ஆகஸ்ட் 2017 தளம் இதழில் வெளியான சிறுகதை
திரும்பி
வந்ததுலேர்ந்தே எம் பொண்டாட்டீ சரியா இல்ல.. போறதுக்கு மின்னாடி நாஸ்டா கடையில
பெருக்கி துடைக்கிற வேலை பாத்துச்சு.... சரி.. போயாச்சு.. வந்தாச்சு.. பழையப்படி
வேலைக்கு போவ வேண்டியதுதானே... இன்னிக்கு போறேன்.. நாளைக்கு போறேன்னு
தாக்காட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தங்கிறேன்... தெனக்கூலிக்காரங்களுக்கு வேலைக்கு
போனதான காசு.. மணி ஒம்போதாச்சு.. இன்னிக்கும் போறாப்பல தெரில.... இந்த லட்சணத்துல
இவளுக்கு வீட்டு வேலைக்கு பண்ணயம் அடிக்குணுமாம் நானு.. போடீ மசிறு.. நீயாச்சு..
ஒன் தண்ணீயுமாச்சுன்னு கொடத்த துாக்கி கெடாசீட்டு போலாம்னுதான் தோணுது.. ஆனா நா
அப்படிப்பட்டவன் கெடையாது.. வந்த கோவத்தை அடக்கிக்கிட்டேன்.
”எப்பா..
புத்தவ பையி கிளிஞ்சு போச்சுன்னு சொல்றேன்ல..” என் பெரிய பொட்டை.. எட்டு
வயசிருக்கும்னு நெனக்கேன்.. அதிகாரம் துாள் பறக்கும்.. அதும் அவங்கம்மா நடுவுல
காணலேங்கவும் எங்கிட்ட ரொம்ப எடுப்பாதான் அலையுது.. என்ன பண்றது.. பெத்த
புள்ளையாச்சே.. அதட்டி ஒரு வார்த்தை பேசுனமுன்னா கண்ணு கலங்கீடுது..
”ஒங்கம்மாட்ட
கேளு போ..” ன்னு வெரட்டுனேன்.
மவள
பாத்துட்டுன்னாலும் புத்தி தெளிஞ்சு வேலைக்கு போறாளான்னு பாக்கணும்.. நாஸ்டா
கடைக்காரன் என் மொகத்துக்காக பாக்றான்.. வேணாம்னு சொல்ல ஒரு நிமிசம் ஆவுமா
அவனுக்கு.. நா பெயிண்டரு வேலை பாக்கறேன்.. எனக்கு மாசம் முச்சூடுமா வேலை வருது..? ரெண்டு
பொட்டைப் புள்ளைங்களாச்சு.. ஒத்தரு வருமானத்தில குடும்பம் நடத்தறதெல்லாம் காலம்
இருக்க இருப்புக்கு செரிப்பட்டே வராது.. ஊரொலவம்மேரி ஏன்டீ பொட்டைங்களா பெத்துப்
போட்டேன்னு அடிச்சு வெரட்றவனா நானு.. பொட்டைங்கன்னாலும் அதுங்க படிச்சு நல்லா
வருணும்னுதானே ஸ்கூல்ல சேத்து வுட்டுருக்கன்.. பெருசு மூணாங்கிளாசு படிக்குது..
சின்னதுக்கு மூணு வயசாச்சு..
”அம்மா
அளுதுட்டு கெடக்குதுப்பா.. நீ வாங்கி தா..” செவுத்தல அடிச்சா பந்தாட்டம் திரும்பி
ஒடியாந்துச்சு பெரிய பொட்டை.. முன்னமேரி இருந்துச்சுன்னா அவள தொணப்பி
எடுத்துடும்.. இத்தன நாளா வுட்டுட்டு போயிட்டாளேன்னு கோவமோ.. இல்ல எங்கம்மாள
கூட்டியாந்து வச்சு பாத்துக்கிட்டதால தன்னோட அம்மாள மறந்துடுச்சோ.. என்னமோ..
