Search This Blog

Friday 26 May 2017

அழகிகள்

டிசம்பர் 2015 தாமரையில் வெளியானது

பெண்கள்.. தொலைக்காட்சியின் திரையெங்கும் பெண்கள்.. மிக மிக ஒடிசலான பெண்கள்.. மிக மிக குறைந்த உடையில் மிக அதிக ஒப்பனையில் மிக உயர்ந்த குதிகளைக் கொண்ட காலணிகளை அணிந்து கால்களை பின்னி பின்னி நடந்தார்கள். ஒயிலாக தனது பின்புறத்தை அசைப்பதற்கு எத்தனை நாட்கள் பயிற்சி தேவைப்பட்டதோ தெரியவில்லை. விருதுகளில் செதுக்கியிருக்கும் பெண்ணுருவங்கள் போல நெளிவாக.. நளினமாக.. யார் பெற்ற பெண்களோ..?. இது வெறும் ஒத்திகை நிகழ்ச்சிதான். அதையும் நேரலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். காமிராக்கள் அவ்வப்போது மொய்த்துக் கிடந்த கும்பலை ஊருடுவி, மீண்டும் அழகிகளில் நிலைத்தது. கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலுமே ஏதோ ஒருவகையில் அழகிப் போட்டி பற்றிய செய்திகள் ஓடிக் கொண்டேயிருந்தன. “எதெதுக்கு முன்னுரிம குடுக்கறதுன்னு வெவஸ்தயே கெடையாது இவனுங்களுக்கு.. கல்லா ரொம்புனா போதும்.. பார்த்தா தானே நீ காட்டுவே..“ பற்றிக் கொண்டு வந்தது கார்த்திகேயனுக்கு. பொட்டென்று தொலைக்காட்சியை அணைத்தான்.

மயூரநாதனிடம் உடனடியாக பகிர்ந்துக் கொண்டால்தான் தேவலை என்றிருந்தது அவனுக்கு. கரூர் டிவிஷனில் வேலை செய்பவன். ஒரே ரிங்தான் அடித்திருக்கும். மறுமுனை உடனே எடுக்கப்பட்டது. சொல்லி வைத்ததுப் போல மயூரநாதனும் அதையே ஆரம்பித்தான்.  

”உலக அழகி போட்டியெல்லாம் எப்படிப்பா போய்ட்டுருக்கு ஒங்க சென்னையில..?”


”அந்த கண்றாவிய ஏன் கேக்கற..? டிவி பாக்றீல்ல.. சேனலுக்கு சேனல் இதே எழவைதான் காட்றான்.. எல்லா பயலுங்களுக்கும் நாக்க தொங்கப் போட்டுட்டு இதைப் பத்திதானே பேசறான்.. வர வர இவனுங்க அலப்பற தாங்கல.. ஒலகத்துல ஆயிரம் பிரச்சனை ஓடுது.. அழகிப்போட்டிய கொண்டாந்து முன்னுக்கு வைக்கறானுங்க.. மீடியாக்காரன்தான் இந்த அலும்பு பண்றானுங்கன்னா நேரத்த வீணடிக்கிறமேன்னு குத்த உணர்ச்சியே இல்லையே இந்த ஜனங்களுக்கு..? தெருவுல இறங்கி நடந்துப் பாரு.. எல்லா வீட்டிலயும் இந்த எழவுதான் சத்தமா ஓடிக்கிட்டுருக்கு..” அங்கலாய்ப்பாக பேசினான் கார்த்திகேயன்.

இயல்பான விசாரிப்புகளுக்கு பிறகு பேச்சு திரும்பவும் செய்திகளுக்கு தாவியது. இருவரும் சென்னையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் ஒன்றாக பணிப்புரிந்த காலந்தொட்டு வளர்ந்த பழக்கம் இது. நாட்டு நடப்புகளை நடு அலுவலகத்தில் கொட்டி ஆராய்வதில் அலுவலகத்தில் இருவருக்குமே அறிவு ஜீவி இமேஜ் கிடைத்திருந்தது. மயூரநாதன் கரூரூக்கு விருப்ப மாறுதலில் சென்ற பிறகு இடைவெளி ஏற்பட்டாலும் அலைபேசியில் இது தொடர்ந்துக் கொண்டுதானிருந்தது.
“ஹார்வர்ட் யூனிவர்சிடியில தமிழ் சேர் அப்ரூவ் ஆயிருக்கு பாத்தியா..?”  

