Search This Blog

Wednesday, 24 May 2017

கேசரி

அக்டோபர் 2015 செம்மலரில் வெளியான சிறுகதை





நெய் விளம்பரத்தி்ல் சொல்வதுப் போல மணல்மணலாய் ரவை. நெய்யின் உபயத்தில் கரண்டியில் சரித்துக் கொண்டு வரும் இலாவகம். உமிழ்நீர் சுரப்பிகளை துாண்டுவதற்கே உருவாக்கப்பட்டதுப் போன்ற ஆரஞ்சு வண்ணம். நெய்யில் பொன் முறுவலாகி பரவலாக சீராக வெட்டப்பட்ட கிடந்த முந்திரி துண்டுகள். சிறிய வெள்ளை நிற அலுமினிய வாணலியில் இருந்த ஆரஞ்ச் வண்ண கேசரி உண்ணும் ஆசையை உசுப்பி விட ஆவலோடு எடுக்கும் நேரத்தில் அலாரம் சத்தமிட்டது. கனவு என்று அவளின் மூளை உணர்த்தினாலும் ஆசை அடிமனதோடு ஒட்டிக் கொண்டது. அல்லது அடிமனதில் துாண்டப்பட்ட ஆசை கனவாக வெளிப்பட்டிருக்கிறது.

நேற்று மதியம் தொலைக்காட்சியின் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த அவளின் கணவர்  சமையல் நிகழ்ச்சி என்றதும் விரலைச் சொடுக்க தயங்கிய நொடியில் குளோஸப் காட்சியில் கேசரியை யாரோ செய்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனைவியிடம் ரிமோட்டை நீட்டியப்படி பிரம்பு நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார். விலாவாரியான ஒரு மணி நேர செய்தி இன்னும் ஒரு மணி நேரத்திற்கு அவருக்கு போதுமானதாக இருக்கும். கேசரியைப் போய் செய்யக் கற்றுத் தருகிறார்களே என்ற கேலியுணர்வுடன்தான் முதலில் பார்க்கத் தொடங்கினாள் அவள். வருடம் தவறாமல் மகளின் பிறந்தநாளுக்கு கேசரிதான் செய்வாள். மாப்பிள்ளையாக நெய் வடியும் கேசரியைச் சாப்பிட்டு சம்மதத்தைத் தெரிவித்து விட்டுப் போன கணவருக்கு இன்னமும் மச்சினன் வீடுகளில்  இலையில் முதலில் வந்து விழுவது கேசரிதான். சர்க்கரைக்கு பயந்து அவர்தான் தொடுவதில்லை. அந்த டிவிப் பெண் நெய்யில் வறுத்த முந்திரியைக் கொண்டு கேசரியை அலங்கரிக்கும் போது தான் இவளுக்கு கேசரி உண்ணும் ஆவல் பிறந்திருக்க வேண்டும்.

அதற்குள் பால்காரர் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடலிலிருந்தப் போர்வையை விலக்கி விட்டு எழுந்து உட்கார்ந்தாள். அறுபத்தேழு வயதிற்கேற்ப தேகம் தளர்ந்திருந்தது. பருமனில்லை என்றாலும் மூட்டுவலிக்கு குறைவில்லை. மகளை எழுப்பி விட.. கணவரை ஊருக்கு அனுப்பவென எதெதற்கோ பயன்பட்ட அலாரம் இன்று பால் பாக்கெட் எடுப்பதற்கு தேவைப்படுகிறது. இரவில் இயக்கமில்லாமல் போவதால் கால்கள் பிடித்துக் கொண்டது போலிருக்கும். அவரசமாக எழுந்து விட்டால் தடுமாறி விழுந்து விட வேண்டியதுதான். கால்களை நீட்டி மடக்கி தளர்வாக்கிக் கொண்ட பிறகு மெல்ல எழுந்து கட்டிலில் துணையோடு நிற்க வேண்டும். ஆங்கமாக தரையில் உட்கார்ந்து சாப்பிட முடிவதில்லை. மேற்கத்திய கழிப்பறைகள் தவிர மற்றவைகள் வேலைக்காவதில்லை. நடைக் கூட சாய்ந்து சாய்ந்து நடப்பது போல் மாறி விட்டது.

