Search This Blog

Saturday, 4 February 2023

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

 by ஜா.ராஜகோபாலன்  

வல்லினம் July 1, 2022  இதழில் வெளியானது.




காந்திகடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு மூலையிலும் எவராவது இன்றும் அந்தப் பெயரால் வழங்கப்படும் லட்சியத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். காந்தியை ஒரு ஆளுமையாகக் கொண்டு எழுதப்பட்ட பல புத்தகங்களில் அவரது ஆளுமையை வியக்கும் புத்தகங்கள் அளவுக்கே அவரது ஆளுமையை விமரிசிக்கும் புத்தகங்களும் உண்டு. அவரது ஆளுமையை ஆழமாக விமரிசிக்கும் எவரும் தவறாது எடுத்தாளும் பெயர் ஹரிலால். காந்தியின் மூத்த மகன். மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் அதிகாரபூர்வ வாரிசு. காந்தி குடும்பத்தின் வாரிசு நிரையில் முதல் மகன். ` காந்தியே தன்னால் தன் நிலையைப் புரிய வைக்க முடியாமல் தான் இவரிடம் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ளும் மனிதர்.

எழுத்தாளர் கலைச்செல்வி எழுதி தன்னறம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்ஹரிலால் /பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஎனும் நாவல் இந்த இடைவெளியை புனைவாக்கி நாவல் வடிவில் தந்திருக்கிறது. மானுட உணர்வுகளின் களமே புனைவின் விரிவு என்பது வாசிப்பில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிலும் சில மானுட உறவுகளின் துருவ நிலைகள் பேசித்தீராதவை. ஆண்- பெண், மனிதன்இயற்கை, தாய்-மகன் என நீளும் வரிசையில் தந்தை -மகன் எனும் உறவு எழுதித் தீராப் புதிர்தான் இன்றுவரை. சமகால வரலாற்றின் முக்கிய நாயகர்களில் ஒருவரான காந்திஅவரது மகன் ஹரிலால் இருவரது உறவையும், முரணையும் மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்தப் படைப்பிற்கு மெய்வாழ்க்கைப் புனைவு எனப் பெயரிட்டுக் கொள்வோம்.

மெய்வாழ்க்கைப் புனைவு என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? ஆவணப்படுத்தப்பட்ட, நன்கு அறியப்பட்ட ஆளுமையின் வாழ்க்கை சமூகத்தில் அறியப்பட்ட ஒன்று. அப்படிப் பொதுவில் அறியப்பட்ட வாழ்க்கை பொதுத் தகவல்களால் நிரம்பியதாகவே இருக்கும். அதிலிருந்து சற்று ஆழமாக இறங்கினால் அந்த வாழ்க்கையில் இருக்கும் முரண்கள் வெளிப்படும். இதை வெளிப்படுத்தும் எழுத்துகள் சராசரி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களோடு மட்டுமே புனையப்படும். பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் வாழ்க்கையைப் பற்றி இவ்வகையில் எழுதப்பட்டவற்றைப் படித்தால் அகதா கிறிஸ்டி மார்வெல் காமிக்ஸுக்கு எழுதிய கதைவரிசையைப் போலவே இருக்கும்.

மெய்வாழ்க்கைப் புனைவில் மூன்றாவதாக ஒரு எழுதுமுறை இருக்கிறது. மெய்வாழ்க்கை நாயகர்களின் அதிமானுட வரலாற்றைத் தாண்டி அவர்களது மெய்யான மானுட வாழ்வின் சாகசங்களில் இருக்கும் சவால்களைப் பேசுவது. அவர்களை உள்ளிருந்து உந்தும் லட்சிய வேட்கைக்கும், அதற்கு அறைகூவலாக எழுந்து வரும் நிகழ்வாழ்வின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே ஓயாமல் நிகழும் முரண்களை அவர்கள் எதிர்கொண்டதை, அதில் அவர்கள் பெற்ற தரிசனத்தை, அவருடன் முரண்பட்டவர்கள் அடைந்த தரிசனத்தை, முடிவில்லாத மானுட நாடகத்தின் வழமையான தருணங்களை லட்சிய வேட்கையால் நாயகர்கள் வென்று திரும்பும் அதிதருணங்களை, அதற்கு அவர்கள் அளித்த விலையை அல்லது பகரத்தை புனைவின் மொழியில் சொல்லுவது. பெரும்பாலும் இந்த இடங்கள் புனைவின் சுவாரசியத்தோடு கட்டுரைகளாக எழுதப்படுவது வழக்கம். வி ராமமூர்த்தி எழுதிய :காந்திஜியின் இறுதி 200 நாட்கள்”, சுசீலா நய்யார் எழுதியகஸ்தூர்பா”, சுனில் கிருஷ்ணன் எழுதியஅன்புள்ள புல்புல்ஆகிய புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன. கட்டுரை வடிவம் நமக்கு கச்சிதமான விதத்தில் நிகழ்வுகளை ஒரு ஆவணப்படத்தின் கூர்மையோடு துல்லியமாகத் தருபவை.

