Search This Blog

Wednesday, 24 May 2017

நெனப்பு

நவீன விருட்சம் நுாறாவது இதழில் (அக்டோபர் 2016) வெளியான சிறுகதை 

மகளுக்கு பொங்கல் சீருக்கான சாமான்களைக் கூட்டிக் கொண்டிருந்தாள் மரகதம். கரும்பங்கட்டு.. பச்சபயறு.. பச்சரிசி.. மண்டவெல்லம்.. வாழைத்தாரு.. கவுளி வெத்தலை... மஞ்சக்கொத்து.. எடுத்து வைத்தவைகளை வாய் விட்டு சொல்லிக் கொண்டாள். ஒன்று விடுபட்டாலும் சம்மந்தியம்மாளுக்கு கோபம் வந்து விடும். வயது அறுபதை கடந்து விட்டதில் ஒன்று நினைத்தால் ஒன்று மறந்து விடுகிறது.

“இன்னது இன்னதுன்னு ஒரேடியா சொல்லு.. காரு கௌம்பன பொறவு ஒண்ணொன்னா நெனச்சு நெனச்சு சொல்லுவோ..” முணுமுணுப்பாக சொன்னார் சின்னய்யா.

”ஆமா.. வேணும்ன்னுல்ல பண்றாவோ..” வேடு கட்டிய தலை மயிரைத் தட்டிப் போட்டு நுனியில் முடிந்துக் கொண்டாள்.

”காதெல்லாம் கூருதான் கெழவிக்கு..” சிரித்தார். நிலைமையை சமாளிக்கவுமான சிரிப்பு.


கார் தயாராக நின்றுக் கொண்டிருந்தது. வழக்கமாக எடுக்கும் வண்டிதான். சாமான்களை ஏற்ற இறக்க ஓட்டுநர் கூடமாட உதவி செய்வார்.

பிறந்தது இரண்டும் பெண் பிள்ளைகள். ஆளாளுக்கு வெளியூரில் பிள்ளைக் குட்டிகளோடு குடியேறி விட்டார்கள். கரும்புக் கட்டையும் வாழைத்தாரையும் சுமந்துக் கொண்டு பத்து மணி நேரம் பயணம் செய்து போவதெல்லாம் நகைச்சுவையாகி  விடும். பெரியவளுக்கு பணம் அனுப்பியாகி விட்டது. சின்ன சம்மந்தி சம்பிரதாயங்களை உடும்பாய் பிடித்துக் கொள்பவள். இத்தனைக்கும் இது தலைப்பொங்கலெல்லாம் கிடையாது. பணம் என்னங்க.. பணம்.. பம்பாடுதான் முக்கியம்.. என்பாள். பண்பாட்டை விடாப்பிடியாய் பிடிக்க பண்ணையம் செய்யும் ராமசாமியைதான் விடாமல் பிடிக்க வேண்டியிருக்கிறது.
”பாக்கு பொட்ணம் சொன்னனே.. வாங்கியார்ல..“  மரகதத்தின் கேள்விக்கு அசட்டுத்தனமாக சிரித்தான் ராமசாமி.

”காசு பத்லேன்னா கேட்டு வாங்கீட்டு போப்பா.. ஒங்கய்யாமாரி ஒண்ணொண்ணுக்கும் தலய சொறிஞ்சுக்கிட்டு நிக்காத..“ கணவனுக்கு பதிலடி கொடுத்தால்தான் நிறைவாக இருக்கும் அவளுக்கு.

முன்னறையில் அலைபேசி அடித்தது. மனைவி சொல்வது காதில் கேட்காதது போல திண்ணையிலிருந்து நழுவினார் சின்னய்யா. குனிந்த அவசரத்தில் கீழே விழுந்த துண்டை எடுத்து தோளில் சரித்துக் கொண்டார். அலைபேசியின் திரையை கண்களை சுருக்கி பார்த்தார். துரைராசு என்று எழுத்து மின்னியது. மைத்துனர். மரகதத்தின் அண்ணன். தங்கைக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக அழைத்திருப்பார். பனிரெண்டு வருடங்களாக விட்டு போன பாசம் இரண்டு வருடமாக ஊற்றெடுக்கிறது.

