வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே அரசாணை எண் கிடைக்குமா? மேலதிகாரியின் அறைக்குள் சென்ற பெண் அலுவலர் எப்போது வெளியே வந்தார்? அதிரஅதிர கவலைப்படும் அலுவலக பணிக்குள் எங்குமே ஒட்டாத அவள் நிலை.
மனம் நழுவி நழுவி காலை நேரத்திற்கே சென்றது.
இன்றும் வழக்கம்போல காலையில் எழுந்து, கண்களை துடைத்தவாறு சமையலறைக்குள்; நுழைந்தாள் அவள். அவளின் காலடித்தடம் கேட்டு, சடாரென குரலெழுப்பி ஏதோ தாவிச் சென்றதை விசித்திரமாக பார்த்தாள். அந்த வெள்ளை நிற பஞ்சுபொதி எது என தீர்மானிக்க அதிகம் மெனக்கெட தேவையில்லை. தினம் தினம் வலம் வரும் வீட்டிற்குள் பூனை எப்படி?
அந்த பெரிய சமையலறையின் ஒரு ஓரமாக இருந்த சந்து போன்ற இடத்திலிருந்து தானே அந்த பஞ்சு பொதி பாய்ந்தோடியது? மெல்ல எட்டிப்பார்த்தாள். எங்கிருந்து வந்தது இந்த பஞ்சு தலையணை? தலையணைக்கு எப்படி கால்கள் முளைத்தது? எண்ணினாள்… பன்னிரண்டு கால்கள். தொட்டு பார்த்தாள். சிலிர்த்தாள். அவைகளும் சிலிர்த்துக் கொண்டன.
மனிதனுக்குள் ஒடும் சுயநல எண்ணங்களோ, எனது என்ற உரிமை போராட்டங்களோ இல்லாத மிருக இனம். உணவும், இனப்பெருக்கமுமே அதிகபட்ச தேடல்களாகிப் போன மிருக இனத்தின் ஒரு பிரதிநிதி தனது தேடலின் திருப்தியில் இங்கே தனது இனத்தை பெருக்கியிருந்தது தெரிய வந்தது.
காதல் என்ற பெயரில் தன் வாழ்வை குப்பையாக்கி சென்ற கணவன், வயது தந்த சுதந்திரத்தில் வாழ்வினை மூழ்கடித்த மகளை மன்னிக்க தயாரில்லாத பெற்றோர்கள், தன்னை உறவு என்று சொல்ல தயங்கும் வசதியான ஒரே உடன்பிறப்பு என்று இவளின் வாழ்வில் சூன்யங்களை நிரப்பியவர்கள் மத்தியில் எந்த தேடலின் விடையாக தன் வீட்டில் இவை? யாருக்குமே தேவைப்படாத இவளின் முகவரிக்கு யாரை விசாரித்து வந்திருக்கும்? சட்டென்று மனம் இறுக பூனை வந்திருக்க கூடிய லேசாக திறந்திருந்த சன்னலை அனுமானித்து மூடினாள்.
வீட்டு வேலைகள் காலை கட்ட சிந்தி;க்க நேரமின்றி கிளம்பினாள். பயண நேரத்திலும்; எதிலும் லயிக்காமல் அலுவலகம் வந்து யோசிக்கிறாள் அவள். எல்லாவித எண்ணச்சுழற்சியுடன் வட்டவடிவ மனம்; கொண்டவர்கள். கிடைத்ததை நான்கு விளிம்பிற்குள் ததும்பாது அடக்கும் சதுர மனம் கொண்டவர்கள். சுயநலம் நீட்டி, பொதுநலம் குறைக்கும் செவ்வக மனத்தினர். எல்லா விஷயத்தையும் பிரச்சனையாக அணுகும் அறுகோணத்தினர். பிரச்சனையே வாழ்வாக்கி, ஓரங்கப்படுத்தி, ஒளிந்துக் கொண்டு அதிலேயே சுகப்படும் முக்கோணத்தினர். இதில் எவற்றில் அடங்கும் இந்த மிருக இனம்?
எண்ணங்களின் ஆக்கிரமிப்பு அவளுக்கு அத்துமீறிய அசதியை தர மதிய உணவை திறந்தாள். உணவினை தவிர்த்து உறைவிடம் மட்டும் தேடி வந்ததா? அல்லது உணவுக்கும் அங்கேயே வழி இருக்கிறதா? சன்னலை சாத்தியது நினைவுக்கு வர அதிர்ந்து போனாள். தாய்ப் பூனை எப்படி குட்டிகளிடம் போகும்? குட்டிகளுக்கு உணவு? உண்ண மனமின்றி மூடினாள்.
