Search This Blog

Monday 8 May 2017

பிடித்தமானவள்


உயிரெழுத்து மார்ச் 2017ல் வெளியான சிறுகதை

தெரு சற்று விசாலமாகவே இருந்தது. வழி சொன்னவர்களெல்லாம் இந்த விசாலத்தை குறிப்பிடவில்லை. பெட்டிக்கடைக்காரர் மட்டும் பாதை மடிஞ்சு மடிஞ்சு போவும் தம்பி பொறத்தால கொஞ்சம் பெரிய தெருவா இருக்கும்.. பெட்டிக்கட கூட இருக்கும்.. என்றார். ஒருவேளை சிறு சிறு சந்துகள் அந்த தெருவை பெருசாக்கியதோ என்னவோ. நல்லவேளை தெருவின் பெயர் பெரியதாக எழுதப்பட்டிருந்தது.

”நாகவல்லின்னு ஒருத்தங்க.. அவங்க வீடு எங்க இருக்குங்க..” சுசூகி ஆக்சஸிலிருந்து கால்களை விரித்து தரையில் வைத்தப்படியே தெருவில் தள்ளு வண்டி வியாபாரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டான் ரஞ்சித். ஆன்ட்டி என்று சொல்ல முடியாது. அக்கா என்றால் மகிழ்வாள்.


“நா வேணா எறங்கிக்கவாப்பா..” என்றார் சந்திரன் மகனிடம். வாரிசுகளுக்கு பின்னால் உட்கார்ந்து கொள்ளும் வண்டி சவாரி நன்றாகவே இருந்தது. அதுவும் தன் வயதையொத்தவர்களை பார்க்கும் போது பெருமையாகவே இருக்கும்.

”நாகவல்லியா.. அப்டீன்னு யாரும் இல்லையே..?” என்றாள் அந்த பெண் கண்களை குறுக்கிக் கொண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்களுக்கு பெயர் தேவைப்படுவதில்லை. அதிலும் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு. நாகவல்லியும் இப்போது வீட்டில்தான் இருக்கிறாள்… விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு. முறையாக இன்னும் இரண்டு மூன்று வருடங்களாகலாம் ஓய்வு பெறுவதற்கு.

”அந்த அட்ரஸ் கரெக்ட்தானப்பா..?” என்றான் ரஞ்சித் பின்னால் திரும்பி. சந்திரன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து அலுவலகத்தில் குறித்துக் கொடுத்த முகவரியை எடுத்துப் பார்த்தார். இந்த ஏரியாதான்.

”வாங்க சார்.. எங்க வீட்டுக்குதான் வந்திருக்கீங்க..” என்றாள் டிவிஎஸ் எக்ஸல் வண்டியில் காலை ஊன்றி நின்றப்படியே ஒரு இளம்பெண். சந்திரன் புருவம் உயர்த்த ”நாகவல்லி எங்கம்மாதான்..” என்றாள். ஆரஞ்சு நிற லெக்கினும் வெள்ளை டாப்புமாக இருந்தாள்.

”நல்லவேளைம்மா.. ரோட்ல நடமாட்டமே இல்லையா.. வீட்ட எப்டி கண்டுப்பிடிக்க போறோம்னு நெனச்சேன்..” என்றார்.

”இது எக்ஸ்டென்ஷன் ஏரியா அங்கிள்.. அப்டிதான் இருக்கும்.. த்தோ.. அதான் எங்க வீடு..” இரண்டு வீடு தள்ளி விரலை நீட்டினாள். ”அம்மா வீட்லதான் இருக்காங்க.. நீங்க கேட்ட திறந்துட்டு உள்ள போங்க.. நான் வந்துர்றேன்..” வண்டியை முறுக்கிக் கிளப்பினாள்.

கேட்டில் மரத்தால் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் சௌந்திரபாண்டியன் என்று வெள்ளை பெயிண்டில் எழுதப்பட்டிருந்தது. அருகே அழைப்பு மணிக்கான சுவிட்ச் இருந்தது. அழைப்பாணை அழுத்தும்போது விரல்களில் முல்லைக் கொடியின் வாசம் படிவதை தடுக்க முடியாது என்பது போல கொடி வளைந்து மின்பலகையை வளைத்திருந்தது. பசு இலை வாசம் கூட பூ வாசம் போல நன்றாகதானிருந்தது. ரஞ்சித் வண்டியை நிறுத்தி பூட்டினான்.

