Search This Blog

Wednesday, 24 May 2017

கோபித்துக் கொண்டவர்கள்

செப்டம்பர் 2015  சிலேட்டு இதழில் வெளியான சிறுகதை

உணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார் அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.

சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.


“முசுடு ப்ளாட்டுல ஹோட்டல் வரப்போவுதாமே..“ கிட்டங்கியின் கட்டுமானத்திற்குள் உணவகத்தை பொருத்த முடியாமல் தெரு ஆச்சர்யம் கொண்டது. இதற்கு முன் இங்கு தனியார் அரிசி கிட்டங்கி இருந்தது. தடுப்புகளற்ற பெரிய அறையும் சிறியதொரு அலுவலக அறையுமாக தானே கட்டமைத்துக் கொண்டிருந்தார் அந்த கிட்டங்கி உரிமையாளர். முசுடுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் காலி செய்யும் நாளன்று “புல்டோசர் கொண்டாந்து கட்டடத்த இடிக்காம வுட மாட்டேன்.. பாத்துக்க..” சத்தமாக அவர் கறுவியதை தெருவே பார்த்தது.

இரண்டே நாட்கள் இடைவெளியில் அட்வான்ஸ் கை மாறி விட்டதாக கேள்விப்பட்டதில் தெருவே ஆற்றாமைக் கொண்டது. “அவவன் எழைச்சு எழைச்சு வீட்ட கட்டிட்டு ஆள் வராம திண்டாடுறான்.. முசுடுக்கு நல்ல யோகம்தான்..“ முசுடு அதே ஏரியாவிலேயே ஸ்கூட்டிசகிதம் சுற்றிக் கொண்டிருக்கும். முதல் தேதியன்றே வாடகை வசூலிக்க கடைக்குள் புகுந்து விடும். அலுவலக அறையோ கிட்டங்கி அறையோ வாடகைக்காரர் எங்கேயிருந்தால் சொந்த வீடு போல கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நுழைந்து விடும் தயக்கமேயின்றி.

”ஹோட்டல் வருதுன்னு கேள்விப்பட்டேன் தம்பி..” வலிய பேசினார் எதிர் வீட்டுக்காரர். அந்த இளைஞன்தான் அங்கு வருவதும் போவதுமாக இருந்தான். கோதுமை வண்ணமும் களையான முகமுமாக இயல்பானப் பொருத்தம். பெர்முடாசும் கையில்லா பனியனும் அவனை நவீனமாக்கியது. தனது பைக்கில் சாய்ந்தவாறே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவரின் குரல் கேட்டதும் அலைபேசியை துண்டித்து விட்டு விரைசலாக வந்தான். ”ஆமாங்க சார்.. கார்டன் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமின்னு இருக்கோம்..” என்றான் பவ்யமும் பணிவுமாக.

மேலும் ஆச்சர்யமாக போனது எதிர் வீட்டுக்காரருக்கு. தெருவே கையகலம்தான். வீதிதான் வீட்டு வாசல். கோலங்கள் கூட வீதியைதான் நிறைத்திருக்கும். கார்டனுக்கு எங்கேப் போவது…?

”கார்டன்னா.. செடிக்கொடி மரமெல்லாம் வேணுமே தம்பி..” என்றார் அவர்.

”பின்னால எடம் இருக்கு சார்..” என்றான் அதே பணிவுடன். அவன் சொல்லிதான் பெரியச் செடிகளைக் கூட அப்படியே ரெடிமேடாக விலைக்கு வாங்கி வைக்கலாம் என்று தெரிய வந்தது அவருக்கு. ஆச்சர்யமான அவரின் கண்களைப் பார்த்தான் ”பெரிய மரமெல்லாம் கூட ரெடிமேடா வைக்கலாம் சார்..” பவ்யம் குறையவில்லை.