கேட்டா கேட்ட கேள்விக்கு பதிலு.. மத்தப்படிக்கா பேச மாட்டேங்குது எம்
பொண்டாட்டீட்ட.
”சரி
நா வாங்கி தாரேன்.. பெரச்சனைய வுடு..” சரிங்காட்டி லேசுல வுடாது.
எனக்கும்
பெரிய மவளுக்கும் தட்டு எடுத்து வச்சா எம் பொண்டாட்டி. அதுக்குள்ள அது வெளையாட
ஓடீடுச்சு.. லீவு நாள்ன்னா வூடு தங்காது.. சக்கரம் வச்ச காலு.. இட்டிலியும்
வெங்காய சட்னியும்.. வாய்க்கு ஒணக்கையாதான் இருந்துச்சு.. மவளுக்கு தனியா தேங்கா
சட்னி அரைச்சிருப்பாளாட்டருக்கு.. இன்னும் சின்னப் பொட்டை எந்திரிக்கல..
எம்பொண்டாட்டி கொடங்கைலயே கெடந்த புள்ள.. அவ போனப்பொறவு ரவைக்கும் பகலைக்கும்
எம்மா.. எம்மான்னு ஒரேமுட்டா அழுது தீத்துடுச்சு.. அப்றம் பளவிப் போச்சு அதுக்கும்..
இப்போ எங்கிட்ட ஒட்டிக்கிட்டு அவள வெறிக்க வெறிக்க பாக்குது.. எம் பொண்டாட்டீக்கு
தான் வெசனம் தாங்கல..
”வேலைக்கு
போலயா..”ன்னேன் மெதுவா.
”போவுணும்..”-
ன்னா
”அதான்
எப்ப..”
”முதுவு
வலிக்குது.. குனிஞ்சு கூட்டித் தள்ள முடியில..”
மத்தவன்
மாதிரி பொண்டாட்டிட்ட கைய நீட்ற தத்தாரி பய நா இல்ல.. பொட்டச்சிங்களுக்கு இன்னும்
குடும்ப பொறுப்பு பத்தலேங்கிறேன்.. அவ்ளோதான்.. நாங்க ஏழை சனங்கதான்.. குடிச
வூடுதான்.. ஆனா எங்க புள்ளங்களும் அப்டியே இருக்குணும்னு இருக்கா சொல்லுங்க.. நானே
அப்டி இருக்கக் கூடாதுன்னு முடிவுலள்ள இருக்கேன்.. எங்க வூட்ட சுத்தியிருக்க
அத்தனை பயலுங்களும் தண்ணியடிப்பானுங்க.. நா அதுங்கிட்ட கூட போறதில்ல.. மேஸ்திரி
காசு குடுத்ததாவுல எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருவேன்.. எங்கிட்டே ஒரே ஒரு
கெட்டப்பயக்கந்தான் இருக்கு.. தினுசுதினுசா சட்டை வாங்கி போடுவேன்... அதும் டீ
சர்ட்ன்னா வுட்டுக்கறதில்ல.. பெயிண்டு வேலைக்குன்னு மேச்சட்டை ஒண்ணு வச்சிருக்கேன்..
அதுங்கூட டீசர்ட்டுதான்.. சினிமான்னா உசிறு.. ரிலீசாச்சுன்னா பாத்தே ஆவுணும்னு
புடுவாதமிருக்கும்.. அவ்ளோதான்..
சாப்டு
முடிங்கங்குள்ளயும் இன்னும் ரெண்டு இட்லி எடுத்து வச்சா.. அதுங்குள்ள சின்னப்
பொட்டை எந்திரிச்சுக்குச்சு.. எம் பொண்டாட்டி புள்ளய துாக்கி இடுப்புல
வச்சுக்கிட்டே சட்னிய எடுத்து வச்சா.. அவ ஒவ்வொரு தடவ குனியறப்பவும் இடுப்பல
இருக்கற பொட்டை என்னை பாத்து சிரிச்சுது.. எம்மேல இருக்க அதே பாசம் எங்கம்மா
மேலயும் இந்த பொட்டைக்கு இருக்கும்.. எங்கம்மா போயி பத்து நாளாச்சு.. இன்னும்
இதுங்களால எங்கம்மாள மறக்க முடியில..
