காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 09.01.1915 அன்று திரும்பி
வந்தார்.கோகலேயின் சொல்லை ஏற்று இந்திய மக்களைப் புரிந்துகொள்வதற்காக இந்தியாவின் எல்லாப்
பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.பிறகு அவுரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்ப்ராணுக்குச்
சென்று போராட்டத்தைத் தொடங்கினார்.அகிம்சைவழியிலான அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்தை
ஒரு புதுமையான அணுகுமுறையாக நாடே உற்று நோக்கியது.மெல்ல மெல்ல அந்த அணுகுமுறைக்கு ஆதரவு
பெருகியது.
எதிர்ப்பைக்கூட அமைதியான வழியில் வலிமையோடு முன்வைக்கமுடியும் என்பதை அவர் ஒருங்கிணைத்த
ஒத்துழையாமை இயக்கம் உலகுக்கு உணர்த்தியது.அவருடைய போராட்டமுறைக்கு நாடெங்கும் ஆதரவு
பெருகியது.ஆதரவுக்கு இணையாக மக்களிடையில் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது.அவருடைய மதநல்லிணக்கப்பார்வையை
மதத்துக்கு எதிரான ஒன்றாக குற்றம் சுமத்தும் சூழல் உருவானது.கடைசிக்கட்டத்தில் மதங்களின்
அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியபோது, மதக்கலவரங்கள்
பெருகின.
பல ஆண்டு காலமாக கனவு கண்ட விடுதலை கண்ணுக்கெதிரில் நிஜமென 15.08.1947 அன்று
நிகழ்ந்த தருணத்தில், அதைக் கொண்டாடும் மனநிலையில் காந்தியடிகள் இல்லை.கலவரங்களில்
சிக்கி சின்னாபின்னமான பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் மக்களிடையில் அமைதி திரும்புவதற்காகப்
பாடுபட்டார்.கெடுவாய்ப்பாக, ஓர் இடத்தில் அமைதி திரும்பியபோது இன்னொரு இடத்தில் கலவரம்
வெடித்தது.அந்த இடத்தில் அலைந்து திரிந்து அமைதியை நிலைநாட்டியபோது மற்றொரு இடத்தில்
அமைதி குலைந்தது.இவ்வாறாக உடல்நலம் குன்றிய தன் இறுதிக்காலத்தில் அமைதியை நிலைநாட்ட
காந்தியடிகள் அங்குமிங்கும் அலைந்து முயற்சி செய்தபடியே இருந்தார்.30.01.1948 அன்று
பிரார்த்தனைக்கூடத்துக்கு நடந்து செல்லும் வழியில் இந்து மத ஆதரவாளன் ஒருவனுடைய துப்பாக்கிக்குண்டுக்கு
காந்தியடிகள் பலியானார்.
காந்தியடிகளின் பொதுவாழ்க்கை என்பது முழுக்கமுழுக்க வெவ்வேறு போராட்டங்கள் நிறைந்த
ஒன்றாகும்.அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் வேறொரு விதத்தில் போராட்டம் நிறைந்ததாக
இருந்தது.காந்தியடிகள் தன்னைப்போலவே தன் மனைவியும் பிள்ளைகளும் எந்தப் பயனையும் எதிர்பார்க்காத
தியாகவாழ்க்கையை வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார்.அவருடைய விருப்பங்கள் அவருக்கு
பல கசப்பான அனுபவங்களையே அளித்தன. அந்தக் கசப்புகளையெல்லாம் விழுங்கியபடி, மீண்டும் மீண்டும் தான் விரும்பிய
பாதையிலேயே அவர்களைச் செலுத்த விழைந்தார் அவர்.
தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆரம்ப காலத்தில் காந்தியடிகள்
வகுத்த சில போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அனைவரும் இளையகாந்தி என அழைக்கும்
அளவுக்கு தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டிருந்தார் காந்தியடிகளின் மூத்த மகன் ஹரிலால்.ஒரு
தருணத்தில் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான உதவித்தொகை அவருக்குக் கிடைக்கும்
நிலையில் இருந்தது.ஆனால் தன் பிள்ளைகள் தியாகப்பாதையை ஏற்கவேண்டும் என விரும்பிய காந்தியடிகள்
அந்த வாய்ப்பை இன்னொரு மாணவருக்கு அளித்துவிட்டார்.அந்த ஏமாற்றம் ஹரிலாலின் மனத்தில்
ஆறாத புண்ணாக அமைந்துவிட்டது.தந்தை தன்மீது எடுத்துக்கொண்ட உரிமையை அவர் தன் முன்னேற்றத்தைத்
தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாகக் கருதி மனம் புழுங்கினார்.
அக்கணம் முதல் ஹரிலால் தன் தந்தையின் பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார்.நாட்டில்
வாழும் மற்றவர்களைப்போல தன் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பணமீட்டவும் வளமான வாழ்வை
நடத்தவும் விரும்பினார் அவர்.அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைவதற்கான எல்லாச் சாத்தியங்களையும்
கொண்ட வெளிநாட்டுப்படிப்பை தனக்குக் கிடைக்கவிடாமல் செய்த தந்தையிடமிருந்து விலகினார்.அவருடன்
முரண்பட்டு தனி ஆளாக தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்.அன்று
அவர் நெஞ்சில் விழுந்த ஒவ்வாமையின் விதை நாளுக்குநாள் வளர்ந்து ஒரு பெருமரமாவதை ஒருவராலும்
தடுக்கமுடியவில்லை.பல சமயங்களில் அவராலேயே அதைத் தவிர்க்கமுடியவில்லை.
தந்தையோடு நெருங்கியிருக்கும் தருணங்களில் மனம் நெகிழ்ந்து மாற நினைப்பதும்
விலகிச் சென்ற ஒருசில நாட்களிலேயே பழைய ஒவ்வாமை விசைகொண்டு உயர்ந்தெழுவதும் ஹரிலாலின்
வாழ்வில் மாறிமாறி நிகழ்ந்தபடியே இருந்தது. அவர் பணமீட்டுவதற்காக எடுத்த எல்லா முயற்சிகளும்
தோல்வியிலேயே முடிவடைந்தன.ஒவ்வொரு முறையும் அவர் தோற்கும்தோறும் தந்தை மீதான ஒவ்வாமை
இன்னும் இன்னுமென பல மடங்காகப் பெருகிக்கொண்டே சென்றது.அந்த ஒவ்வாமையைக் கரைத்து இல்லாமலாக்கி,
அவரை மீண்டும் தன்னுடைய தியாகப்பாதையில் இணைத்துக்கொள்வதற்காக காந்தியடிகளும் மனம்
தளராமல் முயற்சி செய்தபடியே இருந்தார்.ஆயினும் அந்த மனப்போராட்டத்தில் அவர் தொடர்ந்து
தோல்விகளையே சந்திக்க நேர்ந்தது.இருப்பினும் மகனை மீட்டெடுக்கும் முயற்சியை காந்தியடிகள்
கடைசிக்கணம் வரைக்கும் கைவிடவில்லை.ஒருபுறம் சுதந்திரப்போராட்டமும் நல்லிணக்கவழியில்
மக்களைத் திருப்பிவிட முயற்சி செய்யும் நம்பிக்கைப்போராட்டமும். இன்னொருபுறம் தன் மகனை தன் தியாகப்பாதைக்கு அழைத்து வரும் அகப்போராட்டம்.
இரு போராட்டங்களிலும் காந்தியடிகள் இறுதிக்கணம் வரைக்கும் களத்தில் நின்றிருந்தார்.அவருடைய
மகத்தான வாழ்க்கையில் இப்படி இரு பக்கங்கள்.