இங்கு ஒரு கேள்வி எழலாம். மெய்வாழ்க்கை துல்லியமாக, விரிவாகப் பதிவான பிறகு அதை ஒட்டிய புனைவின் தேவை என்ன? ஏனென்றால் புனைவு தான் நம்மை அந்த நாயகர்களின் வாழ்வை நொடி நேரமாவது வாழச் செய்யும் திறனுடையது. கட்டுரைகள் நம்மை துல்லியமான கோணங்களில் நிகழ்வைப் பார்க்கும் பார்வையாளனாக உணரச் செய்பவை. நிகழ்வின் முன்னும் பின்னுமாக ஊடுபாவாகப் பரந்தும் ஒன்றோடொன்று இணைந்தும் இருக்கும் உணர்வுச் சிக்கல்களை, அதன் பரிமாணங்களை, ஊடாட்டங்களை, இவற்றை மீறிச் செயல்படும் அதிமானுட உணர்வுகளை, அறத்தை பார்ப்பது மட்டும் போதாது, உணரவும் வேண்டும் எனும்போதுதான் புனைவின் சாத்தியங்களைக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எளிமையான உதாரணம் ஒன்றை தமிழுக்குச் சொல்வதென்றால் ராஜராஜ சோழனைக் குறித்து துல்லியமான ஆவணங்களோடு கூடிய முழுமையான வரலாற்றுத் தரவுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை கே நீலகண்ட சாஸ்திரி எழுதியிருக்கிறார். அவற்றை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் கல்கிபொன்னியின் செல்வன்எனும் நாவலை எழுதியிருக்கிறார். இரண்டிலும் வரும் ராஜராஜனில் எந்த ராஜராஜனை நாம் மிக அணுகிப் புரிந்து கொள்கிறோம்? பல்லவர்களைக் குறித்த கட்டுரையில் வரும் நரசிம்மவர்ம பல்லவனை விடசிவகாமியின் சபதத்தில்வரும் பல்லவர்தானே நமக்கு அணுக்கம். பொன்னியின் செல்வன் வழியே சென்றடைந்த ராஜராஜன் தான் இன்றும் பொதுத் தமிழின் மனதில் பதிந்திருக்கிறார். மெய்வாழ்க்கைப் புனைவின் சாத்தியங்கள் அபாரமானவை தான். ஒரு வாய்ப்பில் இப்படி யோசித்துப் பாருங்கள்- நமக்கு தகவல்களாக வந்தடைந்த பாரதியாரின் வாழ்க்கையை ஒரு முழு புனைவாக வாசிக்க முடிந்தால் அது எவ்வளவு உணர்வுகள் நிரம்பிய, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, மீப்பெரு வாழ்வாக நம்முன் விரியும்?

2


கலைச்செல்வி எழுதிய ஹரிலால் எனும் இந்த நாவலில் மெய்வாழ்க்கைப் புனைவின் சாத்தியங்களும், சவால்களும் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது கவனிக்கப்படவேண்டியது. மெய்யும், புனைவும் கலந்து வரும் ஒரு படைப்பில் அப்படைப்பின் மாறாத எல்லைகளை, முடிவுகளை மெய் வாழ்க்கையின் வரலாறு முன்பே திட்டவட்டமாக அறிவித்து விடுகிறது. எத்தனை முறை காந்தியின் வாழ்வை புனைவாக்கினாலும் அவர் மனைவி கஸ்தூர்பா என்பது மாற்ற முடியாத வரலாற்று மெய். அந்த இடத்தில் புனைவின் பங்கு என்ன? புனைவு அந்த முடிவினை மாற்ற முயற்சிப்பதில்லை; மாறாக அம்முடிவினை நோக்கி கதைமாந்தர்கள் செலுத்தப்படும் சூழல்களை, அவர்களது உணர்வுகளை, உரையாடல்களை, நிகழ்களங்களை தன் பங்களிப்பாக படைப்பிற்கு அளிக்கிறது.