இட்லிய
பிச்சு மவளுக்கு ஊட்டுனா.. அது மூஞ்சிய திருப்பிக்குச்சு.. கால நேரம் கடை தீனிதான்
திங்கும்.. அது இவளுக்கு புரியில.. சரி.. இவளும் வந்து பத்து நாளுதானே ஆச்சு.. மொள்ள
புரிஞ்சுக்குவா..
“இருய்யா..
அப்பா வாங்கீட்டு வாரேன்..“ ன்னு சட்டைய போட்டுக்கிட்டு கடைக்கு கௌம்புனேன்..
நானும் வர்றேன்னு கால கட்டுச்சு சின்னது.. அதை பாத்துட்டு எம் பொண்டாட்டிக்கு
மொகம் சுருங்கிப் போச்சு.
“சரி..
வுடு. எல்லாஞ் சரியாப் போவும்..”ன்னேன் சமாதானமா. எம்மனசு பச்சப்புள்ளயாட்டம்
அம்புட்டு எளகுனது.
காலு
அப்டியே நாஸ்டா கடையாண்ட இழுத்துட்டு போயிடுச்சு.. நமக்கெல்லாம் அர அவருக்கொருக்கா
டீ குடிக்கணும்.. இவ வேலை பாக்கற நாஸ்டா கடயிலதான் கணக்கு வச்சிருக்கேன்.. கூட்டித்
தள்ளி எலை எடுத்துப் போடுறதுக்கு நாளொண்ணுக்கு நுார்றுவான்னு பேச்சு.. அதுல
நாப்பது ரூவாய டீக்காக புடிச்சுக்கிட்டுதான் இவட்ட குடுப்பான்.. நம்ப கடைல
கூட்டித் தள்ளற பொம்பளயோட புருசனாச்சேன்னு கரிசனமெல்லாம் அந்த ஆளுக்கு கெடையாது..
என்ன ஒண்ணு.. பொம்பள சனத்துக்கிட்ட கண்ணியமா நடந்துக்குவான்.. அந்த
கருமாதிக்குதான் இவன்ட்டயே அனுப்பறது.
”வருது..
வருதுன்னே.. எங்கய்யா ஒம் பொண்டாட்டியக் காணாம்.. வேற ஆளு போட்டுறவா..” எப்பவும் இதே
மெரட்டலுதான் நாஷ்டாக்காரர்ட்ட.. ஆனா நம்பள மீறி ஒண்ணும் செஞ்சுட மாட்டாரு..
”கொஞ்சம்
பொறுங்கண்ணே.. நாளக்கு அனுப்பி வுட்டுர்றேன்..“ டீய குடிச்சிட்டு பொட்டைங்க
ரெண்டுக்கும் பாக்கெட்டு சிப்சு வாங்கிக்கிட்டேன்.. கால நேரத்தில அததான் திங்கறேங்குது..
என்ன பண்ணீ தொலயறது.. என்னய கண்டதும் ரெண்டும் ஒடியாந்துச்சங்க.. ஆளுக்கொண்ணா
குடுத்தேன்… இவ இப்பவும் கரைஞ்சுக்கிட்டுதான் கெடந்தா..
”இதுங்கதான்
ஒட்ட மாட்டேங்குதுங்களே.. பேசாம வேலைக்காது போலமில்ல..” சுருக்குன்னு தைக்குட்டும்னுதான்
கேட்டேன்..
பதிலே
பேசல அவ. சாப்பிடல போலருக்கு.. இட்லி அப்படியே கெடந்துச்சு.. வீடுன்னா
எல்லாத்துக்கும் சமதியான உரிமை இருக்குணும்னு நெனக்கறவன் நானு..
”சரி..