ஏறத்தாழ நாற்பதாண்டுகளாக நீடித்த இந்தத் தந்தை – மகன் முரண் உறவைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக கலைச்செல்வியின்
புதிய நாவல் அமைந்திருக்கிறது. ஒருபுறம் அடுக்கடுக்கான சுதந்திரப்போராட்டச் செய்திகள்
சார்ந்த சித்தரிப்புகள். இன்னொருபுறம் மகனை மீட்டெடுக்க விழையும் தந்தையின் மனப்போராட்டத்தையும்
தோல்விகளால் துவள நேரும்போதெல்லாம் தந்தையிடம் மீண்டும் மீண்டும் ஒவ்வாமை கொள்ளும்
மகனுடைய மனப்போராட்டத்தையும் சார்ந்த சித்தரிப்புகள். இருபுறச் சித்தரிப்புகளையும்
செறிவாகத் தொகுத்து நாவலாக்கியிருக்கிறார் கலைச்செல்வி. கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற
நிகழ்ச்சிகளையெல்லாம் நிகழ்காலச் செய்திகளைப்போல ஆர்வமுடன் படிக்கத்தக்க வகையில் படைப்பூக்கம் மிகுந்த ஒரு மொழியில் முன்வைத்திருக்கிறார்.
அவருடைய உழைப்பும் கலையும் போற்றுதலுக்குரியவை.
இந்த நாவலை வாசித்த சமயத்தில் தற்செயலாக நான் நினைத்துக்கொண்ட சில செய்திகள்
உண்டு.ஒருவகையில் அனைத்தும் தந்தை மகன் உறவுச்சிக்கல் சார்ந்தவை.காந்தியடிகள் – ஹரிலால்
இடையிலான சிக்கல்களைப் புரிந்துகொள்ள அவை எனக்கு உதவின.
பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஆர்தர் மில்லர் எழுதிய ‘ஒரு விற்பனைப்பிரதிநிதியின்
மரணம்’ என்னும் ஆங்கில நாடகத்தைப் பார்த்தேன்.
மில்லர் நாற்பதுகளில் எழுதிய நாடகம்.அந்த நாடகத்துக்காக அவருக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது.தந்தைக்கும்
மகனுக்கும் இடையிலான உறவுச்சிக்கல்தான் அந்த நாடகத்தின் களம்.இரு தரப்புகளுக்கும் உள்ள
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் ஒவ்வொரு காட்சியிலும் நிறைந்திருந்தன.
வில்லி லோமன் என்பவர் ஒரு விற்பனைப்பிரதிநிதி.வாழ்க்கையை எப்போதும் வெற்றி நிறைந்ததாக
அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்.வணிகத்தில் மேற்கொள்ள
நேரும் தந்திரங்களையும் சமரசங்களையும் கூட, வெற்றிக்கான வழிகளாகவே அவர் மனம் கருதுகிறது.தன்னைப்போலவே
தன் பிள்ளைகளும் வெற்றி ஈட்டுபவர்களாக விளங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.வெற்றி
பெறும் விருப்பத்தோடு அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி தமக்கு விருப்பமான துறையில் முயற்சி
செய்கிறார்கள்.ஆனால் வீட்டுக்குத் திரும்பும் ஒவ்வொருமுறையும் அவர்கள் தோல்விச்சுமையோடு
திரும்பி வருகிறார்கள்.
மூத்தமகன் பள்ளியில் படிக்கும் காலத்தில் கால்பந்து விளையாட்டத்தில் ஆர்வம்
கொண்டவனாக இருந்தான்.எதிர்காலத்தில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரனாக வரக்கூடும் என்று
அனைவரும் கருதியிருந்தனர்.கெடுவாய்ப்பாக, அவனால் பள்ளியிறுதித்தேர்வில் வெற்றி பெற
முடியவில்லை.அதனால் பல்கலைக்கழகத்தில் நுழையமுடியவில்லை.வெற்றி வாய்ப்புள்ள வேறு துறைகளில்
முயற்சி செய்யுமாறு பிறர் கூறும் ஆலோசனைகளை அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.அதற்கு மாறாக,
சொந்த முதலீட்டில் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறான்.அந்தப் பணத்தை தன் தந்தை கொடுத்துதவ
வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.ஆனால் பணமீட்டும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியடையும்
தந்தையால் அந்த உதவியைச் செய்யமுடியவில்லை.அவர் கடன் கேட்கச் சென்ற இடத்தில் கடன் கிடைக்கவில்லை.அதற்கிடையில்
அவருடைய நிறுவனம் வயதை ஒரு காரணமாகச் சொல்லி, அதுவரை அவர் செய்துவந்த வேலையிலிருந்து
நீக்கிவிடுகிறது.இருவருக்குமிடையில் ஒரு கசப்பு உருவாக இவையனைத்தும் காரணங்களாகின்றன.