”இதெல்லாம் என்னைக்கோ வந்திருக்க வேண்டியது..“

”இப்போவாது வருதேன்னு சந்தோஷப்படு.. அங்க சேர் கிடைக்கணும்னா செல்வாக்கான அரசு.. இல்லேன்னா செல்வாக்குள்ள ஆளுங்க இருந்தாதான் சாத்தியம்னு சொல்வாங்க.. அமெரிக்காவுல இருக்கற ரெண்டு தமிழ் டாக்டர்ஸ் நல்ல முயற்சி எடுக்கிறாங்க...”

”வாஸ்தவந்தான்.. பிழைப்புக்காக வெளிநாடு போனாலும் தமிழ் மேல இத்தனை அபிமானம் வச்சு செயல்படறது ரொம்ப பெரிய விஷயந்தான்.. தனிப்பட்ட ஆளுங்க முயற்சி பண்ணி சேர் வாங்கறதுல உலக அளவுல தமிழ் மூணாவது மொழியாம்.. பெருமையா இருக்குல்ல.. நல்லது நடந்தா சரி..”

பேச்சு தொட்டுதொட்டு விளையாட்டுக்களம் வரை அலசிய பிறகுதான் கார்த்திகேயனுக்கு மனைவி ஊரிலில்லாதது ஞாபகம் வந்தது. இன்று வந்து விடுவாள். சின்ன சின்ன வேலைகளை செய்து வைத்து மனைவியை அசத்த வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. இரண்டு நாளாக சேர்ந்துக் கிடந்தக் குப்பையை கூட்டி வெளியே எறிந்தான். சமையலுக்கு தேவையான வெங்காயம் நறுக்கி வைத்தான். அழுக்குத் துணிகளை பொறுக்கியெடுத்து மெஷினில் சுழல விட்டான். சிக்கன் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் மனைவி வந்தவுடன் செய்ய வசதியாக இருக்கும்.

கோழிக்கறிக் கடை அவன் வீட்டிக்கெதிரிலேயே இருந்தது. புதனும் ஞாயிறும் நல்ல ஓட்டமிருக்கும். TATA ace வண்டியில் குக்.. குக். குக்.. என சன்னமாக சத்தமிட்டுக் கொண்டு கோழிகள் அதிகாலையிலேயே வந்திறங்கி விடும். அழுக்குப் படிந்த வெண்iமை நிறத்தில் ஒரே மாதிரியான கோழிகள்.  அவை நிற்குமளவுக்கு மட்டுமே உயரம் கொண்ட தட்டையான கூண்டுகள். ஒன்று மேல் ஒன்றாக அடுக்கப்படுவதில் நிறைய கூண்டுகளுக்கு இடமிருக்கும். மூன்று அடுக்கு கோழிகள் வாங்கிக் கொள்வார் கோழி கடைக்காரர். காலையிலேயே கூட்டம் வரத் தொடங்கி விடும். இடுப்பில் ஏப்ரான் துணியோடு கூண்டிலிருக்கும் கோழியொன்றை இலாவகமாக பிடிப்பார். பதைத்து நகரும் மற்றக் கோழிகள் தன் முறை வரும் வரை கூண்டை கொத்துவதும் தீனி தின்பதுமாக இருக்கும். அறுபடும் கோழி அடித் தொண்டையிலிருந்து அய்யோ.. அய்யோ.. என்று கதறுவதை அவனால் வீட்டிலிருந்தே கேட்க முடியும். வாடிக்கையாளரிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே அதைக் கொன்று.. எடைப்போட்டு.. தோலுரித்து.. துண்டுகளாக்கி நெகிழிப் பையிலிட்டு பவ்யமாக நீட்டுவார் கடைக்காரர்.

