காக்கைச் சிறகினிலே, பிப்ரவரி 2017ல் வெளியானது
வானுார்தியின் வழி்யே சிறிதாகி கிடந்தது பூமி. சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் ரமேஷ். சிறுநீரக மருத்துவ நிபுணர். மகள் நிகிதா மனதை ஆக்ரமித்திருந்ததில் எதையும் ரசிக்க தோன்றவில்லை. மனைவி ஆர்த்தியின் மடியில் நினைவற்று கிடந்தாள் நிகிதா. மூன்று வயது. பத்து வருட தாம்பத்தியத்திற்கு பிறகு தாமதமாக ஜனித்த குழந்தை. மழலை மொழியில் உலகின் அத்தனை கேள்விகளையும் கேட்டு விடுவாள். இந்தியாவிலிருந்து கிளம்பும்போது இரண்டரை வயதிலிருந்தாள். கண்ணாடியின் வழியே தெரிந்த அதிசயங்களை மழலையால் கடத்திக் கொண்டு வந்தவள் இப்போது எவ்வித சலனமுமற்று தாயின் மடியில் கிடந்தாள்.
தீவு
சுற்றுலா நிறைவடைய இன்னும் ஆறுமாதம் மீதமிருந்தது. அழகான தீவு அது. கடலும், காற்றும்,
உறைக்காத வெயிலும் நிறைவூட்டுபவையாக இருந்தன. கடலின் இடைவிடாத இரைச்சல் கூட கிளர்ச்சியூட்டுவதாக
தோன்றியது. அடர் வனமாக இல்லையெனினும் பெயர் தெரியாத மரங்கள் ஆங்காங்கே நின்றிருந்தன.
மற்ற ஜீவராசிகள் அதிகம் தென்படவில்லை. தனது தனித்திறமையால் மருத்துவராகி.. நகரின் பிரதான
தனியார் மருத்துவமனையின் தலைமை பொறுப்பில் அமர்ந்திருந்தான். பரபரப்பான பதிமூன்று வருட
வாழ்க்கையில் ரமேஷ’க்கு இந்த தனிமையின் சுவை சற்று கூடுதலாகவே பிடித்தது. நகருக்கு
ஒருவராக பத்து மருத்துவர்களுக்கு இந்த அதிசய வாய்ப்பு கிட்டியிருந்தது. அனைவரும் வெவ்வேறு
துறை வல்லுநர்கள். தீவில் முழுக்க முழுக்க இயல்பாக வாழ முடிந்ததில் எல்லோரும் நண்பர்களாகி
விட்டனர். ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கவிருக்கும் பெருந்தொகையில் பல்நோக்கு மருத்துவமனை
கட்டும் மெகா அளவிலான திட்டம் கூட வகுத்துக் கொண்டார்கள்.
உண்பதும்
உறங்குவதுமான இந்த வாழ்வு சிறிய வயதில் கூட வாய்க்க பெறாததில் அனுபவித்து கழிக்க அனைவருக்குமே
பெருத்த ஆர்வமிருந்தது. கணவனும் மனைவியும் காதலுடன் பார்த்துக் கொள்ள முடிந்தது. குழந்தைகளும்
படிப்பை பற்றிய எண்ணமேதுமின்றி கலகலப்பாக விளையாட முடிந்தது. நவீனங்கள் கொட்டிக் கிடந்தாலும்
அதை அதிகம் உபயோகிக்க தோன்றவில்லை யாருக்கும். அவசர கேஸ்களும் அப்பாயின்மெண்டுகளும்
ஆக்கிரமிக்காமல் சிறிய பரப்பளவுக் கொண்ட தீவை வெற்றுக் கால்களால் சுற்றியளந்தனர். இயற்கை
காற்றில் உறங்கினர். வைரமுத்துவின் கவிதை போல மீன்களை பிடித்து மீண்டும் கடலிலேயே விட
முடிந்தது.. இவ்வகை மீன்கள் சாப்பிட உகந்ததல்ல என்பதால். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளோடு
மீன் உணவும் வானுார்தியில் வந்திறங்கியது.
ரமேஷிடம்
அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதி அணுகியபோது கூட சுற்றுலா இத்தனை சிறப்பானதாக இருக்கும்
என்று கருதவில்லை. மிக பெரிய கம்பெனி. இதய நோய் உட்பட மிக முக்கிய நோய்களுக்கான மருந்து மற்றும்
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் உலகளாவிய சந்தையை குறி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது.
