Search This Blog

Tuesday, 30 May 2017

சவுந்தரி

ஜுன் 2017 செம்மலரில் வெளியானது

மேலும் கீழுமாக மல்லிகைப் பூக்களை அடுக்கி விறுவிறுப்பாக நுாலால் பிணைத்தாள் சவுந்தரி. இடையில் தட்டுப்பட்ட சுணைப்பான சிறு மல்லிகைக் குச்சி காப்பேறிய விரல்களை கடக்க முடியாமல் நழுவி விழுந்தது. நேற்று மொட்டுப்பூவாய் ஒதுங்கியவை. நீர் தெளித்து பதமாக்கி வைத்திருந்தாள். பூக்கள் மென்மையானவை என்று எந்த பூக்காரியும் சொல்வதில்லை.

பூக்காரி.. சொல்லிப் பார்த்துக் கொண்டாள் சவுந்தரி. பூக்கட்டுவது ஒன்றும் கேவலமான தொழில் அல்ல.. பூக்காரி.. வேலைக்காரி.. என்ற விளித்தல்தான் கொச்சையானது. பூக்காரம்மா.. என்று சொல்லலாம்.. அம்மா என்று விளிக்குமளவுக்கு இன்னும் வயது ஏற வேண்டும் வயது எத்தனை ஏறினாலும் பூ வியாபாரத்திற்கு முகத்தில் ஒரு களை.. தேஜஸ் தேவைப்படும்.. சவுந்தரிக்கு இருந்தது. அதில்தான் பிரபு மயங்கினான். இன்றும், பதினான்கு வயது சிறுவனான மகனும் அவளை மயக்கிக் கொண்டுதானிருக்கிறான் அவளின் உலகம் அதில் நிறைந்துக் கொண்டிருந்தது.. அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருந்தாள். அப்படிதான் எண்ணவும் வேண்டும். வேறு வழியில்லை.


ஆனால் அதில் கூட இப்போதெல்லாம் இடைவெளி வந்து விடுகிறது. படிப்புக்கே அவனது அத்தனை நேரமும் ஒதுங்கி விடுகிறது. ஆங்கிலப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பத்தாம் வகுப்பு பாடங்களையும் இப்போதே நடத்துகிறார்களாம். புரியவில்லை என்கிறான். தனி வகுப்புகள் வேறு. அம்மாவும் மகனும் இரவு உணவு நேரத்தில்தான் சந்தித்துக் கொள்ள முடிகிறது.

”படிக்கற வேல ரொம்ப இருக்காப்பா..” என்பாள் மகனிடம் சாப்பாடு பரிமாறிக் கொண்டே. வினோத் என்று பெயரிட்டிருந்தான் பிரபு. கடைசியில் பிரபுதான் விநோதமாக மாறிப் போனான். கைக்குழந்தையின் மீதே கவனமிருந்ததில் அவளால் கணவனின் விலகலை அத்தனை துல்லியமாக கணிக்க இயலவில்லை.. தாய் வீட்டில் சீராட வேண்டிய நேரம் அது. தாயோடு.. தகப்பனும்.. வீடும் அவளுக்கும் உண்டுதான். ஆனால் போக முடியாது.. யாரும்.. எதுவும் வேண்டாம் என்று பிரபுவோடு வந்து விட்ட பிறகு அவளால் அங்கு போக முடியாது.

”ஆமா..” குரல் கட்டையாய் தடிக்க தொடங்கியிருந்தது.

மகளாக இருந்தால் இந்நேரம் வயதுக்கு வந்திருப்பாள். பிறகு, அவளின் உலகம் சுருங்கி பாதுகாப்பு வளையத்துக்குள் வந்திருக்கும்.. வினோத்தை போல காலை ஏழு மணிக்கு தொடங்கி.. இரவு எட்டு மணி வரை கல்விக்காக வெளியில் நேரத்தை செலவிட முடியாது. செலவிடுவது பிரச்சனையில்லை. துணைக்கு சவுந்திரியும் மெனக்கெட வேண்டியிருக்கும். மூன்று மணிக்கு தொடங்கி பதினோரு மணி வரை தொடரும் தனது நாளின் எந்த பகுதியை மகளுக்காக ஒதுக்கியிருக்க முடியும்..?