கேட்டுக்கும் வீட்டுக்கும் வாசல் நீண்டிருந்தது. இருபுறங்களிலும் வரிசையாக செடிகள். இலைகள் அதிகம் தென்படாத ரோஜா செடியில் பட்டுரோஜாக்கள் மிக வெளிரான ரோஸ் வண்ணத்தில் பூத்திருந்தன. இதழ் உதிராமல் இருக்க தேங்காய் எண்ணெயை தொட்டு பூவின் நடுப்பகுதியில் ஒத்தியெடுத்து பெண்கள் தலையில் சூடிக் கொள்வதை சிறுவயதில் பார்த்திருக்கிறார். இந்த இதழ்களை சாப்பிட்டுமிருக்கிறார். ஒருமாதிரியாக நல்ல வாசம் வரும். இப்போது இந்த வகையான ரோஜாவைகாண முடிவதில்லை. ஏதோ ஒரு சென்ட்டில் அந்த மணம் வருவதை முகர்ந்திருக்கிறார். மாதுளை மரத்திலிருந்த கனி படம் வரைந்ததை போன்ற கூரான வடிவுடன் நேர்த்தியாக தொங்கிக் கொண்டிருந்தது. முதிராத பருப்பு சற்று கசந்தது போலிருக்கும். கடையில் விற்பதை போல மொந்தையாக இல்லாமல் கைக்குள் அடங்கும் கச்சித வடிவில் இருந்தது.

ரஞ்சித்தும் வண்டியை நிறுத்தி விட்டு வந்து விட்டிருந்தான். வெளியில் ஆள் நடமாட்டமில்லை. தயக்கத்தோடு செருப்பை கழற்றினார். வாசற்படியையொட்டி இருபுறமுமிருந்த அடுக்கு செம்பருத்தி செடிகள் வஞ்சனையின்றி பூத்திருந்தன. கொழகொழப்பான அதன் இலைகளை அரைத்து பெண்கள் தலையில் தேய்த்துக் கொள்வதை பார்த்திருக்கிறார்.

”யாரு.. மரகதமா.. உள்ள வாயேன்.. கதவு தொறந்துதானே இருக்கு..” என்றது உள்ளிருந்து வந்த குரல். நாகவல்லியின் குரல்தான். சட்டென ஒரு பரவசம் உள்ளுக்குள் ஓடியது அவருக்கு. யாரும் இல்லாமல் இருந்து விடலாம்தான். ஆனால் அவர்கள் இருப்பை உணரும் அந்த நொடி நேர பரவசமும் உண்மைதான் என்று தோன்றியது அவருக்கு.

”மரகதமில்ல.. நானு..” என்ன சொல்வதென்று தெரியவில்லை அவருக்கு. அலுவலகத்தில் சி த்ரீ என்றே பழகி விட்டது.  அதற்கு பிறகு இரண்டு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் எல்லாருக்கும் எப்போதும் சி த்ரீதான்.

”ஸ்ஸ்த்.. நாந்தான்..” என்றார். அதற்குள் நாகவல்லி வெளியே வந்து விட்டாள்.

இளவெயிலில் கண்களை குறுக்கி பார்த்து.. நிதானித்து.. அடையாளம் கண்டு பிறகு பளிச்சென்று சிரித்தாள். ”வாங்க.. வாங்க.. சி3சார்.. வாங்க.. வாங்க தம்பி.. வேலைக்காரப் பொண்ணுன்னு நெனச்சுட்டு உள்ளயிருந்தன்..” என்றாள் தன்னை குற்றம் சாட்டிக் கொள்வது போல. ஆறு வருடங்கள் அவள் மயிரை சற்று வெளுப்பாக்கி இருந்தது. மற்றபடி பெரிதான மாற்றமில்லை. பருத்திப்புடவை கட்டியிருந்தாள். தோள்பையை மாட்டிக் கொண்டால் அலுவலகம் வந்து விடலாம். 

”வெளிய கௌம்பீட்டீங்களோ..?” என்றார்.

நாகவல்லி விருப்ப ஓய்வு கொடுக்கும் போது மகள் பனிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வண்டியில் சென்றவளா..?

”நம்ம பாப்பாவா வண்டில போனது..?”

”அவள நெனப்பிருக்கா சித்ரீ சார்..” குரல் குழைந்திருந்தது. ”நம்மாளுங்களெல்லாம் பாக்கறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.. வாங்க உள்ள..” என்றாள்.

கச்சிதமான வீடு. துப்புரவாக வெளிச்சமாக இருந்தது. ஜன்னல்கள் திறந்திருந்தன. எஃப்எம் ஓடிக் கொண்டிருந்தது. மடிக்கணினி சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தது.