இருநுாறு மடங்கு லாப நோக்கில் செயல்படும் அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்தில்
தாராளம் காட்ட, ஊழியர்களும் நிறுவனத்திற்கு உண்மையாக உழைக்க தளைப்பட்டனர். இதற்கு முன்பும்
அதிநவீன ஆடம்பர பொருட்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலா உட்பட பலவகை சலுகைகளை வெவ்வேறு
நிறுவனங்களின் வாயிலாக ரமேஷ் பெற்றிருக்கிறான். ஆனால் இம்மாதிரியான தனிதீவு சுற்றுலா
சலுகையை எந்த நிறுவனமும் வழங்கியதில்லை. குடும்பம் மொத்தத்தையும் ஒரு வருடத்திற்கு
தத்தெடுத்துக் கொண்டது அந்நிறுவனம்.
நேற்று
முன்தினம் மணலில் கால்கள் புதைய விளையாடிக் கொண்டிருந்த நிகிதாவால் கால்களை வெளியே
இழுக்க இயலவில்லை. சிரித்தக் கொண்டே துாக்கி நிறுத்தினாள் ஆர்த்தி. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக
கவிழ்ந்தாள் நிகிதா. செல்லமாக மகளின் கன்னத்தை தட்டினாள் ஆர்த்தி. ”ஏய்.. குட்டிம்மா..
அம்மா பயந்துட்டனாம்.. பாப்பா எந்திரிச்சுக்குவியாம்..“ பாப்பா எழவில்லை. கைகள் துவண்டு
விழுந்தன. நரம்பியல் நிபுணர் பயப்பட தேவையில்லை என தைரியம் அளித்தார். ஆனாலும் நிலைமை
கைவசமிருக்கும் மருத்துவ உதவியை மீறுவதை உணர்ந்தான் ரமேஷ். உடனே தனி விமானம் ஏற்பாடு
செய்யப்பட, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
கிராமத்திலிருந்து
ஓடோடி வந்தாள் ரமேஷின் தாய். துவண்டு சரிந்திருந்த மகன் அவளுக்கு புதிது. ஏழு மகவுகளை
பெற்றெடுத்த வயிறு கலங்கித் தவித்தது. ரமேஷை தவிர மீதி பிள்ளைகள் யாரும் சொல்லிக் கொள்ளும்படியான
பொருளாதார சூழலில் இல்லை. சிறு வயதிலிருந்தே படிப்பில் அதீத கவனத்துடன் முன்னேறிய மகனை
பெருமையுடன் ஏறெடுப்பாள். திருணமாகி பத்து வருடங்களுக்கு பிறகு பிறந்த பேத்தியை கிராமத்திலிருந்து
அவ்வப்போது பார்க்க வருவாள். அவளுடன் பேச யாருக்கும் நேரமிருப்பதில்லை என்றாலும் பேத்தியுடன்
இருப்பது நிறைவாகவே இருக்கும். ”மாரியாத்தா.. எம் பேரபுள்ளய காப்பாத்துத்தா.. அங்கவலம்
வாரேன்.. கூளு காச்சி ஊத்றேன்..” வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது அவளுக்கு. ஆர்த்தி
மருத்துவமனையிலேயே தங்கி விட்டாள். குழந்தையை பார்க்க வந்த ரமேஷின் சகோதரிகள் யாருமற்ற
நேரத்தில் ஆவலாக வீட்டை சுற்றிப் பார்த்து பிரமித்தனர். ரமேஷ் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
வந்தான். அப்போதுதான் மகளை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லவிருப்பதாக
சொன்னான்.
”எங்க
தங்கியிருந்தீங்கன்னு சொன்னீங்க..?” என்றார் அமெரிக்க மருத்துவர் ஃப்ரடெரிக்.
சொன்னான்
தனித்தீவைப் பற்றி.
விழிகள்
பிதுங்கி நிலைகுத்தி உணர்வற்று கிடந்த மகளை நழுவ விட்டுக் விடக்கூடாதென்ற வைராக்கியம்
கூடியது. அதற்கேற்ப கண்டுபிடிக்கவியலாத நோயின் தீவிரவும் கூடி போனது.
”பாடி
எந்த மருந்துக்கும் ரெஸ்பாண்ட் ஆக மாட்டேங்குது டாக்டர்.. கொஞ்சம் ரிசர்ச் பண்ணி பார்த்தாதான்
நெக்ஸ்ட் ஸ்டப் என்னன்னு ப்ரிஃபர் பண்ண முடியும்..” என்றார் ஃப்ரடெரிக்.