மூணே முக்காலுக்கு ஸ்ரீரங்கத்துக்கு நேரடி பேருந்தே இருக்கும்.. பூ சந்தையில் இறங்கிக் கொள்ளலாம். நேரமும் மிச்சம். காசும் மிச்சம்.. குழம்பும் காயும் செய்து விட்டால், சந்தையிலிருந்து திரும்பியதும் சாதம் வைத்துக் கொள்ளலாம். காலை உணவுக்கு பாக்கெட் இட்லி மாவு போதும். குழம்பு அடுப்பில் கொதிக்கும்போதே குளியலாகி விடும். மளமளவென்று காயை நறுக்கி சட்டியில் வேக விட்டுக் கொண்டே டீயோ.. காபியோ.. ஏதோ ஒன்று போட்டுக் கொள்வாள். கண்ணாடி பார்க்காமல் அவசரகதி பின்னல். பிறகு வீட்டை பூட்டதான் நேரமிருக்கும். வீடு என்றால் ஒரே அறைதான். அதுவே சமையற்கட்டும்கூட. இத்தனை களேபரத்திலும் விழித்துக் கொள்ளாமல் அசந்து உறங்கும் மகனை எழுப்புவதில்லை.

வழக்கமான பேருந்துதான். அந்த நடத்துநருக்கு கை நீளம். அது பயணச்சீட்டு கொடுக்கும்போதும் பணம் பெற்றுக் கொள்ளும்போதும் தெரிய வரும். பேருந்து முழுக்க நடந்தாலும் நாலைந்து தலைகள்தான் தேறும்.. மத்திய பேருந்து நிலையம் வரும் வரை இதுதான் நிலை. ஆனாலும் நடத்துநர் இங்குமங்குமாக பேருந்தில் அலைவது இவளுக்காகவாக இருக்கலாம். சவுந்திரி இதையெல்லாம் உணராமல் போனால்தான் அதிசயம். அனுபவம் அவளுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது. பிரபு அவளிடமிருந்து விலகிய போது இருபத்தொன்று வயது மட்டுமே முடிந்திருந்தது. எஸ்டீடி பூத்.. லேப்.. ஜெராக்ஸ் சென்டர்.. மாநில அரசு அலுவலகத்தில் என்எம்ஆர் டைப்பிஸ்ட் என வரிசையாக நிறைய பாதைகள் திறந்ததற்கும் பிறகு அவளே அதை மூடி கொண்டதற்கும் பின்னணி இந்த தடவலாகவும் இருக்கலாம்.

நாள் முழுதும் பரபரத்திருக்கும் உடலை கிடத்த இரவு பதினொன்றாகி விடும். பிரபுவுடன் குடித்தனம் பண்ணும்போது, பேயாய் உழைக்கும் தமிழரசியக்காவை பார்த்து வியந்திருக்கிறாள். கணவனின் பூசைக்கும் இவளின் கூந்தலுக்கும் வாடிக்கையாக பூ கொடுக்கும்போது உண்டான நட்பு. தமிழரசியக்காவைப் போல நாலைந்து மணி நேர துாக்கத்திற்கு சவுந்திரியின் உடம்பும் இப்போது பழக்கப்பட்டிருந்தது.

பேருந்தின் வேகத்தில் அதிகாலை காற்று உடலை தழுவி.. கண்களில் துாக்கத்தை அப்பிச்  சென்றாலும் பணமிருக்கும் பையை கை அனிச்சையாக பிடித்துக் கொள்ளும். போதாக்குறைக்கு, நடத்துநர் அவளுக்கு முன்னிருக்கையில் ஒருக்களித்து சாய்ந்து அமர்ந்துக் கொண்டு, எதாவது பேச்சு கொடுப்பார். பூக்காரிதானே என்ற இளக்காரத்தில் பேச்சு சங்கோஜமேயின்றி இரட்டை அர்த்தத்தில் இருப்பதெல்லாம் சாதாரணம். எதிரிகளை ஆக்ரோஷமாக எதிர் கொள்வதை விட.. அமைதியாக நகர்ந்து விடுவது அவர்களின் செயலை மொன்னையாக்கி விடும் என நம்ப தொடங்கிய காலக்கட்டமிது. இதையும் தமிழரசியக்கா தான் கற்றுக் கொடுத்திருந்தாள். ”ஆம்பளைங்களுக்கு எப்பவும் ஒரே நெனப்புதான்… ஒண்ணு அது வேணும்.. இல்ல.. அது வேணாம்.. பதிலுக்கு பதிலு பேசி எத்தனை பேர கலச்சி வுடுவே.. போவியா கழுதை கத்ததுன்னு..” என்பாள்.

தமிழரசியக்கா சொல்வதை சவுந்தரி மீறுவதில்லை. பிரபு விட்டுச் சென்ற பிறகு கழுத்தை முட்டிக் கிடந்த அன்றாடமும்.. விநோத்தும் அவளை திக்குமுக்காட்டியதில், தடுமாறி கிடந்த சவுந்தரியை தங்கையாக்கி தனது ஸ்டோர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டதற்கு பூவை விட வாசமான மனம் வேண்டும். தமிழரசிக்கு அது இன்று வரை குறையவில்லை.