கட்டிலின் மறு ஓரத்தில் சன்னலையொட்டி அவளின் கணவர் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் போது கூட கைகள் கட்டியவாக்கில் இருந்தது. எதிலும் ஒரு ஒழுங்கும் நியதியும் இருக்க வேண்டும் அவருக்கு. முன்னறைக்கு வந்தாள். தெருக்கதவின் சாவி ஆணியில் மாட்டியிருந்தது. கையை உயர்த்தி சாவியை எடுப்பதற்குள் முதுகும் சேர்ந்து வலிக்கிறது. கணவரின் ஒழுங்குக்கு வீடும் அவளும் பழகிப் போனதில் சாவி இன்னும் இடம் மாற்றத்திற்குள்ளாகாமல் இருந்தது. அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து மகள் வரும் போது சாவி மாட்டும் ஆணியை கீழிறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்ற முறையே இந்த வேலையை மனதிற்குள் திட்டமிட்டிருந்தாள். முப்பது நாள் விடுமுறையில் அறுபது வேலைகளுடன் வந்திறங்கும் ஒரே மகளை அதற்கு மேல் தொந்தரவு செய்ய முடிவதில்லை.

கண்ணாடி அணிந்துக் கொண்டால்தான் சாவியை துவாரத்திற்குள் நுழைக்க முடியும். நல்லவேளை.. பால் பாக்கெட் பத்திரமாக இருந்தது. இப்போதெல்லாம் முன்கதவில் சூம்பித் தொங்கும் மஞ்சள் பை, பால் பாக்கெட்டை தன்னுள் நிரப்பி உப்பலாகும்போது பூனைக்கு உறுத்தலாகி விடுகிறது. பூனையின் பிறாண்டலில் சொட்டுசொட்டாக பால் வடிந்து தரை பிசுபிசுத்துக் கிடக்கும். வேலைக்காரப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும். கதவுக்கு பின்னால் நின்று பயமின்றி உற்றுப் பார்க்கும் பூனையின் மீது கோபம் வருவதி்ல்லை. காம்பவுண்ட் சுவரில் நடந்துச் செல்லும் பூனையை சிறுமியாக இருக்கும்போது ரசித்துப் பார்ப்பாள் மகள். நடுவில் நெடுநாட்கள் காணாமல் போயிருந்தன பூனைகள். அதற்குள் மகளும் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாள். இப்போதும் மீண்டும் பூனைகள் மதில் சுவரில் நடக்கின்றன. மறந்தாற்போல திறந்து வைக்கும் ஜன்னலோ ஒருக்களித்துக் கிடக்கும் கதவோ கூட பூனை நுழைந்து எதையோ திருடி விடுவதற்கு ஏதுவாகி விடுகிறது.

பாலைப் பிரித்து அடுப்பிலேற்றினாள். சமையலுக்கு ஆள் வைக்க மனம் ஒப்புவதி்ல்லை. ஒரு வாரத்திற்கான டிகாஷனை தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பாள். பால் பொங்கியதும் அடுப்பை நிறுத்தி விட்டு டிகாஷனை ஊற்ற காபி தயாரானது. டிகாஷன் நாளையோடு தீர்ந்து விடும். புதிதாக போட வேண்டும் என்பதே இப்போதே கவலையை ஏற்படுத்துவதாக இருந்தது அவளுக்கு. காலை டிபனுக்கு தோசை மாவு இருந்தது சற்று ஆசுவாசமாக தோன்றியது. பசிக்கும்போது கிச்சனுக்குச் சென்றால் போதும். கேசரி செய்தால் என்ன..? கொஞ்சமாக அரை டம்ளர் மட்டும். தனக்கும் வேலைக்காரப் பெண்ணுக்கு மட்டுமாக. இரண்டு டம்ளர்களில் காபியை நிரப்பிக் கொண்டாள். தோசை ஊற்றியவுடன் கேசரி செய்ய வேண்டும். தீர்மானித்துக் கொண்டாள்.