வில்லி லோமனின் குடும்பம் அமைதியிழந்து தவிக்கிறது.ஒவ்வொருவரும் அடுத்தவர் மீது
குற்றம் சுமத்தி பழித்துரைக்கிறார்கள்.பேசிப்பேசி கசப்புகளைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.ஒரு
நாள் விவாதம் முற்றி தம் தோல்விக்கு அடுத்தவரே
காரணம் என குற்றம் சுமத்தி வசைமழை பொழிகிறார்கள்.
மனம் கலங்கிய தந்தை வருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.வாகனத்தை எடுத்துக்கொண்டு
சாலையில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக ஓர் எண்ணம் அவருடைய நெஞ்சில் எழுகிறது. விபத்தில்
தாம் இறந்துபோனால், தன் பெயரிலுள்ள இன்சூரன்ஸ் தொகை தன் மகனுக்குக் கிடைக்கும் என்றும்
அந்தத் தொகையை வைத்துக்கொண்டு தன் மகன் ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றி பெறலாம் என்றும்
நினைக்கிறார். அடுத்த கணம் அவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வெற்றி பெற்றுத்தான் தன்னை நிறுவிக்கொள்ளவேண்டுமா
என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் ஒவ்வொரு சந்திப்பையும் விற்பனைச்சாத்தியம் மூலமாக
வெற்றிகரமானதாக மாற்றி பிழைப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு விற்பனைபிரதிநிதி வாழ்க்கையையும் வெற்றி ஈட்டக்கூடிய
ஒன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் பிழை இல்லை. அவன் வாழ்ந்து அறிந்த
பாதை அது.அந்தப் பாதையில் தன்னைப்போலவே தன் மகனும் நடந்து வெற்றியீட்டுவான் என எதிர்பார்க்கிறான்.
அந்த .எதிர்பார்ப்பையும் பிழையெனச் சொல்லமுடியாது.அது நிறைவேறாத போது அவன் ஏமாற்றத்தில்
அவன் மனம் குமையத் தொடங்குகிறது.மகனுக்கும் வெற்றி மீது ஆசை இருக்கிறது. ஆனால் அவனுக்கு
அது எட்டாக்கனியாக இருக்கிறது. அவன் திட்டமிட்டிருக்கும் வணிகத்தைத் தொடங்க அவனுக்கு
பெரிய முதலீடு தேவைப்படுகிறது.அதைத் திரட்டியெடுக்க இயலாதபோது அவனும் மனம் குமையத்
தொடங்குகிறான்.இருவரும் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்கள்.இது துயரம் தரும் உண்மை.ஒவ்வொருவரும்
விரும்பும் வாழ்க்கை ஒன்றாகவும் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஒன்றாகவும் உள்ளது.இந்த
இடைவெளியைக் கடந்து செல்லும் வழியறியாமல் இருவருமே தவிக்கிறார்கள்.
இந்த நாடகத்தின் தொடர்ச்சியாக துர்க்கனேவ் என்னும் ரஷ்ய எழுத்தாளர் எழுதிய
‘தந்தையும் தனயர்களும்’ நாவலையும் நினைத்துக்கொண்டேன்.தந்தை – மகன் உறவில் வெளிப்படும்
எதிர்நிலை என்பது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்னும் புள்ளிக்கு அந்த நாவல் கொடுக்கும்
அழுத்தம் மிகமுக்கியமானது.தந்தைக்கும் எழுதிய கடிதம் என்னும் காஃப்காவின் நெடுங்கதையையும்
இந்த வரிசையில் வைக்கலாம் என்று தோன்றுகிறது.அச்சிறுகதையில் தன் தந்தை மீது அவர் சுமத்தும்
குற்றச்சாட்டுகளுக்கு அளவே இல்லை.மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய அப்பாவின் தண்டனைகள்
என்னும் நாவலும் அதே அளவுக்கு அழுத்தமான சித்தரிப்புகளைக் கொண்டவை.