”நா கூட இந்த மாசம் ரிடையர் ஆவறேன்..”

”நெனச்சேன்.. இந்த வருஷம் பொறந்தபோதே எனக்கு ஞாபகம் வந்துச்சு..” கண்களின் கடைசிவரை சிரித்தாள்.

சிரிப்பு அடங்கும்வரை காத்திருந்தார். ஒரு நொடி பேச்சு நின்று தொடர்ந்தது.

”இப்பல்லாம் ரிடயர்மெண்ட்டுக்குன்னு லம்ப்பா ஒரு அமௌண்ட் ஒதுக்கிக்கிடணும் போல..” என்றாள்.

”ஆமா.. செய்லேன்னாலும் கஞ்சன்ம்பாங்க.. அதான் மண்டபம் புடிச்சு சாப்பாடு அரேஞ்ச் பண்ணியிருக்கேன்.. அதுக்கு இன்வைட் பண்ணதான் வந்தேன்..”

”பழைய ஆளுங்கள்ளாம் ஒவ்வொருத்தரா கௌம்புறீங்க.. எங்க சார் வச்சிருக்கீங்க..?”

”அதே மண்டபந்தான்.. நம்பாளுங்களுக்குன்னுதான் கட்டி வுட்டுருக்கானே..” மென்மையாக சிரித்தார்.

நாகவல்லி பணியில் இருந்த சமயத்தில், கண்காணிப்பாளர் ஒருவர் தன் பணி ஓய்வின்போது மேடையை தன்வசப்படுத்திக் கொண்டு பேசி தீர்த்து விட, முன் வரிசையில் இருந்த பெண் அலுவலர்களுக்கு உட்காரவும் முடியாமல் கிளம்பவும் முடியாமல் அவஸ்தையாகி விட்டது. அன்று நாகவல்லியை சந்திரன் தான் வீட்டில் கொண்டு வந்து விட்டார். அப்போது இந்த வீடு கட்டிக் கொண்டிருந்திருக்கலாம். வாடகை வீட்டில் இருந்தார்கள். அவள் கணவன் சௌந்தரபாண்டியன் இட்லி ஊற்றிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டதும் கொஞ்சம் லஜ்ஜையாகி பிறகு நிதானமடைந்து ”பாப்பா பசிக்குதுன்னுச்சு.. இவங்க வர்றதுக்கு லேட்டாச்சா.. அதான் இட்லி ஊத்திலாம்னு போனேன்..”

”அதுக்கென்ன சார்.. நானும் எம் வொய்ஃப்புக்கு உதவி செஞ்சவன்தான்..” என்றார் சந்திரன்.

”இப்ப செய்றதில்லயா சார்..” சேம் சைட் கோல் அடித்து விட்டு நகர்ந்து விட்டாரே என்பது போல பதறினார். நாகவல்லி கணவனிடம் ஏதோ கண்ணை காட்டினாள். அதை சந்திரன் கவனித்து விட்டார். கணவர் இருவரையுமே கவனிக்காமல் இவர் வாயிலிருந்து வரப்போகும் பதிலுக்காக காத்திருந்தவர் போல ஏறிட்டார்.

”இல்ல சார்.. இப்ப அவங்க இல்ல.. போய்ட்டாங்க.. நானும் எம் பையனுந்தான்..”

”சாரி சார்.. நேரமிருக்கப்ப நம்ப வீட்டுக்கு வாங்க.. நான் நல்லா சமைப்பேன்..” சொல்லி விட்டு சுதாரித்துக் கொண்டு பலமாக சிரிக்க, சி3ம் சிரித்தார்.

”எப்பவும் ஆபிசுதான்.. ஆபிசுக்கு நேந்து வுட்டமாதிரி வேலைப் பாப்பாரு..” என்றாள் கணவனிடம் அறிமுகமாய். இருவரையும் விட குட்டையாக இருந்ததால் எம்பி எம்பி பேசுவது போல பேசினாள்.

பழைய நினைவுகளை புன்னைகையால் மென்மையாக களைந்து விட்டு ”எம் பையனை தெரியுதுல்ல மேடம்..” என்றார். குரலை பெருமை மெருகேற்றியிருந்தது.

”ஒரு தடவை பாத்துருக்கேன்.. இல்லேன்னாலும் கண்டுப்புடிச்சிடுலாம்.. அப்டியே ஒங்கள மாதிரியே இருக்காப்பல..” என்றாள், உற்சாகம் மீண்டவளாக.

”வெளில கௌம்பீட்டீங்க போல..” என்றார் இரண்டாவது முறையாக. இம்முறையும் தனது கேள்வி பேச்சில் கரைந்து விடக் கூடாது என்பது போல அழுத்தமாக கேட்டார்.

