Search This Blog

Tuesday, 16 May 2017

ஆறாவது விரல்

செப்டம்பர் 2015 தாமரையில் வெளியானது

நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வெளிச்சம் பரப்பிய சூரியன் சாரலுக்கு வெட்கி எங்கோ நகர்ந்து விட கூரைகளற்றுப் போன உயர்மரங்களுக்கு கருமேகங்கள் மேற்புற கவசமிட்டன. காற்றுக்கும் அவனின் மேற்சட்டைக்குமானப் போராட்டத்தில் சட்டை விலகி காற்றுக்கு வழிவிட்டு உப்பலாகிப் போனது. சற்றே தொளதொளத்த முழுக்கால்சட்டை வம்புச் செய்யும் மனமின்றி காற்றின் போக்குக்கு தன்னை அனுசரித்துக். கொண்டதை படபடப்பாக வெளிப்படுத்தியது. சாரல் அடர்வாகி மழையானதில் காற்று ஈடுக்கொடுக்க முடியாமல் நகர்ந்து விட ஈரமான உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கியது

ஜீப்பை நோக்கி மெதுவாகவே நடந்தான் அவன். கியர்ராடில் ஒரு கையும் ஸ்டியரிங்கில் ஒரு கையுமாக வைத்தவனுக்கு கிளம்ப மனமின்றி போனதில் சாவியை திருகி இன்ஜினை அணைத்தான். கைகளைக் கட்டிக் கொண்டு ஆசுவாசமாக பார்வையை வெளியே செலுத்தினான். காட்டு ஓடை அது. நெல்லிக்கனிகளைச் சாக்குப்பையிலிருந்து சிதற விட்டதுப் போல கூழாங்கற்கள் விதவிதமாக அளவுகளில் ஓடையை நிரப்பியிருந்தன. மிக மெல்லிய ஓட்டத்தில் ஆழமற்று ஸ்படிகம் போல் தெளிந்திருந்தது ஓடை நீர். அதில் கண்ணாடியாய் தெரிந்த மணல் விரிப்பில் சிறு மீன்கள் அங்குமிங்கும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடின. கரிய சிறிய மீன்கள். கைக்கு அகப்பட விரும்புதில்லை. அவன் அமர்ந்திருந்த பாறை மழையில் நனைந்திருந்தது. கீழே ஒடுங்கலாகவும் மேலே பரந்துமிருந்த அந்தப் பாறை கால்களை தொங்க விட்டுக் கொண்டு  உட்கார ஏதுவாக இருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.


தோழர்களுடன் சுற்றுலா வந்ததில் அறிமுகமான இந்த இடம் இத்தனை ஈர்ப்பாக மாறும் என்று அப்போது அவன் நினைத்திருக்கவில்லை. அலுவலக நாட்களை தேனியிலும் வாரக் கடைசி நாட்களை இங்குமாக கழிக்க ஏதுவான பயணத்துாரமும் மனவோட்டமும் அமைந்துப் போனதில் ஊருக்குப் போகும் நாட்கள் குறைந்துப் போயின.

சென்ற முறை ஊருக்கு செல்லும்போது தாத்தா கோபமாக கத்தினார். “ஓய்வு ஒளிச்சலில்லாம அப்டியென்னா மயிறு வேலை பாக்ற..? வுட்டு தொலச்சுட்டு இருக்கற காடுக்கரையப் பாத்துக்கிட்டாலே தலமொறைக்கும் தாங்கும்.. ஒதவாக்கர உத்தியோகம்...” நிலம்நீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் பேரன் உத்யோகம் பார்ப்பதில் தாத்தாவுக்கு விருப்பமிருப்பதில்லை. குரலும் உடம்பும் இன்னமும் திடகாத்திரம். “வைரம்பாஞ்சக்கட்டை..“ என்று கணவனைக் குறித்து அலட்டிக் கொள்ளும் அப்பத்தாவுக்கு பேரனைப் பற்றி வேறுவிதமானக் கவலை வந்து விடும். அம்மாவையும் அதில் சேர்த்துக் கொள்ளும். ”கண்ணாலப் பேச்செடுத்தா புடியே கொடுக்க மாட்டேங்கிறானே இந்தப்பய.. எதும் வெவகாரம் இருக்குமோ..? அம்மாவிடம் கிசுகிசுக்கும். ”சின்னவனே.. கண்ணாலம்ன்னா எங்களுக்கெல்லாம் பத்திரிக்க குடுக்க மறந்துடாதடா..” அப்பாவுக்கு எல்லாமே விளையாட்டுதான்.

