Search This Blog

Monday, 6 February 2023

இலக்கியத்தில் நான்...

 


இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுத வருவேன் என்றோ “எழுத்தாளர்என்ற அடையாள முன்னொட்டு என் பெயருக்கு முன்பாக எழுதிக் கொள்ள முடியுமென்றோ யாராவது கூறியிருந்தால் அதனை அப்போது நம்பியிருக்க மாட்டேன். நான் கேட்டமுதல் எழுத்தாளர் எனில், அது ரா.கி.ரங்கராஜன் அவர்களைதான். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்களுக்கு அவர் ஏதோ சொந்தமாம் என்று என் தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதை தாண்டி அவரை பார்த்ததெல்லாம் கிடையாதுபோலவே, என் தாயார் தனது சிறுவயதில் எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறுவார்திருச்சி, தென்னுாரிலிருந்தது அவர்கள் வீடு. அவர் வயதையொத்த சிறுமிகளோடு தெருவில் விளையாட செல்லும்போது முன்னறையில் மேசையில் எழுதுஅட்டையை வைத்து எதையோ எழுதிக் கொண்டிருப்பாராம் என்று அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன். 

எனது இளமைப்பருவம் நானே ஏற்படுத்திக் கொண்டாலொழிய பெரும்பாலும் அதிர்வுகளற்றே நகர்ந்தது. என் தந்தையார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றியவர். பிறப்பு, வளர்ப்பு, கல்வி என எல்லாமே நெய்வேலியில் அமைந்துப் போனது எனக்கு. வாசிப்புக்கான எல்லா சூழலும் அமையப்பெற்ற வீடு எங்களுடையது. காமிக் புத்தகங்கள், ரஷ்ய படக்கதை புத்தகங்கள் போன்றவை எங்கள் வீட்டில் நிறையவே இருந்தன. அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற சிறுவர்மலர்களுக்கும் குறைவில்லை. என் தந்தையார் எங்களின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பெருபண்டிகை நாட்களில் புத்தகங்களைதான் பரிசாக வழங்குவார். அவற்றை மீண்டும் மீண்டும் மனப்பாடம் ஆகுமளவுக்கு படித்திருக்கிறோம். பிறகு குமுதம், ராணி, ஆனந்த விகடன், தேவி, குங்குமம், பொம்மை, மங்கை, கலைமகள், கல்கி, மஞ்சரி, துக்ளக் என அது விரிவடைந்தது.  சனிக்கிழமையென்றால் அது குமுதம் வரும் நாளாக்கும், வியாழன் என்றால் ஆனந்தவிகடன் வரும் நாள் என்று அது அதற்கான நாளில் தவம் போல காத்திருந்திருக்கிறோம். புத்தகம் போடுபவரின் முகம் கூட இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. ‘குமுதம் மாமாஎன்போம் அவரை. அவருடைய சைக்கிள் மணியோசைக்கு நாங்கள் உடன்பிறப்புகள் போட்டி போட்டு கொண்டு ஓடுவோம். முந்தி ஜெயிப்பவர் அதிர்ஷ்டசாலி. ஜெயித்தவரிடம் தோற்பவர்நெக்ஸ்ட்என்று சொல்லிக் கொள்வோம். முதலாமானவர் வாசித்து முடித்து விட்டு அடுத்ததாக நெக்ஸ்ட் சொன்னவரிடம் புத்தகம் வந்து விடும். அந்த வார்த்தை சத்தியக்கட்டு போல. அதை சொல்லி விட்ட பிறகு யாருக்கும் மாற்றி கொடுத்து விட முடியாது.   நெக்ஸ்ட் நெக்ஸ்ட்என்று சொன்னவருக்கு புத்தகம் அடுத்ததாக போய் சேரும். புத்தகம் கைக்கு வந்து சேரும்வரை வாசிப்பவரையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு அலைவோம். அத்தனை ஆர்வம் எங்களுக்கு. தீபாவளி மலர்கள் கூடுதல் கவர்ச்சியோடு குடும்பம் மொத்தத்துக்கும் சுற்றி சுற்றி அலையும். இன்றும் பழைய எண்ணங்களோடு தீபாவளி மலர்களை தொட்டு தொட்டு பார்த்துக் கொள்வேன். படித்து முடித்த பழைய ராணிமுத்து, மாலைமதி புத்தகங்களை கட்டுகளாக கட்டி கட்டிலுக்கடியில் வைத்திருப்பார்கள். ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் கட்டிலுக்கடியில் தலையை செலுத்திக் கொண்டு கட்டுகளை உருவி எடுத்து வாசித்ததையே மீண்டும் வாசிப்போம். என் சகோதரர்கள் ஆசிரியர், மருத்துவர் என வெவ்வேறு துறைகளுக்கு சென்று விட நான் திருமணம், குடும்ப பொறுப்புகள், குழந்தைகள், அலுவலகம் என இயல்பான தளத்துக்கு சென்று விட்டேன். 

