Search This Blog

Tuesday, 28 February 2023

கூடு

இலக்கிய விமர்சகர் திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் “கூடு' சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கட்டுரை.

சக்கை,புனிதம்,அற்றைத்திங்கள் என்ற நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு "கூடு"



கூடு காடுறை மக்களின் கதை. மகாஸ்வேதா தேவியின் கதைகளின் நீட்சி. அவனுக்கு பெயர் இல்லை. சிறுவன் வலிமைமிகு வாலிபன் ஆகிறான். பின் தலைவனுமாகிறான். காடு குறித்த பல தகவல்கள் தாண்டி இந்த மொழிநடை காட்டுக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. ஆணாத்தி பெண்ணாத்தி பற்றிய ஒருபத்தி விவரிப்பில் சோகம் உங்கள் மீதும் கவிந்து கொள்கிறது. கையறு நிலையை கதைசொல்லி அவன் கையிலிருந்து வாசிக்கும் உங்கள் கைக்கு மாற்றிவிடுகிறான்.

நீரோசை போன்ற கதைகள் இவரது தனித்துவத்தைச் சொல்லும் கதைகள். பெரும்பாலான கதைகளில் காடு வருகிறது. காடை விட்டு விலக நினைக்காத மனம். மரணங்கள் பல கதைகளில் நடக்கின்றன. பல கதைகளில் பெண்கள் ஓவியம் வரைகிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் தங்கள் கதைகளில் தங்களைப் பாதித்த ஏதோ ஒன்றைப் பதிவார்கள்.

.பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில், நனவோடை யுத்தியில் நகர்கின்றன. கதாபாத்திரங்களை வெகு நுட்பமாகச் சித்தரித்துப்பின் புறதகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவரணைகள் செய்து கத்தி நுனியால் முதுகைத் தொடும் உணர்வு போல் கதை எதிர்பாரா நேரத்தில் கடந்து செல்கின்றது. குடிகார அப்பாவை இழந்தவன், சித்தி அழுவதைப் பார்த்ததும் மாமாவின் கையை உதறுவது எவ்வளவு நுட்பமான விசயம்! அதன் பின் எத்தனை பேர் அவனை சித்தியை வைத்திருக்கிறான் என்று சொன்னால் என்ன? கதை மீண்டும் புறத்தகவல்களால் நிறைகிறது. பழுத்துக்கீழே விழுந்த மாம்பழத்தை காற்று காய்ந்த இலைகள் கொண்டு மூட முயற்சிப்பது போல.

இட்டிலி முக்கோணமாவதும், தோசைகள் சதுரமாவதும் காதலின் மொழி. புரிந்தவர்கள் பாக்கியவான்கள். இன்னொரு கதையில் கௌரவக்கொலை நடக்கிறது என்பது தெரியாது காந்தி பகத்சிங் விவகாரம் கதை முழுவதையும் ஆக்கிரமிக்கிறது.

திருமணத்திற்குப்பின் நிறம் மாறும் உடன்பிறப்புகளை அசைபோடும் பெண், மழைக்கால இரவில் வீட்டைவிட்டு விரட்டிவிடப்பட்டு காலை ஐந்து மணிக்கும் அசையாது அதே இடத்தில் நிற்கும் மீனாள், படித்துறை கதையில் வரும் கோட்டணிந்த பெண், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கையில் கிடைத்த கொம்பென செல்வகுமாரை நம்பிக்கொண்டிருக்கும் பெண் என்று பெண்பாத்திரங்கள் தனியாக பளிச்சென்று தெரிகிறார்கள் இவர் கதைகளில்.

அக்காவின் தங்கை மீதான சின்ன அதிகாரமும், ஆண்களின் பார்வை படுவதில் அக்கா தங்கை இருவரும் ஆனந்தம் கொள்வதும் நினைவில் கொண்டுவரும் கதை சட்டென்று ஒரு எதிர்பாராத்திருப்பத்தில் இறங்குகிறது. முன்னால் வரும் தகவல்கள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திப் பின் நிகழ்ந்தவற்றின் அதிர்ச்சியை கூட்டுதல் கதையை நேர்த்தியாக்கியிருக்கிறது.

கலைச்செல்வி கவனம் செலுத்த வேண்டியது செல்லாத பணம் பற்றிய கதை போன்ற கதைகள். இந்தியாவில் செல்லாத பணம் என்பதே கிடையாது,ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. ஊடகச்செய்திகள் உண்மையல்ல. அதே போல் பட்டுவாடா, இருள், முத்துப்பொம்மு, கும்கி, வார்ப்புக்கள் போன்ற அழுத்தமில்லாத கதைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. மொத்தத்தில் கலைச்செல்வியின் பிற தொகுப்புகளைப் போன்றே இதுவும் நல்ல தொகுப்பு. இன்னும் பேசப்பட எல்லாத்தகுதியும் வாய்ந்த எழுத்தாளர்.

பிரதிக்கு;

B4books யாவரும் பப்ளிஷர்ஸ்

90424 61472

முதல்பதிப்பு பிப்ரவரி 2021

விலை ரூ 190.


No comments:

Post a Comment