சின்ன புள்ளதானே.. சரியாப் போவும்.. நீ தின்னு..”ன்னேன்.
”வேணாம்..”
ன்னா..
அதுசரி..
பாலும் பளமுமா சாப்டவளுக்கு இதெல்லாம் எடுபடுமா.. புள்ள பெத்து பதுனஞ்சு
நாளானவளாட்டமா இருக்கா.. என்ன தளதளப்பு… என்ன மினுமினுப்பு.. போன வருசம் இதே
நாளுங்க எப்படியிருந்தா.. வத்தக்குச்சியாட்டம்.. அந்த நாளு நெனப்புல ஓடுச்சி..
”ஒரு
புள்ள பெத்துக்கணும் நீ..”ன்னு நா சொன்னப்ப வௌக்குமாத்தால தரைய தேய்ச்சிட்டு
இருந்தா எம் பொண்டாட்டீ.
”ஏன்..
இது ரெண்டுக்கே இந்த தேயி தேயிறேன்.. இன்னொண்னு வேறயாக்கும்.. வெலா நொந்து போவும்..
போ பேசாமா..”ன்னா..
”அதில்ல
புள்ள.. நா சொல்றது வேற..”
”என்னாத்த
வேற.. ஆம்பள புள்ள வேணும்பே.. ஆம்பள பொம்பள எல்லாம் ஒண்ணுதான்.. கடைசிகாலத்துல எதும்
சோறு போட போறதில்ல.. கைய ஊணிதான் கர்ணம் அடிக்குணும்..”
”இந்தா..
நாஞ் சொல்றது வேற.. ஊசி வழியா புள்ள பெத்துக்கறது.. ஆம்பள சம்பந்தமில்லாம..”
”ஏன்..
நீ எங்க போன.. நல்லாதான இருக்க..” புரியாம என்னை பாத்தா..
”அதில்ல..
இது வேற சமாச்சாரம்.. எங்க இன்சினியருக்கு தெரிஞ்ச ஒருத்தங்க. பெரிய
பணக்காரங்களாம்.. புள்ளக்குட்டிங்க கெடயாது.. ஏதோ வியாதின்னு அந்த வீட்டு
பொம்பளைக்கு கர்ப்பப்பைய எடுத்துட்டாங்களாம்.. வாரிசு இல்லாம போயிடும்ணு
பயப்புடுறாங்க..”
”சரி..”
யோசனையா சொல்லீட்டு என்னை நிமுந்து பாத்தா.
”ஒன்னால
பெத்து தர முடியுமான்னு கேக்றாங்க.. எல்லாம் ஆதாயத்துக்குதான்.. நீ என்ன சொல்ற..”
வௌக்குமாத்தை கீழ போட்டுட்டா.. நாங்கூட அடிச்சுகிடிச்சுப்புடுவாளோன்னு பயந்து
போனேன்..
அதுக்கு
பிற்பாடு அவக்கிட்டே இதை பத்தி நெறய தடவை பேச ஆரம்பிச்சேன்.. இதெல்லாம்
கேள்விப்பட்டது கூட இல்லைன்னு சொன்னா.. நானுந்தான் கேட்டதில்ல. புரோக்கருங்க சொன்ன
தகவல இவக்கிட்ட சொன்னேன்..
”அந்த
வூட்ட சனத்துக்கோ.. அந்த ஆம்பளைக்கோ யாருக்கும் ஒன்னை தெரியாது.. நீயும் அதுங்கள
பாக்க வேணாம்.. ஊசி குத்தி புள்ள உண்டாக்குவாங்க. பெத்து குடுத்துட்டா ரெண்டு
லெச்சம் தரேங்கிறாங்க.. என்ன சொல்றே..”ன்னேன்.
தொகைய
சொன்னதும் கொஞ்சம் இளகினாப்பல தெரிஞ்சுது.. அப்டியே பேச்சுக் குடுத்தேன்.. ”தலையால
நடந்தாலும் ஆயுசு முச்சூடும் அம்புட்டு பணத்தை பாக்க முடியாது நம்மளால.. புள்ளங்க
பேர்ல ஒரு லச்சத்தை போடுலாம். கீத்த எடுத்துட்டு ஓடு மாத்துலாம் வீட்டுக்கு..