”இந்தா.. ஒம் பொறந்தவந்தேன்..” குத்தலாக பேசிக் கொண்டே மனைவியிடம் நீட்டினார்.

மரகதத்துக்கு சொந்தத்தில் முறைக்கார மாப்பிள்ளைகள் ஆறேழு பேர் இருந்தனர். “ஒத்தனுக்கு குடுத்தா ஒத்தனுக்கு பொல்லாப்பு.. வெவசாய வூட்ல குடுத்தா எந்தங்கச்சிய இடுப்பு ஒடிச்சிப்புடுவானுங்க..“ தகப்பனிடம் ஒரே பிடியாய் நின்று பள்ளிக்கூட வாத்தியாரான சின்னய்யாவை தேர்ந்தெடுத்தது மைத்துனர்தான். இரண்டு அக்கா, ஒரே தங்கை மரகதம் என பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசு. மகனின் பேச்சை தகப்பனால் மீற முடியாது.

ஏதோ பாடல் இசையுடன் அலைபேசி அடித்துக் கொண்டிருந்தது.

“வேணும்னா பணமா அனுப்ப சொல்லு.. அரிசியும் கரும்பும் கொண்டாந்துர போறாரு..”

”எடுக்கங்குள்ளயும் அம்புட்டும் பேசிப்புடுவீங்க..“ வழுக்கலாக இருந்த அலைபேசியின் தொடுதிரையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு தள்ளுவதற்குள் பாட்டு நின்றுப் போனது.

”இவ ஒருத்தி.. இந்த போனெல்லாம் புரிய மாட்டீங்கிதுடீன்னா கேட்டுத் தொலக்கிறாளா..“ பிடிவாதமாக இந்த அலைபேசியை வாங்கிக் கொடுத்த மகள் மீது கோபமாய் வந்தது மரகதத்துக்கு.

”அப்பாவ வுட்டுட்டு ஒருநாள் கூட இங்கயும் அங்கயும் நவுந்துடாத.. எங்க அபார்ட்மெண்ட்ல வந்து பாரு.. எல்லா வீட்லயும் பாட்டிதான் பேரப்பிள்ளைய பாத்துக்கிறாங்க..” இரண்டு மகள்களும் குறையாய் பேசுவார்கள். தாயும் தகப்பனும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்னியோன்யம் என்பது இருவருக்குமே தெரியும். கடிந்துக் கொள்வதும் பகடி செய்வதுமாக வெளி பார்வைக்கு தெரிந்தாலும் மனைவியின் இசைவு இல்லாமல் ஒரு சின்ன காரியத்தை கூட செய்ய முடியாது அவரால். மரகதமும் எத்தனை முடிவுகள் எடுத்தாலும் கணவனின் தலையசைப்பின்றி எதையுமே செயல்படுத்துவதில்லை.

அதற்குள் மறுமுறை இசை ஒலித்தது.

“நீங்கதான் என்னான்னு கேக்கறது..“ கணவனை சலித்துக் கொண்டே திரையைத் தள்ளினாள்.  இந்த முறை திரை சரியாக நகர அண்ணி பேசினாள்.

”மரவதம்.. நல்லா இருக்கியா..?” அண்ணியின் குரல் இயல்பாக இல்லை.

”ஏண்ணீ எதாது பெரச்சனயா..?” படபடப்பாக கேட்டாள்.

”ஒண்ணுல்ல.. ஒங்கண்ணனுக்குதான் பத்து நாளா ஒடம்பு ஒண்ணும் சரிப்பட்டு வர்ல.. இன்னிக்கு எந்திரிச்சதுலேர்ந்து ஒருமாரியா முளிக்காரு.. செத்த வந்துட்டு போயேன்.. பயமாருக்குடீ..” குரல் படிபடியாக உடைந்தது அண்ணிக்கு.

அண்ணனுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மகன் வெளிநாட்டில் இருக்க, மகள்கள் திருச்சியிலும் மதுரையிலுமாக இருக்கிறார்கள். அவர்களும் தனிமையில்தான் முதுமையை தள்ளிக் கொண்டிருந்தனர். அண்ணி பிறந்ததும் அதே ஊர்தான். ஏதோ வகையில் முறைப்பெண்ணும் கூட. பண பொருத்தம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் மனம் நன்றாகவே பொருந்தி வந்தது இருவருக்கும்.