ட்டுமானத்தை இரண்டாக தடுத்து முன்பகுதியை நாற்பது பேர் சாப்பிடத் தகுந்தளவில் மாற்றப் போவதாகச் சொன்னான். அலுவலக அறையை குழந்தைகளுக்கான விளையாட்டு அறைக்கு ஓதுக்கப் போவதாகவும் சொன்னான். பின்பக்கம் கிச்சனும் கார்டனும் கொண்ட மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்ட் என்ற அவனின் திட்டம் தெரு முழுக்கப் பரவியது.

முசுடு இந்த மனையை நாலைந்து வருடங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தது. வாங்கிய சுருக்கில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு தடுத்தது. முதல் மனைக்காரர் பிரதானச் சாலையை நோக்கி தனது கட்டுமானத்தை திருப்பி விட்டதில் பல கடைகளுக்கு உரிமையாளரானது முசுடை உசுப்பி விட, கட்டுமானத்தில் காசைக் கொட்டாமல் சம்பாதிக்கும் ஆசை வந்தது அதற்கு. முதலில் வாடகைக்கு வந்தது குப்பை ஏஜெண்ட் ஒருவர். குப்பைகள் மூட்டையாய் வந்து இறங்குவதும் இரண்டொரு நாளில் டாடா ஏசில் காணாமல் போவதுமாக துரிதகதி வியாபாரம். இது முசுடின் கண்களில் உறுத்தலாய் விழ ஒரேயடியாய் வாடகையை உயர்த்திக் கேட்டதில் முசுடை அடிக்காதக் குறையாக காலி செய்து விட்டுப் போனார் அவர். அவருக்கு பிறகு வந்த மரக்கடைக்காரரும் “சமார்த்தியம் இருக்கறவன் சம்பாதிக்கிறான்னா இவனுக்கு ஏன் வேவுது..?” என்ற கத்தலோடு நகர்ந்து விட அதற்கு பிறகுதான் அரிசி கிட்டங்கி வந்தது.

உணவகம் குறித்தப் பேச்சுகள் மலைபாம்பாய் மொத்தத் தெருவுக்கும் நீண்டுக் கிடந்தன. தொடர்பில்லாத ஏதேதோ கடைகள் வருவதை விட டீசண்டான ஹோட்டல் ஒன்று தெருவிற்குள் வருவதும் தெரு வளர்ச்சிப் பெறுவது குறித்தும் எல்லோருக்குமே நிறைவுதான். அதை விட மிக அருகில் ஒரு உணவகத்தை காண்பது எல்லோருக்குமே புதிய அனுபவமாக இருந்தது. 

”நான்வெஜ் ஹோட்டலாம்.. தெருவுக்குள்ள கொண்டாந்து போடுறாங்க.. தெருவே நாறப்போவுது..” சைவர்களிடம் செல்ல எதிர்ப்பு இருந்தது.

”அட்ரஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு ஒரு நல்ல லேண்ட் மார்க்குதான்..” வயசாளிகளுக்கு பெருமையாக இருந்தது.

உணவக வேலைகள் தெருவாசிகளின் கவனத்தை ஒன்றுக் கூட்டியிருந்தன. அகன்று நீண்டிருந்த பெரிய அறை குறுக்கே சுவர் எழுப்பப்பட்டு சமையலறையாக பிரிக்கப்பட்டது. உயர்ந்திருந்த மேற்கூரைகள் குளிரூட்டுவதற்கு வசதியாக பொய்கூரைகளாக இறக்கப்பட்டன. அலுவலக அறை சிறுவர்களுக்கான விளையாட்டு அறையாக மாற்றப்பட்டது. முன்பக்க சுவர்.. இரும்பாலான கேட் என பழையவைகள் தகர்க்கப்பட ரோலிங் ஷட்டர்.. கண்ணாடிக் கதவு..என புதியவைகள் உருவாயின. பெர்முடாஸ்.. டீ ஷர்ட் சசிதம் காலையிலேயே வந்து விடுவான் அந்த இளைஞன். அங்குமிங்குமான நடமாட்டத்திலிருக்கும் தெருவாசிகளை அவன் ஏறெடுப்பதுமில்லை. பேச்சுக் கொடுப்பவர் யாராகயிருந்தாலும் யார்.. எவர்.. என்ற விசாரிப்புகளின்றி பணிவோடு பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். “நாகரீகம் தெரிஞ்சப் பையன்..“ என்றார் எதிர்வீட்டுக்காரர். மீதமுள்ளோருக்கும் ஆமோதிப்பாகதான் இருந்தது.

