Search This Blog

Wednesday, 10 May 2017

இன்றைய இலக்கியம்


பத்திரிக்கைகள் இல்லையென்ற கவலை படைப்பாளிகளுக்கு இப்போதெல்லாம் இருப்பதில்லை. முன்பு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் நவீன காலம் சி.சு.செல்லப்பாவை போல “எழுத்தை“ சுமக்க விடுவதில்லை என்பது ஒரு ஆறுதல். சிறு.. பெருவென பத்திரிக்கைகளுக்கு குறைவில்லை. இணையமும் வந்து விட்டது. ஏதோ ஒன்றில் படைப்புகள் வெளியாகி விடுகிறது. ஆனால் அவையும் குழுச் சார்ந்ததே.


பொதுவாக இடைநிலை பத்திரிக்கைகளும் சில நாளிதழ்களும் கூட புத்தக விமர்சனம் வெளியிடுகிறது. எடுத்து பார்க்கும் தருணத்தில் பரந்து விரிந்துக் கிடக்கும் கலை வடிவை விமர்சனம் ஒரு ஒழுங்கமைவு செய்கிறது. அதுவும் ஒரு கலையே. சொல்லப்போனால் ஒரு படைப்பு எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமிடையே முனைப்புடன் செயல்படுவதே இலக்கியத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும் உத்தியாகும். புத்தகங்களின் தரத்தை விட அந்த படைப்பாளிக்கும்.. ஆசிரியர் குழுவுக்குமான நட்பின் அடிப்படையில் சில புத்தகங்கள் விமர்சனப்பேறு பெறுகிறது. சிலவை “வரப்பெற்றவை்களோடு“ நின்று விடுகிறது.

இலக்கிய உலகம் நவீனங்களுக்குள் புகுந்து விட்டது. முகநுால்.. வாட்ஸ்ஆப்.. என அதன் பரந்தமைவு ஒன்றுப்பட்ட சிந்தனையாளர்களை இணைக்கிறது. இதனால் உலகெங்கும் இலக்கியம் பரவி விட்டது போன்ற ஒரு மாயையான பிம்பம் உருவாகிறது. இது ஒரு குழு மட்டுமே. இப்படியான ஒரு உலகத்தை குறித்து சிறிதளவு கூட அறியாமல் உலகம் வெளியே நழுவிக் கொண்டிருப்பதுதான் யதார்த்தம். இலக்கியக் கூட்டங்கள் காற்று வாங்குவது இந்த யதார்த்தத்தில்தான்.

இலக்கிய கூட்டங்களும் இம்மாதிரியான ஒரு குழு மனப்பான்மைக்குள்தான் செயல்படுகிறது. அந்த குழுவை இணைக்கும் மையம் அவர்கள் சார்ந்த சிறு பத்திரிக்கையாக இருக்கலாம்.. அவர்கள் சார்ந்த பகுதியாக இருக்கலாம்.. விருப்பம் சார்ந்த தேர்வாக இருக்கலாம். எவையாயிருப்பினும் அது கூட்டமல்ல.. குழு ஒன்றின் கலந்துரையாடல் என்று கூற பெரும்பாலான கூட்டங்கள் வாய்ப்பளிப்பது இலக்கிய உலகின் வருத்தமான நிலைதான். அதிகபடியான புகழ்ச்சியும்.. படைப்பு சாரா.. அல்லது படைப்பாளி சார்ந்த பேச்சுகளே இங்கு பிரதானமாக அமைகிறது. விமர்சனக் கூட்டம் கூட படைப்புகளை கூர்ந்தாய்வு செய்வதில்லை என்றே தோன்றுகிறது. சில சமயங்களில் மிகப் பெரிய ஆளுமைகள் அழைக்கப்படுகிறார்கள். ஓரிரு வார்த்தைகளில் அவர்கள் மையம் நழுவி மிக காத்திரமாக உரைகளுக்கு சென்று விடுவது பார்வையாளர்களுக்கு நற்பேறுதான்.