மரகதத்துக்கு புரியவில்லை. “முளிக்காருன்னா..?”

”அவருக்கு எதுமே வௌங்கல்ல.. வூடு. வாச.. ஒண்ணும் புரியில.. என்னன்னமோ ஒண்ணுக்கெடக்க ஒண்ணா பேசுறாரு பாப்பா..” அழுகையில் வார்த்தையை கூட்டினாள்.

அரை மணி நேர பயணத்திலிருந்து மரகதத்தின் பிறந்த வீடு. மூத்தவள்கள் இருவரும் பிறந்த ஊரிலேயே வாக்கப்பட்டுக் கொண்டார்கள். மூத்தவளுக்கு பிறந்த வீட்டோடு அத்தனை இணக்கமில்லை. புகுந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் போல பேசுவாள். கல்யாணமோ.. கருமாதியோ.. தனது நான்கு மகன்களின் பெருமையை பேசாமல் ஓய மாட்டாள். மகன்களின் குறும்பை ரசித்து ரசித்து பேசும் போது கன்னிப் பெண்களுக்கெல்லாம் திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்து விடும். இப்போது நான்கு வீடுகளுக்கும் பந்தாடப்படும்போது வயதானதை காரணம் காட்டி பேச்சை குறைத்துக் கொண்டாள். இரண்டாமானவளுக்கு புகுந்த வீடு அத்தனை அனுசரணையாக இல்லை. இத்தனைக்கும் அத்தை மகன்தான் கணவன். அவன் யாரோ ஒரு பெண்ணை சேர்த்துக் கொள்ள, புலம்பலாகவே வாழ்ந்து இப்போது மகளை கொடுத்த இடத்திலேயே தங்கி விட்டாள்.

“என்னாச்சு மரவதம்..?” என்றார்.

”எங்கண்ணனுக்கு ஒடம்புக்கு முடியிலியாம்.. அண்ணி ஒடனே வர சொல்றாப்பல..” சுரத்தின்றி பேசினாள்.

”என்னா பண்ணுதாம்..?”

”ஒண்ணும் வௌங்காம முளிக்காறாம்..”

சின்னய்யாவுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. திரும்ப கேட்டால் கோபப்படுவாள்.

”சம்மந்தி வீட்டுக்கு வாரேம்ன்னு சொல்லீட்டமே..”

”காரு வச்சுதானே போறோம்.. திரும்பி வாரப்ப ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்..”
துரைராசுவுக்கும் இவளுக்கும் ஆறேழு வருட இடைவெளி. பிறந்தது நான்கு பேருடன் என்றாலும் துரைராசுவும் மரகதமும்தான் ஒன்றாக வளர்ந்தார்கள். துரைராசு தலையெடுக்கும் முன்பே மூத்த பெண்கள் இருவருக்கும் திருமணமாகியிருந்தது. அண்ணனின் பிடிவாதத்தில்தான் மரகதம் எட்டாம் வகுப்பு வரை படிக்க முடிந்தது. ஆறாம் வகுப்புக்கு டவுன் பள்ளிக்குதான் செல்ல வேண்டும். மரகதத்தை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு மணியடிக்கும் முன் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பு துரைராசுடையது. முழுப்பரிட்சை நடந்துக் கொண்டிருந்த நேரம் மரகதம் பெரியவளாகி விட படிப்பு நின்று போனது.

மரகத்ததுக்கு மாதாந்திர ஒதுக்கம் சற்று அதிகமாகவே வலி தரும் விஷயம். “பொட்டப்புள்ள இதுக்கெல்லாம் ஆ..ஊன்னு கெடந்தா நாளக்கு பெரசவ வலிய எப்படி பொறுப்ப..?“ என்பாள் அம்மா சாதாரணமாக. தங்கை கொல்லைக்கும் வீட்டுக்குமாக நடப்பதை வைத்து ஒருவாறாக ஊகித்துக் கொள்வான் துரைராசு. மனம் தாங்காது அவனுக்கு. கழிவறை கட்டியது அப்போதுதான். பால் மாட்ட வாங்குனாலும் செலவுக்காவும்.. இதென்னாத்துக்கு வூட்ல கக்கூச கட்டிக்கிட்டு..? அப்பா கடுமையாக எதிர்த்தார். அம்மாவுக்கும் கணவனின் பேச்சில் உடன்பாடுதான்.