கணவர் எழுந்து நடைப்பயிற்சிக்கான உடையில் தயாராக நின்றிருந்தார். திட்டமிட்டு திட்டமிட்டே வாழ்க்கையை ஒரு பாதுகாப்பான வளையத்திற்குள் நகர்த்திக் கொண்டு வந்தத் தெளிவு அவர் முகத்தில் நிரந்தரமாய் தங்கி விட்டதுப் போன்ற பொலிவான முகம். பாலிசி பணமோ.. பள்ளிக் கட்டணமோ குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே கட்டப்பட்டு விடும். பால்.. மளிகை.. என செலவுகளுக்கான தொகையை ஒதுக்கி உரிய நேரம் வரும்வரை ரப்பர்பேண்ட் சிறைக்குள் அடைத்திருப்பார். திட்டமிட்ட வாழ்க்கை கடனின்றி வீட்டை சொந்தமாக்கியது. ஒரே மகளின் கெட்டிக்காரத்தனமானப் படிப்பும் சேர்ந்துக் கொள்ள அமெரிக்காவும் அதன் பிறகு வரனும் அவளை வசதியான வாழ்க்கைக்குள் இழுத்துக் கொள்ள இருவரும் தனிமைப்பட்டுப் போயினர்.

“கதவை சாத்திக்கிறீயாம்மா..?“ என்றார். நடைப்பயிற்சி தோழரின் அழைப்பு வீட்டுக்கு வெளியே கேட்டது. பக்கத்து வீட்டுக்காரர்தான். வேலை நேரம் போக மீதமான நேரங்கள் படுத்துக் கிடந்தால் தேவலாம் போல் என்றிருப்பதால் அக்கம்பக்கம் அதிகம் பழக முடிவதில்லை. திகட்ட திகட்ட அளிக்கும் வெளிநாட்டுச் சாக்லேட்டுகளாலும் சின்ன சின்ன பரிசுகளாலும் காலை நேர நடைப்பயிற்சி சிநேகத்தாலும் அக்கம்பக்கம் ஆட்டம் காணாமலிருந்தது. கதவை சாத்தி விட்டு ஊஞ்சலில் அமர்ந்தாள். நின்றவாறே அமர்வதற்கு ஏதுவாக இருப்பதால் சட்டென்று உட்கார்ந்து விட முடியும். ஆனால் சாய்மானமின்றி இருப்பதால் காபி குடிக்கும் வரை அதில் தாக்குப்பிடிப்பதே பெரும்பாடாக இருக்கும்.

பழங்காலம் என்று கிண்டலடித்தாலும் மகள் கூட கேசரியின் சுவைக்கு அடிமைப்பட்டுதானிருப்பாள். அவளின் ஒரு மாத விடுமுறையில் இரண்டு முறைகளாவது செய்ய வேண்டியிருக்கும். இப்போது கூட கேசரி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு தித்திப்பை வரவழைத்தது. நல்லவேளை.. இன்னும் சர்க்கரை வியாதி எட்டிப் பார்க்கவி்ல்லை என்ற ஆறுதலோடு எழுந்தாள். உப்புமாவுக்காக ஒதுக்கி வைத்த ரவை இருந்தது. சர்க்கரை எதேஷ்டம். நெய்யுக்கும் முந்திரிக்கும் மகள் வரும் போதுதான் தேவையிருக்கும். பிறந்த வீட்டில் கேசரி செய்ய அதிக தேவையிருந்தது. கூட பிறந்த ஐந்துப் பெண்களில் இவள்தான் கடைசி. சட்டியிலிருந்து வழித்து வைத்தப் பிறகு அதில் ஒட்டியிருக்கும் கேசரியை எடுத்து தின்னப் பிடிக்கும் அவளுக்கு. இவளுக்காகவும் கேசரி செய்யத் தொடங்கியபோது மூத்தவர் நால்வரும் விடைப்பெற்றிருக்க போட்டிக்கு ஆளின்றி நிறையவே சாப்பிட்டாள்.

.”செத்த கடைக்கு போயி நெய்யும் முந்திரியும் வாங்கீட்டு வர்றியாம்மா..?” என்றாள் வேலைக்காரப் பெண்ணிடம் மெதுவாக.