”செலவு மிச்சம்னு இருப்பியா.. நீ வேறண்ணே.. பத்திரிக்க.. அதுஇதுன்னுட்டு..” என்பாள் அத்தை. அண்ணனின் விளையாட்டுக்கு ஏற்ற ஜோடி இவள்தான். கலகலத்த சுபாவி. ”அவனை வம்பிழுக்கிலேன்னா ஒனக்கு துாக்கம் வராதே..” என்பாள் அம்மா அத்தையிடம். உள்ளுரிலே திருமணம் செய்துக் கொண்டவள் அத்தை. குடும்பம் பார்க்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் பிறந்த வீடே கதி அவளுக்கு. பெரியக்காவின் மகள்தான் அண்ணி என்பதோடு இருவரின் ஒத்த வயதும் நாத்தியையும் அண்ணியையும் இன்னும் ஒட்டியே வைத்திருந்தது.

ஓரோரு வருட வித்யாசத்தில் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி.. ஆறு விரல் அதிர்ஷடக்காரன்.. என்ற கூடுதல் தகுதிகள் இவனுக்கு பிறப்போடு சேர்ந்துக் கொள்ள அம்மாவிடம் செல்லமும் கூடுதல்தான். துாங்கும் நேரம் தவிர்த்து மீதமான நேரங்களில் அவள் இடுப்பே இருப்பிடம். ”அய்யய்யய்யே.. இந்தப் பய பொறந்ததுலேர்ந்து இடுப்பே கழண்டுல்லப் போவுது…” செல்லமாக அலுத்துக் கொள்வாள் அம்மா. “செத்த நேரம் இந்தப் பயல துாக்கீட்டுப் போடீ.. அவள ஒரு வேல பாக்க வுட மாட்டேங்கிறான்..“ அப்பத்தா சாடையாய் மகளிடம் கண்காட்ட அத்தை அவனை இடுப்பிலிருந்து பிரித்து தன் இடுப்பில் ஏற்றிக் கொள்வாள். மூன்று வயதிற்கு ஏற்ற கனம். “அண்ணியோட இடுப்ப ஒடிச்சுப்புடுவான் இந்தப்பய..” என்றாள். 

வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் கதைகளால் நிறைத்து விடுவாள் அத்தை. ஒரு பேச்சும் இரண்டு சிரிப்புமாக நகர்வதில் கதைகள் நீளுபவையாக இருக்கும். அந்த இடைவெளி அவனுக்குத் தாயை நினைவூட்டி விடும். “அத்த.. அம்மாட்ட.. அம்மாட்ட போறன்..“ அனத்தத் தொடங்கி விடுவான்.  ”எல.. அம்மாட்ட என்னாத்தடா வச்சிருப்ப.. இங்க அத்தைமவளுங்க ரெண்டு பேரு இருக்காளுங்க.. பாத்துக்கிட்டு இருப்பியா.. அம்மா.. அம்மான்னுட்டு ” இழுத்து நொடித்துக் கொஞ்சுவாள். விளையாட்டுக் காண்பிப்பாள். அதற்கும் ஆயுள் குறைவுதான். மீண்டும் “அத்தே.. அம்மாட்ட.. அம்மாட்ட..” என்பான். குரல் அழுகையை நெருங்கியிருக்கும். அத்தையின் முந்தானையைப் பிடித்து இழுப்பான்.