மனம் குற்றவுணர்ச்சியில் தவிக்க, அரைநாள் விடுப்பு எழுதி வைத்து விட்டு வீட்டுக்கு வந்தாள். நேரே சமையலறை சென்றவளின் காதுகளில் குட்டிகளின் ஒலி சன்னமாக கேட்டது. வேகமாக சன்னலை திறந்தாள். சன்னல் திட்டில் தாய் பூனை உட்கார்ந்திருந்தது தெரிந்தது. காலையில் சத்தம் கேட்டதும் விருட்டென்று ஓடிய பூனை, தான் இத்தனை அருகிலிருந்தும் போக மறந்து இருப்பதேன்? தன் வயிற்றினை தடவிக் கொண்டாள். உண்டான கருவை வற்புறுத்தி கலைத்த கணவனின் நினைவு வந்து போனது. அவன் வாழ்க்கையில் தன்னுடனான தடயங்களை அவசர அவசரமான அழித்தது வேறு வாழ்க்கையை தேடி தான் என்று அப்போதே ஏன் உணராமல் போனாள்?
குட்டிகளின் சத்தம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பூனையின் தவிப்பும் கூடிப் போனது தெரிந்தது. அவளுக்கும் அம்மாவின் நினைவு வந்தது. தன் வாழ்க்கையை தானே தேடியதைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத பொறுப்பான மகளை எப்படி வேண்டாத தூசு போல உதறி விட முடிந்தது? பெற்ற மகளை விட, சார்ந்த சாதியின் ஆக்கிரமிப்பு அவ்வளவு வலிமையானதா?
பூனைகளுக்குள் சாதி வித்தியாசம் உண்டா? குனிந்து பார்த்தாள். வெள்ளையாக, பழுப்பாக, சாம்பல் நிறமென சின்னஞ்சிறிய உருவங்களில் பஞ்சுப்பொதிகள் அசைந்தன. பளிச்சென பாரதியின் நினைவு வந்துப் போனது.
எவ்வளவு நேர பசியோ தெரியிவில்லை. குட்டிகளின் பசி தாயின் கண்களில் ஆக்ரோஷமாக தெரிந்தது. சட்டென்று புரிய, அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று, மறைந்திருந்து பார்க்கும்படியாக நின்று கொண்டாள்.
உடனே உள்ளே தாவி வந்தது பூனை. அதன் பார்வை அங்குமிங்கும் அலைப்பாய்ந்து, பின் அவளது கண்களில் நிலைத்தது. நடுங்கும் குட்டிகளின் உடல்களை அது நாக்கால் நக்கி வேகவேகமாக தாய்ச்சூடு பதித்து, பசியை போக்கியது. நிமிடங்கள் ஓட ஓட ஒரு நம்பிக்கை அதன் மனதில் பதிய அவளை கோபப்பார்வை தவிர்த்து புதிராக பார்த்தது.
கணவனுடன் வாழ்ந்த எட்டு மாத வாழ்க்கையின் கசப்பு மனதை ரணமாக்கியிருக்க, தவிப்புடன் தாய் வீட்டுக்கு சென்றது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவளைக் கண்டதும் தாயின் கண்களில் தெரிந்த கோபம், அவமானம் இவற்றினூடே அவள் பாசம் என்ற உணர்வை தேடியலைந்தது இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது. கூடவே சிரிப்பும் வந்தது. கண்டதும் காதல், உடன் திருமணம், அதை விட விரைவாக திருமண முறிவு. எவ்வளவுக்கெவ்வளவு தன்னை அவளிடமிருந்து, அவன் பிடுங்கி கொண்டு சென்று விட்டானோ, அவ்வளவுக்களவு அவனுடன்; தன்னை இணைத்து பார்த்த தாயின் பார்வையை நினைத்து சிரிப்பு வந்தது.
வீட்டின் பின்புறம் வந்து பார்த்தாள். அவ்வப்போது சன்னலை வழியே வெளியே எறிந்த சாப்பாட்டு மிச்சங்கள் ப+னையின் வாழ்வாகி போனதென்ற மர்மம் புரிந்தது. இதில் ஏதேனும் பெண் குட்டி இருக்குமோ? அவைகளின் இனத்திலும்,; பெண்ணினத்திற்கு மட்டும் வரம்பிற்குட்பட்ட வாழ்க்கையும் எழுதாத சட்டம் கொண்ட சமுதாய அமைப்பும் இருக்குமோ..?