மூன்றாவது மனையும் ஆறாவது மனையும் தவிர்த்து தெரு நெடுக வீடுகள் கட்டப்பட்டு விட்டன. ஆறாவது மனை சற்றே உள்ளடக்கமாக இருந்தது. போகிறபோக்கில் குப்பைகளை துாக்கி வீச மூன்றாவது மனையே வசதியாக இருந்ததில் அது தெருவாசிகளின் குப்பைத் தொட்டியாகியிருந்தது. வாடகைக்காரருக்கு இடைஞ்சலாகி விடக் கூடாது என்பதால் முசுடுக்கு இதில் பிடித்தமிருப்பதில்லை சிறுவர்கள் என்றால் குப்பையோடு திருப்பியனுப்பி விடும். ஆண்களெனில் தனது எதிர்ப்பை கத்தி வெளிப்படுத்தும். பெண்கள் என்றால் செய்வதறியாது விழித்து விட்டு கைகள் நடுங்க நியாயம் கேட்க அங்குமிங்கும் ஓடும். “நீ யாருய்யா கேக்கறது..,? ஒன் எடமாய்யா இது..?” கூச்சல்கள் முசுடைக் கட்டுப்படுத்துவதில்லை. குப்பையோடு வரும் தெருவாசிகளுக்கு முசுடின் நடமாட்டம் தார்மீகமான தயக்கத்தை உண்டாக்குவதில் முசுடின் மீதான அவர்களின் கோபம் தீவிரப்பட்டுப் போனது.

உணவக வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின.

“மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரெண்டாம்.. சென்ரலைஸ்டு ஏசியாம்..” தகவல்கள் எதிர் வீட்டுக்காரர் மூலமாக கசிந்தது.

மார்போனைட் தரை ஒட்டப்பட்டது. துாண்கள் அலங்காரப்படுத்தப்பட்டன. ஷட்டர்களுக்கான பெயிண்ட்டுகள் தெருவின் வாசத்தை மாற்றிக் கொண்டிருந்தன. தானும் தனது அக்காவும் கூட்டு உரிமையாளர்கள் என்று அந்த இளைஞன் கூறியிருந்தான். இப்போது அக்காவும் அவளது கணவரும் காரில் வரத் தொடங்கியிருந்தனர். பணியாட்களின் எண்ணிக்கைக் கூடிப் போயிருந்தது. அலங்கார விளக்குகள், வித விதமான ஓவியங்கள்.. நீரூற்று புத்தர்.. நீண்ட நெடிய சுழற்நாற்காலிகள்.. உயிர் பூங்கொத்துக்களுக்கான இட ஏற்பாடுகள் என உள்ளலங்காரத்தினை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்த கண்ணாடிக் கதவை பார்த்துக் கொண்டே கடந்தனர் தெருவாசிகள். கார்பெண்டிங்.. பெயிண்டிங்.. எலக்டிரிகல் என வேகப்படுத்தப்பட்ட வேலைகள் குப்பைகளாக காலி மனையை நிரப்பத் தொடங்கியதில் முசுடின் மீது அவர்களுக்கு கோபம் கூடிப் போனது. தருணம் பார்த்து காத்திருந்தனர்.  

