Search This Blog

Tuesday, 16 May 2017

இரவு

தமுஎகச -போடி மாலன் 2016 போட்டியில் பரிசுப் பெற்ற கதை

பால் ஆடைக் கட்டிப் போயிருந்தது. ஒரு செயலை செய்வதற்கான எண்ணம் எழாமல் அதனைச் செய்யவே முடியாது போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. பால் குடிக்கத் எண்ணமில்லை என்பதை இத்தனை பெரிய வார்த்தைகளுக்குள் மனம் அடைத்ததை வெளியிலிருந்து பார்ப்பது போல கவனித்தாள். iகையிலெடுத்த டம்ளரை டீப்பாயில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி.. கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டோடு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி பூஜை.. புனஸ்காரம் என்ற ஆன்மீக தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன் இவர்களோடு தானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தாகி பத்து நிமிடங்களாகி இருந்தது.
இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தின் தங்க கரங்கள் மின்னின. மகளுக்கு சீராக அளித்த கடிகாரம்தான் இது.

சீர்வரிசை சாமான்கள் வாங்க மொத்த குடும்பத்தோடு இவளும் சென்றிருந்தாள். கடை முழுக்க கடிகாரங்கள் பெரிதும்.. சிறிதுமாக.. ஆளுயரத்திலிருந்து கைக்கு அடக்கமானது வரை. எல்லாமே இதே நேரத்தையே காட்டிக் கொண்டிருந்தன. வாங்கிய கடிகாரத்திற்கான பில் தொகையை செலுத்திய பின் பேட்டரி போட்டு சரியான நேரத்திற்கு மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். இத்தனை கடிகாரங்களை ஒரே தடவையில் பார்ப்பது முதலில் அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. பிறகுதான் நேரத்தைக் கவனித்தாள். பத்து பத்து என்றது எல்லாமே. ஏசி குளிரை வெளியே விடாத இறுக்கமான கதவை அழுத்தித் தள்ளி கடைக்குள் நுழைந்த போது சாயங்காலம் மணி நான்கிருக்கும். இதென்ன இந்த மணி காண்பிக்கிறது..? அதிகாலையோ.. அந்திமாலையோ.. நான்கு சுவரைத் தாண்டி எதற்கும் உள்ளே வர அனுமதி கிடையாது போல. அதனால்தான் அலங்காரமாக தொங்கிக் கிடந்த அத்தனை கடிகாரங்களும் நகர வழியின்றி உறைந்து போய் கிடக்கிறது. “கடியாரக் கடைக்குள்ளயே மலச்சுப் போயி நின்னுட்டா மத்தக் கடைங்களுக்கு எப்பப் போறது..? கல்யாண வேலக் தலைக்கு மேல கெடக்கு..“ வெறித்துப் பார்த்தவளை மாமியாரின் குரல்தான் கலைத்துப் போட்டது.

படுக்கையறை கதவை திறக்கும் ஓசைக் கேட்டதும் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இரவு விளக்குதான் என்றாலும் சிறிய அறை என்பதால் வெளிச்சம் நிறையவே இருந்தது.  கணவன் இறந்து போன பிறகு அவளும் கைக்குழந்தையான மகளும் கணவனுடன் இருந்த அதே அறையைதான் உபயோகித்துக் கொண்டனர். நாத்தனாருக்கு திருமணமான பிறகு மாப்பிள்ளை வரும்போதெல்லாம் அறையை ஒழித்துக் கொடுக்க வேண்டி வரும். இடம் மாறினாலும் வேலை களைப்போ என்னவோ துாக்கம் பாதிப்பதில்லை அவளுக்கு. மகனின் நினைப்பை பேத்தியின் அருகாமையில் மறக்க முயன்றதில் துாங்குவது கூட பாட்டி.. தாத்தாவுடன் என்றாகிப் போனது மகளுக்கு. “நாங்க எத்தன நாளைக்கு காவந்து பண்றது..? இனிம எல்லாம் ஒன் மாமனாரு.. மாமியாருதான்.. அணுசரணையா போய்க்கோ.. கைல ஒரு பொட்டப்புள்ள இருக்கு.. பாத்து நடந்துக்கம்மா..“ கண்ணீரோடு கழித்து கட்டி விட்ட பிறந்த வீட்டுக்கு எப்போதோ ஒருமுறை மாமியார் அனுமதிப்பார். இவளுக்கும் அங்கு அதிகமாக ஒட்டவில்லை.