ஹரிலால் நாவல் காந்தி இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்று தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராக தொழில் செய்து வரும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அங்கு அவர் தன் லட்சியங்களின் பரிசோதனைக் களமாக ஃபீனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை ஆகியவற்றை நிறுவி நடத்துவது, தென்னாப்பிரிக்க அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு அகிம்சை முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது ஆகியவற்றைக் கையாண்டு அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதும் அவர் இந்தியா திரும்ப முடிவெடுக்கும் இடத்தில் முடிகிறது. நாவலின் இரண்டாம் பாகம் வரும் என்ற அறிவிப்பு உள்ளது.

கதைத்தலைப்புக்கு உரிய நாயகனின் வரவு கிட்டத்தட்ட நாவலில் மூன்றில் ஒரு பங்கு கழித்தே வருகிறது. அதேநேரம் கடைசி 30 பக்கங்களில் ஹரிலாலுக்கு நிகழ்பவை வேகமாகச் சொல்லப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாகம் உண்டு என சொல்லப்பட்ட பின்பும் இவ்வளவு வேகமாக ஹரிலாலுக்கு நிகழ்பவை 1.5X வேகத்தில் போக வேண்டியதில்லை. நாவலின் துவக்கத்திலிருந்தே கஸ்தூர்பா வின் பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. ஹரிக்கும், காந்திக்கும் இடையே அவர் தவிப்பதைச் சொல்வதற்காக முயலும் நாவல் கஸ்தூர்பா வருத்தத்துடன் காந்தியை மெளனமாக ஏற்பதையும், பலகீனமாக ஹரியை சமாதானம் செய்ய முயற்சிப்பதையும் மட்டுமே மீள மீள விளக்குகிறது.

ஹரிக்கும், காந்திக்கும் இடையே இருக்கும் இந்த உரசல் காந்திக்கும் பிற மகன்களுக்கும் இடையே இல்லை. ஹரிகாந்தி முரண் துவங்கும் இடம் எது ? ஹரிலாலின் படிப்பு. அடிப்படை தேர்வை முடிக்க சிரமப்படும் ஹரிக்கு இங்கிலாந்து சென்று படிக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கு அப்பா உதவ வேண்டும். அவர் சலுகை, சிபாரிசு என எதற்கும் ஹரியை பரிசீலிப்பதில்லை. தன் சகோதரர் மகனுக்கு சிபாரிசு செய்யும் காந்தி தன் மகன் ஹரிக்கு செய்யவில்லை என்பதே முரண்பாடு விரிசலாக மாறும் இடம். அதற்கு முந்தைய தவறுகளான அடிப்படைத் தேர்வில் கவனமின்றி இருப்பது, பெற்றோர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் இருக்கையிலேயே ஹரி இந்தியாவில் திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றால் கூட விலக்கம் அடையாத அப்பா மகன் உறவு ஹரி மேல்படிப்பு விஷயத்தில் விலக்கம் அடைகிறது. இந்த முரண்பாடு உருவாகி வரும் இடங்கள் நாவலில் அருமையாக விளக்கப்படுகின்றன. கடிதங்கள், காந்திகஸ்தூர்பா, காந்திஆண்ட்ரூஸ், கஸ்தூர்பாமிலி ஆகியோரிடையே நிகழும் உரையாடல்கள், முக்கியமாக கஸ்தூர்பா- ஹரி இடையேயான உரையாடல் ஆகியவற்றின் மூலம் எழுத்தாளர் கச்சிதமாக உணர வைக்கிறார். குறிப்பாக கஸ்தூர்பா- காந்தி, கஸ்தூர்பா -ஹரி இடையிலான உரையாடல்கள் மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. தகப்பன் எனும் இடத்திலிருந்து பேசினாலும் காந்தி லட்சியத் தகப்பன் எனும் இடத்திலிருந்துதான் பேசுகிறார் என்பதையும் கஸ்தூர்பா ஒரு தாயின் மனநிலையில் பேச்சைத் துவக்கி விட்டு கணவனின் அறம் சார்ந்த நிலைப்பாட்டை மறுக்க முடியாமலும் இருப்பதை உரையாடல்கள் வழியே தெளிவாக்குகிறார் கலைச்செல்வி. இந்த நாவலின் முக்கியமான அம்சமாக இந்த உரையாடல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