”என்ன சார்.. எதிர்ல ஜரூரா வேல ஆயிட்டுருக்கு போலருக்கு..” குடிக்கும் தண்ணீருக்கு கூட அவர்கள் அக்கம்பக்கத்தாரை அணுகாமலிருப்பது பேசுவதற்கு தயக்கத்தை உண்டாக்க எதிர் வீட்டுக்காரரே தகவல் கடத்தியானார். “பொம்பளைக்கு பொம்பளை பேசினாதான் என்ன..? ஆம்பளைங்களுக்குதான் புத்தியில்ல.. ஊர அனுசரிக்கணும்னு பொம்பள எடுத்துச் சொல்லுமா.. அத வுட்டுட்டு இதும் பிர்ர்ன்னு திரியுது..“  வீட்டுப் பெண்கள் அந்த இளைஞனின் அக்காவை குறி்த்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். துடைப்பத்திற்கு கூட யாரையும் எதிர்பார்க்காதது  குறையாகத் தோன்றியது தெருவாசிகளுக்கு “வௌக்குமாத்த கூட ஒரு மனுசி வீட்லேர்ந்து மூட்ட கட்டி கொண்டாருது பாரேன்..“ பொருமலாக விழுந்தது வார்த்தைகள். 

இரவு நேரத்தில் பிரைமர் அடித்து தெருவோரங்களில் காய வைக்கப்பட்டிருந்த மரங்களை நடைப்பயிற்சிக்கு கிளம்பிய தெருவாசியொருவர் பூட்ஸ் காலால் எத்தினார். ”என்னாத்த லேண்ட் மார்க்கு..  தெருவ நாஸ்தி பண்றானுங்க..”

எல்லோருக்குமே இந்த எண்ணம் வந்தது..

தெருவோரம் கிடந்த ஒயர் ஒன்றில் தெருவாசியொருவரின் வெற்றுக்கால் பட்டதில் சுறுசுறுவென மின்சாரம் ஏறியதாக சொல்லி காலை உதறி விட்டு கத்தி தள்ளி விட்டார் அவர். ”பணங்காசு இருந்தா அவுனுங்களோட.. உசுரு போச்சுன்னா தருவானுங்களாமா..?”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..?” எகத்தாளமாகக் கேட்டது தெரு.
”அந்த தம்பி இப்பதான் சாப்ட போயிருக்குது.. அதான் நடந்தது தப்புன்னுட்டாங்களே.. வுடுங்க சார்..” என்றார் கதவை இழைத்துக் கொண்டிருந்த ஒருவர்.

”அவர் போன் நம்பர வாங்குங்க சார்.. நான் பேசறன்..” தெருவாசிகள் கூடினர்.

எதிர் வீட்டுக்காரர் அந்த இளைஞனின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினார். தெருவே அவர் முகத்தை ஏறிட்டது. “விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பையன் அய்யய்யோன்னு பதறீடுச்சு... இப்ப வந்துடும்..” என்றார் பொது தகவலாக. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு நகரத் தொடங்கியது கூட்டம். மறுநாள் அந்த இளைஞன் வழக்கம்போல ஆறு மணிக்கு ஆஜராகியிருந்தான். தானே அணுகுவான் என காத்திருந்து விட்டு பிறகு நேராக அவனிடம் சென்றார் எதிர் வீட்டுக்காரர். “அய்யய்யோ..“ என்றான் மறுபடியும் புதிதாக கேட்பதுப் போல.

“சப்போஸ் ஷாக் அடிச்சு எதாவது பெருசா ஆயிருந்துச்சான்னா என்னாவறது தம்பி..?”
”ஆமா சார்.. ஆமா சார்..” என்றான்.

“ரெசிடென்ஷியல் ஏரியாவுல ஹோட்டல் நடத்துறீங்க.. கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா.. எல்லாரும் சொந்த வீட்டு ஆளுங்க.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. கார்டியாலிட்டுக்கு கார்டியாலிட்டி..” .

“ஆமா சார்..” என்றான் ஆமோதிப்பாக. பிறகு “அட்வைஸ்க்கு தேங்க்ஸ் சார்..” என்றான். சட்டென்று அவன் மீதான நெருடல் மறைந்து நெகிழ்வாக இருந்தது எதிர் வீட்டுக்காரருக்கு. “என் தம்பிக்கின்னா சொல்ல மாட்டனா.. இதுக்குப் போயீ என்னாத்துக்குப்பா தேங்க்ஸ் அதுஇதுங்கிற..” என்றார். உரையாடல் தொடர்ந்ததில் வரும் ஞாயிறன்று உணவகம் திறக்க இருப்பதாக சொன்னான்.

