Search This Blog

Monday 8 May 2017

வியாழக்கிழமை

நவம்பர் 2016 உயிரெழுத்தில் வெளியான சிறுகதை


சாக்குப்படுதா திரையை விலக்கி நடைபாதை மேடையிலிருந்து வெளியே எட்டி பார்த்தான் அவன். தெரு மேலதிக நடமாட்டமின்றி இருந்தது. தொளதொளத்த உடைகள் வியர்வையில் உடம்போடு ஒட்டியிருக்க, காதுகளில் மாட்டிக் கொண்ட இயர்ஃபோனுடன் சிலர் காலை கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ரயிலடியை ஒட்டிய நடைபாதை என்றாலும் சற்று உள்ளொடுங்கியிருந்தது. ஆட்டோ ஒன்று அதிகபட்ச சத்தத்தோடு நகர்ந்து போனது. அதன் வேகத்தை விட சத்தம் அதிகமாக இருந்தது. அதுவும் தரையில் அமர்ந்திருக்கும்போது ஒலியின் வீரியம் அதிர்வுகளாக தெரியும். குழந்தை விழித்துக் கொண்டானா என திரும்பி பார்த்தான் அவன். மனைவி ஜாக்கெட்டின் கொக்கிகளை சரிவர போடவில்லை. அவள் கையிலிருந்து விலகி மல்லாந்து உறங்கிக் கொண்டிருந்தான் மகன். அவன் படுத்திருந்த இடம் வெற்றாக கிடக்க சுற்றிலும் கொசுக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தன. வட்டமாக உதிர்ந்து கிடந்த கொசுவர்த்தியின் சாம்பலுக்கிடையே பளபளப்பாக வீற்றிருந்த வத்தி ஸ்டாண்டின் மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் கொசுக்கள் உணவு வேட்டையை வீரியமாக தொடங்கின. தோளில் கிடந்த துண்டால் கொசுவை விரட்டி விட்டு பின் அதை மனைவியின் விலகி கிடந்த சேலையின் மேல் போர்த்தினான். பதின்பருவத்திலிருந்த மனைவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.


வண்டி ஓனர் வீட்டில் இருந்தது. ஓனர் பெரிய ஆளெல்லாம் இல்லை. இதே மாதிரி இன்னொரு வண்டி வைத்திருக்கிறார். இவனாகதான் போய் அணுகினான். தான் ஒரு ஏரியாவை பார்த்துக் கொள்வதாக சொன்னான். ஓனருக்கு நம்பிக்கை வரவில்லை. நாஷ்டா கடைக்காரன்தான் “நான் ஜவாப்பு..” என்று சிபாரிசு செய்தான். அவன் மனைவி நாஷ்டா கடையில் பாத்திரம் கழுவுவாள். ஒன்றரை வயது மகனுக்கு இன்னும் தாய்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். புடவை விலகியும் விலகாமலுமான அவள் நடமாட்டத்துக்கே இன்னும் கூட சம்பளம் கொடுக்கலாம். ஆனால் இரண்டு வேளை சாப்பாடே போதும் என்பது போல அவள் எதையும் கேட்பதில்லை. அந்த வண்டி வந்ததிலிருந்து வியாழக்கிழமைகளில் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்வாள்.

வெளியே எழுந்து வந்தான். வாயில் திரண்ட எச்சிலை துப்பி விட்டு தெருவோர டீக்கடையில் டீ சொல்லிக் கொண்டான். ”கணக்குக்கு நாலு ஆவுது..” என்றான் கடைக்காரன்.

”நாலு டீயாண்ணே..” தெரியும்.. ஆனாலும் கேட்டான்.

”ம்ம்.. நாலு டீ.. பேசுவியே.. நாலு நாளு கணக்கு..” அவனும் மனைவியுமாக நாள் ஒன்றுக்கு ஆளுக்கு மூன்று டீயாவது குடித்து விடுவார்கள். டீ தொண்டையில் சூடாக இறங்கி, இரண்டே மடக்கில் முடிந்து போனது. கப்பை துாக்கி எறிந்தான். அது குப்பைக் கூடையில் தட்டி இவன் காலுக்கருகேயே வந்து விழுந்தது. அதை எத்தி தள்ளி விட்டு ஓனர் வீட்டுக்கு நடந்தான்.