வாழ்க்கை இயல்பாக வாய்க்கப்பெற்றாலும் நான் அதற்கு எதிர்நோக்கில் பயணம் செய்வதையே விரும்பியிருக்கிறேன். என் வாலிபப்பருவத்தில் தீவிர சாமி பக்தையாக இருந்தேன். கோவில்களே கதி என கிடந்தேன். சித்தர் நேரமென வழிப்பட்டு கொள்ளும் பனிரெண்டு மணிக்கு முடியும் எனது நாள், அதிகாலை மூன்றரைக்கு குளியலறையிலும் நான்கு மணிக்கு பூசையறையிலுமாக தொடங்கி விடும். அப்போது நான்  முருகக்கடவுளுக்கு தங்கையாகி விட வேண்டும் என்று தீவிர முயற்சியிலிருந்தேன். என் தந்தையார் வெளியூர் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த என் அண்ணனுக்கு எழுதிய கடிதமொன்றில், உன் தங்கை ஒருவேளை சித்தபிரமைக்குள்ளாகி விடலாம். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளாமலாவது இருந்து விடுவாள். எங்களுக்கு பிறகு அவளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வருந்தி எழுத அதை அண்ணன்  வேலை மெனக்கெட்டு துாக்கிக் கொண்டு வந்து நடுவீட்டில் வைத்து கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருந்தது இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆனால் நானோ, அப்பா கைக்காட்டிய வரனை மறுபேச்சின்றி மணம் புரிந்துக் கொண்டு அவருக்கும் எனக்குமே ஆச்சர்யமூட்டிக் கொண்டேன். 

இப்படியாக நகர்ந்த என் நாட்களில் டைரிக்குறிப்புகளுக்கு பஞ்சமில்லை. மனதில் தோன்றும் சிறு உணர்வுகள், ரசனைகள், புரியாமைகள், தருணங்கள், சஞ்சலங்கள், இனிய நினைவுகள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என எதையெல்லாமோ எழுதி நோட்டுகளை நிரப்பி வைப்பேன். எதையோ தேடிக் கொள்வதும் எதிலோ முட்டிக் கொள்வதும் எதுவும் முற்றுப் பெறாததுமான மனநிலைக்குள் ஆழ்ந்திருந்தேன். இயல்புகளுக்குள் அடங்கிப் போகவியலாது தத்தளித்த நாட்கள் அவை. அந்நாட்களில் சொல்லத்தகுந்தளவு வாசிப்பெல்லாம் கிடையாது. 

