Search This Blog

Sunday 7 May 2017

தமிழ் சூழலில் எழுத்தாளர்கள்

தமிழ் சூழலில் எழுத்தாளர்கள்

தொடர் வாசிப்பும் ரசனையும் ஓரு வாசகனை எழுத்தாளனாக மாற்றி விடுகிறது என்றே தோன்றுகிறது. எழுத தொடங்கும் வாசகரும் எழுத்துக்கான தமிழ் சமுதாய சூழலையும்.. அங்கீகாரத்தையும் உணர்ந்தே இருப்பார். அதையும் மீறி எழுதுவதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் இலக்கியத்தின் மீதான ஈர்ப்பே. இப்படியான உலகம் இல்லாமலும் இருந்து விடலாம்தான். தமிழ் சூழலில் அது எந்த வகையிலும் பாதிப்பிற்குள்ளாக்காதுதான். ஆனால் வாசிப்பும், எழுத்தும் ஒரு கட்டத்தில் உயிர்ப்பாக மாறி விடுவதால் இலக்கியம், தேடல் கொண்டோரை தேடிக் கொண்டே இருக்க வைக்கிறது.


அடுத்த கட்டமாக தமது படைப்பை அச்சில் பார்ப்பது என்பது எழுத்தாளருக்கு முன் உள்ள ஆக பெரிய சவால். பதிப்பாளர்கள் மீதும் கோளாறில்லை. கிராக்கி இல்லாத வியாபாரத்தில் ஓடும் குதிரைக்கே வாய்ப்பு. புத்தகமாக கண் முன்னே தோன்றும் தனது படைப்புகளில் புளங்காகிதம் அடைந்து விடுகிறது  படைப்பாளியின் மனம். ஆனாலும் இவற்றை வாங்குவோரின்றி போய் விடுமோ என்ற கவலையும் ஒருசேர எழுந்து விடுகிறது.

பொதுவாக சமூகத்தில், எழுத்தாளன் என்பவனுக்கு அதீத அந்தஸ்து என்றெல்லாம்  எதுவும் கிடையாது. நெருக்கி சொல்வதென்றால் புரியாத ஒரு பாஷையை உச்சரித்தது போல, கேட்பவர் பகபகவென்று விழிப்பதை பார்க்கலாம். இதில் கவிஞர் என்ற பதம் கொஞ்சமாக சமூகத்தில் ஊடுருவியிருக்கிறது. ஜிப்பாவும், தொங்கு பையும்.. பித்தேறிய சிந்தையுமான ஒரு கோட்டோவியத்துக்குள் அந்த பதம் பொதிந்து போனதில் எண்பதுகளின் தமிழ் சினிமாவுக்கும் நிறைய பங்குள்ளது.

என் அனுபவத்திலேயே எடுத்துக் கொண்டால் என் அலுவலக நண்பரொருவர் ஏதோ புத்தகத்தில் என் கதையை படித்திருப்பார் போல. ”நீங்க எழுத்தாளரா..?” என்றார். நல்ல நண்பர்தான். நீண்டகாலமாக தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ”ஏதோ கொஞ்சம் எழுதுவேன்..” என்றேன். உற்று கவனித்தார். பிறகு சொன்னார்.. “எழுத்தாளரை இன்னைக்குதான் பாக்றேன்..” அது என்ன மாதிரியான மனநிலை என்பது ஒருபுறமிருக்க வாசிப்பிற்கான பழக்கமின்மை.. இலக்கிய அறிமுகமின்மை.. என்பதன் நீட்சியாக கூட இதை கொள்ளலாம் என தோன்றியது.

ஒருமுறை என் கணவரிடம் கேட்டேன்.. “நான் எழுதுவேன்னு உங்க ஃப்ரண்ட்ஸ் யாருக்காவது தெரியுமா..? என்றேன்.