செயினு வாங்கி கழுத்துல போட்டுக்கலாம்..”
”அதுக்குன்னு..
இதெல்லாம் நல்லவா இருக்கு..” ஒத்துக்கறாப்பல எறங்கி வரது தெரிஞ்சுது.. ஆனா மறுபுடியும்
முருங்கமரம் ஏறீட்டா. ”எம் புள்ளைங்கள வுட்டுட்டு என்னால இருக்க முடியாது..”ண்ணுட்டா.
”சரி..
பேசிப் பாக்கறேன்..”ன்னேன். சொல்லப்போனா எனக்குமே இது புடிக்கலதான்.. இவளையே
சுத்திக்கிட்டு கெடக்கற ரெண்டு பொட்டைங்கள வுட்டுட்டு எப்படி போறது.. நான்
இன்ஜினியராண்ட பேசினேன்.. அவரு மசியவே மாட்டேன்னுட்டாரு.. புள்ள பெத்து
குடுக்கறவரைக்கும் கட்ன புருசன் நா கூட அவள பாக்க குடாதாம்.. பேசக் குடாதாம்..
ஆயிரத்தெட்டு கன்டிசன் போட்டாரு.. இங்கிட்டு எம் பொண்டாட்டிய சரி கட்டுணும்..
அங்கிட்டு எங்கம்மாள சரிக்கட்டுணும்.. என் தங்கச்சிங்கள வுட்டுட்டு வர மாட்டேன்னு
அடமா பேசுச்சு அது.. தங்கச்சிங்களுக்கு கல்யாணத்துக்கு பணம் வேணுமா வேணாமான்னு ஒரு
போடா போட்டுல்ல வழிக்கு கொண்டாந்தேன்..
சரி..
எல்லாம் ஆச்சு.. வேல முடிஞ்சு நாள் கணக்குக்கு பதினஞ்சு தெனம் ஓடிப் போயிடுச்சு..
இனிமே பொழப்ப பாக்க வேண்டியதுதானே.. எப்பவும் பொலம்பலும் அளுவையுமாவ இருப்பாளுவ..
இத்தனக்கும் சீல துணிமணியெல்லாம் வேற வாங்கி குடுத்துருக்காங்க.. இன்னும் என்னா
வேணுமாம் இவளுக்கு.. அதுசரி.. வசதியா இருந்துட்டு வந்தவளுக்கு இந்த குடிச வீடு
புடிக்கலையோ என்னமோ.. அவ போன பொறவு கீர தளையா வாடி கெடந்த புள்ளைங்க நானும்
எங்காத்தாளுமில்ல உசுருண்டாக்குனோம்.. இதெல்லாம் சொல்லிக்காட்டற சல்லிப்பய
நானில்ல..
”சரி..
அளுவாதே.. வுடு.. நாளக்கு வந்துருவான்னு நாஷ்டா கடையில சொல்லீட்டு
வந்துருக்கேன்.”னேன்.. பேச்ச மாத்தறாப்பல.. அப்பவும் வாய தொறப்பனான்னு ஒரே அளுவை
சண்டாளிக்கு.. எரிச்சலா வந்துச்சு..
விறுவிறுன்னு
சட்டைய போட்டுட்டு கௌம்பீட்டேன். இதே மாதிரிதான் இவள பாக்க திருட்டுத்தனமா ஒருநா
போனேன் அவ இருந்த வீட்டுக்கு.. அத்தோ பெரிய வீட்ல தங்க வச்சிருந்தாங்க.. சமைச்சுப்
போட.. துணி தொவக்கன்னு எல்லாத்துக்கும் ஒரு பொம்பள வூட்டோட இருந்துச்சு.. ராச வாழ்க்கைதான்..