அந்த
விற்பனை பிரதிநிதியின் மூலம் நிறுவனத்தை அணுகியதில், தகவல்களை வெளியிட கூடாது என்ற
உத்ரவாதத்தை எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொண்டு ஆய்வுக்கு அனுமதியளித்தது. மருத்துவ
ஆய்வுக் குழு தீவுக்கு விரைந்தது. பயணம் முடிவதற்குள் மீதி குடும்பங்களும் கலைந்து
சென்று விட தீவே வெறிச்சோடியிருந்தது. இருப்பினும் உபயோகித்து கழித்த குப்பைகள் தீவெங்கும்
நிரம்பி கிடந்தன.
ஆய்வு
முழு வீச்சில் தொடங்கியது. அந்த தீவு உருவாகி முப்பது வருடங்கள்தான் ஆகியிருந்தன. ஆயினும்
மண்ணுக்குள் பொதிந்து கிடந்தவைகள் புனல் மின் நிலையம் இயங்கியதற்கான அடையாளத்தை சொன்னது.
கடலுக்குள் ஆராய்ந்ததில் புனல் மின் நிலைய கட்டுமானங்கள் மூழ்கி கிடப்பது தெரிய வந்தது.
“நிகி..
நிகிம்மா.. நிக்கி..” விழியை உருட்ட கூட இயலாத மகளை பார்த்து கதறினர் பெற்றோர். ஆராய்ச்சி
பட்டம் பெற்றிருந்த ஆர்த்தியால் சிந்திக்கவும் திராணியற்று போனது.
“இந்த
ஃபேக்டரியிலேர்ந்து வெளியான மெத்தைல் மெர்க்குரி இந்த நிலத்துல.. இந்த தண்ணீயிலெல்லாம்
கலந்துருக்கு..” என்றார் தலைமை ஆராய்ச்சியாளர் ஃபிலிப்.
”ஃபேக்டரி
இருந்த தீவு மூழ்கி போய்தான் அறுவது வருசமாயிடுச்சே சார்.. இன்னுமா வீரியமிருக்கும்..?”
”மூழ்கின
நிலம் பூமியிலதானே இருக்கு.. மாயமாயிடலியே.. அங்க நிலத்தை உள்வாங்கின தண்ணி அறுவது
கிலோமீட்டர்ல புதுசா தீவை உண்டாக்கியிருக்கு.. அவ்ளோதான்.. இங்க யாரும் வராம போனதால
இந்த விசயம் இத்தன நாளா யாருக்கும் தெரிய வர்ல.. “
“அப்போ
இந்த தீவுல வாழ்ந்த மக்களெல்லாம் எங்கே போயிருப்பாங்க..? ஒரே நேரத்துல அத்தனை பேரை
செத்திருப்பாங்களா...?”
”ஒரே
நேரத்துல சாவறதுக்கு இது விஷவாயு கெடையாது.. செரிமான தன்மை இல்லாத கனரக உலோகம்.. தண்ணில
இது கலக்கும் போது அங்க வாழ்ற மீன்களோட கல்லீரல்ல சேகரமாயிடுது.. அந்த மீனை சாப்பிடும்போது
அது மனுஷனோட கல்லீரல்ல தங்கி மூளை.. நரம்பு மண்டலத்துல நிரந்தர பாதிப்ப உண்டாக்குது..”
என்றார் ஃப்லிப். ஆராய்ச்சி குழுவினர் கையோடு கொண்டு வந்த உணவையே உண்டனர். தண்ணீரும்
சுவாசக் காற்றும் கூட எச்சரிக்கையோடு எடுத்து வந்திருந்தனர். கிடைத்த தகவலை உடனுக்குடன்
மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு வேதனையோடு உடலை தரையில் கிடத்தினார் ஃபிலிப்.
மருத்துவர்
ஃபிரடெரிக்கின் முகம் தீவிரமாக இருந்தது. சிறிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு பேசினார்.
“டாக்டர்.. நான் சொல்ல போறதை நீங்க ஓரளவு கெஸ் பண்ணியிருப்பீங்க.. கல்லீரல்ல ஸ்ட்ராங்
மெட்டல் கலந்து அது மூளைய தாக்க தொடங்கியிருக்கு.. இனிமே மண்டை கொஞ்சம் கொஞ்சமாக பெருசாகும்..