வியாழனன்று அதிகாலையிலேயே ஹோமம் நடந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தெரு கவனிக்கத் தவறவில்லை. எதிர்வீட்டுக்காரர் ஹோமத்துக்கு தமக்கும் அழைப்பில்லை என சத்தியம் பண்ண வேண்டியிருந்தது.

“திமுரு புடிச்சவங்க போலருக்கு..” மெதுவாக மூட்டம் தெரு முழுக்கப் பரவியது..

”ஏயப்பா.. ஏசி மிஷினே ஏழெட்டு வந்து எறங்கியிருக்கு..”

”கிச்சன் சாமான் மட்டும் மூணு குட்டியானைல்ல வந்துச்சு..”

”ஆட்டமெல்லாம் பிரமாதந்தான்.. பிசினஸ் பிக்கப் ஆவுணுமில்ல..”

”பிளாக்க வொயிட் ஆக்கறதுக்கு பண்றாங்களோ..?”

”பின்ன.. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ மொதலீடு பண்றதுக்கு முட்டாப்பசங்களாக்கும்..” வேடிக்கை பார்ப்பதற்கென்றே நடமாடிய தெருவாசிகளும் உண்டு. சன்னலை ஏற்றி காருக்குள்ளிருந்து கள்ளப்பார்வை பார்ப்போரும் உண்டு.

”பெரிய சுத்த சீலன் மாதிரி நம்ப குப்பக் கொட்டும்போது சண்டைக்கு நிக்குமில்ல அந்த முசுடு.. இப்ப என்ன பண்ணும்னு பாக்கலாம்.. சாப்பாடு..போக்குவரத்துன்னு இவனுங்க காலி ப்ளாட்டுல கொட்டுட்டும்.. பேசிக்கலாம்..” கருவினார்கள். முசுடு எங்கோ மகன் வீட்டுக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டதில் கத்தவியலாத வன்மம் கூடிப் போனது எல்லோருக்கும்.

கிட்டத்தட்ட ஹோட்டல் முழுமையடைந்திருந்ததில் உறவோ.. நட்போ பார்க்க வரத் தொடங்கினர். அவர்களின் கார்கள் பெரியதாக இருந்தது. தெருவாசிகள் நீண்ட நெடிய ஹாரன்களை வேண்டுமென்றே மிக அதிகமாக அடித்தனர். மறுப்பேச்சின்றி அவர்கள் கார்களை நகர்த்திக் கொண்டாலும் ஆக்சிலேட்டரை உசுப்பிக் கொண்டு சீறினர். கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த பெண்கள் இருவர் தெருவாசியொருவரின் வீட்டு வாசலில் அமரப் போக அவர் கத்தித் தீர்த்து விட்டார். வேண்டுமென்றே அதிக டெசிபலில் ஒலித்த அவரின் கத்தல் உணவகத்தின் வாசலில் நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் அவன் தமக்கையையும் அணுகவில்லை.

உணவகமும் அதன் வேலைகளும் தெருவோரின் கூர்ந்த அவதானிப்புக்குள் வந்ததில் எதிர் வீட்டுக்காரர் பிரதிநிதியானார். ”இன்னிய நியூஸ் பேப்பர்ல உங்க ஹோட்டல் விளம்பர நோட்டிஸ் வச்சு அனுப்பியிருந்தீங்க போல.. தென்றல்நகர்ல என் .ஃபிரண்ட் ஒத்தன் இருக்கான்.. என்னடா.. உங்க ஏரியாவுல புதுசா ஹோட்டல் வரப்போவுதாமேன்னு போன் பண்ணுனான் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்.. உங்களுக்கும் வந்துச்சில்ல சார்..” என்றான் அந்த இளைஞன்.
”ம்ம்.. அதோடதா நம்ம தெரு ஆளுங்களுக்கு ஒரு வாய் வார்த்த தகவல் சொல்லீட்டீங்கன்னா திருப்தியா போயிடும் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்..” அதற்குள் யாரோ வந்து விட ”மிரர் ஃபிக்ஸ் பண்ண ஆள் வந்துருக்காரு சார்..” விடைப்பெற்றுக் கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்த நாள் கூட அவன் யார் வீட்டுக்கும் செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் செம்மண் லோடு வந்திறங்கியது. இறக்கி வைக்கப்பட்ட ஆளுயுரச் செடிகள் தெருவை அடைத்திருந்தன.  ”தெருன்னு நெனச்சீங்களா.. ஒங்க வீடுன்னு நெனச்சீங்களா..? செரி.. போனா போவுதுன்னு பெரும்போக்கா இருந்தோம்னா ரொம்பதான் பண்றீங்க..” ஒருவர் ஆரம்பித்ததில் கதவுகள் மளமளவென திறந்து மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.