இனிம இங்குட்டு வராதய்யான்னா எம்பொண்டாட்டீ.. வெறுத்துட்டேன்.. குடும்பம்
குட்டியெல்லாம் வரக் குடாதுன்னு எக்ரிமெண்ட்டு போட்டாங்க.. சர்தான்.. அதுக்குன்னு
கடுதாசில இருக்கமேரியேவா இருப்பாங்க.. நல்லவளாட்டம் போற நேரமெல்லாம் பொட்டைங்கள
பத்தி வெசாரிக்கறது.. அதும் சாடைமாடையா ஒளுவுமறவா நின்னுக்கிட்டுதான் பேச்சு..
அந்த சமயக்கார பொம்பள வூட்டுக்காரங்கட்ட சொல்லிருமாம்.. இங்கள்ளாம் வர வேலை வச்சுக்காதேன்னு அந்த
சமயக்காரிச்சி என் மூஞ்சிக்கு நேரா சொல்லிடுச்சு ஒருநா.... புருசன தொரத்தி வுடுறத இவ
பாத்துட்டுதான் நிக்கிறா… மவராசி வாய தொறக்கலயே.. நீலிக்கண்ணீரு வடிச்சா ஆச்சா..
கண்றாவீ.. அதெல்லாம் சும்மா பசப்பு..
சாப்பாட்ல
கொறையா.. பவுசுல கொறையா.. டைம் வச்சு சோறு போடுவாளுங்களாம்.. வாரத்துல மூணு நாளு
கறிசோறாம்.. அப்றம் பாலு.. ஜுசு.. பளம்.. மீனு.. கோளி..முட்டைன்னு திம்பனைக்கு கொறச்சல்ல..
நானும் எங்காத்தாளும் ரெண்டு பொட்டைங்களும் பளஞ்சோறும்.. கொழம்பும் தின்னுட்டு
கெடக்க எப்டிதான் எம் பொண்டாட்டி மனசு வந்து தின்னாளோ.. நான்தான் போய் நிக்கேன்ல..
புருசனாச்சே.. இந்தா ஒரு வா தின்னுட்டு போன்னு சொல்றது.. இல்லாட்டி இவளுக்கு
கொண்டாந்து வக்கறத கொஞ்சம் மறச்சு எடுத்தாறது.. என்ன வுட்டு தள்ளுங்க.. அவ பெத்த
பொட்டைங்கதானே.. அதுங்களுக்கு எதாது ரெண்டு குடுத்து வுடுலாம்ல.. என்னத்தை சொல்ல..
இன்னோரு ஆம்பளைன்னா தண்ணியடிச்சுட்டு தகராறு பண்ணியிருப்பான்.. நா அப்படியான ஆளு
கெடயாது.. பளபளன்னு தக்காளி பளமாட்டம் அவ இருக்க பவுசுக்கு பாக்க பாக்க எனக்கு நெல
தடுமாறுது… ஒருவேளை அந்தாளு இவள வந்து பாத்துட்டு போவானோ.. டவுட்டா போச்சு எனக்கு..
அந்த புரோக்கராண்ட போனேன்..
அவனும்
பிராது குடுக்கறவன் மாதிரிதான் இருந்தான்.. ”ஏன்ய்யா.. ஒன்ன பத்தி கம்பீளீண்டா
வருது.. சும்மா சும்மா அங்கிட்டு போற போலருக்கு..”
”ம்க்கும்..
கட்டுன பொண்டாட்டிய நா பாக்கமா வேற யாரு பாக்கறது..” கோவம் வந்துச்சு எனக்கும்..
”நா
சொல்றது வௌங்குதா இல்லையா ஒனக்கு.. பெத்தப் பள்ளைங்களே வரக் கூடாதுங்கறதுதானே
கன்டிசன்..”
”அப்ப
அந்தாளு வர போவ இருப்பாங்கற..” ன்னேன்.
”இந்தாப்பா..