”ச்சே.. ச்சே.. இதெல்லாமா சொல்லுவாங்க..” என்று சொல்லி விட்டார். இத்தனைக்கும் என் எழுத்துக்கு அவரின் சப்போர்ட் நிறையவே இருக்கும். இது எல்லா பெண் எழுத்தாளர்களும் சொல்லும் மொக்கையான வசனம்தானே என நினைக்க வேண்டாம். உண்மையிலுமே உண்மைதான். என் மகள் கூட அதுமாதிரியான ஒரு பதிலைதான் சொன்னாள்.. ”போம்மா.. இதெல்லாம் யாருக்கும் புரியாது..” என்றாள். நானும் என் ‘தவறை’ உணர்ந்துக் கொண்டேன்.

இவைகளெல்லாம் எழுத்தாளர்கள், எழுத்தாளரல்லாதவர்களிடம் பெறும் அனுபவங்கள். ஒரு கதையோ.. புத்தகமோ வெளியாகும்போது அதை யாரேனும் வாசித்து விட்டு பகிர்ந்துக் கொண்டால் அது மிக பெரிய விஷயமாக தோன்றும். சொல்லப்போனால்.. இந்த அங்கீகாரத்தை எழுத்தாளனின் மனம் மௌனமாக தேடிக் கொண்டுதானிருக்கிறது. எனக்காக எழுதுகிறேன்.. என்னை உயிர்ப்பிக்க.. புதுப்பிக்க.. எழுதுகிறேன் என்று சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அதே அளவுக்கான உண்மை அங்கீகாரத்தை பெறும் நோக்கிலும் படைப்பாளிக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது. சமூக இணைய ஊடகங்களில்  இது குறித்து பகிர்ந்துக் கொள்ளவும் தோன்றும். இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. உடனே உள்பெட்டியில் “அந்த புத்தகத்தை உடன் அனுப்பி வையுங்கள்...“ என்று செய்தி அனுப்புபவர்கள் கணிசமாக இருக்கதான் செய்கிறார்கள்.

இலக்கியத்தின் நிலையோ இங்கு மிக பலவீனமாக உள்ளது.. ”கடை விரித்தேன்.. வாங்குவோரில்லை.. கட்டிக் கொண்டேன்..” என்கிறார் இராமலிங்கர். அந்த நிலையில் சிறிதே மாற்றம்.. கடை விரித்தேன்.. காசு கொடுத்து வாங்குவோரில்லை.. என்பதுதான் அது. நிச்சயமாக எல்லோரையும் குறிப்பிடவில்லை. இலக்கிய கூட்டங்களில் அறிமுகமாகும் நிறைய நண்பர்கள் “தங்கள் புத்தகம் எந்த பதிப்பகத்தில் வெளியாகியுள்ளது..” என்று கேட்டிருக்கிறார்கள். முகநுாலில் கூட பதிப்பகத்தின் பெயரை குறிப்பிட முடியுமா என்று வினவியிருக்கிறார்கள். மகிழ்ச்சி. ஆனால் நான் குறிப்பிட விரும்புவது மற்றொரு சாரரைதான். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதும் கூட இக்கட்டுரை எழுத துாண்டியது எனலாம். கவிதை புத்தகங்களை கவிஞர்கள் இலவசமாக கொடுப்பதை பார்த்திருக்கிறேன். எனக்கும் சில கவிதை புத்தகங்கள் அவ்வாறு கிடைத்திருக்கின்றன. சொற்ப விலையும், தங்களின் கவிதை வாசகர்களிடம் சென்று சேர துடிக்கும் கவிஞர்களின் மனமும் இதற்கான விலையை வென்று விடுகிறது. இதன் தொற்றாக எல்லா படைப்புகளும் இலவசமாக எதிர்பார்க்கும் மனநிலை எழுத்தாளர்களுக்குள் வந்து விடுகிறது என்றே தோன்றுகிறது.