ஓனரும் காலையிலேயே எழுந்து விட்டிருந்தான். இவனை மாதிரி நடைபாதை மேடையில் குடியிருக்காமல் தகரம்.. தார்பாலின் என்றெல்லாம் சேர்ந்து வீடு போல ஏதோ ஒன்றில் குடியிருந்தான். வசவசவென்று துாங்கி கொண்டிருந்தனர் ஆட்கள். பேசாமல் போய் நின்றான். வாரவாரம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போலவே அணுக வேண்டும். பத்து நிமிட காத்திருப்புக்கு பிறகு ”கரீட்டா எட்டு மணித்தாவல வூட்டாண்ட கொண்டாந்துடுணும்..” எடுத்துட்டு போ என்பதற்கு இதுதான் சமிக்ஞை. ஏறி மிதிக்கக் கூடாது என்பான். தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். ”கலீசனு பக்கா பண்ணுனும் இந்த தபா..” என்றான். வரும் கலெக்ஷனில் இவனுக்கு பாதி கொடுத்து விட வேண்டும். அல்லது ஓனர் நிர்ணயிக்கும் தொகையை கொடுத்து விட்டு மேற்கொண்டு மிஞ்சுவதை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

”செரி..” ஒற்றை சொல்லை சற்று பணிவு கலந்து சொல்லி விட்டு கூளம் போல கிடந்த இடத்திலிருந்து வண்டியை உருட்டி நகர்த்தினான். கலகலத்து காயலான் கடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சா அது. டயர் மட்டும் ஒழுங்கிலிருந்தது. துறுப்பிடித்த மட் கார்டை சொந்த செலவில் காவி பெயிண்ட் அடித்துக் கொண்டான். ஓனர் அதை கண்டும் பாராட்டாக ஏதும் சொல்லவில்லை.

இன்னமும் சாக்குபடுதாவுக்குள் மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதற்குள் மாநகராட்சி குளியலறைக்கு சென்று குளித்து விட எண்ணினான். ஒவ்வொரு முறையும் தனித்தனியே காசு தர தேவையில்லை. மனைவி வேலை செய்யும் கடையிலிருந்து அவ்வப்போது டிபன் கட்டி எடுத்து வருமாறு அதிகாரமாக சொல்லுவான் அந்த காவலாளி. இதை தவிர்த்து மாதம் ஐம்பது ரூபாய் அளித்தால் முனகிக் கொண்டே வாங்கிக் கொள்வான். ஆனாலும் குளிக்க.. மற்ற விஷயங்களுக்கு கூட்டமில்லாத நேரங்களில் உபயோகித்துக் கொள்ள அனுமதிப்பான். தெருவில் நடமாட்டம் பெருகியிருந்தது. குளியலறையை யாரோ உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் காத்து நின்றனர். வழக்கமாக இது ரயில் வரும் நேரமல்ல. ஏதோ ஒரு ரயில் தாமதமாக வந்திருக்கலாம். இந்நேரம்  நிச்சயம் அனுமதிக்க மாட்டான்.

கையேந்திபவன் ஒன்றின் பின்புறம் குவியலாக பாத்திரத்தை போட்டு தேய்த்துக் கொண்டிருந்தாள் வயதான பெண் ஒருத்தி. அவளிடம் ஒரு கப் நீர் வாங்கி முகம் கைகால்களை கழுவிக் கொண்டான். வெறுங்கையால் பற்களை தீட்டி கொப்பளித்தான். ”இந்த.. கப்ப கொண்டா இப்டீ.. வுட்டா எல்லா சோலியயும் இதுலயே முடிச்சுக்குவ..” என்றாள் அந்த பெண். ”இந்தா.. நீயாச்சு.. ஒன் தண்ணியாச்சு..” கப்பை அன்னக்கூடைக்குள் தொப்பென்று போட, அதிலிருந்த தண்ணீர் அவள் முகத்தில் அடித்தது. “அடுத்த தபா வாரவன் தானே..” என்று கோபப்பட்டாள் அந்த பெண்மணி.

சாக்குப்படுதாவை விலக்கி உள்ளே நுழைந்தான். காலில் மனைவியின் கால் தட்டுப்பட “இந்தா.. எந்திரி..” லேசாக எத்தினான். நேற்றே வாங்கி வைத்திருந்த காவி வண்ண காகித தோரணங்களை எடுத்துக் கொண்டான். எழுந்து உட்கார்ந்து சிறுமியை போல அலங்க மலங்க விழித்து பிறகு நிதானத்துக்கு வந்தவளாக குழந்தையை துாக்கி வசதியாக படுக்க வைத்தாள் அவள். ”டீ வாங்கியாரவா..” என்றான். ”வேணாம்.. பய முளிக்கிட்டும்..” என்றாள்.