“தம்பிக்கு.. அத்தை.. இப்ப.. ஒரு.. நெசக்கதை.. சொல்லப் போறேனேஏஏ..” வார்த்தை வார்த்தையாக உச்சரித்துப் பீடிகைப் போட்டாள் அத்தை. அம்மாவைப் பார்க்கப் போகும் குஷியில் கதைக் கேட்கப் பிடித்து விடும் அவனுக்கும்.

”மூணு வருசத்துக்கு முந்தி நம்ப ஊருல நெறயா நெல்லு வௌஞ்சுச்சா.. ஊர்சனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.. குருவிங்களுக்கும் கொண்டாட்டந்தான்.. கேக்கறல்ல தம்பி.. ஊன்னு சொல்லுய்யா.. அப்பதான் அத்த கதை சொல்லுவேனாம்..”
“ம்ம்ம்.. அத்த அம்மாட்ட..“

”அதான் கூட்டிட்டு போறேன்ல்ல.. கதய கேளுய்யா.. நெல்ல அரச்சு அரச்சு வீட்டுல அரிசு மூட்டையா சேர்ந்துப்போச்சு.. ஊரு பூரா தவுடா நெறஞ்சுப் போச்சு.. மாட்டுக்கெல்லாம் கரச்சு கரச்சு ஊத்துனாலும் தவுடு கொறயவேயில்ல.. ரோடு வீடெல்லாம் தவுடு பறந்து ஒடம்பெல்லாம் அரிப்பெடுக்க ஆரம்பிச்சுடுச்சு.. அப்பதான் வேத்து ஊரு பொம்பள ஒருத்தி வந்தா.. அவ கையில ஒரு ஆம்பளப் புள்ள... ஊன்னு சொல்லுய்யா..”

”ம்ம்ம்..”

”இந்தப் பயல வாங்கிக்கிட்டீன்னா எறைஞ்சுக் கெடக்கற தவுட்டெல்லாம் நான் வாரி எடுத்துட்டுப் போறேன்னு உங்கம்மாட்ட சொல்லுச்சு அந்தப் பொம்பள.. தவுடெல்லாம் தீர்ந்துப்போனா சரின்னுட்டு உங்கம்மாவும் சம்மதம் சொல்லிடுச்சு.. தவுட்ட எடுத்துக்கிட்டு ஒன்ன இறக்கி வுட்டுட்டு அந்தப் பொம்பளப் போயே போயிடுச்சு.. தவுடுப் போயி இந்த தம்பி வந்துட்டான் டும்.. டும்.. டும்..” அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள். “காகம் ஒன்று காட்டிலே.. தாகத்தினால் தவித்தது..“ என்பதுப் போல கதையை முடித்திருந்தாள் அத்தை. வீடு வந்து விட ”இந்தாடீயம்மா.. இந்தப் பயலப் புடிச்சுக்க.. வயுசு மூணாச்சு.. இன்னும் பால் குடிக்கிற பப்பா மாதிரி அம்மா.. அம்மான்னுட்டே கெடக்கான்..” டவுசரில் முட்டிக் கொண்டிருக்கும் பகுதியை கிள்ளி முத்தமிட்டாள். தனியேத் தொங்கும் அவனது ஆறாவது விரலை நீவி விடுவாள். மற்ற விரல்களை விடவும் பஞ்சுப் போன்றிருக்கும் அந்த விரல். வளர்ந்தவுடன் அறுவைச்சிகிச்சையில் நீக்கி விடலாம் என்று யாரோ சொன்னார்கள். தாத்தா குடையைத் துாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். தனியேத் தொங்கும் விரலைத் தொட்டான். மெத்தென்றுதான் இருந்தது… தவிட்டைத் தொடுவதுப் போல... இப்போதுக் கூட. எதிலும் ஒட்டாமல்.. கூடவே ஒட்டிக் கொண்டு.. அளவில் சிறியதாய்.. உபயோகமற்ற சதை பிண்டமாய்..