”எனக்கு மனசு நல்லாவேயில்ல.. சாமானெல்லாம் பாத்து எடுத்து கட்டுங்க.. அந்த பொம்பள ஒண்ணுன்னா ஒம்போதுங்கும்..” திண்ணையில் அமர்ந்துக் கொண்டாள் மரகதம். ‘எதும் நாபகம் இல்லாம முளிக்காருங்குது அண்ணி.. என்ன அடயாளம் சொல்லுமோ என்னமோ..’ அங்கலாய்ப்பாக இருந்தது.

மனைவியின் முகத்தை ஏறிட்டவர் ”நீ வேணும்னா கௌம்பேன்.. நா இதுங்கள கொண்டி சேத்துட்டு வந்துடுறேன்..” என்றார்.

”ஒத்த ஆளா கொண்டுட்டு போனோம்னா அதுக்கும் எதாது சொல்லும் அந்த பொம்பள..  செத்த நேரந்தானே.. நானும் வாரேன்..” புடவை தலைப்பை உதறி எடுத்து சொருகிக் கொண்டாள்.

கார் மேடு பள்ளங்களை மெதுவாக கடந்துக் கொண்டிருந்தது. கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள் மரகதம். செயற்கை குளிரூட்டியின் குளிர் சற்று இதமாக இருந்தது. ‘நல்ல நெனப்புல இருக்கும்போதே இந்த தங்கச்சிய வேணாம்னு ஒதுக்கிடுச்சு.. இப்ப ஆருன்னு கேக்குமோ..?’

பிறந்த வீட்டில் விஷேசம்.. திருவிழா என்றால் முன்னுக்கு நிற்பது மரகதம்தான். அதற்குள் துரைராசுவும் தங்கையை தேடி நாலைந்து தாக்கல் அனுப்பி விடுவான். அப்போது துரைராசுவின் மூத்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா. மகள்களுடன் மரகதம் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வந்து விட வீடே களைக்கட்டியது போலிருந்தது துரைாசுவுக்கு. வெளி வேலைகளை முழுக்க முழுக்க தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள் மரகதம்.

மஞ்சள் நீராட்டு சடங்கு முடிந்து மறுநாள் மாமன்மச்சான் கறி விருந்து ஏற்பாடாகியிருந்தது. டேபிள் சேர் வாடகைக்கு எடுத்து தலைவாழை இலையிட்டு விருந்து நடந்துக் கொண்டிருந்தது. சின்னய்யா விருந்துக்கு தன் தங்கையை அழைத்து வந்திருந்தான். பனிரெண்டு வயதிருக்கும் அவளுக்கு. பந்தியை கவனிக்க வந்த அண்ணி தன் வீட்டாட்களுக்கு குழிக்கரண்டியில் கறியை அள்ளி அள்ளி வைத்துக் கொண்டிருந்தாள்.

கை செத்த இங்குட்டுந்தான் நீள்றது..” கிண்டலாகதான் சொன்னாள் மரகதம் நாத்தனாரின் இலையை கை காட்டி.

”விருந்துன்னா விருந்தாடிவளுக்கு கொண்டாட்டந்தேன்..” என்றாள் அண்ணி.  சாப்பிட்டு கொண்டிருந்த சின்னய்யாவின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழ ஆவேசமானான். பந்தியில் அமர்ந்திருந்த மகள்களை இடது கையாலேயே வளைத்து துாக்கினான். தங்கையை நெட்டி தள்ளி எழுப்பினான். “வெக்கங்கெட்ட சோத்த இனிம தின்னன்னா பீய திங்கறாப்பல..” சோற்றுக் கையை உதறினான். கொத்துச்சட்டியோடு அண்ணன் ஓடி வந்தார்.  