”எதும் விருந்து வருதா பாட்டி..?” நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும்.

“இல்லல்ல..”

”பொறவு..?” என்றாள்.

“எனக்குதான்..“ வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கி விட்டு ”தாத்தாவுக்குதான்.. நாக்கு எச்சிப் போச்சுன்னாரு.. அதான்..” தயங்கிக் கொண்டேப் பேசினாள்.

”பக்கத்து வூட்டுக்காரம்மா சீக்ரமா வர சொல்லுச்சு.. பாத்திரம் மட்டுந்தான்.. வௌக்கிப் போட்டுட்டு வூட்டுக்கு போவும்போது வாங்கியாந்து குடுத்துட்டுப் போறன் பாட்டி..” அவளின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாது.

காலை உணவிற்கு பிறகு கணவர் ஊஞ்சலில் மருத்துவர் சீட்டும் மாத்திரையுமாக கடைப்பரப்பியிருந்தார். ”கொலஸ்ட்ரால் டேப்ளட் இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும்.. மெடிக்கலுக்கு போய்ட்டு வர்றேன்.. கதவ தாப்பா போட்டுக்கோ..” என்றவரிடம் ”ஏந்தாத்தா.. இம்புட்டு மாத்தர சாப்டுறல்ல.. செத்த வாய கட்ட மாட்டீயா..?” வீட்டை பெருக்கிக் கொண்டே பேசும் வேலைக்காரப் பெண்ணை புரியாமல் பார்த்துக் கொண்டே கிளம்பினார்.

மகள் வருவதற்கு இன்னும் முப்பத்திமூன்று நாட்கள் உள்ளது. வருகை நாள் தெரிந்த பிறகு கடக்கும் நாட்கள் மிக மெதுவாக நகர்வது போலிருக்கும் இருவருக்கும். உள்ளுரில் இருக்கும் தனது பெற்றோர்களை மாமனார் வீட்டார் அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்ளவில்லை என்ற வருத்தம் மாப்பிள்ளைக்கு. அதனாலேயே இந்தியா வரும்போது மகள் இங்கும் மாப்பிள்ளை அவர் வீட்டிலுமாக இருப்பது சமீபக்காலமாக தொடர்கிறது. “கல்லுகுண்டாட்டம்தானே இருக்காங்க.. வயசானவங்கள போய் பாத்துக்கிட்டாதான் என்ன..?” மனைவியிடம் குறைப்பட்டுக் கொள்வான். ”காலை எட்டி வச்சு நடக்க முடியிலடீ.. ஆட்டோவுல ஏற எறங்க பெரும்பாடா இருக்கு.. உள்ளுருன்னாலும் ஒரு மணிநேரம் போய்ட்டு வர்றதுக்கு ஒருநாள் பூரா மெனக்கடணும்..” அவளின் சமாதானம் மருமகனிடம் எடுபடுவதில்லை.

செய்தித்தாளை மூடி வைத்து விட்டு மதிய சமையலுக்காக வெங்காயம் உரிக்கத் தொடங்கினாள். நாலு பெண்களுடன் பிறந்ததால் வீட்டில் விஷேசங்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை. ஓகே ஆயிலோ டால்டாவே இருந்தால் கூட போதும் சேகரி செய்வதற்கு. பொட்டுபொட்டாக நெருநெருவென்றிருக்கும் ரவை வெந்து ஆரஞ்சு நிறமேறி நெய்யில் உருகி கைகளில் வழிந்து.. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நடுக்கம் இருப்பதால் இப்போதெல்லாம் கை சரியாக தாழ்ப்பாளில் உட்கார்வதில்லை. நெடுநேரம் ஆட்டி ஆட்டி திறக்க வேண்டியிருக்கிறது.