புனைவின் கூறுகள் மெய்வாழ்க்கை நிகழ்வுகளின் உணர்வு நிலைகளை ஆழப்படுத்தவும், கூடுதலாகப் புரிய வைக்கவுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஹரிலால் நாவல் உணர்ந்திருக்கிறது. நாவலின் புனைவுப் பகுதிகளாக வருபவை அதிகமில்லை. மாறாக கலைச்செல்வி ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்தென்னாப்பிரிக்காவின் சூழல், காந்தியின் சமூக கூட்டுப் பண்ணைகள் அமைந்திருந்த இடங்களின் வர்ணனை, கட்டிட அமைப்புகள் ஆகியவற்றை வர்ணிப்பதன் வழியே புனைவின் சாத்தியக்கூறுகளை செயல்படுத்துகிறார்.

நாவலில் உரையாடல்களே பெரும்பங்கு வகிக்கின்றன. காந்தியை நோக்கி கேட்கப்பட வேண்டிய பல கேள்விகளை மிலி கதாபாத்திரம் செய்கிறது. காந்தியின் மீதான விமரிசனத்தை கேள்வியாக முன்வைப்பது மிலி தான். ஆண்ட்ரூஸ், நாராயணன் போன்ற கதைமாந்தர்கள் கூட அவரிடம் விமரிசனமாக எதையும் கேட்பதில்லை. நாராயணன் கிட்டத்தட்ட ஹரிலாலின் கெட்டியான வடிவமாகவே நாவலில் வருகிறான். காந்தி மேல் ஆழமான பிரியமும், கூடவே லட்சியத்தால் வடிகட்டப்படும் அவரது அன்பின் மேல் ஆத்திரமுமாக நாராயணன் அவருடனேயே வளர்கிறான். ஹரியின் இன்னொரு வார்ப்பாக வரும் நாராயணனின் அறிமுகத்தில் துவங்கும் நாவல் காந்தி அவனிடம் கனிந்த பழங்களைப் பேசும் இடத்தில் முடிகிறது. நாராயணனின் மாற்றத்தை நாம் அடுத்த பாகத்தில் பார்க்க வேண்டியிருக்கும் என்பது அனுமானம்.

உரையாடல்கள் சிறப்பாக இருந்தாலும் அதிக அளவில் நாவலை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது போல இருக்கிறது. கஸ்தூர்பா உள்ளத்தை மிலி உடனான அவர் உரையாடல் விளக்கினாலும் ஆசிரியக் கூற்றாக அடிக்கடி சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கஸ்தூர்பா நிரந்தர சோகத்துடன்தான் காந்தியுடன் வாழ்ந்தார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஹரிலால் ஒரு நிலையற்ற மனப்பாங்கு உடையவர் என்பது அவரது செயல்பாடுகள் வழியே நாவலில் விளக்கப்படவில்லை. மாறாக அவர் குறித்து பிறர் நினைக்கும் தற்பேச்சு மூலமோ , இருவரிடையேயான உரையாடலிலோ தான் சொல்லப்படுகிறது. இது இப்படி சொல்லப்படக்கூடாதா என்றால் சொல்லப்படலாம். ஆனால் நாவல் ஹரியை மையமாக வைத்து நகர்கிறது. ஆகவே இப்படி மாறி மாறித் தாவும் நிலையை ஹரி வழியாகவே விளக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அப்படி ஒரு இடம் தெளிவாக வருகிறதுஹரிலால் தென்னாப்பிரிக்காவில் வந்து காந்தி விருப்பப்படி தென்னாப்பிரிக்க அரசின் அனுமதிச் சீட்டுக்கு எதிராக சத்தியாகிரக முறையில் போராடி சிறை செல்கிறார். அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை. தன் பாரிஸ்டர் படிப்பு குறித்தும் தந்தையிடம் பேசுகிறார், அவர் சொல்வதைப் புரிந்து கொண்டுவிட்டதாகவும் நினைக்கிறார். ஆனால் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காந்தி தன்னை முன்னிறுத்தவில்லை என்று ஒரு கசப்பு அவருக்கு தோன்றியதா அல்லது தான் வாழ நினைக்கும் வாழ்க்கை இதுவல்ல என ஹரி உணர்ந்தாரா என்பது தெரியவில்லை.

