். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் இடது கை அனிச்சையாக உணவை சிந்தி விடுகிறது. பாவம் நான்கு மாதமாக விடுப்பில் இருக்கிறாள். கால்..கைக்கு தைலம் தடவி நீவி விட்டு அவரை படுக்க வைத்தாள் கீர்த்தி.

முன்னறை இருளடைந்திருந்தது. ஒருக்களித்து படுத்திருந்தார். முகம் சுவரை நோக்கியிருந்தது. கண்களில் வழிந்த கண்ணீர் தலையணைக்குள் புகுந்துக் கொண்டது. மின்விசிறியின் காற்றில் கன்னங்கள் காய்ந்து வறவறத்தன. புரண்டு படுத்துக் கொள்ள தோன்றியது. மெதுமெதுவாக முயற்சித்தார்.

”என்னை கூப்டுருக்காலமில்லப்பா..” சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்தாள் கீர்த்தி. அவரை நோகாமல் திருப்பி விட்டு படுக்க வைத்தாள்.

”பால் எடுத்துட்டு வரட்டுமா.. துாக்கம் முழிச்சுக் கெடந்தா பசி வந்துடும்..” என்றாள்.

வேண்டாமென்பது போல தலையசைத்தார்.  மங்கிய இருளிலிருந்தது அறை.

”கொண்டாரட்டுமாப்பா..?” என்றாள் மீண்டும்.

”வேணான்னு ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டே.. ஒன் எழவ எடுக்க முடியில என்னாலே.. பேசாம என்னை ஒரு ஹோம்ல சேத்து விட்டுரு.. எம்பாட்டை எனக்கு பாத்துக்க தெரியும்…” என்றார் கடுமையாக.

விளக்கை போட்டாள். 

”சரிப்பா..  பசியில்லேன்னா விடுங்க.. நா ஒண்ணுஞ் சொல்லல..” என்றாள். விலகியிருந்த தலையணையை அவரின் கையருகே நகர்த்தி முட்டுக் கொடுத்தாள். அவளறியாமல் மகளின் முகத்தை ஏறிட்டார். உதடு இளஞ்சிரிப்பில் இளக்கார தொனியுடன் இருப்பது போலிருந்தது. அல்லது அப்படியிருக்க வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார்.


***

No comments:

Post a Comment