தந்தை – மகன் உறவு சார்ந்த முரண்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மோதல்கள்
சார்ந்த சிந்தனைகள் நீண்ட காலமாக நெஞ்சில் அலமோதியபடி இருந்தன.நான் உயர்நிலைப்பள்ளியில்
படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கணக்கு ஆசிரியர் நடத்திய பாடமொன்றின் வரிகள்
தற்செயலாக ஒருநாள் என் மனத்தில் நிழலாடின. இரண்டு
நேர்க்கோடுகள் சந்தித்துக்கொள்ளும்போது உருவாகும் கோணத்தை அளப்பது தொடர்பான
பாடம் அது. கரும்பலகையில் வெவ்வேறு இடைவெளியில் கிடைமட்டமாவும் செங்குத்தாகவும் சாய்வாகவும்
என பல நிலைகளில் ஏராளமான கோடுகளை வரைந்து, அவை சந்தித்துக்கொள்ளும் புள்ளியையும் சுட்டிக்
காட்டினார் எங்கள் ஆசிரியர். ஆனால் ஒன்றுக்கொன்று இணையான நேர்க்கோடுகள் சற்றே இடைவெளி
விட்டு பயணம் செய்யுமே தவிர, ஒருபோதும் அவை சந்தித்துக்கொள்வதே இல்லை. அதனால் அவற்றுக்கிடையே
எந்தக் கோணமும் உருவாவதில்லை என்றார் அவர்.அன்றைய பாடத்தின் அடிப்படைச் சூத்திரம் அது.ரயில்
தண்டவாளங்கள் உருவாக அடிப்படையாக அமைந்த முக்கியமான சூத்திரம்.
ஒருகணம் நான் அந்த இணைகோடுகளை தந்தை மகன் உறவுநிலையைப் புரிந்துகொள்ள ஒரு வழியாக
எடுத்துக்கொள்ளலாமா என்று யோசித்துப் பார்த்தேன்.அந்த ஒப்பீடே ஒருகணம் திகைப்பூட்டுவதாக
இருந்தது. முரண்பட்ட உறவுநிலையை எண்ணி கலக்கமடைகிறவர்களிடம் ஒரு தற்காலிக சமாதானமாக
அந்த ஒப்பீட்டை முன்வைக்கலாமே தவிர, நிரந்தரமான ஒப்பீடாக ஒருபோதும் முன்வைக்க முடியாது
என்று தோன்றியது. இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளைக்கு மறுநாள்
என என்றேனும் ஒரு நாள் இணைந்திருப்பதுதான் இரு தரப்பினருக்கும் உகந்த வழியாக இருக்குமே
தவிர, இணையாமல் விலகிச் செல்வதில் பொருளில்லை என்று என் மரபுமனம் கருதியது.
நெருங்காமலேயே நீண்டு செல்லும் உறவு என்னும் கற்பனையே நிலைகுலைய வைப்பதாக இருந்தது.நான்
அதுவரை பார்த்த பல குடும்பங்களில் நிலவும் தந்தை – மகன் உறவுநிலையின் தன்மையைஒருகணம்
மனத்துக்குள் அசைபோட்டுப் பார்த்தேன்.பல இடங்களில் அந்த உறவுநிலை சீராகவே இருக்கிறது.சில
இடங்களில் சற்றே ஏறுமாறாக இருக்கிறது.வெகுசில இடங்களில் மட்டுமே முற்றிலும் சீர்குலைந்திருக்கிறது.இறுதியில்,
ஒரு குடும்பத்தில் தந்தை – மகன் உறவு நெருங்கியிருப்பதும் விலகியிருப்பதும் சந்தர்ப்பம்
சார்ந்த நிலைபாடுதானே தவிர, தீர்மானமான முடிவல்ல என்று நானாகவே ஒரு முடிவுக்கு வந்தேன்.