மதியம் சாப்பிடாதது வயிற்றில் தெரிந்தது. உள்ளே வந்து ஹாட்பேக்கை திறந்து பார்த்தாள். நான்கு இட்லிகள் இருந்தன. ஏதோ சத்தம் கேட்க மெல்ல தலையை திருப்பி அடுக்களையை பார்த்தாள். தாய்ப்பூனை தனது வாயில் குட்டியை கவ்வியவாறு சன்னல் வழியே தாவி ஓடியது தெரிந்தது. சட்டென உள்ளே நுழைந்தவளை, வாயில் கவ்வியிருந்த குட்டியை எங்கோ விட்டு விட்டு திரும்பிய தாய்ப்பூனை நேருக்கு நேராக பார்த்தது. மீண்டும் சன்னல் வழியே வெளியே தாவிச் சென்றது.
குட்டிகள் இருந்த இடத்தை பார்த்தாள். மீதம் ஒரு குட்டி இருந்தது. என்ன செய்வது? புரியவில்லை அவளுக்கு. இவளின் திடீர் திருமண முடிவை பார்த்து அம்மாவும் இப்படி தான் திகைத்திருப்பாளோ? இளைய மகளின் வாழ்க்கையை எண்ணி தடுமாறி நின்றிருப்பாளோ..?
வயது, சுயசம்பாத்தியம், சமயம், சந்தர்ப்பம் இவை காதல் என பெயரிட்டுக்கொண்டு, அவள் வாழ்வில் நுழைந்திருக்குமோ..? ஆராயாது இதை வாழ்வின் பிடிமான ஆதாரமாக தவறாக எண்ணியது இப்போது புரிந்தது. திறந்து கிடந்த சன்னலுக்குள் வாழ்வாதாரத்தை பார்த்து, வாரிசுகளை பெருக்க நினைத்த தாய்;ப்பூனை தான் எடுத்த முடிவிற்கு விதியை துணைக்கழைக்காது, குட்டிகளை கவ்வி சென்று விட்டதே?.
தாய்ப்பூனை குட்டிகளை எங்கே கொண்டு சென்றிருக்கும்? அடுக்களையை விட்டு வெளியேறி, மீண்டும் பின்பக்கம் வந்தாள். அங்கு காலி சிலிண்டர் வைக்க ஏதுவாக கட்டப்பட்;டு சிறிய கிரில் போட்டு பூட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து, மிக மெல்லிய குரல்கள் கேட்டது. அங்கே குட்டிகளை நக்கிக் கொடுத்தவாறு தாய்ப்பூனை இருந்தது தெரிந்தது. இவளின் சத்தம் கேட்டு கிரில் கம்பிகளுடே அவளைப்பார்த்த பூனை, மீண்டும் வேக வேகமாக நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது. நம்பிக்கையின்மை அதன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
உள்ளே வந்தாள். மீதமுள்ள இந்த ஒற்றை குட்டி..? மற்ற பூனைக்குட்டிகளுக்கு என்ன உணவிடுவது? பதட்டமாக இருந்தது அவளுக்கு. சன்னலில் பார்வையை அழுத்தி முடிந்தமட்டும், தாய்ப்பூனையிடம் செலுத்தினாள், தாய்ப்பூனை அவளை வெற்றுப்பார்வை பார்த்தது. இட்லிகளை எடுத்து, சன்னலை நன்றாக திறந்து அதன் வழியே வெளியே எறிந்தாள். இட்லி நேரே கிரில் அருகே தான் விழுந்திருக்கும். திருப்தியாக ஹாலில் வந்து அமர்ந்தாள்.
வயிறு பசித்தது. என்ன செய்வது? தோசையா? சப்பாத்தியா? சட்னியா? குருமாவா? யோசித்தாள். பாரதி வந்தான் மனதில் – வெள்ளை நிறத்திலொரு பூனை – கருஞ்சாந்து நிறத்திலொரு பூனை . மனம் நிலைக்கவில்லை.
எழுந்து பின்புறம் சென்றாள். கிரிலுக்குள் குட்டிகளை காணவில்லை. தாய்ப்பனையும் தான். கிரில் அருகே எறிந்திருந்த இட்லிகளில் எறும்பு மொய்த்திருந்தது.
வீட்டைப் பூட்டி விட்டு கடைக்கு சென்று வந்தவளின் கையில் இங்க் ஃபில்லர் இருந்தது. ஆறிய பாலை எஞ்சியிருந்த ஒற்றைக்குட்டியின் வாயில் இங்க் ஃபில்லரால் துளித்துளியாக விட்டாள். மிக மெல்லிய சத்தம் எழுப்பியவாறு வயிறு நிறைந்த திருப்தியில் உறங்கி விட்ட அதனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். அவளுக்கு இப்போது பசிக்கவில்லை.
- ஆகஸ்ட் 2012
No comments:
Post a Comment