வண்டியில் தொங்கிக் கொண்டிருந்த பழைய ஜிகினா பேப்பர்.. காய்ந்த மாலை.. காகித துண்டு.. கலர் தோரணம் என எல்லாவற்றையும் பொறுக்கி துடைத்து சுத்தம் செய்தான். துறுவேறிய பழைய வண்டி என்றாலும் இப்போது சுத்தமாக இருந்தது. சத்தம் வரும் இடங்களில் எண்ணெயிட்டான். காவிக் கலர் பேப்பரை குறுக்கும் நெடுக்குமாக ஒட்டினான். ஜிகினா ஒட்டும்போது மகனின் அழுக்குரல் கேட்டது. மார்புக்காம்பை மகனின் வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. மகன் பசி தாங்க மாட்டான். டீ வாங்கி வைத்து விட்டால் நிம்மதியாக வேலை பார்க்கலாம். உள்ளிருந்து சில்வர் டம்ளரை எடுத்துச் சென்று, அது நிறைய டீ வாங்கிக் கொண்டான். கடைக்காரன் “துட்ட எண்ணி வச்சுட்டு டம்ளரை தொடு..” என்றான். இன்று வியாழக்கிழமை. கண்டிப்புக் காட்டினால் சாயங்காலம் காசு கைக்கு வரும். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் காக்க வேண்டியிருக்கும் என்பது கடைக்காரனுக்கு தெரியும். அசட்டு சிரிப்போடு டம்ளரை ஏந்திக் கொண்டான். ”சீக்ரம்..“ என்றான் மனைவியிடம். அரை டம்ளர் அவளுக்கு. மீதம் அரை டம்ளர் டீயை ஆறிய பிறகு மகன் உறிஞ்சி விடுவான்.

மஞ்சள் வண்ண ஜிகினா பேப்பரை இடையிடையே ஒட்டினான். காவி தோரணமும் மஞ்சள் ஜிகினாத்தாளுமாக ஒரு மாதிரியாக புனிதம் திரண்டிருந்தது. ஹேண்டில் பாரில் மீதமிருந்த காவி பேப்பரை சுற்றினான். முகப்பில் சீரடி சாய்பாபாவின் சிறிய அட்டையாலான புகைப்படத்தை வைத்து கட்டினான். கருப்பு வெள்ளை புகைப்படம். மஞ்சள் சாமந்தியால் படத்தை அலங்கரித்தான். உள்ளேயிருந்து பெரிய பாபா போட்டோவை எடுத்து வந்து உட்காரும் இருக்கையில் படுக்க வைத்தாள் மனைவி. நடைப்பாதை மேடையில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு மகன் டீயை உறிஞ்சினான். நகரில் காலை நேர பரபரப்பு தொற்றிக் கொண்டது. வண்டிவாசிகள் விர்விர்ரென பறக்கத் தொடங்கின. பால்.. காய்கறி வண்டிகள் குடியிருப்பை நோக்கி வேகமெடுத்தது.

”மணியாச்சு.. சீக்ரம்..” என்றான் தனக்கும் மனைவிக்குமாக.

ஓம் சாயி.. ஸ்ரீ சாயி.. என்று ஹிந்தியில் அச்சிட்ட மஞ்சள் துண்டை விரித்து அதில் சாய்பாபா படத்தை நடுநாயகமாக்கி மனைவி பிடித்துக் கொள்ள.. படத்தை இருபுறமுமிருந்த கம்பிகளில் அசையாமல் இழுத்துக் கட்டினான். ஆட்டி பார்த்தான். சாயாமல் இருந்தது சாய்பாபா படம். சாமந்தி மாலையை கொண்டு வர சொன்னான். மாலையை படத்தோடு இறுக்கி அசையாமல் கட்டினான்.

முகத்தை அலம்பி கண்களிலிருந்து பூளையை அகற்றிக் கொண்டிருந்தாள் மனைவி. துணியில்லாமல் டம்ளரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த மகனை “எலேய்..“ என்று கொஞ்சிக் கொண்டே தடுப்புக்குள் நுழைந்தான். அடுக்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் ஏற்கனவே இருந்த விபூதியோடு பாக்கெட்டிலிருந்த விபூதியை பிரித்துக் கொட்டினான். உடுத்தியிருந்த புடவையை கழற்றி விட்டு காவி நிற புடவையை கட்டிக் கொண்டாள் அவள். மனைவியின் இடுப்பை வலியில்லாமல் கிள்ளினான். பிறகு குங்குமம்.. நறநறவென்றிருந்த சாம்பல் என தனி தனி பிளாஸ்டிக் தட்டுகளில் எடுத்து வைத்துக் கொண்டான். மனைவி புடவைக்கு கொசுவம் வைத்துக் கொண்டிருந்தாள். மகனின் கையிலிருந்த டம்ளரை வாங்கி ஓரமாக வைத்து விட்டு அவனுக்கு டிரவுசரை அணிவித்தான். பளபளவென்று காவி நிறத்திலிருந்தது அந்த டிரவுசர்.