நுால் வெளியீட்டு கூட்டம் ஆங்காங்கே பரவலாக நடைப்பெற்றுக் கொண்டிருப்பது நல்ல அறிகுறிதான்.. இலக்கியத்திற்கு. ஆனால் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படும் முதன்மை பேச்சாளர்கள் நுாலை பற்றி பேசுவதை விட தனது அனுபவங்கள் குறித்து நிறைய பேசி விடுகிறார்கள். அறிமுக எழுத்தாளர்கள் எனில் இது அதிகமாகவே நடந்து விடுகிறது. ‘ஆகி வந்த’ எழுத்தாளரெனில் அவருக்கு சூட்டப்படும் புகழாரத்துக்குள் அந்த நுால் தொலைந்துதான் போகிறது.

பரிசளிப்பு விழாக்களும் நீக்கமற நிறைந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது மகிழ்வான ஒன்றுதான். சில விழாக்களில் பரிசுப் பெற்ற கதைகள் குறித்த திறனாய்வு என்ற தலைப்பில் பேச அழைக்கப்படும் பேச்சாளர் தன் பேச்சை எங்கெங்கோ வளைத்து வளைத்து பரிசு பெற்ற படைப்புக்குள் நுழையவே மறுத்து விடுகிறார்.

படைப்பாளியை பேச அழைக்கும் கூட்டங்களும் இருக்கின்றன. கூட்டம் முறையாக தமிழ்தாய் வாழ்த்திலிருந்து தொடங்கும். வரவேற்புரை இருக்கும். அறிமுகவுரை இருக்கும். இங்குதான் ஒரு சிக்கல். அறிமுகப்படுத்துபவருக்கு அந்த படைப்பாளியைக் குறித்தும் அவரின் இலக்கியம் குறித்தும் ஏதோ ஒன்று தெரிந்திருக்கலாம்.. அல்லது எதுவும் தெரியாமலிருக்கலாம். தெரியாதிருக்கும்பட்சத்தில் அவரிடமிருந்தே கூட அவரை குறித்த குறிப்பை வாங்கி வைத்துக் கொள்ளலாம். பெயரை தவிர்த்து வேறெதும் தெரியாதபட்சத்தில் தனக்கும் அவருக்குமான நட்பை முன்னிலைப்படுத்தி அறிமுகவுரை நிகழ்த்தும் அபாயமும் உண்டு. இது குறித்து மற்ற யாருக்கும் பிரச்சனையிருப்பதில்லை.. அந்த படைப்பாளியை தவிர்த்து. இம்மாதிரியான கூட்டங்களுக்கு செல்லும் முன்அனுபவம் அந்த படைப்பாளிக்கு இருப்பின், இதை விளையாட்டாக கூட அவரால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.. சுவாரஸ்யமான விளையாட்டாக.. மேடையிலிருப்பவர் தன்னை பற்றி தனக்கே அறிமுகம் செய்யும் அற்புத தருணமல்லவா..? ஒரு படைப்பாளியின் படைப்புகளால் கவரப்பட்டோ.. வேறு சில காரணங்களுக்காகவோ  அதீத உணர்வுடன் மேடையில் அவரை அணுகும் இலக்கியவாதிகள் அதே பக்த பாவனையுடன் மற்றவர்களும் அணுக வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பேசுபவருக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்து விடும்.