ஒன் புத்தி ஏன் இப்டி நரவலா போவுது.. ஆளும் வராது.. பொம்பளயும் வராதுங்க.. மொதல்ல
அந்த சனங்க யாருன்னே சமயக்காரிக்கு கூட தெரியாது.. அப்றம் எங்க ஒன் பொண்டாட்டிக்கு
தெரியறது.. நான் சொன்னமேரி அவனோடத கொண்டாந்து இவ கருவுல வச்சுடுவாங்க.. புள்ளய
பெத்துக் குடுத்துட்டு நவுந்துக்கணும்.. அவ்ளோதான்.. சோலி முடிஞ்சுடுச்சு..”
”காசு
எப்போ தருவீங்க..”
”ஏன்..
இப்பவே வாங்கி குடிச்சு அழிக்கிணுமா..“
”இந்தாங்க..
யாருட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசு.. தண்ணியடிக்கிறாங்களாம் தண்ணீ..”
”நீ
தண்ணி அடீ.. வெண்ணீ அடீ.. இங்க ஆருக்கும் நட்டமில்ல.. இந்த கைல புள்ள.. அந்த கைல
காசு.. அவ்ளோதான்..” சொன்னது சொன்னமேரிதான் நடந்துக்குட்டாரு அப்றம்.
மதியானம்
சாப்பிட்டுட்டு பொட்டைங்க ரெண்டும் துாங்கி போச்சுங்க.. எனக்கு சோத்தை போட்டு
கொழம்ப ஊத்தி வச்சா.
சாப்டியா..”
ன்னேன்.. ஒவ்வொருத்தன்மேரி பொண்டாட்டி புள்ளய கவனிக்காதவன் கெடையாது நானு.
”இல்ல..“ன்னா.
கோவமா வந்துச்சு...
”ஏன்..
நீ சமச்சதுதானே.. ஓ.. அங்க நெய்யும் பிய்யும் ஊத்தி சமைச்சிருப்பாளுவ.. எங்கூட்ல
இவ்ளோதாம்மா சமத்து..” ன்னேன் நக்கலா. பதிலுக்கு பதிலு வாயடிப்பா முந்தில்லாம்.. ஆனா
எதும் பேசல இப்ப.
“சரி..
போ.. கழுதை.. கத்திரிக்கா முத்துனா கடத்தெருவுக்கு வந்துதானே ஆவுணும்ன்னு
நெனச்சுக்கிட்டு பேசாம கவுந்தடிச்சு படுத்துட்டேன். சாயங்காலம் பெருசுக்கு
புத்தகப்பை வாங்க போவுணும்.. ஒரு நா லீவுல எம்புட்டு வேலை பாக்கறது நானு..?
ஆனாலும் புள்ள சொன்னதை தட்டமுடியில..
நான்
கௌம்பவும் பெருசும் கௌம்பிடுச்சு..
”ஏம்ப்பா..
அம்மா இம்மா நாளும் எங்க போயிருந்துச்சு..?” பெரிய பொட்டைக்கு உறுத்திருக்கும்
போல.. கடைல வச்சு கேட்டுச்சு.
”அதான்
ஊருக்கு போச்சுன்னு சொன்னேல்ல..”
”எந்துாருக்கு
போச்சு..”
”ஊருக்கு
போச்சு.. அவ்ளோதான்.. சும்மா தொணப்பாத..”
கோவம்
வந்துருச்சு அதுக்கு. இந்த பையி புடிச்சிருக்கா பாருன்னேன் பேச்சை மாத்தறாப்பல..
பொட்டைப் புள்ளைன்னாலும் அதுக்கு புடிச்சமேரி வாங்கி தருணும்னு நெனக்கிறவன் நானு..
“நீ
ரெண்டு புள்ளீங்களுக்கு அக்காளாயிட்டடீன்னு நேத்து அம்மா எங்கிட்ட சொல்லுச்சு..”
விடாம கேட்டுச்சு பெருசு..
எனக்கு
பக்குன்னு ஆயி போச்சு.. எதெல்லாம் சொல்லி வச்சிருக்கா பாரு புள்ளைக்கிட்ட..