வீட்டு வாசற்படியிலிருந்தே விரலை மடக்கி விரித்து கடைக்காரரிடம் சாடை காண்பித்தான் கார்த்திகேயன். ஆட்காட்டி விரலை நீட்டிக் காண்பித்தால் ஒரு கிலோ கறியை இரண்டு மூன்று கோழிகளுக்கான தலைகள் மற்றும் கால்களோடு கருப்பு நிற நெகிழிப் பையில் கொடுத்தனுப்புவார். இடது ஆட்காட்டி விரலை வலது ஆட்காட்டி விரலால் வெட்டி காண்பித்தால் அரை கிலோ கறி மட்டும் நெகிழி பையில் வரும். அதற்கு குறைந்து வாங்கியதில்லை.

வீடு சுத்தமாக இருப்பது கூட நன்றாகதான் இருக்கிறது. சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். தானாகவே கை ரிமோட்டை தேடியது. நியூஸ் சேனலில் அழகிப்போட்டிக் குறித்து ஏதோ ஒரு ஷோ நடந்துக் கொண்டிருந்தது. செய்ய ஏதுமின்றி தொலைக்காட்சியை வெறித்தான். முழு கைகளும் கால்களும் தெரிவதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி நீண்ட ஒலிப் பெருக்கியில் சிரித்துக் கொண்டே, நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் இளம்பெண் ஒருத்தி. காமிரா ஆளை மாற்றிக் கொண்டேயிருக்க விதவிதமான தலையலங்காரம்.. அணியலங்காரம்.. உடையலங்காரங்களில் இளம் பெண்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களின் படு வேகமான ஆங்கிலத்தை சேனல் தொகுப்பாளரும் சமாளித்துக் கொண்டுதானிருந்தாள். விளம்பரம் குறுக்கிட அந்த நேரத்தில் வாசலில் கோழிக்கடைக்காரரின் குரலும் கேட்க எழுந்து வெளியே வந்தான் கார்த்திகேயன்.

கோழி மாமிசத்தை வாங்கி குளிர்ப்பதனப்பெட்டியில் பத்திரப்படுத்தினான். ப்ராய்லர் கோழிகள் பற்றிய கட்டுரையொன்றினை சமீபத்தில் படித்தது நினைவிற்கு வந்தது அவனுக்கு. நமக்காக பிறப்புவிக்கப்பட்டு, உணவு உட்கொண்டு, ஊசி குத்திக் கொண்டு, உடல் எடையை பெருக்கிக் கொண்டு.. மடிந்து, வெந்து போவது பற்றிய முழு நீளக் கட்டுரை அது. மனைவி சிக்கன் குழம்பு மணமாக சமைப்பாள். அதனாலேயே அந்தக் கட்டுரையைப் படித்த பிறகும் மீனுக்கு மாறி விடலாமா என்ற யோசனையை பல ஞாயிறுகளாக தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இந்த கட்டுரை குறித்து அலுவலகத்தில் விவாதித்ததில் அங்கு ஒரு தார்மீக பயத்தை உண்டாக்க முடிந்தது அவனால்.

முன்னறையில் அழகிகள் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். சேனலை மாற்றினான். அவனது அபிமான செய்திச் சேனல் அது. அங்கும் அழகிகளின் பேட்டிதான். ஒரே வித்யாசம் ஸ்டுடியோவிற்குள் அரங்கம் அமைத்து அழகிகளை அமர்த்தி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சேனலின் காமிரா மேன் நல்ல ரசனையானவர் போல. செதுக்கி வைத்தது போன்ற அழகிகளின் அங்கங்களை குளோசப் ஷாட்டுகளில் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி நகர்த்த வேண்டிய இடத்தில் நகர்த்தி டிஆர்பி ரேட்டை உயர்த்திக் கொண்டிருந்தார். அதனால்தான் விளம்பர இடைவெளி நீள்கிறது போலும். அவர்களின் அங்கங்களின் அளவு முதல் புரிய வேண்டிய புன்னகை வரை பாதிக்கு மேல் செயற்கையின் கைங்கர்யங்கள் என்பது பற்றி இணையத்தளங்களில் நிறைய வாசித்திருக்கிறான்.