இதற்கிடையே, 2012 ஆம் வருடம் தினமணிக்கதிரில் ஒரு அறிவிப்பை நான் பார்க்கும்படி நேரிட்டது. தினமணி-நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப்போட்டி அறிவிப்பு அது. ஏனோ அது என்னை கவர, நான்வைதேகி காத்திருந்தாள்என்ற பெயரில் ஒரு சிறுகதையை எழுதினேன். எந்தவித தயக்கமும் இன்றி அதனை போட்டிக்கு அனுப்பி வைக்க, அது இரண்டாம் பரிசு பெற்றதாக தினமணியிலிருந்து தகவல் ந்தபோது கொஞ்சமும் நம்பவியலாமல்தானிருந்தது. குடும்பம் மற்றும் அலுவலகப்பணியின் பொருட்டு திருச்சியில் குடியேறி விட்ட நான், பரிசு பெறுவதற்காக எங்கள் ஊருக்கு சென்றேன். தினமணி ஆசிரியர் அவர்கள் மேடையில் வைத்து பரிசு வழங்குகிறார். வாங்கிக் கொள்கிறேன். பிறகு கதைகள் எழுத ஆர்வம் கொள்கிறேன். கணையாழி, உயிரெழுத்து போன்ற பத்திரிக்கையில் என் கதைகள் பிரசுரமாகின்றன. இதெல்லாமே புதிது. பிறகு 2013 ஆம் ஆண்டில் தினமணிக்கதிரில் அதே அறிவிப்பு வருகிறது. இப்போது நான் என் தகப்பனாரில் பெயரில் (சுப்ரமணியன்) “வலிஎன்ற சிறுகதையை எழுதியனுப்ப, அது முதல் பரிசு பெற்றது. மீண்டும் நெய்வேலி, பரிசு, தினமணி ஆசிரியர் சந்திப்பு. அவர் நீங்கள்தான் புனைப்பெயரில் எழுதியதா? என்று கேட்டுவி்ட்டு அதை மேடையிலும் அறிவித்தார். மறுநாள் செய்தித்தாளிலும் தினமணிக்கதிரிலும் என் பெயரும் புகைப்படமும், முகவரியும் அழைப்பு எண்ணோடு வெளியாக, அதற்கு கிடைத்த வரவேற்பு இன்றும் வேறெந்த விருதுக்கும் படைப்புக்கும் கிடைத்ததில்லை. 

தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், “சக்கைஎன்ற நாவலை அதே ஆண்டு எழுதத் தொடங்கினேன். கல்லுடைக்கும் தொழிலாளிகள் குறித்த கதை. தொழில்கள் நவீனப்படுத்தப்படும்போது அதில் காலங்காலமாக ஈடுப்பட்டிருக்கும் தொழிலாளிகளின் நிலைக்குறித்து எழுதப்பட்ட நாவல் அது. தனை 2014ல் NCBH வெளியிட்டது. திருப்பூர் தமிழ் சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது உட்பட மூன்று விருதுகளை பெற்ற அந்நாவல், நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் பாடமாக வைக்கப்பட்டது. இன்றுவரை அந்நாவல் ஏழு பதிப்புகள் அச்சாகியுள்ளது. 

பயணங்களும் வாசிப்பும் பெருகத் தொடங்கியது. எதையோஎதற்கோஎன்னவோ என அலைப்பாய்ந்த மனம் சற்று ஆசுவாசப்பட தொடங்கியது. நிறைய எழுதத் தொடங்கினேன். நிறைய பரிசுகள், விருதுகள் பெற்றிருக்கிறேன். கூடவே உலகை வேறுப்பட்ட பார்வையில் கற்க தொடங்கியிருக்கிறேன். 2014ல் வெளியான முதல் தொகுப்பானவலிஎன்ற தொகுப்பிலிருக்கும் கதைகளுக்கும் 2021ல் வெளியானகூடுஎன்ற தொகுப்பிலிருக்கும் கதைகளுக்குமான வேறுபாடுகளே நான் கடந்து வந்த பாதை எனலாம். (இதுவரை ஐந்து சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன) புனிதம் என்ற என்னுடைய நாவல் பெண்ணியக்கருத்துகளை முன் வைக்க, அடுத்ததாக எழுதிய அற்றைத்திங்கள் என்ற நாவலோ பழங்குடி வாழ்வையும் மைய மாநில அரசுகளின் புறக்கணிப்பையும் பற்றியது. வருமாண்டு 2022ல் வெளியாகவிருக்கும் இரண்டு நாவல்களில் ஒன்றான ஆலகாலம்என்பது வெறுமையை பேசுபொருளாகக் கொண்டது.  மற்றொரு நாவலின் பெயர் ‘ஹரிலால் S/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’. தற்போது அதன் இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டுள்ளேன். 


https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF

No comments:

Post a Comment