”மயக்கமா இருக்கும்மா..” கால்கள் தொய்ந்ததுப்போல உள்ளே நுழைந்தார் கணவர்.
”செத்த இருங்க.. தண்ணீ கொண்டாரேன்..” பரபரத்தாள். யாரும் அருகில் இல்லாத நேரத்தில் உடம்புக்கு வந்து விட்டால் அவளை விட அவருக்கு ரொம்பவே பயம் வந்து விடுகிறது. மனைவியை அங்குமிங்கும் நகர விடவில்லை. சாப்பாட்டு நேரம் நெருங்கி விட்டதில் பிரிக்கப்படாமல் இருந்த நெய்யும் முந்திரியும் அடங்கிய பாலித்தீன் கவரை நகர்த்தி விட்டு சாதமும் ரசமும் வைத்தாள். வேலையில் அவசரமிருந்தது. இப்போதுதான் எழுந்து உட்கார்ந்து பேப்பர் வாசிக்கிறார். மீண்டும் சர்க்கரை இறங்குவதற்குள் சாப்பாடு கொடுத்து விட வேண்டும். மைக்ரோஅவனில் அப்பளம் சரியான அளவு பொரிந்திருந்தது. வேகவேகமாக மதிய உணவு முடிந்தது.

இருவரும் உறங்கி விட மதிய வெயில் உள்ளே நடமாடிக் கொண்டிருந்தது. தலைமாட்டிலிருந்த செல் ஒலிப்பது சன்னமாகக் கேட்டது அவளுக்கு. படுத்தவாறே எடுத்தாள். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள் “யாரு..?” ஏதோ பெயர் தெளிவற்றுத் தெரிந்தது. கண்ணாடியை எடுக்க எழுந்திருக்க வேண்டும். பச்சைப் பட்டனை அமுக்கி பேசவும் சிவப்புப் பட்டனை அமுக்கி தொடர்பைத் துண்டிக்கவும் கற்று வைத்திருப்பதால் பிரச்சனையில்லை. அதற்குள் காலிங்பெல் ஒலித்தது. மெதுவாக எழுவதற்குள் மீண்டும் அலைபேசி. மீண்டும் காலிங்பெல். நிலைகுலைவாக இருந்தது அவளுக்கு. இந்த களேபரத்தி்ல் அவர் எழுந்துக் கொண்டு கதவைத் திறந்தார்.

”பெல்லடிச்சுப் பாத்தேன்.. யாரும் காணோமேன்னு செல்லுல கூப்டேன்..” முகவுரையோடு சம்பந்தி தனது மச்சினரை அழைத்து வந்திருந்தார். மச்சினரின் மகளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருந்தனர். கணவர் வாங்கி வந்த காஜுகத்லியும் வெஜிடபிள் பப்சும் சூடான டீயுடன் பரிமாறும் போது மீண்டும் அவளுக்கு கேசரியின் நினைவு வந்தது. ரவையை நெய்யில் வறுத்து தட்டில் கொட்ட வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ரவையைக் கொட்டி கேசரிப்பவுடர் சேர்த்து வெந்ததும் சர்க்கரையை கொட்டி கட்டித்தட்டாமல் கிண்ட வேண்டும். நெய்யும் முந்திரியும் சேர்த்து விட்டால் கேசரி தயாராகி விடும். ஆனால் வகுத்த வைத்த வேலையைத் தாண்டி உபரியாக செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. தன் ஒருத்திக்கு மட்டும் செய்வதற்கு தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்காவின் பேத்திக்குக் கல்யாணம். கல்யாணத்திற்கு முதல்நாள் மதிய விருந்து தயாரிக்க கிராமத்து சமையல்காரரை அழைத்து வந்திருந்தார்கள். பருப்பு தடதடக்காத சாம்பார்.. தக்காளிகள் மிதந்து பயமுறுத்தாத மிளகு ரசம்.. தாளித்த மோர்.. உருளைக்கிழங்கு பால்கறி, முட்டைக்கோஸ் கூட்டு, சேனைக்கிழங்கு வறுவல், எலுமிச்சை ஊறுகாய், வட்டமான வெங்காய பஜ்ஜி, நெய் மணக்கும் கேசரி என ரசித்து உண்டது நினைவிலாட இரவு உணவுக்கு முன்பாவது கேசரி செய்து சாப்பிட வேண்டுமென்ற அலாதி ஆசை அவளுள் எழுந்தது.

”கல்யாணத்துக்கு போக இப்பவே டாக்சி புக் பண்ணீடணும்..” என்றார் கணவர்.