அந்த எண்ணம் எனக்குள் ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.
தந்தை – மகன் உறவுச்சிக்கல் எந்தெந்த விதங்களிலெல்லாம் படைப்புலகில் முன்வைக்கப்பட்டிருக்கிறது
என்பதை யோசிக்கும்போது இவையெல்லாம் நினைவுக்கு வந்தன. தமிழிலும் சரி, பிற மொழிகளிலும்
சரி, இதுவரை எழுதப்பட்ட தந்தை மகன் உறவுச்சிக்கல் சார்ந்த படைப்புகள் பெரும்பாலும்
மகனின் பொறுப்பின்மை அல்லது தந்தையின் பொறுப்பின்மை சார்ந்ததாகவும் மகனின் கசப்பு அல்லது
தந்தையின் கசப்பு சார்ந்ததாகவும் இருப்பதை உணரலாம். தந்தை மகன் உறவுச்சிக்கலை ஆய்வுசெய்யும்
நாவல் என்றபோதும் கலைச்செல்வியின் தேய்புரி பழங்கயிறு நாவலை அப்படிப்பட்ட வகைப்பாட்டில்
அடக்கிவிடமுடியாது.இது முற்றிலும் வேறு வகையானது.அதை அழுத்தம் திருத்தமாகபுரிந்துகொள்ள
வேண்டும் என்பதற்காகவே இம்முன்னுரையை இந்த அளவுக்கு விரிவாக எழுதவேண்டியதாயிற்று.
இந்த நாவலில் தந்தை, மகன் என இருதரப்புகளிலும் இருக்கும் உணர்வை முழுக்கமுழுக்க
கசப்பு என்றோ, வெறுப்பு என்றோ வகுத்துவிட முடியாது.ஒருவகையான வருத்தம் அல்லது சங்கடம்
என்று வேண்டுமானால் சொல்லலாம்.காந்தியடிகளின் குரலில் எல்லாத் தருணங்களிலும் அந்த வருத்தமே
வெளிப்படுகிறது.அன்பு, பகை, இன்பம், துன்பம், கோபம், வெறுப்பு எல்லாவற்றிலிருந்தும்
முற்றிலும் விடுபட்டு சத்தியத்தைத் தேடும் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் அவர்.எல்லாத்
தருணங்களிலும் மகனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் என தந்தையாகவே அவர் வெளிப்படுகிறார்.மகனை
மீண்டும் மீண்டும் தியாகத்தின் பாதைக்குத் திரும்பிவிடும்படி அழைக்கிறார்.ஹரிலால்தான்
அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறார்.செவிசாய்க்க மறுக்கும் ஒருவர் அவரைப்பற்றிய
எல்லாச் செய்திகளையும் புறக்கணித்துவிட்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு செல்பவராக
இருப்பதுதானே இயற்கை.ஆனால் ஹரிலால் அப்படியும் இல்லை.ஒவ்வொரு கணமும் தந்தை என்ன செய்கிறார்
என்பதைக் கவனித்தபடியே இருக்கிறார்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாட்களில் அவரைப்பற்றி என்ன
செய்திகள் வ் வெளியாகியுள்ளன என்று கவனிப்பவராகவும் இருக்கிறார்.உள்ளூர அவரால் தன்
தந்தையை உதறிவிட்டு எழ இயலவில்லை.அதே சமயத்தில் தந்தை விரும்பும் பாதையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளவும்
அவருடைய உள்ளம் இடம்தரவில்லை.கடைசிவரை தந்தைக்கு எதிராக உருப்படியாகச் சொல்ல ஒரு காரணம்
கூட அவரிடம் இல்லை.அதனால்தான் எப்போதோ இளமையில் வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பாத ஒரு
தருணத்தை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறார்.ஒரு அப்பாவாக தனக்கு
செய்யப்படவேண்டிய ஒன்றை செய்யவில்லை என்பதை காலமெல்லாம் சுட்டிக்காட்டுகிற இவர், ஒரு
அப்பாவாக தன் குழந்தைகளுக்கு என்ன செய்தார் என்ற கேள்வி எழும்போது ஏற்றுக்கொள்ளும்
விதத்தில் ஒரு பதிலைச் சொல்ல அவரிடம் சொற்களில்லை.