“ராசா வூட்டுக் கன்னுக்குட்டி.. நம்ப பரம்பரயில யாருக்குமே இந்த குடுப்புன இல்ல.. எங்க அய்யாவோட கூட்டாளியோட பங்காளி ஒத்தரு ஆறு வெரல்காரராம்.. வெவசாயத்துக்காரருதான்.. ஆனா இன்னிக்கெல்லாம் அவுக வூட்ட நிமிந்து பாத்தா களுத்துவலி கண்டுப்புடும்..” என்பாள் அப்பத்தா. ”அதானா சேதி.. அப்ப தவுடு போயீ லெட்சுமி வந்துச்சு.. டும்..டும்..டும்..” இவனை குறும்போடு ஓரப்பார்வைப் பார்ப்பாள் அத்தை. “பொறவு..? கொஞ்சநஞ்ச தவுடா துாக்கிக் குடுத்தோம்..” என்று அம்மாவும் கேலியைத் தொடர்வாள். “தவுட்டுக்கு கெடச்சப்பயலே..“ கோபமாகும் தருணங்களில் அண்ணன்காரன்களுக்கு வசைப்பாட வசதியாகி விடும்.

மலைகள் அண்மைப் பார்வைக்கு மரங்களாலும் துாரத்துப் பார்வைக்கு பனிப்படலமாகவும் தெரிந்தன. மழை பரவலாக பெய்ததில் ஓடை நனைந்திருந்தது. தெளிந்து நகரும் ஓடையின் நீர் மழையின் சடசடப்பில் இந்நேரம் கலங்கிப் போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு சற்று அயர்ச்சியைத் தந்தது. ஓடையின் ஆதிமூலம் எங்கோ துாரத்து அருவியிலிருந்தது. அருவிக்கு இது பாதையல்ல. நண்பர்களுடன் பயணம் வந்தது அந்த அருவிக்குதான். நெருங்கிப் பார்க்கும் ஆவலில் பாதையற்ற பாதையில் அன்று பயணித்தனர். சாரல் காற்று அருவியின் நெருக்கத்தைச் சொன்னது. குளிர்ந்து குழைந்திருந்த உடல்கள் ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுக்க அலுப்பின்றி பாறைகளுடே நடந்து மேலேறினர். மேலும்  முன்னேறவியலாதப்படி தடுப்புக் கட்டப்பட்டிருந்தது.

பாறைகளிலிருந்து குபுகுபுவென வெள்ளை நுரையைத் தள்ளிக் கொண்டு சீறலாகக் கீழேப் பாய்ந்துக் கொண்டிருந்தது அருவி. அருவி பிரம்மாண்டமானது. அழகானது. ஆனால் இறைச்சலானது. ஏகாந்தமற்றது. ஆற்று நீர் அமைதியாக ஆற்றைக் கடந்து விடும். கடல் நீர் ஆவேசமாக பதில்களற்றக் கேள்வியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். கிணற்று நீருக்கு தன் இருப்புக் குறித்து எந்தவித அக்கறையுமிருப்பதில்லை. டம்ளர் நீரோ செம்பிலிருக்கும் நீரோ ஒரு வரையறைக்குள்ளேயே தன்னை இறுத்திக் கொள்ளும். இவை எவற்றிலும் சேராத.. சேர்ந்துக் கொள்ளத் தோன்றாத ஆங்காரத்தோடு பீறிட்டு பெருமிதமாக பெரும் ஓசையோடு பயணிக்கும் அருவியை அன்றுதான் முழுமையாகப் பார்த்தான். தடுப்புக்கு அப்பால் அத்தனை தள்ளியிருந்தும் அதன் தெறிப்பு உடலை நனைத்துப் படபடக்க வைத்தது. நீரின் உத்வேகத்தில் மதர்த்துக் கிடந்தன பாறைகள்.