தான் போராட்டம் செய்து சிறைக்குச் சென்றதைப் பற்றி காந்தி பெருமையுடன் பேசுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் ஹரி, கர்ப்பமாக இருக்கும், குழந்தை இருக்கும் மனைவியை நினைத்ததும் வருத்தம் அடைவதும் உடனே இந்தியா திரும்ப நினைப்பதும் நாவலில் நம்பகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

இதே அளவிலான நுட்பத்துடன் ஹரிக்கும் காந்திக்கும் இடையே தோன்றிய முரணின் துவக்கமோ, பண விஷயத்தில் காந்தி ஹரியிடம் காட்டிய கறார்தன்மை குறித்தோ, ஹரி குடிப்பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட விதமோ சொல்லப்படவில்லை. ஹரி தனக்குத்தானே எண்ணிக்கொள்ளும்போது மட்டுமே குடிப்பழக்கம் வெறும் சொற்களாகவே வந்து போகிறது. வாழ்நாள் முழுவதும் குடிக்கு எதிரான கடும் பிரச்சாரம் மேற்கொண்ட ஒருவரின் மகன் அப்பழக்கத்திற்கு அடிமையாவதன் நுட்பம் இரண்டாம் பாகத்தில் வர வாய்ப்பிருக்கிறது. ஹரியின் மாமனாரான காந்தியின் நண்பர், ஹரிலாலின் மனைவி , அவரது அம்மா, ஹரிலால் மனைவிகஸ்தூர்பா இடையேயான உறவு என பல இடங்கள் நாவலில் தொடப்படவே இல்லை. ஹரிக்கும் காந்திக்கும் முரண்கள் இருக்கின்றன என்று நாவலின் தொடக்கத்திலேயே கஸ்தூர்பாவால் சொல்லப்படுகிறது. அப்போது ஹரி இருப்பது இந்தியாவில். அதாவது காந்தி தென்னாபிரிக்கா வருவதற்கு முன்பே இந்தியாவில் இருக்கும்போதே இருவருக்கும் உரசல்கள் ஆரம்பித்தாயிற்று. அதன் துவக்கப்புள்ளி நமக்கு விளக்கப்படவில்லை. கஸ்தூர்பா காந்தியுடன் பேசும்போது ஹரி மெட்ரிக் படிக்கிறேன் என்று சொல்வது ஒன்றும் தவறில்லையே? படிக்க விரும்புவது தவறா எனக் கேட்பதிலிருந்து அதுவே துவக்கப்புள்ளி என நாம் அனுமானித்துக் கொள்ளலாம். இருவருக்குமான முரண்களே நாவலின் கதைக்களம் எனும்போது அந்த இடம் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம்.

தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிக்கு எதிரான காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அவர் பத்திரிக்கை நடத்தும் முறை, அனுமதிச் சீட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல கட்டங்களாக நடத்தும் போராட்டங்கள், நகரை நோக்கி அவர் முன்னெடுக்கும் நீண்ட பேரணி, அவர் அரசுப் பிரதிநிதிகளைக் கையாளும் விதம், அதற்காக தன்னைத் தயார் செய்து கொள்ளும் விதம், நண்பர்களைப் பயன்படுத்தும் விதம் என காந்தி கண்முன்னே ஒளியுடன் எழுந்து வருகிறார். காந்தியின் முழு தென்னாப்பிரிக்க வாழ்வும் நாவலில் விரிவான சித்திரமாகவே வருகிறது. அவ்வகையில் அவரது தென்னாப்பிரிக்க வாழ்வை இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் சொன்ன வேறோர் படைப்பு தமிழில் இல்லை. அவ்வகையில் இந்த நாவலே முதல் படைப்பு.