ஒவ்வொரு பார்ட்டா அரெஸ்டாகி கடசில உயிர் பிரிஞ்சுடும்...”
அன்றைய
மின்கடிதம் கொண்டு வந்த தகவலில் அதிர்ந்து போனது அந்த ஆராய்ச்சிக் குழு. அந்த தீவு
முழுகுவதற்கு முன்பு மக்களின் போராட்டத்தை ஈடுக்கட்ட அரசாங்கம் பெயருக்கு நடவடிக்கை
எடுத்திருந்தது. கடலில் சேர்ந்து விட்ட கழிவை அகற்ற மீண்டும் அதே தனியார் புனல் மின்
நிறுவனத்திற்கே அந்த டெண்டரை ஒதுக்கியிருந்தது அந்த அரசு. ”அடப்பாவீகளா.. ஃபேக்டரி
ரன் ஆகும்போது கழிவை முறையா அகற்றுணும்னு அக்ரீமெண்ட் போட்டுருக்காங்க.. திரும்பவும்
மெர்க்குரிய கடல் தண்ணிலேர்ந்து பிரிச்செடுக்கிறேன்னு இன்னோரு டெண்டர் எடுத்துருக்கானுங்க
பாருங்க.. எல்லாம் பணந்தான் சார்..”
உதவியாளரின்
கருத்தை வருத்தத்துடன் ஆமோதித்தார் ஃபிலிப். ”கடலுக்குள் மூழ்கி போன அந்த தீவு பேரு
மினமாட்டா.. அரசியல் மாற்றமாகி போனதில கேக்க நாதியில்லாம கெடந்த மக்களுக்கு இந்த தீவு
தண்ணிக்குள்ள மூழ்கிப் போனது ஒரு வரபிரசாதந்தான்.. ஆச்சு.. அறுவது வருசம்.. மனுசங்க..
ஜீவராசிங்க எல்லா கணக்கையும் ஒட்டுமொத்தமா துாக்கி மூடி கெடாசியாச்சு..”
”இந்த
வியாதிக்கு என்ன பேரு டாக்டர்.. இதுக்கு யாரும் மருந்தே கண்டுபிடிக்கலையா..?” என்றான்
ரமேஷ் விரக்தியாக.
”மருந்துதான்
கண்டுபிடிக்கலை.. ஆனா பேரெல்லாம் இருக்கு.. மினமாட்டா.. அதான் இந்த வியாதிக்கு பேரு..
எல்லாம் ஆலை கழிவால வர்ற பிரச்சனைதான்.. ஆனா பாருங்க.. கண்டுபிடிக்கிற மருந்தெல்லாம்
வியாதிய குணப்படுத்தினா தேவலாம்.. மேலும் மேலும் புதுசு புதுசா வியாதியதானே உண்டாக்கிட்டு
போகுது.. எல்லாம் அரசியல் சார்..” என்றார் டாக்டர். சக மருத்துவர் என்பதால் நெருக்கமாக
பழகுவார்.
”அய்யோ..
ஒட்டுமொத்தமா எம் புள்ளதான் அத்தனையும் அனுபவிக்குணுமா..” மனைவியைக் கட்டிக் கொண்டு
அழுதான் ரமேஷ். நிகிதாவின் விழிகளில் அங்கீகார அசைவு வெகுவாக குறைந்திருந்தது. மண்டை
பெரிதாக துவங்கியிருந்தது.
ஆராய்ச்சி
குழுவினர் தீவிலிருந்து கிளம்புவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்
”மனசாட்சி உள்ளவங்களும் நாட்ல இருக்கதானே செய்றாங்க.. இதையெல்லாம் உயிர பணயம் வச்சு
ஸ்மித்னு ஒருத்தரும் அவரோட மனைவியும் வெளில கொண்டு வந்தாங்க.. அவங்கள சும்மா விடுவாங்களா..?
அவங்களுக்கு பிறகு இப்போ நம்பதான் ஆராய்ரோம்னு நினைக்கிறேன்..” என்றார் ஃபிரடெரிக்.
அப்போது
மற்றொரு தகவலும் வந்தது.
”அந்த
தீவுல தங்கியிருந்த இன்னொரு டாக்டரோட பையனுக்கும் இதே பாதிப்பாம்.. இங்க அழைச்சிட்டு
வந்துக்கிட்டுருக்காங்க..” என்றார் மருத்துவர் ஃபிலிப்.
***
No comments:
Post a Comment