”வெளியெல்லாம் இல்ல சார்.. பாப்பா வந்ததும் மார்க்கெட் வரைக்கும் போலாமின்னு..”

சொல்லி வைத்ததுபோல டிவிஎஸ் எக்ஸல் பெண் உள்ளே நுழைந்தாள். இவர்களை பார்த்து பளிச்சென்று சிரித்தாள். ”எம் பொண்ணு.. சின்னவளா இருக்கப்ப பாத்திருக்கீங்க..” என்றாள்.

”ஆமா மேடம்.. வருசமெல்லாம் ரெக்க கட்டீட்டுல்ல ஓடுது..” என்றவர் அந்த பெண்ணிடம் ”என்னம்மா பண்றே..?” என்றார்.

”நானா அங்கிள்.. அப்பா வேலய எனக்கு குடுத்திருக்காங்க.. ஜுனியர் அசிஸ்டென்டா இருக்கேன்..” என்றாள்.

அதிர்வாக நிமிர்ந்தார்.. ”ஆமா சார்.. ரெண்டு வருசமாச்சு அவரு போயீ.. கம்பேஷனேட் கிரௌண்டல பாப்பா வேல பாக்றா..” என்றார் நாகவல்லி.

அதற்குள் அந்த பெண் ஆப்பிளை நறுக்கி எடுத்து வந்து ”எடுத்துக்கோங்க..” என்றாள். ரஞ்சித் அவளை கவனித்துப் பார்த்தான். தலையலங்கார பேண்டை வலது கையில் சுற்றியிருந்தாள். இடதுகை வெறுமையாக இருந்தது. முடியை உயர துாக்கி கட்டியிருந்தாள். காதுகளில் நீளமான காதணிகள். ஆண்களின் முகத்தை இழுத்து இழுத்து தன் பக்கம் வைத்துக் கொள்ளும் துருப்புச்சீட்டு. திறமையற்றவர்கள் கருணை அடிப்படையில் வேலையை பெற்றுக் கொண்டு சுலபமாக முன்னுக்கு வந்து விடுகிறார்கள். அவனும் போட்டித் தேர்வுகள் எழுதிக் கொண்டுதானிருக்கிறான். வாரிசு என்ற ஒற்றை தகுதியில் இவர்களெல்லாம் அடைத்துக் கொண்டால் காலியிடம் எப்படி உருவாகும்..? கடவுள் மீது கோபம் வருகிறது அப்பாவிடம் கற்றுக் கொண்ட கடவுள் நம்பிக்கை. அத்தனை சீக்கிரம் போகாது. வெள்ளையடித்த சுவரைக் கண்டால் சைக்கிள் சாவியால் தலைகீழாக ஓம்முருகா என்று எழுதி அதை கட்டைவிரலில் ஒத்தியெடுப்பான். இம்மியளவும் பிசகாமல் வெள்ளை அச்சாக விழும் ஓம்முருகா-வை விரலில் சுமப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று. அந்த முருகன் கூட அரசாங்க வேலைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். .

”பையன் இருக்கான்ல மேடம் ஒங்களுக்கு..” என்றார் சந்திரன் கேள்விக்குள் கேள்வியை நுழைத்துக் கொண்டு.

”ம்ம்.. அவன் கவர்மெண்ட் ஆபிசுல ஃபைல் பாத்துக்கிட்டு என்னால காலந்தள்ள முடியாதுன்னுட்டான்.. கொஞ்சம் க்ரியேட்டீவ்வான ஆளு.. ஒரு எடமா தங்க மாட்டான்.. ரிப்போர்ட்டரா இருக்கான்..” என்றாள்  பதிலுக்குள் பதிலை சொருகி. திடீரென நாகவல்லிக்கு திடீரென்று நிரம்ப வயதாகி விட்டது போலிருந்தது அவருக்கு.

”பேசிட்டே இருக்கீங்க.. ஆப்பிள் எடுத்துக்கங்க ரெண்டு பேரும்..” என்றாள் பேச்சோடு பேச்சாக.  

கொட்டைகள் இன்றி சீராக நறுக்கப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாக சாய்த்து வைக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளை கலைக்க மனதில்லாமல் ஒன்றை எடுத்து சுவைத்தார். ரஞ்சித்துக்கு ஆப்பிளை எடுத்துக் கொள்ளும் நோக்கில்லை. அதற்குள் அந்த பெண் இன்னொரு தட்டில் அம்மாவுக்கும் தனக்குமாக ஆப்பிள் துண்டங்களை வெட்டிக் எடுத்து வந்திருந்தாள்.