இருவரில் யாருக்கோ கழிவறைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் போல. அவள் படுத்திருக்கும் அறையை கடந்து குறுகலான சிறிய வராண்டா இருக்கும். அதை தாண்டி இருந்தது குளியலறையும் கழிப்பறையும். கதவை திறந்துக் கொண்டு வருவது மகள்தான். கால் கொலுசின் ஒலி அம்மாவுக்கு கேட்டு விடாதப்படி அடி மேல் அடி வைத்துச் செல்கிறாள். பெண்களுக்கு திருமணம் அத்தனை ரகசியங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சென்ற மாதம் வரையிலும் கூட குழந்தையாகதான் இருந்தாள்.. பதினேழு வயது குழந்தையாக. பனிரெண்டாம் வகுப்பை முடித்திருந்த நேரம் இந்த வரன் வந்திருந்தது. மழையடித்து ஓய்ந்ததுப் போல ஒரு மாத காலத்தில் எல்லாமே மாறிப் போனது. “கல்யாண நேரம் வந்துட்டா கட்டி வச்சாலும் நிக்காது..“ என்றாள் மாமியார். “எம்மவன் இருந்து செய்ய வேண்டிய தேவை.. குடுப்பின இல்லாமப் போச்சு.. நான் நடஒடயா இருக்கும்போதே முடிச்சு வுட்டுட்டா நிம்மதியா போய் சேந்துடுவன்..“ என்றார் மாமனார். அவர்தான் பேத்திக்கு வீட்டு வேலைகள் கற்று தந்து விட்டு வருமாறு மருமகளை இங்கு அனுப்பியிருந்தார்.

மகள் திரும்பிச் சென்று கதவை தாழிடும் சத்தம் கேட்டது. கைகளை ஆட்டி  ஆட்டி தாழிட்டதில் கண்ணாடி வளையல்கள் சன்னமாக சத்தமிட்டன. இவள் கூட தனது திருமணத்தின்போது கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். ஒரு வருடத்திற்குள் டைஃபாயிடு காய்ச்சல் அவனை பிரித்து அழைத்து போகும்போது கண்ணாடி வளையல்கள் உடையாமல் மிச்சமிருந்தன. முற்றத்தில் காற்றாட படுத்து உறங்கும் பெருசுகளுக்கு வளையல்களின் ஓசை கேட்காது என்று  திட்டவட்டமாக தெரிந்தும் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்கச் சொல்வான். “அவுத்து அவுத்து போட்டா வளவி ஒடைஞ்சுடும்..“ என்பாள் சிறுமியாய். அவள் காலத்தில் பதினேழு வயதில் சிறுமியாகதான் இருக்க முடிந்தது. பிறகும் கூட அதிகமாக வளர்ந்து விடவில்லை.  குடும்பச்சுமையை கை மாற்றி விடாத மாமியாரிடம் ஏவலாக பணியாற்றுவதில் இதுவரை அவளுக்கு விமர்சனம் ஏதும் இல்லை. மகளை போல நோகாமல் நடப்பதும் தாழிடுவதும் அவளுக்கு வராது. அதனால்தான் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்க சொல்கிறான்.