அதேநேரம் காந்தியின் இன்னொரு பரிமாணமும் நாவலில் வருகிறது. உடல்நிலை சரியில்லாத கஸ்தூர்பாவுக்கு பணிவிடை செய்யும் காந்தி நாவலில் வருகிறார். கஸ்தூர்பா உடல்நிலையை காந்தி கவனிப்பதில்லை என்றும் ஹரிக்கு காந்தி மேல் கோபம் இருக்கிறது. தான் இன்னும் சரியாகக் கவனித்திருக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளும் காந்தியை, கஸ்தூர்பா உடல்நிலையை மீட்க இயற்கை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் காந்தியை நாவல் நமக்குக் காட்டுகிறது. ஆனால் இதே அளவு நமக்கு ஹரிலால் பாத்திரம் விளக்கப்படவில்லை. அப்பாவின் பாராட்டுக்கு ஏங்கும், அப்பாவின் முதல் தேர்வாக தானே இருக்க வேண்டும் என்று ஏங்கும், அப்பா போராட்ட இயக்கத்தின் முன்னிலையில் தன்னை நிறுத்த வேண்டும் என ஏங்கும் ஏக்கம் மிக்க ஹரிலால் ஏமாற்றத்தைச் சந்திக்கும் இடங்கள் சொல்லப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை அப்பாவின் அங்கீகாரத்துக்கு மட்டுமே ஏங்கும், எதிர்பார்க்கும் ஹரிலால் அவரை விட்டு விலகி இந்தியாவுக்கு போகும் இடம் வெகு சாதாரணமாக இருக்கிறது. அன்பு வெறுப்பாக மாறும் நுட்பம் ஹரியின் புலம்பலாக மட்டுமே வெளிப்படுகிறது.

நாவலின் கவனம் காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டங்களிலிருந்து மாறி ஹரியிடம் குவியும்போது நாவலின் இறுதி 50 பக்கங்களுக்குள் வந்து விடுகிறோம். அங்கிருந்து ஹரியின் நிலை பெரும்பாலும் ஹரியின் மனதின் குரலாகவே வெளிப்படுகிறது. நாவலின் முற்பகுதியில் சொன்னவற்றையே இங்கு மீண்டும் ஹரியின் மனக்குரலாக கேட்கிறோம். இரண்டாம் பாகம் வரும் என்பதால் முடிவாக சொல்லிவிட முடியாத இடங்கள் அதிகம் உண்டு.

வாழ்நாள் முழுவதும் தான் நம்பிய சத்தியம் என்ற ஒன்றுக்காகவே வாழ்ந்து அதற்காகவே உயிரையும் விட்ட பிடிவாதமான கொள்கைப் பிடிப்பு என்பதற்கு நமக்குக் கிடைக்கும் தொல் உதாரணம் இதிகாச நாயகர் பீஷ்மர் தான். தன் வாக்கையே தன் சத்தியமாகக் கொண்டு அதன் பொருட்டு வரும் ஏளனங்கள், வாய்ப்புகள் என அனைத்தையும் எதிர்கொண்டு அந்த வாக்கையே முன்னிறுத்தி அதற்காகவே மரணிக்கவும் தயாராக இருந்த பீஷ்மருக்கு, ஒருக்கால் சபதம் எடுப்பதற்கு முன்னரே ஒரு மகன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

மெய்வாழ்க்கைப் புனைவு என்ற வகையில் இந்த நாவல் ஒரு சிறப்பான முயற்சி. சமகால வரலாற்று நாயகர்களை அவர்களது இயல்பான வாழ்க்கையில் வைத்துப்பார்ப்பது ஒரு குற்றமாகவே கருதப்படும் தமிழ்சூழலில் காந்தி போன்ற உலக அளவிலான ஆளுமையை அவரது யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் இருத்தி நமக்குக் காட்டும் இப்படைப்பு ஒரு தந்தையாக அவர் சந்தித்த கடினமான இடங்களையும் காட்டுகிறது. அறம் என தான் உணர்ந்ததன் வழியேதான் காந்தி அரசியல், குடும்பம், சமூகம், அரசு என அனைவரையும் பார்க்கிறார். ஹரிலால் வழியே காந்தி துலங்கி வரும் காட்சியை இந்த நாவல் நமக்கு வழங்குகிறது. தமிழில் மிக முக்கியமான முயற்சி.

 

No comments:

Post a Comment