இவையெதிலும் தனக்கு சம்மதமில்லை என்பது போல படிப்படியாக அமைந்திருந்த பாறையிலிருந்து நிதானமாக வழிந்த நீர் பாறையின் போக்கிலேயே பாதையை அமைத்துக் கொண்டு வழிந்தப்படியே கீழிறங்கியது. அவர்கள் நின்றிருந்த பாறைகளில் கூட மெல்லியச் சரிகைக் கோடாக நீர் கசிந்துக் கொண்டிருந்தது. ஒற்றைக் கசிவென்றாலும் தனது தடத்தை பாறைகளில் கரையாக படிய வைத்து பாம்பாக நெளிந்து இறங்கிய நீர் இனமறியா சந்தோஷத்தை உண்டாக்கியது அவனுக்கு. இந்த ஓடைக் கூட அருவியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாடற்று தனக்கென கட்டமைத்தக் கொண்ட கூழாங்கல் சாம்ராஜ்யத்தோடு ஒதுங்கிக் கொண்டது அவனை வெகுவாக ஈர்த்திருந்தது. வாரக்கடைசிகளுக்காக தவமிருக்கத் தொடங்கிய அவனை அவைகளும் வரவேற்க தயாராகவே இருந்தது. தனக்கும் அவனுக்குமான இரண்டு மணி நேர சந்திப்பு போதாது என்பது ஓடைக்கும் புரிந்திருந்ததில் மழைக் குறைந்து நின்றேப் போனது.

ஜீப்பில் தயாராகக் கிடந்த ஜெர்கினை மாட்டிக் கொண்டான். மேற்புறம் மழையை தாங்கும் திறனும் உட்பாகம் குளிரைத் தாங்கும் தன்மையும் கொண்ட ஜெர்கின் அது. அதன் குல்லாவை இழுத்து தலையில் வழிய விட்டு தாடையில் முடிச்சுகளிட்டு அதை கட்டுப்படுத்தினான். கூழாங்கற்கள் கூட மேல்புறம் வழுவழுப்பும் பாசியேறி அடிப்பாகமுமாக ஓடை முழுக்கச் சிதறிக் கிடந்தன. மரங்களுக்கிடையே கிடந்த பெரிய கூழாங்கல்லொன்று புல் மேயும் மாடு ஒன்றின் முதுகையொத்திருந்தது.

மாட்டு வண்டிப் பயணம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அவித்துக் காய வைத்த நெல் மூட்டைகளோடு அரிசி மில்லுக்கு மாட்டு வண்டி புறப்படும்போது இவனும் கூடவே ஏறிக்கொள்வான். அசைந்து அசைந்துச் செல்லும் மாடுகளை ஹாய்.. ஹாய்..என்று விரட்டப் பிடிக்கும் அவனுக்கு. மில்லிலிருந்து அரிசியும் தவிட்டு மூட்டையுமாக வீடு திரும்பும்போது நெற்களத்தில் விளையாடிக் களைத்திருப்பான். அரவைக்கு கூலியாக கொடுத்ததுப் போக மீதமான தவிட்டு மூட்டைகளையும் அரிசி மூட்டைகளோடு ஏற்றிக் கொண்டு வண்டி ஊருக்குத் திரும்பும். அரிசி மூட்டையை வீட்டுக்குள்ளும் தவிட்டு மூட்டையை கொல்லைப்புறத் தாழ்வாரத்திலும் இறக்கி வைப்பது வரை வேலையாட்களின் பணி. அத்தையும் தனது மாடுகளை இதே தொழுவத்தில்தான் கட்டியிருப்பாள். “அந்த தவுட்டு சாக்கை செத்த அவுத்துக் குடுத்துட்டுப் போய்யா..” என்பாள் அத்தை வேலையாளிடம். ”தவுட்டுப்புளுதி ஒடம்ப அரிக்கும்.. நீ உள்ள போய்யா..” கூடவே நின்றுக் கொண்டிருக்கும் அவனையும் விரட்டுவாள்.