“கண்ணாடி வளவின்னா ஒடஞ்சுதான் போவும்..” என்பான். சொல்வானே தவிர வளையல்களை அவிழ்த்து வைக்கும் நேரம் வரை கூட அவனுக்கு பொறுமை இருப்பதில்லை. அவன் கைகள் அதீதமான சுதந்திரத்தோடு அவள் உடலில் எதையோ தேடுவதைப் போல அங்குமிங்கும் நகர்ந்து அலையும். பின்புறமிருந்துக் கட்டிக் கொள்வான். புறங்காதில் படு ஆவேசமாக முத்தமிடுவான். அவனின் ஆவேசம் பிடித்திருந்தாலும் சில சமயங்களில் உடல் தாக்கு பிடிக்க முடியாமல் சோர்ந்துப் போகும். இதை அவனிடம் வெளிப்படுத்துவது தவறு என்று வீட்டு பெண்கள் அவளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார்கள். அவளின் சிறு எதிர்ப்பு கூட அவனை கிளர்ந்தெழுப்பும். அழுத்தமாக இறுக்கிக் கொள்வான். கழுத்தடியில் குறுகுறுத்து நெளிவது போலிருக்கும் அவளுக்கு இரண்டொரு வளையல்கள் அப்படி உடைந்ததுதான்.. பகல் நேரங்களில் யாருமில்லா தருணங்களில் பாய்ந்து வந்து அவள் கைகளை பிடித்து முகத்தை திருப்பி முத்தமிடுவான். அப்போதும் இரண்டொரு வளையல்கள் உடைந்திருக்கின்றன.

“தகப்பனில்லாத புள்ள.. ஏதோ இந்த தாத்தன் எனக்கு தெரிஞ்சமுட்டும் வளத்திருக்கேன்.. கம்னாட்டி வளத்தப் புள்ளன்னு நாக்கு மேல பல்ல வச்சு பேசிப்பிட கூடாதேன்னுதான் இத சொன்னேன்..“ என்றார் மாமனார் அவள் மகளை பெண் பார்க்க வந்த அன்றே.

”ஆளும் பேருமா இம்புட்டு பேரு இருக்கீங்க.. தப்பாவா வளத்திருப்பீங்க..” என்றார் இவளின் சம்பந்தி. ஆண் சம்பந்தி மட்டும்தான். பெண் சம்மந்தி இறந்துப் போயிருந்தாள். பெண்ணில் ஒன்று.. ஆணில் ஒன்றுமாக இரு வாரிசுகள். பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட மகனுக்குதான் இவளின் மகளை பெண் கேட்டு வந்திருந்தனர். சம்பந்தி நல்லமாதிரிதான் என்று எண்ணிக் கொண்டாள். “பொம்பளங்க இல்லாத வீடு.. ஒங்க மருமகளை கொஞ்ச நாள் அனுப்பி வச்சீங்கன்னா எம்மருமகளுக்கு வீட்டு வேலயெல்லாம் கத்துக் குடுத்துடுவாங்க..“ என்று இவளின் மாமனாரிடம் அனுமதி வாங்கியதே சம்பந்திதான். இவள் வந்ததும் அவர் தன் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள். சுத்தமாக துாக்கம் கண்களிலிருந்து நகர்ந்திருந்தது. கழுத்து குறுகுறுத்துக் கிடந்தது. கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. மீ்ண்டும் படுக்கையறை  கதவை திறக்கும் ஒலி. சட்டென்று படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இம்முறை மாப்பிள்ளை. திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். அதற்குள் “ஒங்கள அத்தைன்னு சொல்றதா.. அக்கான்னு சொல்றதான்னுதான் கொழப்பமாயிருக்கு..“ என்று கிண்டலடிக்கும் அளவுக்கு பழகி விட்டிருந்தார். கண்களை மூடியிருந்தாலும் மருமகன் சங்கோஜமாக நகர்வதை அவளால் உணர முடிந்தது.

