காந்தி எனும் உணர்வு
காந்தியடிகள் தனி வாழ்வும் பொது வாழ்வும் ஒன்றாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் என்பதாலும் நாட்டின் மிகப் பெரிய நிகழ்வுக்கு காரணமானவர் என்பதாலும் அவருடைய வரலாற்றை புனைவாக்கும்போது அது சமூக அரசியல் போராட்டங்களோடு இணைந்தவொன்றாகவே அமைந்து விடும். அவர் பற்றற்றவர், கடமையை செய்... பலனை எதிர்ப்பார்க்காதே என்ற கீதையின் தத்துவத்தை வாழ்க்கையாக வாழ்ந்தவர், ஆன்மீக அரசியலை முன்னெடுத்தவர், வெவ்வேறு மதங்களாயினும் அவை பயணிக்கும் பாதை வேறு வேறு எனினும் சேருமிடம் ஒன்றே என்பதை உணர்ந்தவர், சத்தியமே கடவுள் என்று நம்பியவர், உண்மை, சத்தியம், அகிம்சை என்ற மூன்று ஆயுதங்களைக் கொண்டு அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாநோம்பு, ஒத்துழையாமை என்ற வழிமுறைகளால் உலக வரலாற்றில் புது அத்தியாயத்தை எழுதிச் சென்றது. ஒரு கிறித்துவரை விட ஏசுவின் கொள்கையை அதிகம் உணர்ந்தவராக, இஸ்லாம் மதத்தவரை வார்த்தைகளால் மட்டுமல்ல, தன் இறுதி வரை வாழ்க்கையாலும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டவராக, பிரிட்டிஷாரை கூட எதிரியாக கருதாது, கருத்து நிலையில் எதிர் நிலையில் நிற்பவர் என்ற தெளிவுக் கொண்டவராக வாழ்ந்தவர் அவர்.
அவரின் விசேடங்கள் உள்நாட்டவரையும் வெளிநாட்டவரையும் கவர்ந்திழுத்தது. அவர் செய்வனவெல்லாம் செய்திகளாயின. அவர் செல்லும் இடங்களெல்லாம் நாட்டின் மையங்கள் என்றாகின. அதே சமயம் அவரின் கருத்துகள் மத பழமைவாதிகளை கோபம் கொள்ள வைத்தது. ‘மகாத்மா’ என்றும் ‘பாப்பு’ என்றும் அழைக்கப்பட்ட அவர், தான் வாழும் காலத்திலேயே தன் மீதான அவதுாறுகளையும் சந்தித்தார். ஆனால் அவர் போற்றுதலையும் துாற்றுதலையும் சமமாகவே பாவித்தார். தன் மீதான வழிப்பாட்டு மனநிலையை அவர் அனுமதிக்கவேயில்லை. மகாத்மா என்ற பதம் கூட அவருக்கு சுமையானதுதான். இறுதியில் தான் கட்டி காத்த அகிம்சை என்ற பேராயுதம் தன் கண்ணெதிரே நிர்மூலமாகி இந்துக்களும் முஸ்லிம்களும் இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையை அடைந்து இலட்சக்கணக்காக உயிர்கள் பலியாகி நாடு துண்டாடப்பட்டு, சுதந்திரம் கிடைக்கப் பெற்றபோது அவர் அதிகாரம் என்ற மையத்திலிருந்து முற்றிலும் விலகி கல்கத்தாவின் தெருக்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி அலைந்துக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் மத்தியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, மனைவி மற்றும் நான்கு மகன்களை கொண்டதாக இருந்தது. அவரது அசாதாரணங்களை இயல்பாக்கிக் கொண்ட மீதி ஐவரை போன்று அவரது மூத்த மகன் ஹரிலாலால் இருக்க முடியவில்லை. அதே சமயம் தந்தையின் மீதான உரிமையும் பாசமும் அவரிடமிருந்து அவரை விலகவும் விடவில்லை. அதே நிலைமைதான் தந்தைக்கும். தந்தைக்கும் தனயனுக்குமிடையிலான இப்போராட்டம் அந்த வீட்டின் ஒரே பெண் உறுப்பினரான கஸ்துாரை இறப்பு வரைக்குமே நிம்மதி இழக்க வைத்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மகன் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கட்டுப்பாடற்றவராகி விடுகிறார். இறப்பு வரைக்கும் தொடரும் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தின் புனைவே இந்நாவல். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதற்கு முன்பு வரையிலான நிகழ்வுகளுக்கான புனைவு ‘ஹரிலால் S/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ற பெயரில் நாவலாக சென்றாண்டு (ஜனவரி 2021) வெளியானது. இந்நாவலை அதன் தொடர்ச்சி எனலாம். ஆனால் இரண்டும் புனைவுப் பாத்திரங்களின் தொடர்ச்சியற்ற, முழுக்கவும் இந்திய மண்ணில் நடைபெற்ற நிகழ்வுகளை கொண்ட இரு வேறு நாவல்கள். பொதுவாக கதாபாத்திரங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றம் செய்துக்கொள்ளும் உரிமை புனைவில் உண்டு. ஆனால் இந்நுாலை பொறுத்தவரை வெகு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் புனைவில் கூட காணாத உண்மை அந்த மனிதரிடம் இருந்தது. அதனாலேயே இந்த நாவல் எனக்கு நெருக்கமென்றாகிறது.
No comments:
Post a Comment