”அது பேச தெரியாம பேசுப்புடுச்சு மாப்ளே..” கைகளை பிடித்துக் கொண்டார்.

”ங்ங்.. ஒண்ணும் தெரியாத பாப்பா ஓங்கி போட்டாளாம் தாப்பா.. வுடு மச்சான்..” வெடுக்கென்று கையை உதறினான். நடந்ததை ஜீரணிக்க முடியாமல் நின்ற மனைவியிடம் “வாரதுன்னா வா.. ணொண்ணந்தேன் வேணுமின்னா அங்கிட்டே இருந்துக்க..” என்றான். அழுதுக் கொண்டிருந்த மகள்களோடு அழுதுக் கொண்டே கிளம்பியவள்தான் மரகதம்.

தீர்த்து விட வந்தவர்களிடமும் சின்னய்யா கோபமாகவே வார்த்தைகளை வீசினான்.. ”செஞ்சது தப்புன்னு அந்த பொம்பளக்கு ஒரு வாருத்த கேக்க தோதில்ல.. ஆம்பள நா எறங்கி போவுணுமா..” அதன் பிறகு பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ முறை வந்தும் யாரும் பேச்சை முன்னெடுக்கவில்லை.

தனது தங்கையின் திருமணத்திற்கு சின்னய்யா துரைராசு குடும்பத்தை அழைக்கவில்லை. துரைராசுவும் இரண்டாவது மகள் பெரியவளான தகவலை சொல்லியனுப்பவில்லை. மூத்தவள் பீற்றலாக இதை நீட்டி முழக்கி சொன்ன போது அண்ணன் மீதிருந்த கோபமெல்லாம் வடிந்து அழுகை முட்டிக் கொண்டது மரகத்துக்கு. அதன் பிறகு ஒரு திருமணத்தில் அண்ணன் மகளை அண்ணியின் பார்வைப்படுமாறு நெட்டி முறித்தாள். “ஒன் சின்னத்தடீ நானு..” என்றாள். அண்ணனுக்கு விஷயம் தெரிந்திருக்கலாம். நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த ஒரு தருணத்தில் அண்ணனிடம் சினேகமாக புன்னகைத்தாள். அண்ணனும் ஆமோதித்தது போலதான் இருந்தது. ஆனாலும் மகளின் திருமணத்திற்கு அழைப்பு அனுப்பவில்லை. இவளும் ஆள் வைத்து கேட்டுப் பார்த்தாள். “மவ கண்ணாலத்துக்கு இந்த தாய் மாமனுக்கு சொல்லுணும்னு தோணுச்சா அந்த புள்ளைக்கு... நா முன்ன நின்னு செய்ய வேண்டிய தேவய எவனேயோ வச்சு செய்ய முடிஞ்சுதுல்ல.. எம்புட்டு பாடு பட்டுருப்பன்..? எத்தன துடுப்பு துடுச்சிருப்பன்..” அண்ணன் இவள் காதுபடவே கத்தினார்.

பனிரெண்டு வருட கோபமெல்லாம் அறுத்துக் கொண்டு ஓடியது அன்றுதான். “என்ன மன்னிச்சிருண்ணே..“ அழுதுக் கொண்டே ஓடினாள். அண்ணனும் அந்த தருணத்தைதான் எதிர்ப்பார்த்தது போல ஒட்டிக் கொள்ள குடும்பங்கள் இரண்டும் சேர்ந்து இரண்டு வருடங்களானது. அந்த வருடம் துரைராசுவின் மகனுக்கு கல்யாணம். திருமணத்தில் மரகதம் ஓடியாடி கிடந்தது கொஞ்சம் அதிகப்படியாக தெரிந்தாலும் சின்னய்யா எதுவும் சொல்லவில்லை. செய்யாமல் விட்ட தாய்மாமன் வரிசைகள் மகள்களுக்கு வரிசைக் கட்டி வந்த போது பெருமிதம் பிடிபடவில்லை மரகதத்துக்கு.