படைப்பாளர்களுக்கான பிரதிகள், பதிப்பகத்தை பொறுத்து மாறுபடும் என்றாலும் அதிகபட்சம் இருபதை தாண்டுவதில்லை என்பதுதான் என் கணிப்பு. அதே போல படைப்பாளருக்கு அதிகபட்சம் இருபது சதவீதம் விலை குறைப்பு சலுகையும் செய்கிறார்கள். சிறுகதை தொகுப்போ.. நாவலோ.. குறைந்தபட்ச விலையாக ரூபாய் 150க்கு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். புத்தக மதிப்புரைக்கு.. போட்டிக்கு அனுப்ப என 100 பிரதிகள் வாங்க வேண்டியிருக்கும். இதில் நமது அபிமான இலக்கியகர்த்தாக்களுக்கும் சேர்ப்பித்து விடும் ஆர்வமும் நமக்கிருக்கும்.

சமூக வலைத் தளத்தில் செய்தியை பகிரும்போதே உள்பெட்டி குறுஞ்செய்திகளும் வந்து விடுகின்றன. தங்களின் முகவரியை வெகு வேகமாக தட்டச்சு செய்து இந்த முகவரிக்கு உங்கள் புத்தகத்தை உடனே அனுப்பி விடுங்கள் என்று கோரியிருப்பார்கள். “கோரி” என்பதையே எனக்கான வார்த்தையாக சொல்லிக் கொள்கிறேன். இந்த மனபோக்குதான் சற்று திகிலடைய வைக்கிறது.

தமிழ்சூழலில் எந்த ஒரு எழுத்தாளரும் எழுத்தை நம்பி பிழைப்பு நடத்த முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். விரல் விட்டு எண்ணக் கூடிய இரண்டொருவர் பொருள் ஆதாயத்துக்கு இதை நம்பியிருக்கலாம். மீதம் அத்தனை பேரும் வேறு ஏதோ பணியிலோ.. அல்லது சொந்த தொழில் செய்துக் கொண்டோ.. இலக்கியத்தில் தன்னியல்பாக ஈடுபடுகிறார்கள். இது புத்தகத்தை கோரும் குறுஞ்செய்தி இலக்கியவாதிகளுக்கும் தெரிந்துதானிருக்கும். அவர்களும் புத்தகம் வெளியிடுபவர்கள்தானே..? புத்தகத்தின் விலை ஒரு புறம்.. அதன் அனுப்புகை தொகை ஒரு புறம் என குறைந்தது இருநுாறு ரூபாயாவது செலவு பிடிக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அனுப்பிய பிறகு வாய் வார்த்தையாக கூட வந்து சேர்ந்தது என்றோ அல்லது படித்து முடித்ததற்கு அடையாளமாக சிறு விமர்சனம் கூட அவர்களிடமிருந்து வருவதில்லை… ஓரிரண்டு விதிவிலக்குகளை தவிர.

எனது கேள்வி என்னவென்றால் புத்தகம் என்றால் சுலபமாக.. இலவசமாக கேட்டு விடலாம் என்ற கற்பிதத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறோம் நாம்..? ஒரு வீட்டில் விருந்துபசாரம் செய்கிறார்கள் என கொள்வோம். அந்த காபி கப் அழகாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை நானே எடுத்து கொள்ளட்டுமா..? என்று யாரும் கேட்க மாட்டோம். ஏனென்றால் அது நம் மனதில் தவறு என்று பதிக்க வைக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், அம்மாதிரியான ஒரு எண்ணமே நமக்கு தோன்றுவதில்லை. அதை விடவா புத்தகம் மட்டமாக போய் விட்டது..? இலக்கியத்தை படைப்பாளிகள் வளர்க்காவிடில்.. யார் வளர்ப்பது..?
தோன்றியதை சொல்கிறேன். இலக்கியம் வளர இலக்கியவாதிகளின் பங்களிப்பும் அவசியமாக தேவைப்படுகிறது.

***

No comments:

Post a Comment