”நாலு பேர நம்பி செய்ற தொழிலா.. இல்ல நாலு செவத்துக்குள்ள கமுக்கமா நடக்கற வியாபாரமா.. வாடகைக்கு வாரவங்களுக்கே இவ்ளோ இருந்தா சொந்த வீட்டு ஆளுங்களுக்கு எவ்ளோ இருக்கும்…?”

இரவு வேலைக்கு வந்திருப்பவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து பிறகு மளமளவென்று செடிகளையும் மண்ணையும் பின்புறத்திற்கு கடத்தினர்.

“அழுத்தக்கார ஆளுங்க.. ஹோட்டலுக்கு வர்றவங்க வண்டி.வாசின்னு தெருவுல கொண்டாந்து நிறுத்தட்டும்.. அப்றமில்ல இருக்கு அவனுங்களுக்கு..”

”குப்பைய கொட்டி நாறடிக்கிறான்னு பெட்டிசன் தட்டிட மாட்டேன்..?” என்றார் ஒருவர்.
”வீம்பு பண்ணுன ஆட்டோக்காரன் ஒருத்தன் துண்டக்காணாம்.. துணியக் காணாம்னு ஓடுல..?” வீரமாகப் பேசினார் ஒருவர்.

மளமளத்த வேலைகள் சனிக்கிழமைக்கு கொண்டு வந்து நிறுத்தின. அலங்கார பலுான்கள் வாயிலில் வரவேற்பு வளையமாக கட்டப்பட்டன. குலைத் தள்ளிய வாழை மரங்கள் வந்திறங்கின. தோரணங்கள் கட்டப்பட்டன. ஷார்ட்லீ ஓபன்ஸ் என்ற வாக்கியம் கவனமாக நீக்கப்பட்டு “ஓபன்“ என்ற வார்த்தை நேர்த்தியாக தொங்க விடப்பட்டது. அன்றிரவே காலிமனை வாகனங்களால் நிரம்பியிருந்தது.  “நடக்கட்டும்.. நடக்கட்டும்..“ கவனித்தப்படியே இருந்தனர் தெருவாசிகள்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடியும்போதே எல்லோரும் மங்கல இசைக் கேட்டனர். அல்லது மங்கல இசைக் கேட்டதால் விடிவதற்குள் விழித்துக் கொண்டனர். எதிர்பார்த்தப்படி ஆட்களுக்கு குறைவில்லை. காலிமனையில் நிரம்பியிருந்த கார்களில் ஆறேழு காவல் துறைக்கு சொந்தமானவையாக இருந்தன. வண்டிவாசிகளின் நடமாட்டத்தால் தெருவாசிகள் ஓரமாக நடந்துச் சென்று ஆறாவது மனையில் குப்பைகளை வீசினர். உண்டு முடித்த காலி இலைகள் மூன்றாவது மனையில் விழுவதும் நாய்கள் அதை குறி வைத்து ஓடுவதுமாக தெரு அந்த ஞாயிறை உள் வாங்கியிருந்தது. காய்கறி.. மட்டன் கறி என பையும் கையுமாக சென்ற தெருவாசிகள் வண்டியை நெளித்தும் ஒடித்துமாக ஓட்டிச் சென்று அமைதியாக வீடு திரும்பினர்.


***


No comments:

Post a Comment