ஒருமணி நேரம் யுகமாக கடந்தது. சம்பந்தியம்மாளிடம் சிரித்து.. உறவுக்காரர்கள், அக்கம் பக்கத்து வீடுகளை நலம் விசாரித்து.. கிழக்கு முகம் காட்டி சீர்வரிசைகளை நீட்டி.. சாப்பாட்டு இலையில் உட்கார்ந்து.. என எல்லாமே இயந்திரதனமாகவே நடந்ததில் மீண்டும் காரில் ஏறியதும் அப்பாடா என்றிருந்தது மரகத்துக்கு.

ஒருமுறை மாதாந்திர விலக்கத்தின் போது அழுதுக் கொண்டே கழிவறையில் அமர்ந்திருந்தாள் மரகதம். எங்கு வலிக்கிறது என்றே தெரியாத அவஸ்தை. இரண்டு மணி நேரமாவது இது நீடிக்கும். கழிவறையில் கால்கள் மடங்க அமர்வது சற்று ஆறுதலாக இருக்கும். வலி வந்து அடங்கிய பிறகு அடித்து போட்டது போல துாங்கி விடுவாள். குச்சியால் மெலிதாக தட்டி தட்டி மகளை எழுப்பி விட்டு சாப்பிட வைப்பாள் அம்மா. “இந்தாடீ.. கக்கூசுக்கு போய்ட்டு தண்ணீ ஊத்தாமயே வந்துட்டீயா..?” என்றாள் கிசுகிசுப்பாக. வலியில் அப்படியே ஓடி வந்தது அப்போதுதான் உறைத்தது மரகதத்துக்கு.

”எங்கிட்ட சொல்லி தொலச்சிருந்தா நானாது ஊத்தி வுட்டுருப்பன்ல்ல.. ஒங்கண்ணங்காரன் கக்கூசுக்கு போனவன் இதென்னாமா ஒரே ரத்தமா கெடக்குன்னு பதறிக்கிட்டு ஒடியாந்தான்.. என்னான்னு சொல்ல சொல்ற..?” என்றாள் இன்னும் கிசுகிசுப்பாக.

அவளுக்கு அண்ணனை பார்க்கவே கூச்சமாக இருந்தது. இரண்டு நாட்கள் நேருக்கு நேர் சந்திக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். அன்று துரைராசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கொல்லைப்புறமாக வந்து திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டாள் மரகதம். “மூத்தது ரெண்டும் பொறந்ததும் தெரில.. வளந்ததும் தெரில..  இந்தப்புள்ள படாதபாடு படுத்துதுப்பா..” அம்மா பரிமாறிக் கொண்டே அண்ணனிடம் சொன்னது இவளுக்கும் கேட்டது.

”பச்சப்புள்ள.. வெவரம் பத்தல.. எல்லாம் சரியாயிடும்.. சும்மா கரிச்சுக்கிட்டு கெடக்காத..” என்றான் துரைராசு. சொன்னது மாதிரி அவளிடம் முன்பை விட அதிக பிரியமாக இருந்தான். பனிரெண்டு வருட பிரிவை எப்படி தான் தாங்கிக் கொண்டாரே என்றிருந்தது அவளுக்கு.

“வயசாயி போச்சுன்னா இதெல்லாம் சகசம்டீ.. எல்லாம் செரியாயிடும்.. கவலப்படாத.. என் சின்ன தாத்தா இப்டி தான் கெடந்தாராம்.. அப்றம் நல்லா போச்சுன்னு எங்கம்மா சொல்லிருக்கு..” என்றார் சின்னய்யா மனைவியை சமாதானப்படுத்துவது போல. இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கணவனின் அனுசரணையில் சட்டென கன்னத்தில் வழிந்தது.

அண்ணி சொன்னது மாதிரி அண்ணனுக்கு காலையில் சாப்பிட்டது கூட நினைவிலில்லை. உடல் நன்கு வற்றியிருந்தது. ஒவ்வொன்றையும் மனைவியை கேட்டு கேட்டுதான் செய்தார்.

”மாத்ரயெல்லாம் போட்டுக்கிட்டீயாண்ணே..”