”இதான் தவுடாத்தே..” என்றான். ஆறு வயதிருக்கும் அவனுக்கு. கைகளுக்கு மிருதுவாக நெருநெருவென்றிருந்தது தவிடு.

”படிச்சு பெரிய ஆளாவ போறவன்ய்யா நீ.. ஒனக்கென்னாத்துக்குய்யா தவுடும் புண்ணாக்கும்..” கழனித் தொட்டிக்குள் போடும்போது பொத்தென்று உட்கார்ந்துக் கொண்டது தவிடு. புண்ணாக்கோடு கலந்து நடந்த மாடுகளின் களைப்பை ஆற்றுவாள் அத்தை.

அண்ணன்களுக்கோ வீட்டில் மற்றவர்களுக்கோ ஆறு விரல்கள் இருக்கவில்லை. உறவினர்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் கூட தேடிப் பார்த்திருக்கிறான். பள்ளி.. கல்லுாரி.. பணிப்புரியும் அலுவலகம்.. பயணிக்கும் இடம்.. என அவனது பார்வை விரிந்துக் கொண்டேப் போனாலும் ஆறுவிரல்காரர்கள் யாரும் அதற்குள் அகப்படவேயில்லை. இடதுக்கைச் சுண்டு விரலையடுத்து தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக விரல் போன்ற தோற்றத்திலான சதைத்துண்டு யாருக்குமே வாய்த்திருக்காது என்பது அவனுக்கு புரியும் நாட்களில் ஓடை அவனை தனக்குள் புதைத்து ஆசுவாசப்படுத்தியது.

ஒருநாள் புளியைக் கொட்டையோடு சப்பியதில் கொட்டையையும் சேர்த்து விழுங்கி விட பயந்து போனான். ”அய்யய்யே.. தம்பி வயித்துல புளியமரம் மொளைக்க போவுது..” அப்பா கிண்டலடித்தார். பயத்தில் அழுகை வந்தது அவனுக்கு. அன்று கனவில் அவன் தலையின் மீது முளைத்திருந்த புளியமரத்தில் காய்களைப் பறிக்கக் ஐந்து விரல்கள் கொண்ட கைகளால் கற்களை விட்டெறிந்தனர் அவனின் பள்ளித்தோழர்கள். முகமறியாதப் பெண்கள் கூட குழம்புச் சட்டியோடு புளியம்பழம் பொறுக்க வந்தனர். குனிந்துப் பொறுக்கும் அந்தக் கைகளில் யாருக்குமே ஆறாவது விரல் இருக்கவில்லை.

மழை நின்று கருமேகங்கள் நகர்ந்திருந்தன. இருந்தாலும் பொழுதை ஒப்படைத்து விட்டுப் போக சூரியன் தயாரானதில் காடு மங்கிக் கொண்டே வந்தது. அந்திப்பொழுதும் பெய்த மழையும் காற்றை குளிர்வித்திருந்தது. சூழலை அனுபவிக்கும் ஆவலில் கைகளிரண்டையும் ஜெர்கினுக்குள் நுழைத்தப்படியே நடந்தான். உடலைத் தழுவிக் கொள்ளும் காற்றும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலியும் குதுாகலப்படுத்த வாயைக் குவித்து விசிலடித்தான். நடையில் சிறிய துள்ளல் இருந்தது.  