திறனாய்வு கட்டுரைகள் என்றொரு வகையுண்டு. இக்கட்டுரைகள் கூட பெரும்பான்மை குழு மனப்போக்குடன்தான் எழுதப்படுகின்றன. வெளியாகும் எல்லா புத்தகங்களையும் ஒருவரால் வாசித்து விட முடியாது என்பது ஒருபுறம். வாசிப்பு என்பது தனிப்பட்ட ரசனை சார்ந்தது என்பது மறுபுறமிருக்க அந்த கட்டுரைகள் “என் பார்வையில்..“ “என் வாசிப்பில்..“ என்று ஆரம்பிக்கும் தலைப்புகளிட்டிருந்தால் இந்த பத்தியை இங்கு கொண்டு வர தேவையிருக்காது. ஆனால் அவை பொதுப்படையான தலைப்புகளில் அனைவருக்குமான பார்வையாக முன்வைக்கப்படும்போது  நல்ல படைப்புகள் அமுங்கி போய் விட வாய்ப்பு உண்டாகிறது. இம்மாதிரியான இலக்கிய கட்டுரைகளை நாளிதழ்கள் வெளியிடுவது நல்ல அம்சம்தான். நாளிதழ் வாசிப்பவர்கள் பொது வாசகர்களே.. தனியாரின் பார்வை பொதுமைக்குள் வைக்கப்படுவதால், இலக்கியம் சாரா வாசிப்பாளருக்கு இலக்கியம் குறித்த ஒருசார்பு பார்வையே அறிமுகமாகும் அபாயமும்.. நிராகரிக்கப்படும் படைப்பாளிக்கு சிறிதளவேனும் மனகிலேசமும் ஏற்பட்டு விடும்.

இலக்கிய உலகில் படைப்பாளிகள் மாற்றாந்தாய் மனோபாவத்தோடு பத்திரிக்கையாளர்களால் நடத்தப்படுவதும் இங்கு வெகு இயல்புதான். ஒரு குறிப்பிட்ட விருதை அந்த படைப்பாளிக்கு அறிவிக்கிறது அந்த அமைப்பு. அவரும் நெடுந்தொலைவு பயணித்து இதற்கென வந்திருந்தார். மேடையில் விருது அறிவிக்கும் போதுதான் அவரது பெயர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வருகிறது அவருக்கு. நிராகரிக்க முடியாமல் விருதை பெற்றுக் கொண்டு திரும்புகிறார். ஆனால் மனம் முழுக்க நெருடல்.. நானா கேட்டேன்.. என்று குமைகிறார். பிறகு அந்த அமைப்பிடமே விசாரிக்கிறார். “நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றப்பட்டது..“ என்று வெகு இயல்பாக பதில் வருகிறது. அவரால் அதை ஏற்கவே முடியவில்லை. மீண்டும் அழைக்கிறார். “உங்கள் நிர்வாகத்துக்கு எனக்கு விருதளிக்க இயலாது என்றால் முன்கூட்டியே சொல்லி விடலாம் அல்லவா..? வரவழைத்து அசிங்கப்படுத்துகறீர்களே..” என வெகுள, அந்த அமைப்பினர் அவரை சமாதானப்படுத்துகின்றனர்.. “சார்.. அதுக்கும் இதுக்கும் ஆயிரம் ரூவா தானே வித்யாசம்..”

இது இன்னும் நிலைமையை மோசமாக்குகிறது. ”ஏய்யா.. நீ பரிசுன்னு அறிவிச்சியே.. அந்த தொகைய விட நாலு மடங்கு காசு செலவு பண்ணீட்டுதான் விழாவுக்கு வந்தேன்..” என்று கோபமாகிறார். பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பவர் அவர். ஒரு வாய் வார்த்தையாகவாவது அவருக்கு சொல்லியிருக்கலாம்.. இந்தளவுக்கு வருத்தம் இருந்திருக்காது.. அல்லது வராமலாவது இருந்திருப்பார். ஆனால் அவரின் தரப்பு உணரப்படாமல் போனது மட்டுமல்ல.. அந்த அமைப்புக்கும் பகையாகிப் போகிறார் அவர்.

படைப்பாளிகள் நுணுக்கமானவர்கள். பல அவதாரம் எடுக்கக் கூடியவர்கள்.. உணர்ச்சிகளுக்கு எளிதில் ஆட்படுபவர்கள்.. அவர்களை சமுதாயம் மதிக்க பழக வேண்டும். 

***

2 comments:

  1. இவற்றை எழுதத் துணிவு வேண்டும் தங்கையே வாழ்த்துகள்

    ReplyDelete