அழகிப் போட்டி நெருங்க நெருங்க சென்னை நகரே அழகும் அழகு சார்ந்த பேச்சுமாக மாறிக் கொண்டிருந்தது. செய்திதாள்கள் செய்திகளைத் தாண்டி சிறப்பு மலர்களை வெளியிட்டது. வாராந்திர.. மாதாந்திர இதழ்களின் அட்டைப்படங்களில் உள்ளுர் சினிமா நட்சத்திரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டனர். அல்லது முன்னாள் அழகிகள் மற்றும் அத்துறையைச் சார்ந்த பெரிய மனிதர்களுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். தெருக்களில் வெளிநாட்டினரின் நடமாட்டம் சகஜமாகிப் போனது. ஆடை வடிவமைப்பாளர்கள்.. ஒப்பனை கலைஞர்கள்.. சிகை அலங்கார நிபுணர்கள்.. என வெளி மாநிலத்தோர் நிறைய பேர் போட்டிகள் நடந்து முடியும் வரை சென்னையில் வீடு எடுத்து தங்கியிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் கட்டம் கட்டின. அழகு சார்ந்த விஷயங்களுக்கு நகரில் திடீர் மதிப்பு ஏற்பட்டிருந்தது.

மறுநாள் அலுவலகத்தில் மதிய உணவு வேளை. ”மீட்டிங் நைன்டீன்த்க்கு தள்ளி போட்டாச்சுன்னு மெயில் போட்டுருக்கீங்க.. ஏன்.. என்னாச்சு..” என்றான் மயூரநாதன் அலைபேசியில்.

”அத ஏன் கேக்கற.. செவன்டீன்த் பியூட்டி கான்டெக்ஸ் இருக்கா.. ஏற்கனவே இங்க நடக்கற அலப்பறையில ஏன்டா அந்த நாள்ல மீட்டிங்க வச்சோம்னு இருந்தாரு சீஃப்.. மீட்டிங்..  கீட்டிங்குன்னு வச்சா சேஃப்டி பர்பஸ்க்காக லோக்கல் ஸ்டேஷனுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் கொடுத்துடுங்கன்னு இன்ஸ்பெக்டர்டேர்ந்து ஒரு சர்க்குலர் வந்துச்சா.. மனுசன் அரண்டுட்டாரு.. ஏன் வம்புன்னு மீட்டிங்க ரெண்டு நாள் தள்ளி வச்சாச்சுன்னு மெயில் போடச் சொல்லீட்டாரு..” என்றான் கார்த்திகேயன் சோற்றை வாயில் திணித்தப்படி.

”அப்றம் ஏம்பா நிர்வாக காரணங்களுக்காக தள்ளிப் போட்டாச்சுன்னு மெயில் போடுறீங்க.. அழகிப் போட்டி நடக்கறதாலன்னு பொட்டுல அடிச்சாப்பல எழுத வேண்டியதுதானே.. மனசுல உள்ள வக்கரத்த மேட போட்டு அனுபவிக்க தெரியுது.. பப்ளிக்கா பேச எழுத.. கூச்சமாயிருக்காக்கும்.. நேத்து பொறந்த நண்டுசிண்டுங்களுக்கு கூட இதான் பேச்சு.. நாடு போற போக்கு ஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி இல்ல..“ ஆவேசமானான் மயூரநாதன்.