இவளின் கணவன் கூட முற்றத்தை கடப்பதற்கு இப்படிதான் சங்கோஜப்படுவான். ஒரு முறை என்பது சற்று இயல்பாக இருக்கும். இரண்டாவது முறையாக முற்றத்தைக் கடந்து கொல்லைக் கதவைத் திறக்கும் போது அந்த ஒலியே அவனின் தயக்கத்தை வெளிப்படுத்தும். அவனாவது பரவாயில்லை. அவள் அறையிலிருந்து நகரவே சங்கடப்படுவாள். உள்ளாடைகளை கிணற்றடியின் பின்புறத்திற்கு கொண்டு சென்று துவைப்பாள். இல்லையெனில் நீர் போகும் பாதையிலிருக்கும் துளசிச் செடி அதனை உள்வாங்க வேண்டியிருக்கும். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென்று துவைப்பாள். அப்போதெல்லாம் கணவன் மீது செல்ல கோபம் வரும். அதை அவனிடம் ஒருநாள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இவளை போலின்றி மகள் ஒரு மாத காலத்திற்குள் கணவனிடம் நன்றாக பழகி விட்டாள். அடித்துப் பேசுவதும், தொட்டு விளையாடுவதுமாக இருவரும் இயல்பாக இருப்பதைப் பார்ப்பதில் இவளுக்கு திருப்தியாக இருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு பின்பக்கம் ஏதோ வேலையிருப்பதுப் போல சென்று விடுவாள். அப்படிதான் பக்கத்து வீடுகளில் சிறு பழக்கம் ஏற்பட்டதும். ஒருமுறை பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டுப் பெண் உறைமோர் கேட்க போக, அவசரமாக உள்ளே நுழைந்தவள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சட்டென்று நகர்ந்து பின்பக்கம் வந்து விட்டாள். ஆடி மாதம் பிறக்கப் போகிறது. எப்படி பிரிந்திருப்பார்களோ.. என்று எண்ணிக் கொண்டாள்.

அவளுக்கும் தலை ஆடி வந்தது. மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் புது துணிமணிகள் எடுத்து வந்திருந்தனர் அவளின் பெற்றோர்கள். பிறந்த வீட்டுக்கு செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் கணவனுக்கும் மனைவியை அனுப்ப எண்ணமில்லை. முதல் நாளிரவு இரண்டு பேருமே பிரியப் போகும் ஒரு மாத காலத்தை எண்ணிக் கொண்டே அருகருகே படுத்து இரவை கழித்திருந்தனர். “மாசம் முழுக்கன்னா எங்கம்மா ஒண்டியாளா சோறாக்க செரமப்படும்.. பதினெட்டு முடிஞ்சதும் அவள அனுப்பி வுட்டுடுங்கத்தே..“ என்றான் கிளம்பும்போது மாமியாரிடம். ஆனால் அதற்கு தேவையேயின்றி பதினைந்தாவது நாளே இறந்து போனான். மகள் அப்போதுதான் உருவாகியிந்தாள். அவனின் இறப்புக்குப் பிறகு அவளை யாரும் தொட்டுப் பேசியதேயில்லை. காய்ச்சல்.. தலைவலி.. என்று படுத்தாலும் மாத்திரை தலைமாட்டில் தயாராக இருக்கும். யாருடைய தனிப்பட்ட விருப்பமும் சாப்பாட்டில் பிரதிபலிப்பதில்லை. ஆனாலும் வெளியூருக்கு போகும் தருணங்கள்தோறும் மாமியாருக்கு பிடிக்கும் என்று மாமனார் சர்க்கரைப்பாகு பூத்த பாதுஷா வாங்கி வரத் தவறியதேயில்லை.  
  
எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. “அசந்து துாங்கீட்டிருந்தியா.. அதான் ஒன்ன எழுப்பாம நானே காபி போட்டுக் கொண்டாந்தேன்..” என்றாள் மகள் கட்டிலருகே வந்து நின்று.

நேரம் தாழ்த்தி எழுந்ததில் சற்றே குற்றவுணர்வுத் தோன்ற வேகமாக கழிவறையை நோக்கி நடந்தாள் அவள்.

“அப்டியே பல் வௌக்கீட்டு வந்துடும்மா.. காபி ஆறிடும்..” முதுகுபுறமாக மகளின் குரல் கேட்டது.

“சரி..” முகத்தில் வழிந்த எரிச்சலை சில்லென்ற நீரால் கழுவித் தள்ள முயற்சித்தாள் அவள்.      


***

No comments:

Post a Comment