தலைக்கு மேலே பறவைக் கூட்டம் ஒன்று பறந்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்ததுப் போன்ற ஒழுங்கில் சீரான வேகத்தில் ஏதோ ஒரு நியதிக்கு கட்டுப்பட்டதுப் போல பறந்துக் கொண்டிருந்தன. இவைகளுக்குள் பேதமிருக்காது. எல்லாமே ஒரே இனம். காக்கைக் குஞ்சுகளுடன் வளரும் சின்னக் குயிலின் நிலை அதன் தாயின் துரோகத்தால் விழைவது. கையாலாகாதக் கோபத்தில் எழும்பிக் கொண்டேயிருக்கும் அதன் குரல் ராகமாக மாறிப் போகிறது. அதன் தப்பிக் கிடக்கும் தாளங்கள் யாருக்கும் புரிவதேயில்லை. அதனால்தான் காலங்காலமாக எழும் குயில்களின் ஓசை அதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கி விடவில்லை. இந்த சூட்சுமத்தை அறிந்தவனுக்கு அமைதிக் காப்பது சுலபம். அவனுக்கு அது நன்றாகவே கூடி வருகிறது. “உம்மணாமூஞ்சிப்பய..” என்பாள் அம்மா. தொட்டதற்கெல்லாம் அத்தைப் போலவே சிரிக்கும் அண்ணன்கள் கூட இவனின்  கோபத்திற்கு அஞ்சியே இருந்தனர். இவனின் சுபாவத்துக்கு வம்சத்தில் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தனர் தாத்தாவும் அப்பத்தாவும். அது கிடைக்கவேப் போவதில்லை என்று இவனுக்குத் தெரியும். “எங்கடீ அந்த மூஞ்சுரக் காணாம்..“ என்று தான் சொல்லும் துணுக்குக்கு தானே சிரித்துக் கொண்டே உள்ளே நுழைவார் அப்பா.

பொலபொலத்தச் சோறை ஆவிப் பொங்க பரிமாறும் அம்மாவின் விரல்கள் உருண்டு திரண்டிருக்கும். அவன் சிறுவனாக இருக்கும்போது நீண்டிருந்த விரல்கள் இப்போது சதைப்பற்றால் சிறிது தடித்திருந்தன. எப்போதோ அணிந்த மோதிரம் அவளின் மோதிர விரலை பள்ளமாக்கியிருந்தது. வலதுக்கையின் கட்டைவிரல் நகம் மட்டும் வெங்காயம் உரிப்பதற்கு ஏதுவாக பெரிதாக வைத்திருப்பாள். பத்து விரல்களும் சோற்றுப்பானையை பிடிப்பதும் பரிமாறுவதுமாக பரபரத்து செயலாற்றும்போது “போதும்“ என்று பாதிச் சோற்றிலேயே எழுந்து விடுவான். தாழ்ந்து பரவியிருந்தப் கொய்யாமரத்தின் கிளை அவ்வப்போது அவனுக்குப் படுக்கையாகி விடும். கிளை முதுகுத்தண்டைத் தாங்கிக் கொள்ள கால்கள் இரண்டையும் இருப்பக்கத் தரைகள் தாங்கியிருக்கும். கோபம் வரும் நேரங்கள் இப்படியாகவும் கழியும் அவனுக்கு. மாடியிலிருக்கும் ஒற்றை அறையும் கைக்கொடுப்பதுண்டு. “அகராசிப்புடிச்சப்பய...” மகனின் கோபம் மனசுக்குப் பழகிப் போனதில் அம்மா நகர்ந்து விடுவாள். அம்மாவின் முதுகு கோபத்தை நீட்டிக்க வைக்கும்.  மேய்ந்துக் கொண்டிருக்கும் கோழியை குறிப் பார்த்து அடிப்பான்.