“சரி.. அத வுடு. சாகித்ய அகாடமி அறிக்கை வெளியிட்டுக்கு பாத்தியா..“

“இப்பவாவது வாயத் திறக்கறாங்களே... நாட்டுல தடியெடுத்தவன்னால்லாம் தண்டல்காரனுங்களாயிட்டானுங்க.. இவங்க சொல்றததான் எழுதுணும்னா இலக்கியம் என்னாத்துக்கு..? எழுத்தாளன்தான் என்னாத்துக்கு..? .இவனுங்களே தாறுமாறா எதயாவது எழுதிக்க வேண்டியதுதானே..? எதையெத.. யாராரு சென்சார் பண்ணனும்னு வெவஸ்த வேணாம்..? கேக்க நாதியத்து போச்சு.. குறைஞ்சபட்சம் வாங்குன விருதெல்லாம் திருப்பிக் குடுத்தாவது எதிர்ப்பை தெரிவிக்கணும்னு நினைக்கிறாங்க எழுத்தாளர்ங்க.. அவங்க அமைப்பு எதாவது செய்யுணுமில்ல..”
”ஆனா இதுனாலெல்லாம் என்ன ரீச் கெடச்சுடப் போவுதுன்னு நெனக்கிற..?  ஒன் லைன் நியூஸ்.. அவ்ளோதான்..“
”ஆனாலும் அவங்களுக்குன்னு ஒரு பொறுப்பு இருக்குல்ல.. அந்த பிரச்சனை நடந்துச்சே.. அப்ப திருப்பிக் குடுத்தியா.. இந்த பிரச்சனைக்கு திருப்பிக் குடுத்தியான்னு அதுக்கும் பத்துபேரு கூவுறானுங்க.. சரி.. அப்ப தோணல.. இப்ப தோணுது.. இப்டியாது ஒரு போராட்டத்த முன் வைச்சு கவனத்த திசை திருப்புணும் நெனக்கிறாங்க..“

”என்னாத்த திசை திரும்புது.. எல்லாம் திசையும் அழகிப் போட்டிப் பக்கந்தான் திரும்பிக் கெடக்கு..“ சலிப்பாக பேசினான் கார்த்திகேயன். மயூரநாதனுக்கும் வெறுப்பாகதான் வந்தது. பெண்ணுடல் மீதான மோகத்தை விதவிதமான வழிகளில் தீர்த்துக் கொள்ளும் ஆண்கள் மீதும் அதற்கு தாங்களே வலிய வந்து ஒத்து ஊதும் பெண்கள் மீதும் விவஸ்தைக் கெட்டு அலையும் ஜனக்கூட்டத்தின் மீதுமான கோபங்கள் பீறிட்டதில் அரைமணி நேரம் ஓடியதே தெரியவில்லை இருவருக்கும்.
நாட்கள் நெருக்கத்தில் வந்ததில் எல்லோருடைய பேச்சுகளின் தொடக்கத்திலோ.. இடையிலோ.. முடிவிலோ அழகிப் போட்டி எப்படியாவது இடம் பெற்று விடுகிறது. சென்னையில் மட்டும்தான் இந்த களேபரமா..? தமிழ்நாடு முழுவதுமா..? மயூரநாதனிடம் கேட்க வேண்டும்.

”நேரம் இருந்தா சென்னைக்கு ஒரு எட்டு வந்து பாரேன்.. பார்லர்.. ஸ்பா.. மேக்கப்புன்னு சென்னையே குலுங்கிக்கிட்டு கெடக்கு.. உலக அழகிங்கள பாத்ததுல உள்ளுர் அழகிங்கள்ளாம் பரபரப்பாயிடுச்சுங்க.. கப்பல்கணக்கா காரெல்லாம் பறக்குது.. ஆபிசுலேர்ந்து அரை மணி நேரத்துல வீட்டுக்கு வர வேண்டியவன் விவேக் காமடி மாதிரி டேக் டைவர்ஷன்.. டேக் டைவர்ஷன்னு.. ரெண்டு மணி நேரம் லேட்டா வந்தேன்னா பாத்துக்கயேன்..” என்றான் கார்த்திகேயன் குமுறலோடு.
”எவன்தான் இந்த எழவு போட்டியெல்லாம் கண்டுப்புடிச்சானோ..”
எப்படி வந்துச்சுங்கிற.. நீச்சல் டிரசை அறிமுகப்படுத்துறேன் பேர்வழின்னு மோர்லியோ.. சார்லியோ.. எவனோ ஒருத்தன்தான் இந்த கண்றாவிய கொண்டாந்தான்.. இருக்கவே இருக்கு பிபிசி.. பப்ளிசிட்டி பண்ணீட்டான். பிரபலமாயிப் போச்சு.. அதிகமான வியூவர்ஸ் இந்த புரோகிராமுக்குதான்.. எப்போங்கிற.. ஸிக்டீஸ்.. செவன்டீஸ்லயே..”
”என்னமோ அறிவுப்பூர்வமா கேள்வியெல்லாம் கேப்பாங்களாம்.. ஆன் த ஸ்பாட் பதில் சொல்லுணுமாமே..”
”என்ன பெருசா கேள்வி கேட்டுருவானுங்க.. திடக்கழிவு மேலாண்மை எப்டி செய்றதுன்னா கேப்பானுங்களா.. இல்ல அணுக்கழிவை எப்படி அழிக்கறதுன்னு ஆராய சொல்லுவானுங்களா..? எல்லாம் முன்னக்கூட்டிய சொல்லி வச்சுருவானுங்க.. இதுங்களும் ரெடி பண்ணி வச்ச பதில சொல்லிட்டு ரிசல்ட் வந்தவொடனே ரெண்டு கையயும் கன்னத்துல வச்சுக்கிட்டு கண்ணுல தண்ணி வழிய ஆன்னு அலர்ற மாதிரி எக்ஸ்பிரஷன கொடுக்குங்க.. எல்லாம் டிராமாதான்.. பல கோடி ரூவா பிசினஸ்.. பணத்துக்கு பணம்.. பொம்பளக்கு பொம்பள.. இதுங்களும் பேருக்காகவும் புகழுக்காகவும் பாத்துக்க.. பாத்துக்கன்னு கூச்ச நாச்சமில்லாமில்லாம தொறந்துக் காட்டிக்கிட்டு.. ச்சே.. டிவிய பாக்கவே வெறுப்பாருக்கு..“
”வாத்ஸவந்தான்.. சாத்தான் வேதம் ஓதுனது மாதிரி அந்த மோர்லியோட சம்சாரம் அறிக்கை வுட்டுருக்கு படிச்சியா..”
”இன்னிக்கு எம் பொண்ணு ஸ்கூல்ல ஆனுவல் டே ரிகர்சல்னு காலைலயே ஸ்கூல்ல கொண்டு போய் விட வேண்டியதாப்போச்சு.. பேப்பர் படிக்கவே நேரமில்ல.. என்னவாம் சமாச்சாரம்..?”
”பியூட்டி கான்டெஸ்ட்ல இனிம ஸ்வீம் ஸுட் செஷன் இருக்காதாம்.. பொம்பளைங்கள நீச்சல் டிரஸ்ல அலைய வுடறதுக்கு அந்தம்மாக்கு விருப்பமில்லையாம்.. எழுவந்தஞ்சு வயசுல ஞானம் பொறந்தாப்பல பேசுது..”
”2001ல இப்டிதான் ஸ்விம்ஸுட் ரவுண்ட் வேணாம்னு முடிவு செஞ்சுட்டு அப்றம் ஸ்டேஜ்ல ஃபர்மார்மன்ஸ் வேணாம்.. வேறொரு இடத்தில நடத்தி படம் புடிச்சுப் போடுலாமின்னு சுத்தி வுட்டுட்டானுங்களாம்.. பீச் ஃபேஷன்னு பேரை மட்டும் மாத்திக்கிட்டாங்க.. எல்லாம் ஒரு கணக்குதான்..“
”இதுக்கு பின்னாடி என்ன அரசியலோ.. கார்த்தி.. அப்டியே எனக்கு ஒரு ஹெல்ப்.. பிடிஏ-லேர்ந்து கொஸ்டின் பேங்க் வாங்கி அனுப்ப முடியுமாப்பா.. கார்த்தி அங்கிள் லைன்ல வந்தா கேக்க மறந்துடாதப்பான்னு என் பையன் பத்து தடவ சொல்லீட்டான்.. போ..”
மயூரநாதனின் மகனை கார்த்திகேயனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனை பற்றி ஐந்து நிமிடமாவது ஆர்வமாக விசாரிப்பான்.
“இந்த அலம்பல்லாம் முடியுட்டும்.. ஒன் புள்ளக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறேன்.. இன்னொரு விஷயம் கேளேன்.. அயல் நாட்டு துாதரை விட உலக அழகி பட்டம் வாங்குனவங்களுக்கு செல்வாக்கு அதிகமாம்.. அத வச்சிக்கிட்டு ஒலகம் பூரா சுத்தி வந்து சோஷியல் சர்விஸ் பண்ணுவாங்களாம்.. என்னமா சுத்துறானுங்க காதுல..” பேச்சு கூட அங்கேயே சுற்றியது.
”ஏற்கனவே வயசுப் பொண்ணுங்க ஆன்ட்டி.. பாட்டிக்கிட்ட சுடிதாரக் குடுத்துட்டு கண்ட கண்ட துணிங்கள கட்டிக்கிட்டு சுத்துதுங்க.. இதுங்க வந்து இன்னும் கெடுக்கப் போவுதுங்க.. ஊரு ஒலகத்துல எடமா இல்ல..? இங்க வந்து உசுர எடுக்குறானுங்க..”
“இதுக்கெல்லாம் பர்மிசன் குடுக்க மாட்டோம்னு கவர்மெண்ட் அடிச்சு பேசியிருக்கணும்.. எல்லாம் காசுதான்.. மத்ததப் பத்தியெல்லாம் யாருக்கு என்ன கவல..”

என்னாத்ததான் திங்குங்குளோ.. ஒடம்பெல்லாம் தங்கம் மாதிரி தகதகக்குது பாரேன்..”
”ஆசப்பட்டதை திங்க முடியுமாக்கும்.. எல்லாம் ஊசி மருந்துமாயந்தான்… பிராய்லரு கோழிங்க மாதிரி.. அதுங்க காஸ்டியூம பாத்தியா..? மேலயும் கீழயும் சின்னோண்டு ஒட்டிக்கிட்டு.. மொத்தமே இவ்ளோதான்.. இதுக்கு ஒரு டிசைனர்.. டெய்லர்னு ஒரே அலப்பற பாத்துக்க..”

“நீ வேற.. இந்த தக்னியூண்டு துணியதான் அஞ்சாயிரம்.. பத்தாயிரம்.. அம்பதாயிரங்குதுங்க.. ஒண்ணும் வௌங்கல..”

”இதுக்கே அசந்துட்டே.. இன்னும் நாலு நாளைக்கு எல்லா சேனல்காரப் பயலும் அங்கதான் ஃபோகஸ் பண்ணுவான்.. நான் சொல்றது வௌங்குதுல்ல.. அங்கதான் ஃபோகஸ் பண்ணுவானுங்க.. நேத்து ஏதோ கண்கவர் அணி வகுப்புன்னு நடுராத்திரி வரைக்கும் ஒளிபரப்பிக்கிட்டு கெடந்தானுங்க.. படுக்க பன்னெண்டாச்சு.. நாலு நாளும் நடக்கப் போற கூத்தை நீ பாக்கதானே போறே.. நாளைக்கு அலங்கார ஊர்வலமாம்.. தெருவே நாறப் போவுது பாத்துக்க.. ச்சே.. கருமம்.. கருமம்.. என்னாத்த சொல்றது.. சரி.. எம் பொண்டாட்டி சாப்ட கூப்டுறா.. நான் போனை வைக்குட்டுமா..”
பேச்சுப்போக்கில் பாதி உண்ணாமல் இருந்த காராபூந்தி பொட்டலத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடியிலிருந்து கீழிறங்கினான் கார்த்திகேயன். கீழே சிதறிக் கிடந்த நாலைந்து நுணுங்கிய காராபூந்திகள் காற்றின் போக்கில் நகரத் தொடங்கின.

***

No comments:

Post a Comment