”சி3சார்.. நீங்க டீ காபி குடிக்கறதில்லலே.. ரெண்டு பேருக்கும் ஹார்லிக்ஸ் கலந்துர்ட்டுமா..” என்றாள் மீண்டும் பழைய வயதுக்கு திரும்பி.

”முதல்ல பத்திரிக்கை வச்சிற்றேங்க..” என்றார் சந்திரன் இயல்புக்கு வந்து.
”முப்பதஞ்சு வருஷம் சர்விஸ் இருக்குமா சி3 சார் ஒங்களுக்கு..?”

”ஆமா.. மேடம்.. கரெக்டா முப்பந்தஞ்சு வருசமாச்சு.. இனிமே எப்டி வீட்ல இருக்க போறேன்னு தெரில..”

”பையனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா பேரன்பேத்தின்னு காலம் ஓடீடும் சார்..”

ஒரு தற்காலிக நிம்மதியோடு பத்திரிக்கையை தட்டில் வைத்து நாகவல்லியிடம் நீட்ட..”தோ ஒரு நிமிஷம் அங்கிள்..” என்றாள் அந்த பெண். ”நீ்ங்களும் வாங்களேன்..” என்றாள் எழுந்துக் கொள்ளாமல் அமர்ந்திருந்த ரஞ்சித்திடம். பிறகு மூவரையும் அலைபேசியில் புகைப்படமாக்கி விட்டு “தாங்க்ஸ்..” என்றாள்.

”சின்னசின்ன விஷயம்ன்னாலும் அதை சரியா ரிஜிஸ்டர் பண்ணனும்னு நெனப்பா எம்பொண்ணு..” என்றாள் தகவலாய். பிறகு மகள் நீட்டிய கண்ணாடியை அணிந்துக் கொண்டு பத்திரிக்கையை பிரித்தபடியே ”நம்ப ஆபிஸ்ல எல்லாரும் நல்லாருக்காங்களா சி3 சார்..?” என்றாள்.

”ம்ம்.. நல்ல சுகந்தான்.. ஃபங்ஷனுக்கு நீயும் அவசியம் வந்துடும்மா பாப்பா..” என்றார்.

”ஓ.. ஷ்யூர் அங்கிள்..” என்றாள்.

”ம்மா.. கடப்பார எடுங்களேன்..” தோட்டத்திலிருந்து குரல் ஒலிக்க நாகவல்லி ”ஓரு நிமிஷம்..” என்று எழுந்து பின்கட்டுக்கு செல்ல, அண்ணாதான் கூப்டுறான்.. லீவுநாள்ன்னா தோட்ட வேலை ரெண்டுபடும் எங்க வீட்ல.. தோட்டத்த பாக்கலாம் வாங்களேன்..” என்றாள் அந்த பெண்.

சிறு டைனிங் அறை. அதன் இணையாக சமையலறையும் பிறகு பின்புழக்கமுமாக இருந்தது வீடு. நாகவல்லியின் மகன் புடலைக் கொடிக்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். இவர்களை கண்டதும் கைலியை இறக்கி விட்டுக் கொண்டு ”வாங்க..” என்றான் சிரிப்பு சிந்திய முகமாய்.

சுத்தப்படுத்தப்பட்ட தோட்டத்தில் சிறு வாரிகள் தண்ணீரை ஏந்தி ஓடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே சிதறிக் கிடந்த இலைகள் இயற்கையை உயர்த்தி பிடித்தது போலிருந்தது.

”அந்த பக்கம் இருக்கறது அண்ணனோட பாத்தி.. எம் பாத்தில பசலை.. வல்லாரைன்னு கீரையா போட்டுருக்கேன்..” என்றாள்.

”இதுங்க ரெண்டும் தோட்டத்தை இப்டி பிரிச்சுக்குச்சுங்க..” என்றாள் நாகவல்லி சிறு பிள்ளைகளை குறிப்பிடுவது போல.

தோட்டத்திலேயே ஹார்லிக்ஸ் அருந்துவது கூட நன்றாகதானிருந்தது. சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.

”உம்பேரை கேக்கவே மறந்திட்டம்மா..” என்றார் சந்திரன்.

”தமிழரசி அங்கிள்..” என்றாள்.

ரஞ்சித்துக்கு அந்த பெயரை சுவரில் எழுதி கட்டை விரலில் ஒற்றியெடுக்க வேண்டும் போலிருந்தது.

***

No comments:

Post a Comment