வெக்கங்கெட்ட செறுக்கி.. உள்ளதையா சொல்ல முடியும்.. வெக்கக்கேடு.. என் மூஞ்சவே
பாத்துச்சு பொட்டை.
”சும்மாரு..
ஒங்கம்மாளுக்கு பைத்தியம் புடிச்சுப் போச்சு..”ன்னேன்.. வேறென்ன சொல்ல..
“அது
பாப்பளா.. தம்பியா..” புள்ளக்கு என்னாத்தையோ சொல்லி தொலச்சுருக்கா சண்டாளி.
நல்ல
நாளு.. நட்சத்திரம் பாத்து புள்ளய ஆப்ரேசன் பண்ணி எடுத்துட்டு அம்மாக்காரி கண்ணு
முளிக்கங்குள்ளயும் துாக்கீட்டு போயீடுவாங்கன்னான் அந்த புரோக்கரு..
பெரசவத்தன்னிக்கு கண்ணுக்கு மறவா நா போயி நின்னுக்குனேன்.. ஆரு என்னான்னு ஒரு
வெவரம் கண்டுப்புடிக்க முடியில.. அப்றம் நாலு நாளு கழிச்சு இவள டிச்சார்சு பண்ணி
அனுப்பி வுட்டாங்க.. ஆசுத்திரி பில்லெல்லாம் முன்னாடியே கட்டீருப்பாங்க
போலருக்கு.. காசு பணம் பட்டுவாடால்லாம் சூட்டோட சூடா முடிஞ்சுப் போச்சு.. ஆச்சு..
எல்லாம் முடிஞ்சு பதுனஞ்சு நாளு ஓடிப் போச்சு.. ஆறுன கஞ்சி பழஞ்கஞ்சி..
நா
என்னவோ சொல்லப் போறேன்னு என் பெரிய பொட்டை என்னையே பாத்துச்சு.
எல்லாமே
எனக்கிப்போ அருவுருப்பா தோணுது.. நேத்து ரவைக்கு அவள தொட்டுக்குணும்னு ஆசை..
நெருங்கி போனேன்.. ஆனா என்னமோ புடிக்கில.. எவனோடதையோ வவுத்துல வச்சிருந்தவதானே..
நாந்தான் மூளக்கெட்டுப் போயி இப்டி பேசுனேன்னா இவளாவது வேண்டாமுன்னு
சொல்லியிருக்குணுமில்ல.. நா வேலைக்கு போறன்யா.. நறுவுசா குடும்பம்
நடத்திப்புடலாம்னு அவ சொல்லிருந்தான்னா இந்த கேவலம் வந்துருக்குமா.. பொம்பளன்னா
சாமத்தியம் வேணும்.. ச்சே.. எல்லாமே முடிஞ்சு போனாப்பல இருக்கு..
எதோ
ஒரு பைய வாங்கீட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.. சின்னப் பொட்டை துாங்கீடுச்சு.. இவ
மட்டும் பேயீமேரி ஒக்காந்திருந்தா.. ஆங்காரமா வந்துச்சு எனக்கு.
”அந்த
சனியனயே நெனச்சுக்கிட்டு குந்திருக்கியா..”ன்னு கோவமா கத்துனேன்..
நா
யாரை சொல்றேன்னு அவளுக்கு நல்லா புரிஞ்சுப் போச்சு..
அதுக்குன்னு இம்மாம் கோவமா வரும்
பொட்டச்சிக்கு. “இந்த பாரு.. சனியன்கினியனெல்லாம் பேசற வேல வச்சிக்காதே.. மருவாதி
கெட்டுப் போவும்.. ஆமா..” கண்ண ரெண்டையும் முளிச்சுக்கிட்டு சாமி வந்தவளாட்டம் கத்துனா..
பொம்பளயா இவ.. ராச்சசி.. ச்சே.. இவள
எனக்கு புடிக்கவேயில்ல..
***
No comments:
Post a Comment