ரிக்சா வண்டியை முன்னும் பின்னுமாக சுற்றி வந்து பார்த்தான். மினி சாய்பாபா கோவில் போலிருந்தது அந்த வண்டி. ஸ்பீக்கரை கட்டினான். சில்வர் தோண்டியை எடுத்தாள் அவன் மனைவி. அதன் வாயில் சுற்றப்பட்டிருந்த காவி நிற துணி நைந்திருந்தது. அதை பிரித்து ஓரமாக வீசி விட்டு புது காவி துணியை இறுக்கமாக சுற்றி வேடு கட்டினாள். நடுவே காசு போடுமளவுக்கு சிறிய ஓட்டையை ஏற்படுத்தினான் அவன்.

தலையை அவிழ்த்துப் பின்னிக் கொண்டாள். கிச்சுகிச்சு மூட்டினான் மனைவியை. சிரித்துக் கொண்டே சீப்பிலிருந்த முடியை உருவி படுதாவுக்கு வெளியே எறிந்தாள். செம்பட்டையாக இருந்தது முடி. சாமந்தி பூவை நீட்டினான் அவன். வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். தட்டிலிருந்த விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக் கொண்டான். நடுவில் குங்குமம் வைத்து அதன் மீது கீற்றாய் சாம்பலை நீரில் குழைத்து பூசிக் கொண்டான். விபூதிக்கும் சாம்பலுக்கும் வண்ணத்தில் நிறையவே வித்தியாசம் இருந்தது. மனைவியும் விபூதி பூசிக் கொண்டாள். குங்குமத்தை பெரிதாக இட்டுக் கொண்டாள். இப்போது அவளுக்கு வயது இரண்டு மூன்று கூடி இருபது.. இருபத்தொன்று மதிக்கலாம் என்றிருந்தது. காலி டம்ளருக்காக அடம் பிடித்து சிணுங்கிய மகனிடம் ஒயர் கூடையில் வைத்திருந்த  முறுக்கை எடுத்து நீட்டினாள். ஒழுகும் சளியை நக்கிக் கொண்டே முறுக்கை கடித்தான் மகன். “நேரமாச்சு..” என்றான் மீண்டும் மனைவியிடம்.

ஒயர் கூடையை எடுத்துக் கொண்டாள் மனைவி. துாக்கியெறிந்த உண்டியல் துணியால் மகனின் மூக்கில் ஒழுகிய சளியை துடைத்தெடுத்தாள். பிறகு மகனின் நெற்றியில் விபூதி பட்டையிட்டாள். சாம்பல் தட்டை நீட்டினான் அவன். தனக்கும் மகனுக்கும் கீற்றாக இட்டுக் கொண்டாள். குங்குமம் வைக்க விடாமல் தடுத்த மகனின் கையை பிடித்துக் கொண்டு குங்குமத்தை வைத்தாள்.
”போலாமா..” என்றான்.

”ம்ம்..” என்றாள்.

வண்டி தயாராக இருந்தது. சாமந்தி மாலையில் சாய்பாபாவும் தயாராக வீற்றிருந்தார்.  

மகனை துாக்கிக் கொண்டாள் அவள். ஒயர் கூடையை ஹேண்ட்பாரில் மாட்டினான் அவன். சிவப்பு நிற சிறிய பிளாஸ்டிக் உண்டியல் ஒன்றினை மகன் கையில் கொடுத்தாள். அவன் உடனடியாக அதை வாயில் வைத்து விளையாடினான். டேப்ரிகார்டரை ஆன் செய்தான்.

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.

சாயி காயத்ரி ராகமாக ஒலிக்கத் தொடங்கியது.

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி“

காலையிலேயே கிளம்பி விட்டதால் இன்று உண்டியல் அரைவாசியாவது நிரம்பி விடும் என்ற எதிர்பார்ப்பு இருவருக்குமே இருந்தது. உற்சாகமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நடக்க துவங்கினர்.


***

No comments:

Post a Comment