Search This Blog

Sunday, 7 May 2017

மஞ்சுக்குட்டி

செம்டம்பர் 2016 தாமரை இதழில் வெளியான சிறுகதை

பெரிய அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும், அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழிக்கும்போது, பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்தது. .தட்டில் இருந்த பிரியாணியைச் செய்தித்தாளின் மீதிருந்த சருகு இலையில் கவிழ்க்கையில், ஜிவ்வென்று எழுந்த வாசம் காற்றில் பரவியது. எந்தக் கவனமும் எடுத்ததாகத் தெரியவில்லை.  பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி, எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை, பருக்கையின் வடிவத்தை உள்வாங்கிக் கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டும் அனிச்சையாக எடுத்துப்போட்டு நீட்டப்பட்ட பிரியாணி கவரை , அவன் நுாறு ரூபாய் தாளை நீட்டிக்கொண்ட வாங்கினான். தெருவோரக் கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் நிலையில்  உடல் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.


”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்ருவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான். 

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும். எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டதுகூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய்ச் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கதறுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.

அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண் பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன, இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்லத் தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்துச் சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும்போது இவன்தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை. கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனைக் கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழிப் பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான  பரவச நிலையில் இருந்தான் இவனும். இன்றும் அதனை முழுமையாகக் கடந்ததாகத் தோன்றவில்லை அவனுக்கு. இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள். மஞ்சுளாவுக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருக்கும். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். உடலின் மேடுகளுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கிப் பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய நிலை.

மலையடிவாரக் கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அவனுக்கு ஆர்வம் இருப்பதில்லை.  சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன்.  பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான்.. வாழைப்பழத்தை தின்றுவிட்டுச் சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தைக் கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். இப்போதும் மற்றவர்களிடம் சூதுவாதின்றி இருப்பதாக எண்ணிக் கொள்வான். அவன் மட்டும் விதிவிலக்கு. காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்குக் களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்துவிட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாகப் படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில், அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்து கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக்கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும்வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால், அவனைத் தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும்போது அவன் கையின் சூடு தெரிந்தது. அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள். அவன் கொடுக்கும் காசு மொத்தத்தையும் அப்படியே துாக்கி கொடுத்துவிட மாட்டாள். தனக்கும் அவனுக்குமான கொடுக்கல்வாங்கல் எப்போதும் முற்றுப் பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பாள்.  

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல்கூட அவளுக்கென்றால், ஆரவாரமாகத்தான் வரும். மஞ்சள் காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழத் தொடங்கி விட்டான்.  தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்குக் கடன் வாங்கப் போக, வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்துப் போட்டு விட்டான். இந்த இழுபறியை விரும்பியே அனுமதித்தவள் போல மஞ்சு தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கிக் கொண்டாள். அந்தக் கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனிடம் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான்.  மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக்கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சில சமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால், உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. அன்றைக்கெல்லாம் மஞ்சுவின் தழுவலில் ஏதோ கூடியிருப்பதாகத் தோன்றும் அவனுக்கு. “இன்னிக்கு சாக்கடய பொத்துடும்போது என்னின்னல்லாம் கெடந்துச்சு தெரிமா..” அதற்காகவே அவளிடம் கூடுதலாகச் சொல்வான். காந்திமதி கேட்டால் உயிரையே விட்டு விடுவாள் என்று எண்ணிக் கொள்வான். காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்துவிட அண்ணன் மகனுக்கு மகளைக் கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய்ச் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது, அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும், முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள், இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகத்தான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படி கொண்ட பழைய காலத்துக் காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதைத் தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடிக் கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால், உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்தப் படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகத்தான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்பக்கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான்.  வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடிப் பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்து நின்றவளைப் பார்த்ததுமே புரிந்து போனது, எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறியவாறு ஓடினான் . துரத்திக்கொண்டே ஓடிப் போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த நேரத்தில், கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாகக் கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டுக் கதறிக்கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.  பிறகு காந்திமதி அவனைத் தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டு. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற, பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யைக்கூட நிஜம் போலச் சொல்வாள். 
ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்புக்கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விடப் போக, கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். உரிமையாக வாங்கிக் கொள்வாள். அவனுக்குக் குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். அவளுக்குக் குடிப்பழக்கம் இருந்ததால் அவன் அதற்காகச் சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டுத் தடுமாறி வீட்டுக்கு செல்லும்போது, குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குமாரின் அண்மை அளித்த எரிச்சலாக இருக்கும் எனக் கணித்துக் கொண்டான் அவன். குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளி வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துப் படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்து விட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கினாடாள். பானைமீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்தாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்தாள். இடது கை அவன் தோளை அணைத்தது. வலது கையால் காலருக்குள் கை விட்டுக் கழுத்தைத் தொட்டாள்.

‘பாசக்காரப்புள்ளதான்..’ என்று எண்ணினான். இல்லையென்றால் தாயிடமிருந்து காட்டமாக வரும் அழைப்பை நிராகரித்து விட்டு அவனிடமே கிடக்க முடியுமா..? ஒருமுறை மஞ்சுவின் தலைமயிரை இழுத்து ஆவேசமாக தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றாள் அவள். மஞ்சுவுக்கு பிறகு ஆணும் பெண்ணுமாக நாலைந்து வாரிசுகள் அவளுக்கு. “காச கெடாசுறேன்.. பொறுக்கீட்டு போயீடு.. அப்பால இங்குட்டு வார வேல வச்சுக்காதே..“ என்று தாயைக் கண்டித்து அனுப்பினாலும் அவள் செட்டுக்கே வந்து மகளிடம் காசு வாங்கிக்கொண்டு போவது, இவனுக்குத் தெரியும்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படர விட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”நாந்தேன் அல்லாத்தயும் தொலச்சுட்டன்.. ஒனக்கென்ன..? கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..“  என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறையப் பேசுவாள். நீதி போதனை வகுப்பெல்லாம்கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள்.   ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியைப் பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்ட போது, இப்படிதான் வலியப் பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுகாடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து  நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாகப் பார்த்து கூப்பிடும்வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோகூட அசைத்துப் பார்த்ததில்லை.  சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒரு முறை தெருவோரக் கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனைப் போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு.  அன்று அவனுக்கு சோதனையான காலகட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது சாக்கடையோரம்  கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல் வரை காட்டிக் கொண்டு உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தைவிட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதால், ஓட்டல் முதலாளி மூன்று நேரச் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்துவிட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி  ஓரமாக வைத்தாள். பாயை விரித்து, அவனைப் படுக்க வைத்து விட்டு,  , அவனை கட்டிக்கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும், உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்துவிட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக்கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன், மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடிப் புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு..  நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள், திடீரென்று தோன்றிய எண்ணத்தைப் பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கே போய்த் தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய யோசனை.

***


No comments:

Post a Comment