“இன்னும் ஒரு வாரம் இருக்கு.. அதுக்குள்ள என்ன அவசரம்.. என்பாள் இம்மாதிரியானத் தருணங்களில். சென்ற பயணத்தின்போது பட்ட பாடு அப்படி பேச அனுமதிக்கவில்லை அவளை. தெரிந்த டாக்சிக்காரர்தான். அந்த அசட்டையில் சற்று தாமதப்படுத்தியதில் அவருக்கு வேறு பயணம் புக் ஆகியிருந்தது. வேறு டாக்சி ஏற்பாடு செய்யப் பிடிக்காமல் பேருந்துப் பயணம் முடிவானது. பிஸ்கட் பாக்கெட்.. தண்ணீர் பாட்டில்.. மாத்திரை.. துணிமணிகளோடு பஸ்ஸில் ஏறி இறங்கியதில் ஊண்சத்தே அற்று போனது போலிருந்தது இருவருக்கும். லேசாக இருட்டத் தொடங்கியதில் பயம் வேறு வந்து விட்டது. தெரியாத இடத்தில் ஆட்டோக்காரரை நம்பிச் செல்ல மனம் ஒப்பாமல் நடந்தே சென்றதை நினைத்து கணவன் சொன்னதை ஆமோதிப்பதுப் போல மௌனமாக இருந்தாள்.

”சம்மந்தி வீட்டு விசேஷம்.. தாராளமா செஞ்சாவுணும்.. நாளைக்கு ஏடிஎம்ல பணத்தை எடுத்துட்டு அப்டியே பேக்குக்கு போய்ட்டு பாஸ்புக்ல என்ட்ரீ போட்டுட்டு வந்துடுலாம்.. ரெடியா இரு..” என்றார் மனைவியிடம்.

மனைவியிடமிருந்து பதில் வராததில் கிச்சனுக்கு வந்தார்.

தோசை மாவு தீர்ந்து விட்டிருந்தது. இருவருக்கும் உப்புமா செய்யுமளவுக்கு மட்டுமே ரவை இருந்தது. கேசரிக்கு எடுத்து விட்டால் உப்புமாவுக்கு காணாது.

”தோசமாவு தீர்ந்துப்போச்சு.. அதான் என்ன செய்யலாமின்னு யோசனை..” என்றாள்.

”சரி.. வுடு.. ரெண்டு பேருக்கும் இட்லி பார்சல் கட்டிட்டு வந்துடறேன்..” என்றார்.

டிபன் செய்யும் வேலையிலிருந்து விடுப்பட்டது சட்டென பெரிய ஆறுதலாக மனதில் ஓடியது.  முன்னறைக்கு வந்தாள். மச்சினர் வீட்டு திருமணப் பத்திரிக்கை ஊஞ்சலில் இருந்தது. சம்பந்தி வீட்டுக்காரங்கள்ளாம் பழயக்காலத்து ஆளுங்க.. நிச்சயம் கல்யாணத்துல கேசரி இருக்கும்..  என்று தோன்றியது.

அவர்களுக்காக வாங்கியதில் மிஞ்சிய காஜுகத்லி பாக்கெட் மின் விசிறிக் காற்றில் படபடத்தது.
***


5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. #MAHAA Brand (https://mahaastores.com/) is one of the best kitchenware brand in the world. We produce kitchenware's, Cookware's, Tableware's, Hotelwares and stainless steel gift set products. Buy Avanti Cooking Pot Pot | Steel Pot - Encapsulated Triply Bottom -14CM. Mahaa Store offers best Kitchenware Items like Cookware, Tableware and hotelware online. Call +91 8144034433 for more details. Check mahaa Stores online!

    ReplyDelete
  5. #MAHAA Brand (https://mahaastores.com/) is one of the best kitchenware brand in the world. We produce kitchenware's, Cookware's, Tableware's, Hotelwares and stainless steel gift set products. Buy Avanti Kadai | Kadhai | Single Handle- Encapsulated Triply Bottom -28CM. Mahaa Store offers best Kitchenware Items like Cookware, Tableware and hotelware online. Call +91 8144034433 for more details. Check mahaa Stores online!

    ReplyDelete