நடத்துநருக்கு இடம் கொடுக்காமல் படியையொட்டிய இருக்கையில் அமர்ந்துக் கொண்டால் ஓட்டுநரின் பார்வை அவ்வவப்போது இவளை மோதி மோதி திரும்பும். கண்களை இழுத்து திறந்து வெளிப்புற காட்சிகளில் பதித்துக் கொள்வாள். 

பகலை நோக்கி நழுவிக் கொண்டிருக்கும் அதிகாலை இருளுக்குள் ஆங்காங்கே வெளிச்சப்புள்ளிகள் தோன்றி.. பேருந்து அருகில் நெருங்கும்போது அப்புள்ளிகள்  டீக்கடைகளாக உருமாற்றம் கொள்ளும். நடைப்பயிற்சி மனிதர்கள் இரண்டொருவர் தட்டுப்படலாம். வாட்ச்மேன்கள் உட்கார்ந்தவாறும், நடைப்பாதை மனிதர்கள் படுத்தவாறும் உறங்கி கொண்டிருந்தனர். இறைச்சிக்கடை ஒன்று சம்பந்தமேயின்றி அந்த அதிகாலையில் திறந்திருக்கும். குடியிருப்புகளை தாண்டி பேருந்து முன்னேறும்போது வெளியே பரவியிருக்கும் இருள் பேருந்துக்குள் வந்து ஒண்டிக் கொள்வது போலிருக்கும். அந்நேரம் சவுந்தரிக்கு புலன்கள் அத்தனையும் எழுந்துக் கொள்ளும். இது அனிச்சையானது என்று சவுந்திரியே நம்பவில்லை. பிரபுவோடு பயணிக்கும்போது இம்மாதிரியான உணர்வுகளெல்லாம் எழுந்ததேயில்லை. சொல்லப்போனால் பிறந்ததிலிருந்தே இந்த பாதுகாப்பின்மை அவளை அணுகியதில்லை.

சவுந்தரியையும் சேர்த்து மூன்று பெண்களும்.. இடையில் ஒரு ஆணுமாக நான்கு பிள்ளைகள். நடுத்தரக் குடும்பம். மூத்தவளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகியிருந்தது. அண்ணனும் அக்காவும் இருக்க சவுந்தரிக்கு கல்லுாரியில் காலெடுத்து வைக்கும் போதே காதல் வந்து விட்டது. பிரபு அந்த கல்லுாரி வளாகத்திற்குள் எழுதுப்பொருள் கடை வைத்திருந்தான். முதல் பார்வையிலோ.. பார்க்க பார்க்கவோ.. எதுவோ ஒன்று ஒருவரையொருவர் வசீகரிக்க, அது இரண்டாம் வருட படிப்பின்போது திருமணத்தில் முடிந்து.. பிறகு திருமணமும் முடிந்துப் போனது.

வினோத் வயிற்றில் தரிக்கும் வரை.. ஏன் பிறக்கும் வரை கூட அவளுக்கு பிறந்த வீட்டு நினைவுகள் அதிகம் தொந்தரவு செய்யவில்லை. இருவருமே உறவுகளை விட்டு விலகி வந்திருந்ததால் ஒருவரையொருவர் அண்டிக் கிடந்தனர்.  பிரசவத்தில் கூட குறை வைக்கவில்லை அவன். சவுந்தரிக்குதான் கணவன் தனக்கும் மகனுக்கும் உடுத்திய துணி முதல் மலத்துணி வரை  அலசிப் போடும்போது மனம் குற்றவுணர்வில் தவித்துப் போகும். ‘மக புள்ள பெத்திருக்கா.. வந்து பாக்கணும்னு தோணலயே இவங்களுக்கு.. ஊரொலகத்துல பேரப்புள்ளய பாத்தா பெத்தப்புள்ள மேல வந்த கோவம் மறைஞ்சுடும்பாங்க..’ ஜடம் போலிருந்த பெற்றோர்களை நினைத்துதான் அவளுக்கு கோபம் வந்தது.

“உங்க வீட்ல ஊரை விட்டே போய்ட்டாங்க..“ என்று பிரபுதான் அதன் பிறகு விசாரித்து சொன்னான். அழுகையாக வந்தது. ”பெத்தா தான் புள்ளையா.. நாங்கள்ளாம் இருக்கோம்ல..” என்றாள் தமிழரசி அப்போதே. பூக்காரக்கா என்பாள் சவுந்தரி அப்போது. கைக்கு அகப்படாமல் நெளுநெளுத்த குழந்தையை குளிக்க வைக்க.. மருந்து ஊற்ற.. என சவுந்தரிக்கு அவள்தான் பக்கபலம்.

இன்று வழக்கமான பேருந்தை நழுவ விட்டிருந்ததில் அவசரமும்.. பதட்டமுமாக இருந்தது அவளுக்கு.   

பத்து ரூபாயை நீட்டி ”சீரங்கம் ஒண்ணுக் குடுங்க..” என்றாள்.

”சீரங்கமெல்லாம் போவதும்மா..”

அவளுக்கும் தெரியும். ஆனால் பதற்றத்தில் புரியவில்லை. சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி மாறிக் கொள்ள வேண்டும். இந்த ஆள் கையை தொடாமல் டிக்கெட் கொடுத்தார். டிக்கெட்டை கை நீட்டி வாங்கும் போது விரல்களை கவனித்தவர் போல அவளை ஏறிட்டு பார்த்தார். பூக்கள் கையை அறுத்து அறுத்து வலது கையில் கட்டை விரலும்.. ஆட்காட்டி விரலும்.. நடுவிரலும் தடித்துப் போயிருந்தன.  தமிழரசியக்காவை போல பூக்கட்டி தருவதற்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்தான். வினோத்தின் படிப்பு செலவுக்கு முன் அதையெல்லாம் இப்போதைக்கு நினைத்து பார்க்க முடியாது.

“மணி என்னாச்சுங்க..” என்றாள் அருகிலிருந்த ஒருவரிடம். தஞ்சாவூரோ.. காரைக்குடிக்கோ.. பணிக்கு செல்பவராக இருக்கலாம். ரயிலடிக்கு சீட்டு வாங்கியிருந்தார்.

”நாலேகாலாவப் போவுது..”

பேருந்துக்கு வெளியே பார்த்தாள். இருள் உதிர்ந்து விட்டது போல் தோன்றியது. டீக்கடையில் கூட கும்பல் ஏறியிருந்தது. நடமாட்டம் அதிகரித்திருந்தது. தவற விட்ட பேருந்து இந்நேரம் ஸ்ரீரங்கத்தை நெருங்கியிருக்கும். பூ ஏலத்துக்கு கூட்டம் கூடி விடும். மல்லி.. ஜாதிமல்லி.. முல்லை.. கனகாம்பரம்.. சம்பங்கி.. சாமந்தி.. ரோஜா.. குயின் ரோஜா.. கோழிக்கொண்டை.. வாடா மல்லி.. செண்டுப்பூ.. அரளிப்பூ என பூக்களும் குவிந்துக் கிடக்கும். சிறு வியாபாரிகளின் கூட்டமும் பெருத்திருக்கும். வழக்கமாக முல்லை.. மல்லி.. ஜாதி மல்லி.. வாங்கிக் கொள்வாள். கோவில் மாலை ஆர்டர் என்றால் சம்பங்கியும், சாமந்தி.. வாடாமல்லி.. அரளிப்பூவோடு துளிசியும் வாங்கிக் கொள்வாள். சனி.. வியாழன்களில் துளசி மாலை கட்டவும் விற்கவும் சற்று சுலபமாக இருக்கும். கிராமப்புற விசேஷங்களுக்கு கனகாம்பரம்.. கோழிக்கொண்டை.. வாடாமல்லி வாங்க வேண்டியிருக்கும். பெரிய காரியங்களுக்கு செவந்திப்பூக்கள் தேவைப்படும்.

பெரிய பிளாஸ்டிக் கவர்களில் உதிரிப்பூக்களை மூட்டையாக கட்டிக் கொண்டு வரும்போது முன்பெல்லாம் மலைத்துப் போய் உட்கார்ந்து விடுவாள். ஒரு முழம் பூவைக் கூட இதுவரை ஒழுங்காக கட்டியதில்லை. ”ஒன்னால எல்லாம் முடியும்.. நாங் கட்டல..” ஊக்கமாக பேசுவாள் தமிழரசியக்கா.  ஆனால் மென்மையாக எடுத்து.. நோகாமல் தலையில் வைத்து கொள்ளும் பூக்கள் அத்தனை மென்மையானவையல்ல என போக போக புரிந்தது அவளுக்கு. நகக்கண்கள் வலியெடுத்து விடும். விரல்கள் விரைத்து நின்று விடும். உள்ளங்கைகள் வலியால் அதிர்ந்து போகும். சோறு.. குழம்பு.. எதிலும் பூவாசம்தான். குமட்டிக் கொண்டு வரும் சவுந்தரிக்கு.

இன்று கோவிலில் ஏதோ விசேஷம்.. என்று கேள்விப்பட்டிருந்தாள். சம்பங்கி.. முல்லையெல்லாம் விற்று தீர்ந்திருந்தது. உதிரி மல்லிகையை ஒரு ‘கை’ கூடவே வாங்கிக் கொண்டு,  பேருந்தை பிடிக்கும் போது மணி ஐந்தேகால் ஆகியிருந்தது. அதிகாலை பொழுதுகளில் கும்பலிருப்பதில்லை. மூட்டையை மடியில் ஏந்திக் கொண்டு சீட்டில் சாய்ந்துக் கொண்டாள்.

இப்போதெல்லாம் துாக்கத்தில் கனவாக கூட கணவன் வருவதில்லை. ஒரு காலத்தில் நினைவில் நிரம்பி.. கனவிலும் நிறைந்து வழிந்தவன். எழுதுப்பொருள் கடையிலும் வருமானம் குறைவில்லாமல் கிடைத்தது. ஆனால், மூன்று வருட லீஸ் முடிந்த பிறகு மீண்டும் புதுப்பிக்க மறுத்து விட்டது கல்லுாரி நிர்வாகம். தனது மாணவியை மனைவியாக்கிக் கொண்ட செயல் அந்த பழமையான கல்லுாரிக்கு உறுத்தலாக தோன்றியிருக்க வேண்டும். வளாகத்துக்கு வெளியே போட்டி அதிகம் என்றாலும் இவனின் பழக்கத்திற்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். கல்லுாரி வளாகத்துக்குள் இருக்கும்வரை அதிகபட்சம் ஆறு மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்து விடுவான் பிரபு. வர வர அவன் திரும்பி வரும் நேரம் கூடிக் கொண்டே போனது.

கணவன் மீது சந்தேகமெல்லாம் இல்லை. ஆனாலும் விசாரித்திருக்கிறாள்.

”என்ன புதுசா.. கோவில்.. கோவில்னு சுத்துறீங்க..”கோவிலில்லை.. யாரோ ஒரு குருஜி என இயல்பான புத்திக்கு தோன்றவில்லை அவளுக்கு. அவனும் சொல்லவில்லை.

ஆனாலும் கேட்டிருக்கிறாள்.. பூசையறையில் புதிதுபுதிதாக படங்கள் முளைத்தபோது.

“யாருங்க இவரு..”

கண்களில் ஒளியோடு அவரை பற்றி விவரிப்பான். அவள்தான் புரியாமல் ”ஏங்க அடுப்புல தண்ணி சுட வச்சிருக்கேன்.. கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்.. தம்பி ஆய் போய்ட்டான்..” நீட்டிய கால்களில் மகனை அமர்த்திக் கொண்டு பாத்ரூமிலிருந்து குரல் கொடுத்தாள்.

ஒரு வயதில் தத்துபித்தென்று மகன் நடக்க தொடங்கிய போதுதான் பிரபு இரவோடிரவாக வெளியேறி போனான்.. எல்லாவற்றையும் விடுத்து.. சாமியாரின் படங்களை மட்டும் உடமைகளாக எடுத்துக் கொண்டு. அவன் சென்ற வழி தெரியாது ஆசிரமம் ஆசிரமமாக சுற்றினாள். அவன் கட்டியிருந்த வேட்டியின் கலர் எந்த சாமியார் மடத்தை சேர்ந்தது என்பதை அறிந்து இறுதியில் அவனை கண்டுப் பிடித்தாள்.

மனைவியின் கதறல் காதுகளில் ஏறாத உன்மத்த நிலையிலிருந்தான் பிரபு. தாடிக்குள் வாய் புதைந்திருந்தது. நீண்ட தலைமயிர் தோற்றத்தை மாற்றியிருந்தது. கண்கள் அவனுடையதுதான் என்றாலும் அதில் காதல் மட்டுமல்ல.. அவளை தெரிந்ததுபோல காட்டிக் கொள்ளும் உணர்வு கூட அதிலில்லை. நாசி மட்டும் மாறாமல் நான் பிரபு.. பிரபு.. என்றது. வினோத்தையும் துாக்கி சென்றிருக்கலாம் என்று தமிழரசியக்கா அங்கலாய்த்தாள். சவுந்தரிக்கும் அப்படிதான் தோன்றியது. தன்னை போலவேயிருக்கும் வாரிசு ஒருவேளை அவன் உறுதியை குலைத்திருக்கலாம் என்று எண்ணினாள். நாளடைவில் அந்த எண்ணமும் மங்கிப் போனது.. பிரபுவின் நினைப்பை போல. கண்ணெதிரில் அடங்காத துறுதுறுப்புடன் மகனும்.. இளமைப் பூரித்த மனைவியும் செய்து விடாத ஒன்றை அந்த துறவி மடத்தில் அழுது வீங்கிய முகத்தோடு தானோ.. மகனோ ஒன்றும் செய்து விட முடியாது என்று தெளிவாக உணர்ந்திருந்தாள்.

தன்னை இறக்கி விட்ட பேருந்து நகரும் வரை காத்திருந்து விட்டு, தெருவை கடந்தாள் சவுந்தரி. நிறுத்தத்திற்கு பக்கத்திலேயே வீடு. உள்ளே நுழையவும் சர்ச் மணிக்கூண்டில் ஆறு அடிக்கவும் சரியாக இருந்தது.. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை.. உன்னை கை விடுவதுமில்லை..“ மணிக்கூண்டில் ஒலித்த தேவவாசகத்தை பிரபுவும் ஒருகாலத்தில் வசனமாக பேசியிருக்கிறான்.

“எனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்துருக்கே.. உங்க வீட்டாளுங்கள மிஸ் பண்றியா சவுந்தரி..” சவுந்தரி வீட்டில் பிடிவாதமாக அவளை படியேற்ற மறுத்து விட்டது அவனுக்கும் உறுத்தலாகதானிருந்தது.

”அப்டி பாத்தா உங்க வீட்லயும்தான் நம்பள சேர்த்துக்கல.. நீங்க மிஸ் பண்றீங்களா..?”
”நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது எனக்கு யாரையும் தேடுலடா.. உங்கள என் கண்ணுக்குள்ள.. நெஞ்சுக்குள்ள வச்சுக்குவேன்.. எப்பவும் விடவே மாட்டேன்..” அவளின் கைகளை இழுத்து பிடித்து நெஞ்சில் படர விட்டுக் கொள்வான். பருத்து.. முன் நீண்டிருந்த வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொள்வான்.

”தம்பி.. எந்திரி.. மணியாச்சுப் பாரு..” பூக்கள் நிறைந்த கவரை ஓரமாக வைத்து விட்டு குக்கரை அடுப்பில் ஏற்றினாள். குளித்து விட்டு வந்த மகனிடம் இட்லியும் சட்னியும் நிறைந்த தட்டை நீட்டினாள். பால் காய்ச்சி.. அதில் ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்தாள். மணி ஏழை தாண்டிக் கொண்டு ஓடியது.

வினோத் பள்ளிக்கு கிளம்பிய பிறகு மின்னல் வேகத்தில் விரல்கள் செயல்பட வேண்டும்.  இன்று வெளி விற்பனையை வைத்துக் கொள்ள மாட்டாள். நகரின் மையத்திலிருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றின் இரண்டொரு வீடுகளில் தமிழரசி வேலை செய்கிறாள். அந்த பழக்கத்தில் நிழலோட்டமாக பூ விற்றுக் கொள்ள அனுமதியுண்டு. ஆனாலும் குரலெழுப்பி விற்பதை அபார்ட்மெண்ட்வாசிகள் விரும்புவதில்லை இது அவளுக்கும் ஏற்றதுதான். மற்ற இடங்களில், கூச்சமின்றி கணீரென்ற குரலில் தமிழரசி இவளுக்கும் சேர்த்துக் குரலெழுப்புவாள். கூடை துாக்குவாள். மாலை நேரங்களில் கோவிலில் விற்பனை முடிந்த பிறகு,  ஒப்புக்கு கூட சாமியை பார்க்க வேண்டும் என்று சவுந்தரிக்கு எப்போதும் தோன்றியதில்லை.. வினோத்துக்கு பசிக்கும்.

இருபது நிமிட நடைப்பயண துாரத்திலிருந்தது கோவில். மகனுக்கு கிண்டி வைத்த உப்புமாவில் கொஞ்சமும் சூடான டீயும் உள்ளிறங்கியது வயிற்றுக்கு இதமாக இருந்தது. வாடிக்கை வீடுகளில் பூவை கொடுத்து விட்டு, ஓட்டமும் நடையுமாக கோவிலுக்கு வந்தாள். அதற்குள் சொற்பொழிவு தொடங்கியிருந்தது. இளவயது சாமியாராம்.. ஒலிப்பெருக்கியில் குரல் பிசிறு தட்டி போயிருந்தாலும் அந்த சாமியார் தெளிவாகதான் பேசினார்.

இளவரசரான சித்தார்த்தர் மூப்பினால் தள்ளாடும் அந்த கிழவரை பார்க்கிறான். நோய்மையில் அவஸ்தையுறும் மனிதனை பார்க்கிறான். அழுகிய நிலையிலிருக்கும் பிணத்தை காண்கிறான். நோய்மையும்.. வறுமையும்.. இறப்பும் சூழ்ந்த உலகமே நிதர்சனம் என்பதை உணர்கிறான். அதேநேரம் தன்னை சுற்றி பரவிக் கிடக்கும் குதுாகலத்தை நினைக்கிறான். ஊரையே அண்ணாந்து பார்க்க வைக்கும் அரண்மனை.. சொல்வதை மட்டுமல்ல.. எண்ணங்களை கூட குறிப்பால் உணர்ந்து நிறைவேற்றும் பணியாட்கள்.. விதவிதமான ஆடைகள்.. எண்ணி பார்க்கவியலாத செல்வங்கள்.. அணிகலன்கள்.. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய நாடு.. எல்லாமே அவனின் நினைவில் எழுகிறது.

இளமையின் பரிபூரணத்தை முற்றும் முழுமையுமாக அனுபவிக்க ஏற்ற தனது உடல்.. வழிய வழிய காதலுடன் இளமைப் பூரிப்போடு தன்னையே சுற்றி வரும் மனைவி..  சிறு மழலையாய் தன் கையில் அடங்கிக் கிடக்கும் வருங்கால அரசனாகிய மகன்.. அத்தனையும் அவனின் இனிய உடமைகள். வாழ்க்கையின் இன்பங்கள் ஒருதலைபட்சமாவதை அவனால் ஏற்க முடியவில்லை.

தனது முழு மொத்த உடமைகளை துறக்க முடிவெடுக்கிறான். அதுதான் உண்மையான துறவு. உணவின்றி உண்ணாமலிருப்பது பட்டினி. உணவிருந்தும் உண்ண மறுப்பது உண்ணாவிரதம். புலன்களை அடக்கி.. மனதை கல்லாக்கி அனைத்தையும் துறந்து அரண்மனையிலிருந்து வெளியேறுகிறான்.

அவனில்லாத நாட்களை கடக்கும்போது.. அசதியையும்.. பொறுப்பையும் மீறி சவுந்தரியின் புலன்களும் விழித்துக் கொள்ளதான் செய்தன. தன்னை நெருங்கி வந்த ஆண்களை நோக்கி மனம் பலமிழந்து தடுமாறதான் செய்தது. உறக்கம் தொலைந்து போகும் இரவுகள்.. பகல்களை பலவீனமாக்கின. பலவீனமான பகல்கள் இரவை கொள்ளைக் கொள்ள தொடங்கின. வினோத்தை இறுக்கிக் கொள்வாள்.

சொற்பொழிவு கணீரென்ற குரலில் ஒலித்தது. கூட்டம் நிறையவே இருந்தாலும், அவரின் சீடர்கள் கர்மசிரத்தையாக அதனை ஒழுங்குப்படுத்தினர். சீருடை போல அணிந்திருந்த அவர்களின் வேட்டியின் நிறத்தில்தான் பிரபுவும் வேட்டி அணிவான். இந்த சாமியாரை பொறுத்தவரை மல்லிகைப் பூக்கள்தான் விசேஷம் போல. பிரபுவும் சரஞ்சரமாக மல்லிகைப் பூக்களை வாங்குவான்.. சாமியாரின் சீடர்கள் எடுத்து வந்த தங்கத்தாலான அவரது பாதத்திற்கு அர்ப்பணிப்பதற்காக மல்லிகைச் சரங்கள் மளமளவென்று விற்று தீர்ந்துக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் ஒரு டஜனுக்கும் மேல் பூக்காரர்கள் இருந்தனர். மல்லிகைப்பூவை வழக்கத்திற்கு மாறாக நிறையவே வாங்கிய தன் புத்திசாலித்தனத்துக்கு தன்னையே மெச்சிக் கொண்டாள் சவுந்தரி.

”நுால் புடிச்சாப்பல அறுக்கற.. கொஞ்சம் வுட்டு நறுக்கும்மா..” சிடுசிடுப்பாக பேசினார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர். சொற்பொழிவை கேட்கும் ஆவலில் எழுந்த சிடுசிடுப்பாக இருக்கும். இரண்டு கண்ணி விட்டு நறுக்கலாம்தான். ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு கண்ணியாக விட்டு நறுக்கும்போது அதுவே முழமாகி விடும். புடனி.. முதுகு.. கை விரல்கள் என இரவில் தனிதனியாக வலிக்கத் தொடங்கும்.

புத்தர் ஞானம் பெற்ற பிறகு அவருடைய புகழ் திசையெங்கும் பரவியது. அவருடைய தந்தைக்கு மகன் ஒருமுறை கபிலவஸ்துவுக்கு வர வேண்டும் என மிகுந்த விருப்பம் ஏற்படுகிறது. அவரை அழைத்து வர ஆட்களை அனுப்புகிறார். சென்றவர்களெல்லாம் அவரது உபதேசத்தால் கவரப்பட்டு வந்த நோக்கத்தை மறந்து போகின்றனர். புத்தரின் சிறு வயது தோழர் செல்கிறார், தனது தோழரை அழைத்து வரும்பொருட்டு. அவரும் புத்தரின் உபதேசங்களால் கவரப்பட்டாலும், வந்த நோக்கத்தை மறக்கவில்லை. நோக்கம் நிறைவேறுகிறது.

“நீ வீட்டை விட்டு சென்றதிலிருந்து யசோதரை துறவி போலவே வாழ்கிறாள்.. முடியை களைந்து காவி உடையே அணிகிறாள்..” என்கிறார் சுத்தோதனர் மகனிடம். ராகுலனை புத்தரிடம் அனுப்பிகிறாள் யசோதரை.. அவர்தான் தகப்பன் என தெரிந்துக் கொள்வதற்கு. அப்போது ராகுலனுக்கு வயது ஏழு. புத்தர் மகனை பார்க்கிறார்.. தனது சாயல் அனைத்தையும் உள்வாங்கி இரத்தமும் சதையுமாக தன்னின் பிரதியாக தன் முன் நிற்கும் மகனை பார்க்கிறார்.

பிறகு, தன் சீடர் சாரிபுத்திரனிடம் "ராகுலனுக்குத் தீட்சை அளித்துச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவனுக்குத் தந்தையாக நான் அளிக்கும் சொத்து அதுதான்.." என்கிறார்.

மணி ஒன்பதை கடந்து விட்டது. வினோத் டியூஷனிலிருந்து வந்திருப்பான். ”நடந்து வந்தா நாய் தொரத்தும்மா.. சைக்கிள் வாங்கிக் குடும்மா..” என்று சொல்லிக் கொண்டிருந்தான். தமிழரசி கூட அரசாங்க சைக்கிள் ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது.. என்றிருந்தாள். வினோத்துக்கு அந்த சைக்கிள் மீது விருப்பமில்லை.

பூக்கள் கணிசமாக விற்று தீர்ந்திருந்தன. சொற்பொழிவு இப்போதைக்கு முடியாது போலிருந்தது,

மீண்டும் சொல்கிறேன்.. அதுதான் உண்மையான துறவு. உணவின்றி உண்ணாமை பட்டினி. அறுசுவை உணவு கைத்தொடும் தொலைவிலிருந்தும் உண்ண மறுப்பது உண்ணாவிரதம். அவர் நினைத்திருந்தால் தன் மகவை அள்ளியெடுத்து ஆசை தீர கொஞ்சியிருக்கலாம். அவரை தடுத்து நிறுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது..? அவரின் கட்டளைக்காக நாடே காத்திருந்தது. அவரின் உபதேசத்திற்காக உலகமே காத்திருந்தது. அவரை தடுத்து நிறுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது..??

பூக்கூடையை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பும்போது யாரோ பூ கேட்டார்கள். நான்கு முழம் பூவை அளந்துக் கொடுத்தாள். மனம் முழுக்க மகனிடம் நின்றுக் கொண்டிருந்தது.  ‘பயலுக்கு அவேன் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கித் தரணும்.. ஆறேழாயிரம் ஆவுமாம் அந்த சைக்கிள்.. காசை போட்டு வீணக்காதடீன்னு தமிழரசியக்கா திட்டும்.. எதாவது சொல்லிக்க வேண்டியதுதான்...’ அனிச்சையாக அவர் நீட்டிய காசை வாங்கி போட்டுக் கொண்டாள். ”சின்னப் பயதானே.. கூட படிக்கற பையனுங்க வண்டியெல்லாம் கூட வச்சிருக்கானுங்க.. தகப்பனில்லாத புள்ள.. ஆசைப்பட்டு கேக்றான்..’ கண்கள் மகன் மீதிருந்த பாசத்தில் கனிந்து வந்தது அவளுக்கு.

இந்நேரம் பசியை மறக்க டிவியை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான் வினோத். பூண்டுச்சட்னி அவனுக்கு பிடிக்கும். தோசை ஊற்ற வேண்டும். மீதமிருக்கும் பூவை பத்திரப்படுத்த வேண்டும். போகிற வழியில் மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை வாங்க வேண்டும். தமிழரசியக்காவிடம் சைக்கிளுக்கு காசு ஏற்பாடு செய்து தர சொல்ல வேண்டும். இதே மாதிரி சொற்பொழிவுகள் நடந்தால் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். கடனை அடைப்பதில் சிரமமிருக்காது.

எண்ணங்கள் கால்களுக்கு உற்சாகமூட்ட வீட்டை நோக்கி பூக்கூடையோடு வேகமாக நடந்தாள் சவுந்தரி.


***

No comments:

Post a Comment