மதுவின் பாதையில் மீண்டுவர முடியாத தொலைவுக்குச் சென்றுவிடுகிறார் ஹரிலால்.சிறுசிறு
சித்தரிப்புகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அதை பல இடங்களில் உணர்த்துகிறார்
கலைச்செல்வி.ஒரு தருணத்தில் தன் மகளுக்கு குழந்தை பிறந்த செய்தியை யார் மூலமாகவோ அறிந்துகொள்கிறார்
ஹரிலால்.அவருக்கு உடனே அவளைச் சென்று நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை மூள்கிறது.அவள்
இருக்கும் தொலைவான ஊருக்கு பயணம் செய்ய அவரிடம் போதிய பணமில்லை.தான் இருக்கும் கோலத்தில்
ஒரு பயணம் செய்ய அவருக்கு மனமும் இல்லை.அதனால் ஒரு கடிதம் எழுதி அனுப்பலாம் என்று நினைத்து
தன் பாசத்தையெல்லாம் கொட்டி ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார்.எழுதிமுடித்து ஒட்டிய பிறகு
அவரால் முகவரியை எழுத முடியவில்லை.எல்லாமே அவருக்கு மறந்துபோயிருக்கிறது.ஒரு வரிகூட
நினைவுக்கு வரவில்லை.எல்லாமே மங்கிவிட்டது.யோசித்து யோசித்து கடிதம் அனுப்பும் முயற்சியை
கைவிட்டுவிடுகிறார்.பெற்ற மகளின் முகவரியை மறந்துபோகும் அளவுக்கு மது அவரை மயக்கிவிட்டது.அந்தக்
கட்டத்தைப் படிக்கும்போது உடலும் மனமும் நடுங்கிவிட்டன. என்ன மாதிரியான வாழ்க்கையை
வாழ வேண்டிய ஒருவர் என்ன மாதிரியான வாழ்க்கைக்கு தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டாரே என்று
கழிவிரக்கம் உருவானதைத் தவிர்க்கமுடியவில்லை. ஓர் உளவியல் மருத்துவரைப்போல உள்ளத்தின்
ஆழத்துக்குச் சென்று உறவுச்சிக்கலின் உள்ளடுக்குகளை
ஆய்வு செய்திருக்கிறார் கலைச்செல்வி.
ஒரு விவாதமாக நீளும் இந்த நாவலுக்கு தேய்புரி பழங்கயிறு என அழகானதொரு தலைப்பைச்
சூட்டியுள்ளார் கலைச்செல்வி.நற்றிணைப்பாடலொன்றில் இடம்பெற்றிருக்கும் ஒரு படிமம் அது.
பிரிந்துவந்த காதலியை நினைப்பதா, அவளை மறந்து பொருளீட்டும் பாதையில் கவனத்தைச் செலுத்துவதா என்று முடிவெடுக்கமுடியாமல் குழம்பி ஊசலாடும் ஒரு
காதலனின் மனநிலையைத் தெரிவிப்பதற்காக கவிஞர் அ்ந்தப் படிமத்தைப் பயன்படுத்துகிறார்.
காந்தியடிகள் – ஹரிலால் உறவு சார்ந்து இப்படிமத்தை வாசகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வடிவமைத்துப்
பார்ப்பதற்கான சாத்தியமுண்டு. அந்த சுதந்திரத்தில் நான் குறுக்க விழையவில்லை.வரலாற்றுத்தருணங்களை
நாவலுக்குரிய தருணங்களாக உருமாற்றித் தொகுத்து, மிகச்சிறந்த ஒரு படைப்பை உருவாக்கியிருக்கும்
கலைச்செல்விக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment