Search This Blog

Tuesday, 16 May 2017

மீட்சி

சிகரம் சிறுகதைப் போட்டியில் 2017ல் பரிசு பெற்ற சிறுகதை

போர் மேகங்கள் சூழ்ந்துடுச்சு..” சிரித்தான். அதெல்லாம் பொதுமக்களுக்கு. உண்மையில் போர் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அதைதான் கிண்டலடிக்கிறான் இந்த நிலையிலும்.

”அப்றம்.. நீங்க அடிச்சா நாங்க திருப்பி அடிக்க மாட்டோமா..? கோபமாக திருப்பிக் கேட்டான். சாகக்கிடக்கிறவனுக்கு நக்கல் ஒரு கேடு.. இவனை.. ஒரேயடியாக முடிக்கக் கூடாது. அணுஅணுவாக இரத்தம் சிந்தி சித்ரவதையோடு சாகணும்.

”உண்மையா சொல்லு.. என்ன பாத்தா உனக்கு அடிக்கணும்.. கொல்லணும்னு தோணுதா..” எங்கோ அடிப்பட்டு தெறித்து விழுந்திருக்கலாம். அதுவும் எல்லையை தாண்டி. பிழைத்தே எழுந்தாலும் இனி ஒருபோதும் அவன் தன் தாய் நாட்டை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டான்.

இவனும் வழி மாறியிருந்தான். அதிர்ஷ்டவசமாக தாய் நாட்டுக்குள்தான் வழி தடுமாறியிருக்கிறான். தகவல் தெரிவித்தால் மீட்டுக் கொள்வார்கள். இங்கு சிக்னல் இல்லை. சிக்னல் கிடைக்க சற்று துாரம் செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் இவனுக்கும் பேசும் சுவாரஸ்யம் எழுந்தது. நல்லவேளை மொழி பிரச்சனை இல்லை.
”நாம எதிரெதிர் நாட்டுக்காரங்க.. நாங்க உங்களை அடிச்சு கொல்லதானே வேணும்..”
எங்கோ துப்பாக்கி ஒசைக் கேட்டது.

”அய்யோ.. கடவுளே.. என் அசைன்மெண்ட் இன்னும் முடியில.. உங்கிட்ட பேசிக்கிட்டுருக்க சொல்லி யாரும் எனக்கு அசைன்மெண்ட் தர்ல..” கடுப்பாக சொன்னான். முழு ராணுவ உடுப்பிலிருந்தான்.

”நீ சொல்றது சரிதான்.. ஆனா என் நெலமைய பாரு.. கை பிஞ்சு போய் கிடக்கு.. கால் என்னாச்சுன்னே தெரியில.. தாகம் நெஞ்ச அடைக்குது.. இந்த நிலயில ஒரு விலங்கு கிடந்தாலும் எடுத்து முதலுதவி செய்வோமில்ல.. மனுசனுக்கு காருண்யம் முக்கியமில்லையா..?”

”தப்பா புரிஞ்சுக்கிட்டே.. காருண்யம்னாலும் அதுக்கு இடம்.. பொருள்.. ஏவலெல்லாம் இருக்கு..”

”ஒருத்தருக்கொருத்தர் காட்டற அன்பில.. கருணையில இடம்.. பொருளுக்கெல்லாம் ஏது இடம்..?” மனதில் உறுதி இருந்தாலும் அவன் குரல் முனகலாகதான் ஒலித்தது. ”ஆட்டை கசாப்பு பண்றோம்.. அதே ஆடு வண்டில அடிப்பட்டு போச்சுன்னா வைத்தியமும் பாக்றோமில்ல.. அதுமாதிரி..” என்றான் தொடர்ந்து.

”அது ஆடு..” இழுத்தான்.

”ஆடுதான்.. கசாப்பு ஆட்டை கூட கருணையோட ஒரே போடா போட்டு தள்ளிடுறோம்.. இப்டி குத்துயிரும் கொல உயிருமா தவிக்க வுடுறதில்ல..”

அது உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக் கொள்ள மனமில்லை இவனுக்கு. படுத்துக் கிடந்த அவனை கண்ணெடுக்காமல் பார்த்தான். தன் வயதுதான் இருக்கும் அவனுக்கும். அணிந்திருந்த இராணுவ உடுப்பு கிழிந்து தொடை வரை ஏறியிருந்தது. வலது கால் சிதைந்து ரத்தம் தரையை நனைத்திருந்தது. சதை துணுக்குகள் பரவலாக கொத்து கறி போல சிதறிக் கிடந்தன. இவன் விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் வீட்டில் விதவிதமான உணவிருக்கும். கறிக்கோலாவுக்காக கொத்தி  வைத்த கறியை நீரில் அலசி வடித்து, அதோடு மசாலா சாமான்களை சேர்ப்பாள் மனைவி. எலும்பில்லாத சதையை நுணுக்கமாக சிதைத்திருப்பதால் வெந்த கறி உருண்டை மெத்தென்று வாயில் கரையும். இரண்டரை வயது பேத்திக்கு உருண்டையை நசுக்கி ஊட்டி விடுவாள் அம்மா. ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருடங்களிருக்கிறது. அம்மாவும் மனைவியும் அதை நோக்கி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அப்பாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான்.

அனிச்சையாக மண்டியிட்டு அமர்ந்தான். ”என்ன வேணும்..?” என்றான் கடுமையாக.

”தண்ணீ.. தண்ணீ..”

வேண்டாவெறுப்பாக பாட்டிலை திருகி திறந்தான் இவன்.

அவனது பார்வை ஆவலாக நீர் பாட்டிலின் மீது குவிந்தது. தலையை துாக்க முயன்று,  முடியாமல் தத்தளித்தான்.

”தலைய நிமிர்த்து..” துாக்க முடியாமல் சிரமப்படுவது தெரிந்தும் சொன்னான்.. ”துாக்கி பாரு.. எல்லாம் முடியும்..” கடுமையை குறைக்கவில்லை.

முடியவில்லை என்பது போல தலையை அசைத்தபோதுதான் அதை கவனித்தேன். அவன் புடனியில் கல் குத்தி இரத்தம் கசிந்திருந்தது. சற்று நகர்த்தி போட்டால் தானாக தலையை துாக்கி விட முடியும் என்று தோன்றியது. தோளை பிடித்துக் கொண்டு நகர்த்த முடியாது. அங்கிருந்தே கை கழன்றிருந்தது. நல்ல கட்டுமஸ்தான கை. இராணுவ உடல். நிறைய பயிற்சியளித்திருக்கலாம்.. இரவு பகல் தெரியாமல் பண்ணையில் பிறந்து வளர்ந்து நாற்பத்தைந்தே நாளில் கொழுகொழுவென்றாகி விடும் பிராய்லர் கோழிகள் போல. சதையும் எலும்பும் பஞ்சு பஞ்சாக.. கடித்து உண்ண தோதாக.

”தண்ணீ வேணும்..” என்றான்.. மிக சிரமப்பட்டான். கையிருந்தால் கட்டை விரலை வாய்க்கருகே வளைத்து ஜாடை காட்டியிருக்கலாம். இருந்தவாக்கில் எப்படியோ தலையை துாக்கி விட்டான். மடியை தேடுவது போல அவன் தலை தடுமாறியது. கையை அகல விரித்து எதிரியின் தலையை தாங்கிக் கொண்டான் இவன். வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டினான். விழுங்க நிறைய சிரமப்பட்டாலும் உடலின் தேவை நாவை நீட்டி சுவைக்க வைத்தது.  கண்களை மூடிக் கொண்டான். நீரை உண்ட களிப்பில் முகம் அமைதியடைந்திருந்தது. பொருளாதார வசதியற்றவன் போன்ற முகத்தோற்றம் அவனுக்கு. வயதான பெற்றோர்களும்.. இரண்டு பிள்ளைகளை பெற்ற மனைவியும் இவனுக்கு இருக்கலாம். தம்பி.. தங்கைகள் என்ற பெருத்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு திருமணமாகாதவனாவும் இருக்கலாம். ஏதோ ஒண்ணு.. நமக்கென்ன..? கொன்னு போட வேண்டியவனை மடியில எடுத்து கொஞ்சவா முடியும்..?

உலகின் எங்கோ ஒரு மூலையில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இவனை சந்தித்திருந்தால் மனம் இத்தனை கருணையற்று போயிருக்குமா..? இவன் எதிரியாக இல்லாவிட்டால் இவன் மீது இரக்கம் ஏற்பட்டிருக்குமோ..? எப்படி இவன் எதிரி.? இன்றுதான் இவனை பார்க்கிறேன்.. ஆனால் எதிரி. என் பெண்டாட்டியுடன் இவன் படுத்திருக்கவில்லை.. சொத்துக்காக கொலை செய்ய ஆட்களை ஏவவில்லை.. இவன் மனைவியின் மீது எனக்கு எந்த ஆசையுமில்லை.. இவன் என் தங்கையையோ.. நான் இவன் தங்கையையோ மானபங்கபடுத்தவில்லை. பிறகெப்படி எதிரி..? பிறக்கும்போதே சாதியோடு பிறக்கும் இந்திய குழந்தையைப் போல பார்க்கும் முதல் பார்வைக்கே எதிரியாக இருந்தான். கருணையை  தீர்மானிக்கும் சக்தி சாதிக்குண்டு.. இனத்துக்குண்டு.. மதத்துக்குண்டு.. அந்த வகையில் இவன் எதிரி.

”நீ போயீடு.. அரைநாளோ.. ஒருநாளோ நான் அப்டியே செத்துருவேன்..” என்றான் தண்ணீர் குடித்த தெம்பில்.

அது கூட சரிதான். நெடுநேரம் தன்னிடமிருந்து தகவல் வரவில்லை என்றால் தேடி கண்டுபிடித்து ரெஸ்க்யூவுக்கு ஆளனுப்புவார்கள். இவனிடம் குலாவிக் கொண்டிருக்க இதுவா நேரம்..? அதுவும் கண்டவுடன் கொல்ல வேண்டிய எதிரி.. அல்ல.. தேடி தேடி கருவருக்கப்பட வேண்டிய எதிரி.

”எனக்கு போக தெரியும்.. நீ எனக்கு கட்டளை போடத..” கோபமாக பேசி விட்டு சரசரவென இறங்கினான். கரடுமுரடாக வழித்தடம். வயிற்றை இறுக்கியது பசி. நேற்று மதியம் உண்டதுதான் கடைசியாக எடுத்துக் கொண்ட உணவு. அதுவும் அவசரஅவசரமாக உண்ணுமளவுதான் நேரமிருந்தது. கிடைத்த இடத்தில் அமர்ந்து ரொட்டி பாக்கெட்டை அவசரமாக பிரித்து உள்ளிறக்கினான். சுற்றிலும் மனித சதை துண்டுகள் சிதறிக் கிடந்தன. மனித விழி ஒன்று தொலைவில் முழித்துக் கிடந்தது. இப்போதும் வயிறு நிறைய பசி. பாறைக்கல் ஒன்றில் அமர்ந்து மற்றொரு கல்லில் கால்களை நீட்டிக் கொண்டான். மடியிலிருந்த உணவு மளமளவென்று வயிற்றுக்குள் நிறைந்தது. ரெஸ்க்யூ வரும் வரை இங்கேயே இருந்து கொள்ளலாம். தகவல் அனுப்பியாகி விட்டது.

எங்கோ தொலைவில் ஓநாய் ஒன்றின் ஊளை சத்தம் கேட்டது. போர் சூழலுக்குள் மாட்டிக் கொண்டு விட்ட வேதனையாக இருக்குமோ..? அல்லது அதற்கான உணவு கிடைத்ததற்கான சங்கேதமாக இருக்குமோ.. ஒருவேளை அந்த எதிரியே உணவாகி இருப்பானோ.. அறிந்துக் கொள்ளும் ஆவல் எழுந்தது. வந்த வழியே மேலேறி மெல்ல நடந்தான். சிந்தையை துாண்டும் ஏகாந்தமான தனிமை.

எல்லைகளை யார் வகுத்தது..? மனிதனால் நிர்ணயிக்கப்பட்ட கோடுகள் தொடர் நிலப்பரப்பை தனிதனியாக பிரித்து விடுகிறது. பிரிக்கப்பட்ட நிலங்கள்  ஒவ்வொன்றுக்கும் தனி ராஜாக்கள்.. மந்திரிகள்.. அவர்கள் ஆள்வதற்கு மக்கள்.. அதற்கான கலாச்சாரம்.. என எல்லாமே தனிதனியாகி விடுகிறது. கிடைத்த அதிகாரத்தை பாதுகாக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள ராணுவம்.. அதற்கான செலவை மக்களின் உழைப்பிலிருந்து தனதாக்கி கொள்ளும் அரசதிகாரம்.. யாரை யார் பாதுகாப்பது..? எதிலிருந்து யாருக்கு பாதுகாப்பு..? மனிதனிடமிருந்து மனிதனுக்கு பாதுகாப்பு. போரில் மனித வலிகள் கணக்கில் கொள்ளப்படவே மாட்டாது. மக்கள் தேசபக்தியில் நெகிழ்ந்து உருக, அந்த உணர்வு நிலைக்குள் அதிகார மமதையை ஒளித்துக் கொண்டு அலையும் தனி மனித ஆசை.

எல்லா மனிதர்களுக்குள்ளும் மற்றெல்லா ஜீவன்களையும் அடக்கியாள ஆசையுண்டு. சிலருக்கு அது அதீதமாக இருக்கலாம். அதீத ஆசை ஏதேதோ பெயரிட்டுக் கொண்டு உள்ளிருக்கும் கனாவை சாதித்துக் கொள்ள துாண்டிக் கொண்டேயிருக்கிறது. அதை  மதம் எனலாம்.. கடவுள் எனலாம்.. நாடு எனலாம்.. தேசபக்தி என்றும் சொல்லலாம்.. சாதி என்று கூட சொல்லலாம். ஆனால் அத்தனைக்கும் பின்னிருப்பது அதிகாரத்தின் மீதான ஆவேசப்பற்று.. அடக்கியாளும் வெறி.

எண்ணவோட்டம் நடையை மந்தப்படுத்தினாலும் அவன் விழுந்து கிடக்குமிடத்தை அடைய வழி ஒரு பிரச்சனையில்லை.

ஆடாமல் அசையாமல் அப்படியே கிடந்தவனின் மீது இருள் மெல்ல கவிய தொடங்கியிருந்தது. தண்ணீர் பாட்டில் கீழே கவிழ்ந்து கிடந்தது. குடிக்க எத்தனித்திருக்கலாம். அவன் கண்கள் எங்கோ நிலைக்குத்தியிருந்தது. இறந்திருப்பான் போல.

சத்தம் வந்த பக்கம் விழிகளை உருட்டி பார்த்தான் அவன். இன்னும் சாகவில்லை. ஆனால் மரணத்தின் விளிம்பிலிருந்தான். உணர்வுகள் துளியும் மங்காத நிலையில் எத்தனை சித்ரவதை இது. எதன் பொருட்டு இவையெல்லாம்..? இவனுக்கு இனிமேல் வாழ்வில் என்ன கிடைத்து விடும்.. அல்லது எது கிடைத்தால் மகிழ்வான்.?. இழந்த கையையோ காலையோ ஒட்ட வைக்க முடியாது. உடலில் ஆங்காங்கே பெருங்காயங்கள் உள்ளன. இங்கிருந்து துாக்கி செல்வதே அத்தனை சிரமம். இதில் மருத்துவ உதவி எங்ஙனம் சாத்தியம்..? எல்லாவற்றிற்கும் மேலாக இவன் எதிரி. அப்படியே பிழைத்தாலும் வேறொரு நாட்டில் கால நேரம் அறியாமல் ஆயுள் முழுவதும் அடைப்பட்டே சாக வேண்டும்.. அதிகபட்சமாக சொந்த நாட்டில் காணாமற்போனவர் பட்டியலில் சேர்க்கப்படுவான்.. அல்லது விருது பட்டியலில் சேர்க்கப்பட்டு எப்படியும் கொஞ்ச நாளில் மறக்கப்படுவான்.

அதிகார மையம் நிச்சயம் இந்த தியாகத்தை உணர போவதில்லை. உணர்ந்தாலும் அது பெரிய விஷயமுமல்ல. அவர்களுக்கு தேவை மூளை மழுங்கிய கூட்டம். அள்ள அள்ள குறையாத அக்கூட்டத்திலிருந்து இவனை விடவும் மோசமான காவுகளை கொடுத்த பிறகே அதிகாரம் சாத்தியப்பட்டிருக்கும். ஆசை பேராசையாக மாறி சுழன்று சுழன்று தனக்கு சாதகமான எதன் மீதோ மையங்கொண்டு ஆட்களை ஒன்றிணைத்து பெருங்குழுவாக்கி விடுகிறது.. மீண்டும் மீண்டும் வீழ்த்துகிறது. எழ எழ தாக்குகிறது. நாற்காலிகள் பிரித்து கொள்ளப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்து போகிறது.  ஆனாலும் அதிகார பிடியை நழுவ விடுவதேயில்லை மீண்டும் மீண்டும் புதுபுது உத்திகளால் உணர்வுகளை சிலிர்த்தெழுப்பி மனித பெருந்திரளை திரட்டிக் கொண்டு அதன் வழியே நாற்காலிகளை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது..

”வலிக்குதா..?” என்றான் கீழே குனிந்து.

”தெரியில.. ஒடம்பெல்லாம் மரத்துப் போச்சு.. மனசு மட்டும் தெளிவா.. தெளிவா..” முனகினான். முழு உணர்வோடிருக்கிறான். பாவம் இருட்டி விட்டால் நாயோ நரியோ இழுத்துக் கொண்டு போய் குதறி விடும். மீட்பு குழுவினரிடமிருந்து சமிக்ஞைகள் வர தொடங்கி விட்டன. மிஞ்சி போனால் கால் மணி நேரத்தில் கிளம்பி விடலாம்.

”ஏன்.. ஏன் திரும்பி வந்தே..?” என்றான்.

”கொஞ்ச நேரத்தில கௌம்பிடுவேன்.. அதான்..”

”சரி..”

சமிக்ஞை ஒலி இவனின் மீட்புக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்றது.

உபயோகப்படுத்திய துப்பாக்கியை துடைத்து உள்ளே வைத்தான். தன்னை விட விரைவாக அவன் மீட்கப்பட்டு விட்டான் என்றமட்டிலும் நிம்மதியாக இருந்தது இவனுக்கு. பாறைக்கல்லின் மீதமர்ந்து மீட்சிக்காக காத்திருக்க தொடங்கினான்.



***

No comments:

Post a Comment