திரும்பி மனைவியைப் பார்த்தார். “ரோஸ் கலர்ல ஒண்ணு.. வெளுர் பச்சக் கலர்ல ஒண்ணுன்னு இப்ப தானே குடிச்சீங்க..” என்றாள் அண்ணி.

”போட்டுக்கிட்டம்மா..” என்றார். ஆனால் பழைய நினைவுகள் ஏதும் மறக்கவில்லை. மாப்பிள்ளையைப் பார்த்ததும் கைகளை குவித்தார் எப்போதும் போல. மகள்களை பற்றி விசாரித்தார்.

“பழசெல்லாம் மறக்காதாம்.. இப்ப நடக்கறது மறந்துப்புடுமாம்.. நம்பதான் நெதானமா நடந்துக்குணும்னு டாக்டரு சொன்னாரு..” கிசுகிசுப்பாக சொன்னாள் மரகத்திடம். இருவரும் சமையலறைப் பக்கம் நகர்ந்தனர்.

”ஓண்ணும் திங்க மாட்டேங்கிறாரு.. பாத்தியா.. எலும்பும்தோலுமா கெடக்கறத.. தட்டுல கை வச்சு பதுனஞ்சு நாளாச்சு.. கஞ்சி கடஞ்சி குடுத்தா குடிச்சுக்கிறாரு.. டெஸ்ட்டெல்லாம் நல்லாதான் இருக்குங்கிறாவோ.. என்ன செய்றதுன்னே தெர்ல..” சட்டியில் ஆற வைத்திருந்த கஞ்சியை டம்ளரில் ஊற்றிக் கொண்டே பேசினாள் அண்ணி். இவளுக்கு அழுகை வந்தது.

”நேத்து சேகர் பய வந்திருந்தான்.. உங்க மாமார செத்த குளிக்க வச்சிட்டு போப்பான்னு சொன்னேன்.. இன்னிக்கு என்ன பண்ண போறேன்னு தெர்ல..”

”ஏண்ணீ.. அண்ணன் தானா குளிக்காதா..?”

”எங்க..? சாப்பாட்டல்ல தெம்பிருக்கும்.. புடிச்சுக்கிட்டே நடத்திக் கொண்டாந்து சேர்ல ஒக்கார வச்சு ரெண்டு செம்பு ஊத்தி வுடுறன்.. எனக்கும் குனிய நிமிர தோதுப்படமாட்டீங்குதுடீ..“

எழுபது வயதில் அண்ணன் இத்தனை துாரம் தளர்ந்து விட்டது குறித்து மரகதத்துக்கு மனது தாங்கவில்லை.

”நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா என்ன பண்ண போறீங்க.. காரு புடிச்சுதான் வந்துருக்கோம்.. கௌம்புங்க.. அங்க வச்சு பாத்துக்கலாம்.. ஒத்தருக்குகொருத்தரு அண்டையா கெடந்தா எல்லாம் சரியாயிடும்..” வீட்டுக்கு அழைத்துப் போகும் உத்வேகத்தோடு பேசினாள் மரகதம்.

”எங்கடீ வர்றது..? எடம் மாறுனா இருக்கறதும் கொழம்பி போயீடும்ங்கிறாரு டாக்டரு.. பெரியவன் பதுனஞ்சு நாளு லீவ போட்டுட்டு வாரேன்னுருக்கான்..”

கஞ்சி டம்ளருடன் வந்த மரகதத்தைப் பார்த்து வெள்ளந்தியாக சிரித்தார் அண்ணன். “வாயில வச்சு வுடு.. அப்பதான் குடிப்பாரு..” என்றாள் அண்ணி.

பிறந்து வளர்ந்து ஓடி விளையாண்ட வீடு இருளடைந்து கிடப்பது போலிருந்தது மரகதத்துக்கு. வீட்டில் எப்போதும் இரண்டாள் சாப்பாடு மீதமாகவே இருக்கும். அண்ணி சின்ன கிண்ணம் ஒன்றில் ரசம் மட்டும் வைத்திருந்தாள். ஏதோ துவையல் ஒன்று ஒரு கிண்ணத்திலிருந்தது.

“கௌம்பலாமா..?” என்றார் சின்னைய்யா.