இப்போதுக் கூட இங்கு வாய்க்காத வாரக் கடைசிகள் கோபத்தை வரவழைத்து விடுகிறது அவனுக்கு. அடுத்த வாரம் அவசியம் வந்தேத் தீர வேண்டுமென்ற கட்டளையை ஊரிலிருந்து பெற்றிருந்தான். கூழாங்கல் ஒன்றின்  மறைவிலிருந்து எட்டிப் பார்த்தத் தவளையை சிறிய கல் ஒன்றை எடுத்து குறி வைத்து அடித்தான். அது ஒரு நொடியில் விலகி கல்லுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொண்டது. மீண்டும் கல்லெடுத்து வீசினான். மீண்டும் மீண்டும் வீசினான். தவளை தப்பி விட்டது. காலில் தட்டியக் கல் எகிறிப் பறந்தது. நேரம் நழுவியது. எகிறி விழும் கற்களின் துாரம் அதிகரித்துக் கொண்டேப் போனது.

ஜீப் தொலைவில் நின்றிருந்தது. அதை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னால் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலேயே பெண்களும் ஆண்களுமான ஒரு சிறுக் கூட்டம் என கணிக்க முடிந்தது அவனால். சற்று துாரத்தில் நின்றிருந்த இனோவா கார் அவர்களுடையதாக இருக்கும். பேச்சும் சிரிப்பும் நெருங்கி வந்தன.

அவனின் வீட்டிலும் குலதெய்வம் கோயிலுக்கு போவதென்றால் இரண்டு வேன்களுக்கு கும்பல் காணும். அப்பா.. அம்மா.. அத்தை.. அவளின் மூன்று மகள்கள்.. அண்ணன்கள்.. அப்பத்தா.. தாத்தா.. பங்காளி வீட்டு ஆட்கள் என பெருங்கூட்டம் கூடி விடும்.  பேச்சும் சிரிப்பும் கட்டுச்சாதமுமாக கிளம்பும் கும்பலிடம் திரும்பி வரும்போது புளியோதரை மட்டுமே தீர்ந்திருக்கும். “உம்மாணாம்மூஞ்சி மாமனாம்.. உத்துப்பாத்தா பீமனாம்..“ சாப்பிடுகையில் வயதில் மூத்த அத்தை மகள்கள் அடிக்கும் கிண்டலில் இவனுக்கு கோபம் எகிறி அடிக்கும். பேச்சு நின்று விடும். “ஏண்ணீ.. வாங்குனதுதான் வாங்குனே.. ஒரு பொட்டப்புள்ளயா பாத்து வாங்கியிருக்கக் கூடாது.. வூட்டு வேலைக்காது ஆயிருக்கும்.. ஆன்னா ஊன்னா இந்தப்பய பொணங்கீட்டு வெளியில்ல ஓடிடுறான்..” அத்தை வம்பிக்கிழுப்பாள்.

அவர்கள் கடப்பதற்காக நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினான். ஆணும் பெண்ணுமாக இருவர்.. கிட்டத்தட்ட இவனின் வயதையொத்தவர்கள்.. இரண்டு மூன்று சிறுவர்கள்.. இரு ஜோடிப் பெரியவர்கள் என கும்பல் இவனைக் கடந்துச் சென்றது. வயதானவர்கள் களைப்பேறியதுப் போல நடந்தனர். கடைசியாக சென்றப் பெண்மணியைத் தொடர்ந்து நடந்தான் இவனும். அந்தப் பெண்மணி சற்றே தளர்ந்திருந்த முந்தானையை உதறி சொருகும்போதுதான் அந்த விரலைப் பார்த்தான். தனித்து ஆடியது அந்த ஆறாவது விரல் தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக.

மழை நின்றதில் ஓடை நீர் தெளிந்திருந்தது. குனிந்து நீரை அள்ளி எடுத்து வருடலாக முகத்தைக் கழுவிக் கொண்டான். பிறகு கைகளை இணைத்து குவித்து நீரை அள்ளிப் பருகினான்.

மெலிதானப் பனி ஜீப்பின் மீது  கவிழ்ந்திருந்தது நிறைவாக.


***





                      

No comments:

Post a Comment