”இருங்க.. அண்ணன குளிச்சு வுட்டுட்டு வந்துர்றேன்..” என்றாள். திருமணத்துக்கு முன் அண்ணனுடன் சைக்கிளில் உட்கார்ந்து போகும் போது அம்மா சொல்லியனுப்பும். “சீட்டுக்கம்பிய புடிச்சுக்கிட்டு நவுந்தாப்பல ஒக்காரு.. ஒரசிக்கிட்டே கெடப்ப..”

ஏதோ ஒரு உணர்வில் சொல்லி விட்டாலும் சற்று தயக்கமாகதான் இருந்தது அவளுக்கு. இருந்தாலும் பின் வாங்க முடியவில்லை. அண்ணி விறகடுப்பில் கனன்றுக் கொண்டிருந்த வெந்நீரை விளாவி முற்றத்தில் வைத்தாள். கைப்பிடியில்லாத பிளாஸ்டிக் நாற்காலியை வாளியின் அருகில் நகர்த்தி வைத்தாள். ”இதுல ஒக்காந்துதான் குளிக்கிறாரு இப்ப..” என்றாள்.

”அண்ணே.. எந்திரி.. குளிக்கிலாம்..” குனிந்து சொன்னாள் மரகதம். அவர் மனைவியை திரும்பிப் பார்த்தார்.

”பாப்பா குளிச்சு வுட்டுட்டு போறேன்னுச்சு..“ என்றாள்.

மரகதம் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள அண்ணன் மெல்ல நடந்து வந்தார். நாற்காலியில் அமர தடுமாறினார். “எந்திரிக்க ஒக்கார தெம்பு கெடயாது.. நீயா மெதுவா ஒக்கார வச்சாதான்..” என்றாள் அண்ணி. எலும்பாக தெரிந்தாலும் நல்ல கனமாக இருந்தார்.

”தலைக்கு ஊத்துட்டும்மாண்ணீ…”

”ஊத்து.. ஊத்து.. படுத்தே கெடக்கறது வேத்து வேத்து வுடுது..”

தலைக்கு ஊற்றினாள். பிறகு மெல்ல உடலில் நீரை ஊற்றினாள். சோப்பை எடுத்து கைகளில் தடவி பொங்கிய நுரையோடு சோப்பால் உடலை தேய்த்து கழுவினாள். கால் விரல் இடுக்குகளை கழுவும் போது அழுக்கு தனித்து ஓடியது. வயிறு.. முதுகு.. மார்பு தேய்த்து விட்டாள். நீரை அள்ளி ஊற்றினாள்.

”பாப்பா.. நீ இங்குட்டு வந்துடு.. தேய்ச்சுக்கிட்டு அண்டர்வேர மாத்திக்கிட்டும்..” என்றாள் அண்ணி. ஆற்றி கையில் வைத்திருந்த ஹார்லிக்ஸ் டம்ளருடன் சின்னய்யாவை தேடினாள்.

”எங்க அண்ணன காணாம்..?”

”வெளிய தெருவ பாத்துட்டு வாரேன்னாவோ..” என்றாள் மரகதம்.

“மனுசாளுக்கு வெயாதிய பாரேன்.. மனசுல பதிஞ்சு கெடக்கறதெல்லாம் பெரகாசமா இருக்குமாம்.. இப்பத்திய நடப்புதான் பொசுக்குன்னு மறஞ்சுடுமாம்.. செந்திலு பய வருட்டும்னு இருக்கன்..” என்றாள். கண்களில் நீர் துளிர்த்திருந்தது அவளுக்கு. ”செரி.. நீ போ பாப்பா.. ஒங்கண்ணன் குளிச்சிருப்பாரு..” என்றாள்.

சொன்னது போல் கீழ் உடுப்பை மட்டும் மாற்றிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் துரைராசு.

தேங்காய் பூ துண்டால் அண்ணனின் உடலை பொத்தி பொத்தி துடைத்தாள் மரகதம்.
”போலாமாண்ணே..” என்றாள்.

”ம்ம்ம்.. செரி...” நாற்காலியிலிருந்து தானே எழுந்துக் கொண்டார் துரைராசு. 
 
***


No comments:

Post a Comment